பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம்

தமிழருவி மணியன்

திரு. தமிழருவி மணியன், சட்டம் பயின்றவர்; தமிழகம் அறிந்த பேச்சாளர்; எழுத்தாளர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ ஆகிய நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரையும் பாரதியையும் நம் இளம் சமுதாயம் பின்பற்றுமானால் நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது.

இன்றைக்கு நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்கிறது என்று பெருமைப்படுகிறோம்.  தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம்.

அதே நேரத்தில் நம் தேசத்தின் பண்பாட்டுத் துறையின் வீழ்ச்சி என்ற பக்கத்தை மறந்து போகிறோம்.

நம்மிடமுள்ள மிகப் பெரிய பலவீனம், நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் எப்படி உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோமே தவிர, நான் யார், நான் எப்படிப்பட்டவன்? எனது பலம் எது? பலவீனம் எது? என்ற உள்முகத் தேடலை நாம் நடத்தத் தயாராக இல்லை.

Know Thyself  – உன்னை நீ அறி என்பதுதான் எல்லா உபநிடதங்களின் சாரம்.

என்னை நான் ஏன் அறிய வேண்டும்?

‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.  தானே தனக்கு நண்பனும் பகைவனும்’ என்பது திருமூலர் வாக்கு.  திருமூலருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’  என்ற உலக சகோதரத்துவத்தைச் சிந்தித்திருக்கிறார்.

இந்தப் பாடல் நம் இந்தியப் பண்பாட்டின் சாரம் முழுவதையும் எடுத்து இயம்புகிறது.

பேதமற்று உலகம் முழுவதையும் அரவணைக்கும் உள்ளம் கொண்ட ஒருவனே பண்பாட்டின் சிகரம்.  அந்தப் பக்குவம் அவனுக்கு வந்ததென்றால் அவனுக்கும் முன்பே இந்த மண் பக்குவப்பட்டிருந்தால் தான் அப்படியொரு பண்பாட்டின் சிகரத்தை அவன் அடைய முடியும்.

‘மண்படு மரபில் மானுடச்சாதி 
பண்படும் அதனைப் பண்பாடு என்க’ 

-என்பார் கண்ணதாசன்.

தீமைகளைக் களைந்து, ஒழுங்கீனங்களை ஒழித்து, ஒழுக்கத்தை வளர்ப்பதைத் தான் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு என்கிறோம்.

இப்பண்பாட்டின் உச்சத்திலே இருக்கக் கூடிய மண் நம் மண்.  ‘தானே தனக்கு நண்பனும் பகைவனும்’ என்று திருமூலர் சொல்வதும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று கணியன் பூங்குன்றனார் சொல்வதும் எதைக் குறிக்கின்றன?

‘உனக்கு நீயே வழிகாட்டி’ என்று சுவாமி விவேகானந்தரும் புரிய வைத்தார்.  விவேகானந்தரை மிகச் சுருக்கமாக அறிய வேண்டுமென்றால் பாரதியின் ஒரு பாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  அந்தப் பாடல் விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தாலேயே பாரதிக்கு வந்து வாய்த்தது.  பாரதியின் சுய தரிசனமே இதில் தான் இருக்கிறது.

‘கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்’

தன்னைக் கட்டுதல் என்றால் புலனடக்கம்.  புலன் நுகர்ச்சியின் உச்சியிலே இன்றைக்கு இருப்பது தான் மனிதக் கலாச்சாரம்.

கல்வி என்ற நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு.  ஒரு பக்கம் அறிவு, இன்னொரு பக்கம் ஒழுக்கம்.

ஒழுக்கம் இல்லாத அறிவால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் வந்து சேராது.  நாணயத்தின் ஒரு பக்கம் முழுவதுமாகத் தேய்ந்து மறுபக்கம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தால் அது செல்லாத காசே  தவிர, செலாவணிக் காசு அல்ல.

இரண்டு பக்கம் தேயாமல் உள்ள கல்வி தான் வேண்டும்.  அப்போது தான் அது ‘செல்லும்’ காசு.

ஏசுவிற்கு முன்பே ‘உன்னை நீ அறிய வேண்டும்’ என்று சிந்திக்கக் கூறிய சாக்ரடீஸ் ‘நல்லறிவே நல்லொழுக்கம்’ என்றார்.  ஐம்புலன்களையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவதற்கான பருவம் தான் பிரம்மசரிய பருவம்.  அதுதான் கல்வி கற்கும் பருவம்.

பிரம்மசரியம் என்பது என்ன?

மாணவனுக்கான பிரம்மசரியம் என்பது, சிந்தனைகளை வேறு எங்கும் சிதறவிடாமல் கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துவது ஆகும்.  இன்றைக்கு அந்தப் பண்பாடு, அந்த ஒழுக்கம், அது தான் கல்வி என்ற ஒரு நிலை இருந்தால், பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், நுகர்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிக்கு இரையாகி ஒரு சக மாணவனின் கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமா?

இன்றைய கல்வி நமக்கு எதைக் கற்றுக்  கொடுக்கிறது?  இன்று மாணவர்களுக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கிறோம்?  நன்றாகப் படி, இன்ஜினீயராகு, டாக்டராகி நிறைய சம்பாதி, உலகில் எத்தனை இன்பங்கள் உள்ளனவோ அத்தனையையும் அனுபவி.

ஒழுக்கம் முதலிடம் பெறாது வெறும் அறிவு முதலிடம் பெறும்போது, பண்பாட்டு வீழ்ச்சி வருகிறது.

அறிவு என்பது கல்வி என்ற நாணயத்தின் இரண்டாவது பக்கம்,  ஒன்று நூலறிவு. மற்றது வாலறிவு.

வள்ளுவர் ‘வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’ என்பார்.  வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம்.  அறியாமை கலப்பில்லாத அறிவு எதுவோ  அது தான் வாலறிவு.  அந்த வாலறிவை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் சாதாரண இன்பங்கள் அவனைச் சலனப்படுத்த முடியாது.

விவேகானந்தர் படிக்கின்ற பருவத்தில் சிறப்பாகப் படித்தார்.  நான்கு வயதிலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

ஏன் ஒருவன் தியானம் செய்ய வேண்டும்?

சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக ஓர் ஆற்றல் உருவெடுக்கிறது.  நான்கு வயதிலேயே தியானம் செய்து, சிந்தனையை ஓர் இடத்தில் கொண்டு நிறுத்துகிற ஆற்றல் விவேகானந்தருக்கு இருந்ததால் தான், சிறு வயதிலேயே அவர் வடமொழி இலக்கணங்களைப் படித்து மனப்பாடம் செய்து, அப்படியே கூறக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.

சிந்தனையைச் சிதறவிடாது இருப்பதே பிரம்மசரியம்.  எனவே ஒருவன் சாதிக்க வேண்டுமென்றால் அவன் முதலில் செய்ய வேண்டியது தன்னைக் கட்டுதல். தன்னை எவன் கட்டுகிறானோ அவனுக்குச் சபலமில்லை;  சலனமில்லை.

தன்னைக் கட்டுதலுக்குப் பின், பிறர் துயர் தீர்த்தல்.  வாழ்வின் உயர்ந்த நோக்கமே சக மனிதர்களுக்காக வாழ்வது தான்.  விவேகானந்தர் மிகச் சிறப்பாகப் படித்தார்.  அவர் நினைத்திருந்தால் வழக்கறிஞராகி நன்கு சம்பாதித்து எல்லாச் சுகங்களையும் அனுபவித்திருக்கலாம்.

பட்டினத்தார் ஏராளமாகச் சம்பாதித்து வைத்திருந்தார்.  ஆனால் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று தமது மகனாக வந்த ஈசன் எழுதிவிட்டுப் போன வாசகத்தைப் பார்த்தார்.  அக்கணமே அனைத்தையும் துறந்துவிட்டார்.

எல்லாவற்றையும் துறப்பதால் என்ன கிடைக்கும்?

ஒரு பௌர்ணமி நிலாக் கூட்டம்.  புத்தர் பேசிக் கொண்டிருந்தபோது அரசன் அஜாதசத்ரு வருகிறான்.  புத்தரிடம், “நீ துறவி.  துறவியாக இருப்பதானால் என்ன பலன் உனக்குக் கிடைக்கிறது?” என்று கேட்டான்.

அப்போது புத்தர் கூறினார்: “துறவிக்கு ஜாதி கிடையாது.  குறிப்பிட்ட மதம் கிடையாது. சமூகம்  போட்டு வைத்திருக்கக்கூடிய விலங்குகளும் கிடையாது.

“சமூகம் ஒரு தனிமனிதனைச் சுதந்திரமாக வாழ விடாது.  சமூகம் ஒரு சட்டத்திற்கு உட்பட்டே ஒருவனை வாழவிடும்.  எனவே என் சிந்தனைக்கு ஏற்பத் தான் நான் நடப்பேன் என்று கூற முடியாது.  சமூகம், ஜாதி, மதம் ஆகிய விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு விடுதலை பெறுபவனே துறவி.

“எந்த ஆசையாக இருந்தாலும் அது கவலையைக் கொண்டு வரும்.  எனவே ஆசைகளை அறுத்தெறிந்துவிட்டு வ்ரும் துறவிக்குக் கவலை கிடையாது.  சமூகத்தின் எந்த விலங்கும் எந்தக் கவலையும், எந்த அச்சமும் எனக்குக் கிடையாது என்று ஒரு துறவியால் மட்டுமே கூற முடியும்”.

அப்படிப்பட்ட துறவி தான் சுவாமி விவேகானந்தர்.

துறவின் நோக்கமென்ன?  துறவி என்பவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் கானகத்தில் போய் கண்மூடி உட்கார்ந்திருப்பது தான் துறவா? இல்லை.  உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் உய்விப்பதற்கான வழியை தேடுவதே துறவு.

சாதாரண மனிதன் மற்றவனைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றியே சிந்திக்கிறான்.  ஒரு துறவி மனிதவாடை இல்லாத இடத்திலே ஒதுங்கி இருக்கிறான் என நினைக்கத் தோன்றும்.  ஆயினும் மனிதர்களின் நலன் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.

இது தான் துறவிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.  ஒருவன் என்ன செய்ய வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும். வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வது என்பது ஒழுக்கமாக வைத்துக்கொள்வது.  நெறிப்படுத்தும் வாழ்க்கை என்பது இன்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைப்பது.

என் அடிப்படைத்  தேவைகளுக்கு எனக்கென்று சம்பாத்தியம் இவ்வளவு போதும் என்றால் அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இருக்கும் சமுதாயத்திற்குக் கடமையாற்ற வேண்டும்.

‘தன்னைக் கட்டுதல்’ என்பது ஒழுக்கமான சமுதாய வாழ்க்கை எனப்படுகிறது.  ஒவ்வொருவனும் தன்னைக் கட்டத் தொடங்கிவிட்டால் சமுதாயம் ஒட்டுமொத்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக அமைந்துவிடும்.

அடுத்தது, பிறர்நலம் வேண்டுதல், கடவுளிடம் எனக்கு என்று கேட்டுத் தான் நமக்குப் பழக்கம்.  பிறருக்காகப் பிரார்த்திக்கும் பழக்கமே கிடையாது.  செக்குமாடு போல நாம் சுயநலத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் பெர்னாட்ஷா, ‘சாதாரண மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை; பிச்சை  எடுக்கிறார்கள்’ என்றார்.

எனக்கொன்று தெய்வத்திடம் கேட்டால் அது பிச்சை.  அடுத்தவனுக்கு என்று நெஞ்சுருகி நின்றால்  அது பிரார்த்தனை.  அதைத் தான் விநாயகரின் திருமுன்பு பாரதி சொல்கிறார்:

‘மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள் – யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவதேவா!

‘ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும் மிடிமையும், நோவும், சாவும்  நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்!

‘இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி ‘அங்ஙனமே ஆகுக’ என்பாய் ஐயனே!’

அடுத்த வேளை சோற்றுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாள், பக்கத்து  வீட்டிலிருந்து அரிசி வாங்கி வந்தால் தான் உலை கொதிக்கும்.

ஆனால் அவர் விநாயகருக்கு முன் நின்று சோறு வேண்டும் என்று கேட்கவில்லை.  மனைவிக்கு நகை வேண்டுமென்று கேட்கவில்லை.  மக்கள், விலங்குகள், புல், பூண்டு அனைத்தும் அன்போடு வாழ வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னைக் கட்டுதல், பிறர்துயர்  தீர்த்தல், பிறர் நலன் வேண்டுதல் என்ற வரிசையில் நான்காவது, எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை!

‘விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லா! யெஹோவா எனத் தொழுது அன்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனும் தேவியர் உகந்த வான்பொருளாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

அது அல்லா, யோவா, உமை, நாராயணன் எதுவும் சொல்; ‘உலகெலாம் காக்கும் ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி’ என்றவர் பாரதி.

‘பூமியில் இந்த நான்கே எவர்க்கும் கடமை’ என்று விவேகானந்தர் கூறியதையே பாரதி கூறினார்.

இந்தியாவின் வாழ்க்கை மதம்.  என் மதம் தான் உயர்ந்தது.  உன் மதம் தாழ்ந்தது என்று கூறி ஆயுதம் ஏந்தி அடுத்தவனைத் தாக்கி ரத்தம் சிந்துவது மதமல்ல.

தமிழருவி மணியன்

மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும் என்று சொன்னவர் சுவாமிஜி தான்.

இன்று ஜாதி பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.  விவேகானந்தர் என்ன கூறினார்? ஜாதி என்பது சமயம் உருவாக்கியதல்ல; அது சமுதாயத்தின் ஏற்பாடு.

‘நீ நினைத்தால் ஜாதி மாற முடியும். ஜாதி என்பது பிறப்பாலே வருவதில்லை.  உன் வாழ்வில் நீ தேர்ந்து கொள்கிற வாழ்க்கைப் பண்புகளிலே வருவது.  நீ ஒருவனிடம் கை கட்டி உடல் உழைப்பு செய்கிறபோது சூத்திரனாகிறாய்.  அதனால் தாழ்ந்தவன் என்று பொருளில்லை.  நீயே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிட்டால் நீ வைசியன்.

‘ நீயே உன் கண்ணால் பார்க்கும் தீமையைக் களைய களத்தில் இறங்கிவிட்டால் நீ க்ஷத்திரியன்.  நீ வேதங்களையும் எல்லா அறிவு நூல்களையும் படித்துப் பேருண்மை முழுவதையும் புரிந்து எது பரம்பொருள் என்று தெளிந்து விட்டால் நீ பிராமணனாகி விடுகிறாய்.  சூத்திரன் நினைத்தால் பிராமணனாக முடியும் பிராமணன் அவனுக்குரிய நெறி இழந்து நின்றால் சூத்திரனாகப் போக முடியும்’.

சமத்துவத்தால் நன்மைகள் கிடைக்குமே தவிர தீமை கிடைக்காது.  உலகம் முழுவதும் ஒரு கடவுள் என ஒப்புக்கொள்வதால் தீமை உண்டா?  கிடையாது.

இதுதான் வேதாந்த லட்சியம்.  அந்த ஆன்மிகத்தைத் தான் இம்மண்ணில் வளரச் செய்ய வேண்டும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s