-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
10. தேக அசெளக்கிய நிலை –ஆ
‘கொடுப்பவன் கேட்பானா?’
மடத்திற்கு வருகிற பிரபுக்களும் வடமொழி தென்மொழி வல்லுநரும் ஏனையோரும் வந்துவந்து பார்த்து விட்டு இவருடைய தேக நிலைமையை அறிந்து மனம் வருந்திச் செல்வார்கள். ஒரு நாள் பெரிய உத்தியோகஸ்தர் ஒருவர் இவரைப் பார்த்தற்கு வந்தார்; அவர் இவருக்கு இளமையிலிருந்தே நண்பராக உள்ளவர். அவர் இவருடைய தளர்ச்சியை அறிந்து அருகில் வந்து இவரை நோக்கி, “ஐயா, இனித் தங்களைப்போன்ற மகான்களை எங்கே பார்க்கப் போகிறோம்? தமிழ் நாட்டிற்கும் இந்த மடத்திற்கும் அணிகலனாக விளங்கும் நீங்கள் இவ்வளவு மெலிவை யடைந்திருப்பது என் மனத்தை வருத்துகின்றது. நாங்கள் இனி என்ன செய்வோம்? தங்கள் விஷயத்தில் தக்க உதவி செய்ய வேண்டுமென்று நெடுநாளாக எனக்கு ஓரெண்ணம் இருந்து வந்தது. இப்போது அதனை விரைவில் செய்ய வேண்டுமென்று தோற்றுகின்றது. என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்; உத்தரவு செய்ய வேண்டும்” என்று வருந்திக் கேட்டுக்கொண்டனர். இவர் அவரைப் பார்த்து, “இங்கே என்ன குறைவு இருக்கின்றது? குறைவில்லாமல் ஸந்நிதானம் எல்லாம் செய்வித்து வருகிறது. ஏதேனும் குறை இருப்பதாகத் தெரிந்தாலல்லவோ உங்களிடம் நான் சொல்லுவேன்?” என்று விடையளித்தார்.
கேட்ட அவர் விட்டுவிடாமல் மேலே மேலே, “அடியேனிடத்தில் தங்களுக்குக் கிருபையில்லை; என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்திப் பலமுறை போராடினார். இவர் ஒன்றும் வேண்டுவதில்லை யென்பதை வார்த்தைகளாற் கூறாமல் சிரத்தாலும் கரத்தாலும் குறிப்பித்தார். அப்பால் அவர், “நான் என்ன செய்வேன்! இவர்கள் விஷயத்தில் யாதொரு பணியும் செய்வதற்கு இயலவில்லையே” என்று வருந்தி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அப்பால் இந்நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டும் இவர் வேண்டாமென்று சொன்னது பற்றிக் கோபமுற்றும் அங்கே அயலில் நின்ற சவேரிநாதபிள்ளை இவரைப் பார்த்து, “நீங்கள் இதுவரையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான திரவியங்களைச் சம்பாதித்தும் குடும்பத்திற்கு யாதொரு செளகரியமும் செய்விக்கவில்லை; வேறு வருவாயும் இல்லை; இதற்காகப் பிறரிடத்தே சென்று கேட்டு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று இப்பொழுது நான் தங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளவில்லை. தக்க கனவானாகிய ஒருவர் வலியவந்து உதவி செய்வதாக வற்புறுத்துங் காலத்திலும் தாங்கள் ஒன்றும் வேண்டாமென்று சொல்லி விடலாமா? எத்தனையோ லட்சக்கணக்கான திரவியங்களை உடைய அவருக்கு எதையேனும் உங்களுக்குக் கொடுப்பதனாற் குறைந்து போமா? நல்ல மனமுடையவர்போற் காணப்படுகிறாரே. இப்பொழுது உங்களுக்குக் கடன் மிகுதியாக இருப்பதனால் ஏதேனும் திரவியம் கேட்கலாம்; இல்லையாயின் குமாரருக்கு ஒரு வேலை செய்விக்க வேண்டுமென்றும் சொல்லலாம்; செய்வித்தற்கு அவருக்கு ஆற்றலும் உண்டு. ஒன்றையும் வேண்டாமல் அவருடைய விருப்பத்தை மறுத்தது எனக்கும் பிறருக்கும் மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றது. இனிமேல் இப்படியிருத்தல் கூடாது; குடும்பத்திற்குத் தக்க ஸெளகரியம் பண்ணுவிக்க வேண்டும். மிகவும் சுகமாகவே இதுவரையில் வாழ்ந்துவந்த சிதம்பரம்பிள்ளை இனி என்ன செய்வார்? நான் கேட்டுக்கொள்கிற வரம் இதுதான். இனிமேல் கவனிக்க வேண்டும்” என்று அன்போடும் வருத்தத்தோடும் தெரிவித்து மேலும் மேலும் அதைப் பற்றியே சொல்லிக்கொண்டு வந்தனர்.
இவர் இடையிலே பேச்சை நிறுத்தும்படி குறிப்பித்து, “என்னப்பா, தோற்றினபடியெல்லாம் பேசுகிறாய்? கொடுப்பவனாக இருந்தால் என்னைக் கேட்டுத்தானா கொடுப்பான்? அவன் எந்தக் காலத்திலும் பிறருக்கு ஒன்றும் கொடுத்ததேயில்லை. எனக்கு அது நன்றாகத் தெரியும். நான் வேண்டாமென்று சொல்லிய பின்பு பலமுறை வற்புறுத்தியதைக் கொண்டே அவனுடைய நிலைமையை அறிந்து கொள்ளலாமே. நான் கேட்டிருந்தால் அவன் ஒன்றையுமே கொடான். கேட்டேனென்ற அபவாதந்தான் எனக்கு உண்டாகும். இளமை தொடங்கி அவனுடன் பழகியிருக்கிறேன். அவன் யாருக்கும் கொடுத்ததே இல்லை. பொருளைச் சம்பாதித்தலில் அதிக முயற்சியும் விருப்பமும் உடையவன். நான் கேளாமலிருந்தது உத்தமம். கேட்டிருந்தால் ஒன்றும் கொடாமற் போவதுடன் இவன் பல இடங்களில் நான் கேட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிவான். இனிமேல் இப்படிச் சொல்லாதே. உசிதமாகத் தோற்றினால் நான் கவனியாமல் இருப்பேனா?” என்றார். அப்பால் சவேரிநாத பிள்ளை விஷயம் தெரிந்து சமாதானமுற்றிருந்தனர்.
திருவாரூர்க்கோவை
இவர் நித்திரை செய்யாமல் தளர்வுற்று இருத்தலையறிந்து ஒருவர் மாறி ஒருவர் இவரைக் கவனிப்பதற்கு விழித்துக் கொண்டே இருப்போம். அங்ஙனம் இருக்கும் நாட்களுள் ஒரு நாள் ஓசையுண்டாகாமல் மெல்லப் படித்துக் கொண்டேயிருக்க நினைந்து திருவாரூர்க் கோவைச் சுவடியைக்கையில் வைத்திருந்தேன். அதை இன்ன நூலென்று அறிந்து முதலிலிருந்தே படிக்கும்படி இவர் சொன்னார்; அங்ஙனம் படிக்கும் பொழுது,
(கட்டளைக் கலித்துறை) (ஐயம்) "வேதாவின் தண்ணிட மோமக வானுறை விண்ணிடமோ வாதா சனவிறை நண்ணிட மோவிந்த மண்ணிடமோ காதாருங் கண்ணி யிடத்தார் தியாகர் கமலையன்னார் பாதார விந்தத் துகள்வீழ மாதவம் பண்ணியதே" (துணிவு) "கார்க்குன் றுரித்தவர் செம்பொற் றியாகர் கமலையன்னார் வார்க்குன் றிரண்டினும் வேரோடும் வல்லியும் வள்ளையிலே சேர்க்கின்ற தோடும் பிறைமே லிருக்குந் திலகமுநாம் பார்க்குந் தொறுமிவர் பாராரென் றென்று பகர்கின்றவே"
என்ற செய்யுட்களைக் கேட்டு, “மிகவும் நன்றாயிருக்கின்றன” என்று சொன்னதுடன் மேலே வாசிக்கும்படிக்கும் சொன்னார். அப்படியே படித்து வருகையில் அங்கங்கேயுள்ள செய்யுட்களின் நயத்தையும் நடையையும் அந்த நூலாசிரியருடைய குண விசேடங்களையும் மெல்லப் பாராட்டிக்கொண்டே யிருந்தார்.
ஐயங்களைப் போக்கியது
மற்றொருநாள் இரவில் அகத்தியத் திரட்டைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ள, “தில்லைச் சிற்றம்பலம்” என்னும் பதிகத்தில் 10-ஆவது செய்யுளில் வந்துள்ள ‘ஊற்றத்தூர்’ என்னும் ஸ்தலம் எங்குள்ளதென்று கேட்டபொழுது அது வைப்புஸ்தலங்களுள் ஒன்றென்றும் ஊட்டத்தூரென்று வழங்கப்படுகின்றதென்றும் அதிலுள்ள மூர்த்திக்குச் சுத்தரத்தினேசுவரரென்பது திருநாமமென்றும் நாவின் குழறலுடன் சொன்னார். அப்பால், திருவாசகத்தில் திருக்கோத்தும்பி என்னும் பகுதியைப் படிக்கும்படி சொன்னார்; அதைப் படித்து வருகையில், “நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து” என்பதிலுள்ள ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை என்றேன். ‘வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போன்று’ என்று அதற்கு நாக்குழறலுடன் விடையளித்தார். அப்பொழுதுள்ள இவருடைய நிலைமையைப் பார்த்து ஒன்றுந் தோற்றாமல், “எவ்வளவோ அரிய விஷயங்களை எளிதிற் சொல்லும் பெரியாரை அடுத்திருந்தும் இதுவரையில் விசேஷமாக ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே. இனி அரிய விஷயங்களை யார் சொல்லப் போகிறார்கள்?” என்ற மன வருத்தத்துடன் இவரைக் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
இவருடைய தேக நிலையை அறிந்து மாயூரத்திலிருந்து இவருடைய தேவியாரும், குமாரரும் திருவாவடுதுறைக்கு வந்து ஸ்திரமாக இருந்து கவனித்துக்கொண்டு வந்தார்கள்.
வைத்தியன் கூறியது
இவருடைய தேகஸ்திதி வரவர மெலிவையடைந்து வருவதைத் தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர் வலய வட்டமென்னும் ஊரிலுள்ள தனுக்கோடி யென்ற சிறந்த வைத்தியனை வருவித்து இவருடைய கையைப் பார்த்து வரும்படி அனுப்பினார். அவன் வந்து கை பார்த்துவிட்டு இவரிடத்தில் ஒன்றும் சொல்லாமல் புறத்தே வந்து எங்களிடம், “இன்னும் மூன்று பொழுதிலே தீர்ந்துவிடும்” என்று ‘வெட்டென’ச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் அங்ஙனம் கூறியது எங்களுக்கு இடி விழுந்தது போல இருந்தது. ‘மிகவும் துக்ககரமான செய்தியைச் சொல்லுகிறோம்’ என்பதையேனும், ‘கிடைத்தற்கரிய ஒருவருடைய வியோகத்தைப் பற்றித் துணிந்து சொல்லுகிறோம்’ என்பதையேனும் நினையாமல் அந்த வைத்தியன் பளிச்சென்று சொன்னது கேட்டு ஒருபாற் சினமும் ஒருபால் வருத்தமும் உடையவர்களானோம். நோயின் இயல்பையும் மருந்து கொடுக்க வேண்டும் முறையையும் அல்லாமல் வேறொன்றையும் அறியாத அவன் நோயாளிகள் யாவரையும் ஒரு தன்மையினராகவே பாவிப்பானென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன் சொல்லியதை இவருக்கு நாங்கள் சொல்லவில்லை. அவ்வைத்தியன் தாதுக்களைப் பார்த்துச் சொல்வதில் அதிசமர்த்தனாகையால் அவன் வார்த்தையை நம்பினோம்.
சவேரிநாத பிள்ளைக்காகக் கடிதங்கள் எழுதுவித்தது
தம்முடைய தேகஸ்திதி மிகவும் தளர்ச்சி அடைந்து கொண்டு வருவதையறிந்த இவர், தம்மிடத்திற் படிக்கும் வியாஜத்தை வைத்துக்கொண்டு பல வருஷங்களாக இருந்து வேறொரு பயனையுங் கருதாமல் தமக்குப் பணிவிடை செய்துகொண்டும் தமது குடும்பக் காரியங்களைக் கவனித்துக்கொண்டும் உண்மையாக நடந்துவந்த சவேரிநாத பிள்ளைக்கு விவாகம் செய்வித்து ஏதேனும் உபகாரம் செய்து ஸெளகரியப்படுத்தி வைக்கவேண்டுமென்று எண்ணினார். தம்முடைய நண்பர்களாகிய முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை, வரகனேரி சவரிமுத்தா பிள்ளை, புதுச்சேரி சவராயலு நாயகர், காரைக்கால் தனுக்கோடி முதலியார் முதலிய கிறிஸ்தவ கனவான்களுக்கும், பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன் மாளிகை இரத்தினம் பிள்ளை முதலியவர்களுக்கும் தம் எண்ணத்தைப் புலப்படுத்தித் தனித்தனியே கடிதமெழுதும்படி என்னிடம் சொன்னார். அப்படியே இவருடைய குறிப்பறிந்து எழுதினேன்.
ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பிலும் வழக்கம்போலவே அவர்கள் மீது ஒவ்வொரு பாடல் இவரால் அந்தத் தளர்ந்த நிலையிலும் இயற்றிச் சேர்ப்பிக்கப்பெற்றது. அச்செய்யுட்கள் மிகவுஞ் சுவையுடையனவாக இருந்தன. சொல் மாத்திரம் தளர்ச்சி மிகுதியால் குழறி வந்ததேயன்றி அறிவின் தளர்ச்சி சிறிதேனும் உண்டாகவில்லை. சவேரிநாத பிள்ளையை அழைத்து அக்கடிதங்களை அளித்து, “அப்பா, சவேரிநாது, இக்கடிதங்களை உரியவர்களிடம் கொடுத்து அவர்கள் செய்யும் உதவியைப் பெற்று விவாகம் செய்துகொண்டு ஸெளக்கியமாக வாழ்ந்திருப்பாயாக; உன்னுடைய செயல் மிகவும் திருப்தியைத் தந்தது” என்றார். அவர் கண்ணீரொழுக அக்கடிதங்களை வணக்கஞ்செய்து பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகள்
மடத்திற்கு வரும் ஸம்ஸ்கிருத வித்வான்களும் பிற வித்வான்களும் சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து அவரோடு ஸல்லாபம் செய்துவிட்டு இவருக்குள்ள அஸெளக்கியத்தைப் பற்றிக் கேள்வியுற்று வந்து வந்து பார்த்துச் சிறிதுநேரம் இருந்து இவர் தளர்ச்சி அடைந்திருப்பதை அறிந்து வருந்திச் செல்வார்கள். ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் கிரந்தங்களிலும் திருவியலூர் ஐயா அவர்கள், ஸ்ரீமத் அப்பைய தீக்ஷிதர், ஸ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர் கிரந்தங்களிலும் நல்ல பழக்கமுடையவரும் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவரும் விபூதி ருத்திராக்ஷதாரணமுடையவரும் தோற்றப் பொலிவுள்ளவரும் இவர்பால் மிக்க அன்புடையவரும் வயோதிகருமாகிய கஞ்சனூர் ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகளென்பவர் பார்க்க வந்தார்; இவருடைய தேக நிலையை அறிந்து வருத்தமடைந்தார். அவருடைய சைவத் திருக்கோலத்தைக்கண்டு இவர் அதில் மிகவும் ஈடுபட்டு உள்ளங் குளிர்ந்து உருகிக் கண்ணீர் வீழ்த்தினார்.
பின்பு சாஸ்திரிகளை நோக்கி ஏதாவது சொல்ல வேண்டுமென்று இவர் குறிப்பித்தார். அப்படியே அவர் மேற்கூறிய பெரியோர்களுடைய வாக்கிலிருந்து சிவபெருமானுடைய பரத்துவத்தைத் தெரிவிக்கும் சில சுலோகங்களைச் சொல்லிப் பொருளும் கூறிக்கொண்டே வந்து ஸ்ரீ சங்கராசாரியார் செய்த சிவானந்தலஹரியிலுள்ள , “ஸதாமோஹாடவ்யாம்” என்ற சுலோகத்தைச் சொல்லிப் பொருளும் சொன்னார். இப்புலவர் சிரோமணி அதில் ஈடுபட்டு அவரைச் சும்மா இருக்கும்படி குறிப்பித்துவிட்டு ஓர் ஏடும் எழுத்தாணியும் கொண்டுவரும்படி குறிப்பித்தார். நான் அவற்றைக் கொண்டுவரவே அந்தச் சுலோகத்தின் மொழிபெயர்ப்பாகச் செய்யுளொன்றை இயற்றி மெல்லச் சொன்னார். நான் எழுதிக் கொண்டேன். அச்செய்யுள் வருமாறு:
(விருத்தம்) மோகமா மடவி திரிந்தரி வையர்தம் முலைக்குவட் டிடைநட மாடித் தாகமா ராசைத் தருக்குலந் தோறும் தாவுமென் புன்மனக் குரங்கைப் பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப் பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன் ஏகநா யகனே தில்லையி லாடும் இறைவனே யெம்பெரு மானே."
எப்பொழுதும் இவருக்கு ஸ்ரீ நடராஜமூர்த்தியின் குஞ்சித சரணத்திலேயே ஞாபகமிருக்குமாதலின் இந்தச் செய்யுளின் ஈற்றடி அந்நினை விலெழுந்து சுலோகத்தின் ஈற்றடிக்குச் சற்று வேறாக அமைந்தது. அதைக்கண்ட நாங்கள் இந்தத் தளர்ச்சியிலும் பெரியோர்களிடத்தில் சம்பாஷணை செய்யும் இயல்பும் அரிய விஷயத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்னும் அவாவும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியினிடத்துத் திடமான பக்தியும் இவருக்கு இருத்தலை யறிந்து வியந்து இவருடைய தளர்ச்சியை நினைந்து வருந்தினோம்.
பின்பு அந்தச் சாஸ்திரிகள் ஈசுவரத்தியானம் செய்துகொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுப் பிரிவாற்றாமல் இவரிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
பிறரும் நானும் இவரை இடைவிடாது பாதுகாத்துக் கொண்டே வந்தோம். அப்போது திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரருக்குப் பிரம்மோத்ஸவமும் மடத்தில் தைக் குரு பூஜையும் நடைபெற்று வந்தனவாதலால் தம்பிரான்கள் முதலியவர்களுடைய திருக்கூட்டமும் பல இடங்களிலிருந்து வந்த ஸம்ஸ்கிருத வித்துவான்களுடைய குழாமும் தமிழ் வித்துவான்களுடைய கூட்டமும் சைவப்பிரபுக்களின் குழுவும் மற்றவர்களின் தொகுதியும் நிறைந்திருந்தன; மடத்திலும் கோயிலிலும் திருவீதி முதலிய இடங்களிலும் அலங்காரங்கள் செய்யப்பெற்றிருந்தன; அவற்றால் திருவாவடுதுறை சிவலோகம்போல் விளங்கியது.
சுப்பிரமணிய தேசிகர் விசாரித்துக்கொண்டே இருந்தது
இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.
தை மாதம் 20-ஆம்தேதி மங்களவாரம் (1-2-1876) காலையிலிருந்து இவருக்குத் தேகத்தளர்ச்சி முதலியன அதிகரித்துக்கொண்டே வந்தன. அன்று இரவில் ஐந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருடைய உறவினர் ஒருவர் மீது ஏதோ ஒரு பெண் தெய்வம் ஆவேசமாகவந்து, “நான் இவர்களுடைய குலதெய்வமாகிய அம்மன்; பலவருஷங்களாக எனக்குப் பூசை போடுதலை இவரும் இவரைச் சார்ந்தவர்களும் மறந்துவிட்டார்கள். அதனாலே தான் இவ்வளவு அசெளக்கியங்கள் இவருக்கு நேர்ந்தன. இனிமேலாவது எனக்குப் பூசைபோட்டால் இவருடைய அசெளக்கியத்தைத் தீர்த்து விடுவேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவர் மிகவும் நல்லவராதலால் நான் வலியவந்து சொன்னேன். இனி அதைச் செய்வதற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியது.
அதை இவருடைய தேவியாராகிய காவேரியாச்சி ஒப்புக் கொண்டனர். இவரும் அக்குலதெய்வம் உண்மையையும் அதற்குத் தாம் பூசை போடாதிருத்தலையும் தம்முடைய முகபாவத்தாற் குறிப்பித்தார். ஆனால் ஆவேசங் கொண்டோரிடத்தில் இவருக்கு நம்பிக்கையில்லை. மற்றவர்கள் பூசைபோட்டால் நல்லதென்று சொன்னார்கள். அந்தப்படியே ஒரு ரூபாயை மஞ்சள் நீரில் நனைத்த துணியில் இவருடைய தேவியார் முடிந்து வைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டார். அப்படிச் செய்தாற் செளக்கியப்படலாமென்ற எண்ணம் சிலருக்கு உண்டாயிற்று.
அன்றைத் தினம் கோயிலில் ரிஷபவாகனக் காட்சியாதலால் ஸ்ரீ கோமுத்தீசர் ரிஷபாரூடராய்க் கோபுரவாயிலில் எழுந்தருளியிருப்பதை அறிந்து தரிசனத்திற்கு நான் அங்கே சென்றேன். அப்போது பரிவாரங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டே நின்ற சுப்பிரமணிய தேசிகர் என்னை அழைத்துப் பிள்ளையவர்களுடைய தேகஸ்திதியைப் பற்றிக் கவலையுடன் விசாரித்தார்; பிறர் பேசுவதை அறிந்து கொள்கிறார்கள்; உத்தரம் கூறுவதற்கு மாத்திரம் அவர்களால் இயலவில்லை” என்றேன். அதனை அவர் கேட்டு மிகவும் வருத்தமடைந்ததுடன், “இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் இங்கே இருக்கிறார்களென்ற பேச்சிருந்தால் மடத்திற்கு மிகவும் கெளரவமாக இருக்கும். ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று சொல்லிவிட்டு, போய்க் கவனித்துக்கொண்டிருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்.
‘அடைக்கலப் பத்து’
உடனே சென்று நானும் சவேரிநாத பிள்ளை முதலியோரும் இவரைக் கவனித்துக் கொண்டு அயலிலே இருந்தோம். பால் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தோம். ஸ்ரீ கோமுத்தீசுவரர் ரிஷபாரூடராகத் திருவீதிக்கு எழுந்தருளினார். இவருடைய குறிப்பின்படி நாங்கள் தேங்காய் பழம் கற்பூரம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்று தீபாராதனை செய்வித்து ஆதிசைவர் கொடுத்த விபூதிப் பிரசாதத்தைக் கொணர்ந்து இவர்பாற் சேர்ப்பித்தோம். அதை இவர் மெல்ல வாங்கித் தரித்துக் கொண்டார்.
சிவபதமடைந்தது
பதினைந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருக்கு ஸ்வாதீனத்தப்பும் தேகத்தில் ஒரு துவட்சியும் உண்டாயின. அதனையறிந்த சவேரிநாத பிள்ளை இவருடைய பின்புறத்திற் சென்றிருந்து இவரைத் தம்முடைய மார்பிற் சார்த்தி ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது சில நாழிகை வரையில் இவருக்குப் பிரக்ஞை இல்லை; சிலநேரம் கழித்துப் பிரக்ஞை வந்தது. உடனே திருவாசகத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைப் படிக்க வேண்டும் என்னுங் குறிப்போடு, “திருவா” என்றார். அக்குறிப்பை அறிந்து அப்புத்தகத்தை எடுத்துவந்து அடைக்கலப்பத்தை வாசித்தேன்; கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டுவந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஓர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்திற் சென்றபொழுது வலக்கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜமூர்த்தியினுடைய குஞ்சித சரணத்தை இவர் அடைந்த குறிப்பாக எங்களுக்குத் தோற்றியது. அப்போது இவருக்குப் பிராயம் 61. அந்தச் சமயத்தில் இவருடைய சரீரத்தைச் சார்த்திக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்த சவேரிநாதபிள்ளை அந்த நல்லுடலை உடனே படுக்கையிற் கிடத்தி விட்டு மற்றவர்களோடு புலம்பிக் கொண்டே அயலில் நின்றார். இவருடைய தேவியாரும் குமாரரும் மற்ற உறவினரும் கண்ணீர் விட்டுப் புலம்பினார்கள். அங்கேயிருந்த எல்லோருக்கும் உண்டான வருத்தத்திற்கு எல்லையேயில்லை.
அபரக்கிரியை
இக்கவிரத்னம் மண்ணுலக வாழ்வை நீத்த செய்தி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தெரிந்தது. காளிதாஸன் இறந்தது கேட்டுப் போஜன் வருந்தியதைக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்தக் காட்சி இப்படித்தான் இருந்திருக்கு மென்றெண்ணும்படியான நிலையில் தேசிகர் இருந்தார். தாமே அறிந்து ஸ்ரீ அம்பலவாண தேசிகரிடம் பலபடியாக இவருடைய நல்லாற்றலைத் தக்கவாறு எடுத்துக் கூறி ஆதீன வித்துவானாகச் செய்தது முதல் இறுதிக்காலம் வரையில் பலவகையாலும் இக் கவிச்சக்கரவர்த்தியினுடைய குணங்களையும் புலமைத் திறத்தினையும் நன்றாக அறிந்து அறிந்து இன்புற்றவர் அவரே. பிள்ளையவர்களுடைய உண்மையான பெருமையை அவரைப்போலவே அறிந்தவர்கள் வேறு யாவர்? தம்முடைய அவைக்களத்தை அலங்கரித்து மடத்திற்குத் தமிழ் வளர்த்த பெரும் புகழை உண்டாக்கிய இந்த மகாவித்துவானுடைய பிரிவைப் பொறுப்பதென்பது அவரால் இயலுவதா?
அன்று குருபூஜைத் தினமாதலின் சுப்பிரமணிய தேசிகர் கவனிக்க வேண்டிய பல காரியங்கள் இருந்தன. அவைகளில் அவர் மனம் செல்லவில்லை. அவருடைய முகம் அன்று மலர்ச்சியின்றி யிருந்தது.
மிக்க வருத்தத்தோடு இருந்தும், தேசிகர் மேலே முறைப்படி மறுநாட்காலையில் நடக்க வேண்டிய அபரக்கிரியைகளை விரிவாக நடத்தும்படி மடத்து உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டளையிட்டனுப்பினர். காலையில் அதிர்வெடிகள் போடப்பட்டன. திருக்கோடிகா, திருத்துருத்தி, திருவிடைமருதூர் முதலிய ஊர்களிலிருந்து அபிஷிக்தப் பெரியார்கள் பலர் வருவிக்கப்பட்டார்கள்.
மற்றவர்களுக்கு நடக்கும் முறையிலும் செலவிலும் அதிகப்பட நடத்தி இவருடைய திவ்ய சரீரத்தை விபூதி ருத்திராக்ஷங்களால் அலங்கரித்து எடுப்பித்துக்கொண்டு செல்லத் தொடங்கியபொழுது இவருடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் மடத்து முகப்பில் வரிசையாக வந்து நின்று கண்ணீரை வீழ்த்திக் கொண்டே கலங்குவாராயினர். வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து, “தமிழ்க் காளிதாஸா! தமிழ்க் காளிதாஸா!” என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும் அயலூரிலிருந்து வந்திருந்த இவர் மாணாக்கர் கூட்டத்திலிருந்தும், “கவிச் சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே! எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்! யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார்!” என்ற ஒலியும், வேறொரு சாராரிடத்திருந்து, “குணக்கடலே! சாந்த சிரோமணீ!” என்ற சப்தமும், பொதுவாக மற்ற யாவரிடத்திலிருந்தும், “ஐயா! ஐயா!” என்ற சப்தமும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக்கொண்டு போகையில், “இனிமேல் திருவாசகத்திற்கு மிகத் தெளிவாகவும் அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிறார்கள்?” என்று என் தந்தையார் முதலிய பலர் சொல்லி மனம் உருகினார்கள். உடன் சென்ற கூட்டங்கள் மிக அதிகம்.
இவ்வண்ணம் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள மருதமரச் சாலைவழியே சென்று காவிரிக்கரையிலுள்ள ருத்திர பூமியை அடைந்தவுடன் இவருடைய தேகம் சந்தனக்கட்டை, பரிமள தைலம் முதலியவற்றோடு அமைக்கப்பட்ட ஈமப்பள்ளியில் வைத்துச் சிதம்பரம் பிள்ளையால் விதிப்படி தகனம் செய்யப்பெற்றது.
மாணாக்கர்களாகிய நாங்கள் அடைந்த வருத்தம் இங்கே எழுதி யடங்குவதன்று; செயலழிந்திருந்தோம்; “உடலெலாம் உயிரிலா எனத்தோன்று முலகம்” என்றபடி அவ்வூராரும் வந்தோர்களும் செயலற்று மிக்க வாட்டத்துடன் இருந்தார்கள். அப்பால் ஸ்நானாதிகளை முடித்துக்கொண்டு மீண்டுவந்து நான் திருவாரூர்த் தியாகராசலீலையைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள அருமையான செய்யுட்களைப் படித்துப் படித்துப் பொருள் நயங்களை அறிந்து கண்ணீர் வீழ்த்திக்கொண்டே பகல் ஒரு மணிவரையில் இருந்துவிட்டேன்; ஆகாரத்திற் புத்தி செல்லவில்லை. மற்றவர்களும் அப்படியே இருப்பவர்களாய் இவர் இயற்றியவற்றுள் தமக்குப் பிரியமான ஒவ்வொரு நூலைப் பார்த்துக்கொண்டே இருந்து வருந்துவாராயினர்.
சுப்பிரமணிய தேசிகர் எனக்கு ஆறுதல் கூறியது
ஒரு மணிக்கு மேலே ஒடுக்கத்தில் வீற்றிருந்த சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்து வரச் சென்று அவருக்கு அயலில் நின்றேன். கயையில் ஜனோபகாரமாக ஒரு தர்மசாலை கட்டிவைத்த முத்தைய தம்பிரானென்பவரும் அங்கு வந்திருந்தார். நின்ற என்னை நோக்கி தேசிகர் இருக்கும்படி குறிப்பித்தார். அவரைக் கண்டவுடன் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று; கண்ணீர் ஆறாகப் பெருகிவிட்டது; அழத் தொடங்கிவிட்டேன்.
அவர் கையமர்த்தி, “காலத்தை யாரால் வெல்ல முடியும்? அதே வருத்தத்துடன்தான் நாமும் இருந்து வருகிறோம். ஆனால் உம்மைப்போல் வெளிப்படுத்தவில்லை. பெரிய மணியை இழந்து விட்டோம். இனி இதைப்பற்றிச் சிந்தித்தலில் பயனில்லை. அவர்களிடம் கேளாமல் எஞ்சியுள்ள நூல்களை நாம் பாடஞ் சொல்வோம். அவற்றைக் கேட்டுச் சிந்தனை செய்து கொண்டும் புதியவர்களாக வருபவர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டும் செளக்கியமாக நீர் இங்கே இருக்கலாம். அவர்களுடைய பக்கத்தில் இருந்தது போலவே நம்முடைய பக்கத்தில் இருந்து வர வேண்டும். இந்த ஊரை உம்முடைய சொந்த ஊராகவே பாவித்துக்கொள்ளும்; *11 வீடு முதலியவற்றை விரைவில் அமைத்துக் கொடுப்போம். கவலையின்றி இருக்கலாம். பிள்ளையவர்களை மாத்திரம் வருவித்துக் கொடுக்க முடியாதேயன்றி வேறு இங்கே என்னதான் செய்விக்க முடியாது? உம்முடைய சகபாடிகளாகிய தம்பிரான்களைப் போலவே நீரும் மடத்துப் பிள்ளையல்லவா? உமக்கு என்ன குறைவு?” என்று எவ்வளவு தைரியத்தை உண்டாக்க வேண்டுமோ அவ்வளவையும் உண்டாக்கி அபயமளித்தார்.
பின்பு, பிள்ளையவர்களுடைய பிரிவைப் பற்றித் துக்கித்துக் கொண்டிருந்த ஸகபாடிகள் இருக்குமிடஞ் சென்று இப்புலவர்பிரானுடைய குணங்களைப் பாராட்டி வருந்திக் கொண்டே யிருந்தேன்.
பலர் பலவாறு வருந்தல்
அஸ்தமித்த பின்பு தேசிகரைப் பார்த்தற்குச் சென்றேன். அப்பொழுது பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி அவரை விசாரித்தற்குப் பலர் வந்து வந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். மடத்து ஸம்ஸ்கிருத வித்துவான்களுள் ஒருவரும் மிக்க முதுமையை உடையவருமாகிய ஸ்ரீராமகுட்டி சாஸ்திரிகளென்பவர் அப்பொழுது ஒடுக்கத்திலிருந்து எனக்கு எதிரே வந்தார். அவர் பிள்ளையவர்களோடு நெடுங்காலம் பழகியவர்; பல சாஸ்திரங்களில் நிபுணர்; தளர்ந்த உடலையும் தளரா நாவையும் உடையவர். அவர் என்னைக் கண்டு ஓவென்றழுது, “தமிழ்க் காளிதாசன் போய்விட்டானையா!” என்று மூன்று முறை சொல்லி அரற்றினர். பலர் உடனே அங்கே வந்து கூடிவிட்டனர். அப்பால் ஒருவாறு சமாதானப்படுத்தி அவரை அனுப்பிவிட்டு, அங்கே நின்ற மற்றவர்களோடு சேர்ந்து ஒடுக்கத்திற்குச் சென்றேன்.
சுப்பிரமணிய தேசிகர் தம்மைச் சூழ்ந்திருந்த பலரிடம் பிள்ளையவர்களுடைய குணங்களையும் கல்விச் சிறப்பையும் பற்றிப் பாராட்டியும் பிரிவைப் பற்றி வருத்தமுற்றும் பேசிக்கொண்டிருந்தனர்:
“தேசாந்தரங்களிலெல்லாம் பிள்ளையவர்களுடைய பெரும் புலமைத் திறம் புகழப்படுகிறது. அவர்கள் பெயரோடு நமது மடத்தின் பெயரும் விளங்குகின்றது. அந்தப் புலவர்மணியின் ஆற்றல் இந்த மடத்தை எல்லோருக்கும் உரிய கல்வி நிலையமாகச் செய்தது. வைதிக மதஸ்தர்களும் பிற மதஸ்தர்களும் பல்வகைச் சாதியினரும் தமிழ் நூல்களைத் தடையின்றிப் பாடஞ் சொல்லும் அவர்களை எண்ணி எண்ணி இங்கே வந்தனர். நமது மடத்துக்கும் கெளரவத்தை அளித்தார்கள். முன் பழக்கமில்லாத எத்தனையோ உத்தியோகஸ்தர்களும் வேறு வகையான பிரபுக்களும் இந்த மடத்திற்கு வந்திருக்கிறார்கள். எல்லாம் அவர்களால் வந்த பாக்கியமே. பணமும் இடமும் அதிகாரமும் சாதியாத எவ்வளவோ காரியங்களை மடத்திற்காக அவர்கள் சாதித்து உதவியிருக்கிறார்கள். அவ்வளவுக்கும் இந்த மடத்திலிருந்து அவர்கள் பெற்ற பயன் சிறிதளவேயாகும். எங்கே இருந்தாலும் அவர்கள் தம்முடைய தமிழரசாட்சியை நடத்தியிருப்பார்கள். அதற்கு இம் மடத்தை அமைத்துக்கொண்டது ஆதீனத்தின் பாலுள்ள அபிமானமே. இந்த ஆதீன குலதெய்வமென்று சொல்லப்படுகிற சிவஞான முனிவர் முதலிய பெரியோர்களால் இவ்வாதீனம் தமிழ்க் கல்வியில் மிக்க சிறப்பை அடைந்ததாயினும் மடத்திலிருந்தே பாடஞ் சொல்லித் தமிழை விருத்தி செய்யவில்லையே என்ற குறை இந்த மடத்திற்கு இருந்து வந்தது. அக்குறை பிள்ளையவர்களாலே தான் தீர்ந்ததென்பதை நாம் சொல்ல வேண்டுமா! இனிமேல் அத்தகைய உபகாரிகள் எங்கே பிறக்கப்போகிறார்கள்! ‘பிள்ளையவர்களைப் பார்க்கும்படி செய்விக்க வேண்டும்’ என்று இங்கே வந்தவர்களெல்லாம் சொல்லச் சொல்லக் கேட்டுக் குளிர்ந்த இந்தச் செவிகள் இனிமேல் எதைக் கேட்கும்! பெரிய மனிதர்கள் வந்த காலத்திலும் சிறந்த வித்துவான்கள் வந்த காலத்திலும் சமயத்துக்கு ஏற்றபடியும் நம்முடைய உள்ளக் கருத்துக்கு ஒத்தபடியும் அரிய இனிய செய்யுட்களை விரைவிற் செய்து மகிழ்விக்கும் அவர்களுடைய திறமையை வேறு யாரிடம் பார்க்கப் போகிறோம்! எவ்வளவு பெரிய ஸபையிலும் அவர்கள் அங்கே நிகழும் நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கவியொன்று கூறி விட்டால் அந்த ஸபையில் உண்டாகும் குதூகலமும் நமக்கு உண்டாகும் ஆனந்தமும் இனிமேல் எங்கே வரப்போகின்றன! அவர்களுடைய கவி ஸபைநிகழ்ச்சியின் முடிவிற் கிரீடஞ் சூட்டியது போல விளங்குமே! அவர்களிடம் மதிப்புள்ள எத்தனை பேர்கள் தம்மாலான அனுகூலங்களை மடத்திற்குச் செய்திருக்கிறார்கள்! ‘திருவாவடுதுறை ஆதீனம் செந்தமிழ்ச்செல்வியின் நடன சாலை’ என்று பிற்காலத்திலும் யாவரும் கூறும் வண்ணம் செய்வித்த அவர்கள் இல்லாத குறை இனி என்றைக்கு நீங்குமோ தெரியவில்லை.
“வந்தவர்களில் அவர்கள் குணத்தைக் கண்டு வியவாதவர்களே இல்லை. என்ன அருமையான குணம்! நாமும் தினந்தோறும் எவ்வளவோ வித்துவான்களைப் பார்த்துக் கொண்டே வருகிறோம். சிறிது படித்திருந்தால் எவ்வளவு தருக்கு வந்துவிடுகிறது? இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கிய அவர்கள் அலையற்ற கடல்போல அடங்கியிருந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வோம்! அவர்கள் தம்முடைய ஆற்றலைத் தாமே புகழ்ந்து கொண்டதை யாரேனும் கேட்டிருக்கிறார்களா! அத்தகைய குணக்குன்றை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறோம்! மிகச் சிறந்த பண்டிதராகிய ஆதீன வித்துவான் *12 தாண்டவராயத் தம்பிரானவர்கள் கூட ‘இவர்களைப்போல யாரும் இல்லை’ என்று வியக்கும் புலமையும் இயல்பும் உடைய அவர்களுக்கு ஆயுள் மாத்திரம் இவ்வளவினதாக அமைந்ததை நினைந்து நினைந்து வருந்துவதை யன்றி நாம் என்ன செய்ய முடியும்? ஸ்ரீநமச்சிவாய மூர்த்தியின் திருவருள் இவ்வளவுதான் போலும்! கவித்வ சக்தியை நேரிற் காணாமல் யாராவது கேட்டால் உண்மையென்று நம்ப முடியாதபடி அவ்வளவு ஆச்சரியமாகப் பாடும் அந்த மகாகவியைத் தமிழ் மொழி இழந்த நஷ்டத்தை நீக்குதற்கு இனி யாரால் முடியும்? இனி நமக்குப் பொழுது போவது எவ்வாறு?”
-என்று அவர் பலவாறு சொல்லிக் கொண்டே யிருந்தனர்.
பிள்ளையவர்கள் சிவபதமடைந்த தினத்தைப் புலப்படுத்தி தில்லை விடங்கன் வெண்பாப் புலி வேலுசாமி பிள்ளை யென்பவர்,
“மன்னும் யுவவருட மாதந்தை முன்பக்கம்
உன்னும் பிரதமைமா லோணநாள் - மின்னும்
துருவுபுகழ் மீனாட்சி சுந்தரநம் மேலோன்
திருவுருவ நீங்கு தினம்”
என்னும் வெண்பாவை இயற்றினார்.
கடிதங்கள்
உடனே தியாகராச செட்டியாருக்கு இந்த விஷயத்தைத் தேசிகர் கட்டளையின்படி குமாரசாமித் தம்பிரான் எழுதியனுப்பினார்; முதல் நாளில் அவருடைய நற்றாய் தேக வியோகமானமையின் அப்பிரிவாற்றாமல் வருந்திக்கொண்டிருந்த அவர் இச் செய்தி தெரிந்து, “முதல்நாள் பெற்ற தாயையும் மறுநாள் ஞானபிதாவையும் இழந்துவிட்டேன்” என்று மிக வருந்தி விடையனுப்பினார்.
இவர் சிவபதம் அடைந்ததைக் குறித்துப் பிற்பாடு, பல அன்பர்களுக்குச் சிதம்பரம் பிள்ளையைக் கொண்டும் என்னைக் கொண்டும் பிறரைக் கொண்டும் கடிதம் எழுதும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்வித்தார். ஒவ்வொருவரும் பிரிவாற்றாமையைப் புலப்படுத்தி விடைக்கடிதம் அனுப்பிவந்தனர்.
அவற்றுள் சின்னப்பட்டம் நமச்சிவாய தேசிகர் கல்லிடைக் குறிச்சியிலிருந்து சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் பிள்ளையவர்களுடைய தேக வியோகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி வருமாறு:
“மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இன்னும் கொஞ்ச நாளாவதிருந்தால் கல்வி அருமை பெருமையடையும். அதற்கு அதிட்டமில்லாமற் போய்விட்டது. அவர்கள் விஷயத்தில் மஹா ஸந்நிதானத்திற் கொண்டருளுவதெல்லாம் பெருங்கிருபையென்றே நினைத்துப் பெருமகிழ்ச்சியுற்றிருக்கிறேன்.”
ஆறுமுக நாவலர் சிதம்பரம் பிள்ளைக்கு எழுதிய கடிதம் வருமாறு:
உ . ‘சிவமயம்’ “ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவருளினாலே செல்வச் சிரஞ்சீவி தம்பி சிதம்பரம் பிள்ளைக்குச் சர்வாபீட்ட சித்தி யெய்துக. “தாம் எழுதியனுப்பிய கடிதம் பெற்று வாசித்துச் சகிக்கலாற்றாத் துக்கமுற்று யாக்கை நிலையாமையை நினைந்து ஒருவாறு தெளிந்தேன். தம்முடைய தந்தையாராகிய மஹா கனம் பொருந்திய ஸ்ரீபிள்ளையவர்கள் தமிழ் வழங்கு நிலமெங்கும் உலக மழியுங்காறும் தங்கள் புகழுடம்பை நிறுத்திவிட்டுச் சென்றமையே தமக்கு வாய்த்ததொரு பெரும்பாக்கியம்! இன்னுஞ் சில காலம் இருப்பார்களாயின், இன்னுஞ் சில காரியங்கள் அவர்களாற் செய்யப்பட்டு விளங்கும். 'வினைதானொழிந்தாற் றினைப்போதளவு நில்லாது' என்னுந் திருவாக்கை நினைந்து, அவர்களருமையை யறிந்தோர் யாவரும் தங்கள் துக்கத்தை யாற்றிக்கொள்வதே தகுதி. “தாம், தம்முடைய தந்தையாரவர்களைப் பரிபாலித்து அவர்களுடைய கீர்த்தியை வெளிப்படுத்தி யருளிய பெருங்கருணை வெள்ளமாகிய திருவாவடுதுறை மகா சந்நிதானத்தின் திருவடிகளை மறவாத சிந்தையும், தம்முடைய தந்தையாரவர்களிடத்து மெய்யன்புடைய மாணாக்கர்களைச் சகோதரர்களாகவே கொண்டொழுகு நேசமும், எவராலும் நன்கு மதிக்கற்பாலதாகிய நல்லொழுக்கமும் உடையராய், இனிது வாழ்ந்திருக்கும்படி, திருவருள் சுரக்கும்பொருட்டு ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவடியைப் பிரார்த்திக்கின்றேன்”. இங்ஙனம், ஆறுமுக நாவலர், வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம் யுவ வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள்
இந்தக் கடிதத்தை எழுதிய பின்னர் நாவலர் நெடுநேரம் வரையில் வருத்தத்தோடும் இருந்து பிள்ளையவர்களுடைய அருமை பெருமைகளைப் பாராட்டிவிட்டு, பின்புதான் பூசைக்குச் சென்றனரென்று அக்காலத்து அவருடனிருந்து வந்த காரைக்குடி சொக்கலிங்கையாவும் பிறரும் சொன்னதுண்டு.
பிள்ளையவர்களுடைய மாணவருள் ஒருவராகிய தஞ்சை, கோ. இராமகிருஷ்ண பிள்ளை சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பக் கடிதம் வருமாறு:-
உ "அகண்டாகார நித்திய வியாபக சச்சிதாநந்தப் பிழம்பாய் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சற்குருநாத சுவாமிகள் திவ்விய சந்நிதானத்திற்கு அடியேன் கோ. இராமகிருஷ்ணன் திக்கு நோக்கித் தண்டனிட்டெழுதிக்கொள்ளும் விண்ணப்பம். "ஐயா அவர்கள் ஸ்ரீ சிவபெருமான் திருவடிக் கீழ் ஐக்கியமாயின செய்தி மகாசந்நிதானங் கருணை கூர்ந்து சுவாமிநாத ஐயரால் விடுத்த நிருபத்தைப் பார்க்கப் பார்க்க அதிகத் துயரத்திற்கு இடமாயிருப்பதுந்தவிர, அவர்களாலடைய வேண்டிய பெரும்பயன் யாவும் இழந்து கண்ணிலாக் குழவிபோல் நேரிட்டிருக்கும் பெருஞ் சந்தேகங்களை நிவிர்த்திக்க மார்க்கமின்றி உழல்கின்றேன். ஒன்றையே பல தடவை கேட்பினும் அதற்கு வெறுப்பின்றிப் பிதாவைப் போல் யார் இனிக் கற்பிப்பார்கள்! "இனி இக்குறைவை நிறைவேற்றச் சந்நிதானங் கருணை கூர்தலன்றி வேறு நெறியை அடியேனும் மற்றையோரும் அறியோம். "இவ்விண்ணப்பத்துடன் கல்லாடவுரைப் புத்தகமொன்று பங்கித் தபாலிலனுப்பியிருக்கின்றேன். இது சந்நிதானஞ் சேர்ந்ததற்கும் அடியேன் இனி நடத்த வேண்டும் பணிவிடைகளுக்கும் கட்டளையிட்டருளப் பிரார்த்திக்கிறேன். இங்ஙனம், கோ. இராமகிருஷ்ணன், தஞ்சாவூர் யுவ வருடம் பங்குனி மாதம் 16ஆம் நாள்
இரங்கற் செய்யுட்கள்
அந்தக் காலத்தில் அயலூருக்குச் சென்றிருந்த மகா வைத்தியநாதையரும் அவருடைய தமையனாராகிய இராமஸ்வாமி ஐயரும் பிள்ளையவர்கள் தேகவியோகமடைந்த செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினார்கள். அப்பொழுது இராமஸ்வாமி ஐயர் மனம் வருந்திப் பாடிய பாடல்கள் வருமாறு:
(வெண்பா) “*13 கும்பனெனி லன்னோன் குறியவனா வானுலகிற் கம்பனெனி லன்னோனுங் கம்பனாம் - அம்புவியில் வேறுளார் வேறுளரா மீனாட்சி சுந்தரரின் கூறெவரென் றேயகன்றாய் கூறு.” (விருத்தம்) “எனைவைத்தி யெனைவைத்தி யெனப்பதங்க ளிடையிடைநின் றிரந்து வேண்ட இனிவைப்பா மினிவைப்பாம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்று கூறி நினைவுற்ற வொருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து நிமலர் பூணப் புனைவுற்ற மீனாட்சி சுந்தரவள் ளலைப்போல்வார் புவியில் யாரே.”
மகாவைத்தியநாதையர் பாடிய செய்யுட்கள் வருமாறு:
(கொச்சகக் கலிப்பா) “தூவலரு மீனாட்சி சுந்தரப்பேர் கொண்டிலகும் நாவலர்பி ரானரன்தாள் நண்ணினனன் னானிடத்தே ஆவலரா மாணவக ராரிடத்தே தமிழ்பயில்வார் சேவலர்பி ரான்புகழ்சால் செழுங்கவியாப் பவரெவரே!” “விண்ணாடும் பெருங்கவிஞன் மீனாட்சி சுந்தரவேள் மண்ணாத மணியனையான் மாதேவன் மலரடிசார்ந் துண்ணாநின் றனனின்பம் உலப்புறுவார் மாணவரென் றெண்ணாநின் றனனிலையே யென்னேயிவ் வுலகியல்பே!”
இவருடைய பிரிவைப் பற்றி வருந்தி மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் பாடிய பாடல்கள் பல. அவை கிடைக்கவில்லை.
சுப்பிரமணிய தேசிகர் இவர் குடும்பக்கடனைத் தீர்த்தது
இவருடைய குடும்ப நிலையைப் பற்றி அறிய விரும்பிச் சுப்பிரமணிய தேசிகர் சிதம்பரம்பிள்ளையை அழைத்து விசாரித்தபொழுது ரூ. 3,000-க்கு மேற்பட்டுக் கடன் இருப்பதாக அவர் சொன்னார். உடனே சுப்பிரமணிய தேசிகர், “கடன்களைத் தீர்த்து விடாமல் இறந்து போனார்களென்ற அபவாதம் மடத்து மகாவித்துவானாகிய நமது பிள்ளையவர்களுக்கு இருக்கக் கூடாது. அவ்வாறாயின், அது மடத்திற்கு ஏற்படும் அபவாதமேயாகும்” என்று சொல்லி, கடன்காரர்களைப் பத்திரங்களுடன் வருவித்துப் பிள்ளையவர்களுடைய குமாரரையும் சில மாணாக்கர்களையும் உடன் வைத்துக் கொண்டு கடன்களைக் கொடுக்கத் தொடங்கினார். பணப்பைகள் சில அங்கே கொணர்ந்து வைக்கப்பட்டன. அப்பொழுது தேசிகர், “இவை பிள்ளையவர்களுக்காகக் கொடுக்கப்படுவன. அவர்களிடம் அன்பு வைத்து வட்டியில் சிறிதாவது, முற்றுமாவது முதல் தொகையிற் சிலபாகமாவது முற்றுமாவது தள்ளிப் பெற்றுக் கொள்ளலாம்; முற்றும் வேண்டுபவர்கள் அவ்வாறே பெற்றுக் கொள்ளலாம்” என்றார். அப்படியே சிலர், தங்களுக்குரிய தொகைகளில் ஒவ்வொரு பகுதியைத் தள்ளிப் பெற்றுக்கொண்டார்கள்.
பின்பு தேசிகர் சிதம்பரம்பிள்ளையை நோக்கி, “மடத்திலுள்ளவர்கள் பெருந்தொகையை ஒரு குடும்பத்திற்கு நாம் கொடுத்துவிட்டதாகக் குறை கூறுவார்கள். அதற்கு இடமில்லாதபடி பிள்ளையவர்களுடைய புத்தகங்களை மடத்துப் புத்தகசாலையிற் சேர்த்துவிடும். அவற்றை நீர் வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறீர்?” என்றார். அப்படியே சிதம்பரம் பிள்ளை செய்துவிட்டார். பிள்ளையவர்களுடைய ஏட்டுச் சுவடிகள் மட்டும் மூன்று கட்டுப் பெட்டிகள் நிறைய இருந்தன.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
11. இங்கே கட்டளையிட்டபடியே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் எனக்குத் திருவாவடுதுறை அக்கிரகாரத்தில் வடசிறகின் கீழைக்கோடியில் நூதனமாக இரண்டுகட்டு வீடொன்றைக் கட்டுவித்து அளித்தார்கள். அக்காலத்திற் பதிப்பிக்கப் பெற்ற சில அச்சுப் புத்தகங்களில் அவர்களுடைய கட்டளையின்படி திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றே என் பெயர் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்பால் நான் கும்பகோணம் காலேஜிற்குப் போனபோது அந்த வீட்டை அவர்களிடமே ஒப்பித்துவிட்டேன்.
12. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தாண்டவராயத் தம்பிரானவர்கள் பால் சிறந்த மதிப்பும் அன்பும் உண்டு; “நாம் வழிபடு தெய்வம் பிரத்தியட்சமாகி என்ன வேண்டுமென்று கேட்டால் தாண்டவராயத் தம்பிரானவர்களை நாம் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று கேட்போம்” என்று அவர் சொல்வதுண்டு. அத்தகைய மதிப்புடைய தாண்டவராயத் தம்பிரானவர்கள் பாராட்டத்தக்க புலமைத் திறம் பிள்ளையவர்கள்பால் இருந்தமையால்தான் தேசிகர் இவரிடத்து அதிகமாக ஈடுபட்டார்.
13. கும்பன் – அகத்திய முனிவர். கம்பன் ஆம் – நடுக்கமுடையவன் ஆவான்; கம்பம் – நடுக்கம்.
$$$