-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 17
உலகப்போர் தொடக்கமும் காங்கிரசில் குழப்பமும்
1939-ஆம் வருஷம் அரசியலில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஜெர்மனி யுத்தத்துக்குத் தயாராக இருந்தது. எந்த நேரமும் யுத்தம் வெடிக்கும் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. காந்திஜி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார், உலகத்தை நாசம் செய்யும் யுத்தத்தைத் தொடங்க வேண்டாமென்று. கேட்கும் மனநிலையிலா ஹிட்லர் இருந்திருப்பார்?
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சுபாஷ் சந்திர போசை காங்கிரஸ் மூன்று ஆண்டுகளுக்கு வெளியேற்றிவிட்டது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மத்திய சட்டசபையில் இந்திய பாதுகாப்பு சட்டம் என்றொரு புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பின்னாளில் எத்தனை கைதுகள், எத்தனை வழக்குகள், எத்தனை பேருக்குத் தண்டனைகள் இவை அத்தனையும் பிரிட்டிஷ் அடக்குமுறையின் அடையாளங்கள்.
1939, செப்டம்பர் 3-ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் தொடங்கிய யுத்தப் பிரகடனம் வெளியானது. இனியொரு யுத்தத்தை இந்த உலகம் தாங்குமா எனும் கவலை மக்கள் மனங்களைக் கவ்விக் கொண்டது. சிம்லாவில் இருந்த வைஸ்ராய் காந்திஜியை அழைத்திருந்தார். அங்கு ஏதோ முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறார் என்று போன காந்திஜி, ஏமாற்றத்துடனும் வெறுங்கையுடனும் திரும்பி வந்தார். அந்த ஆண்டு அக்டோபர் 2-இல் காந்திஜியின் பிறந்த நாளில் அவருடைய வரலாறு நூல் ஒன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
பிரிட்டிஷ் அரசு யுத்தத்தில் குதித்துவிட்டது. இந்தியாவின் கோரிக்கைகள் பற்றி யுத்தம் முடியும் வரை எதுவும் செய்ய இயலாது என்பது பிரிட்டிஷ் அரசின் கருத்து. யுத்தம் முடிந்த பின்னர் வேண்டுமானால் இந்தியத் தலைவர்களுடன் பிரிட்டிஷ் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஒரு செய்தி காங்கிரசுக்குச் சொல்லப்பட்டது. இது மிகப் பெரிய ஏமாற்றத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தியது.
இனியும் பொறுத்திருந்து பயனில்லை என்று காங்கிரஸ் ஒரு தீவிர முடிவை எடுத்தது. 1937-இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று மத்திய சட்டசபைக்கும், மாகாண சபைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாகாணங்களில் அரசும் அமைத்து நிர்வாகம் செய்துவரும் அத்தனை காங்கிரசாரும் பதவிகளை ராஜிநாமா செய்துவிட வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது காங்கிரஸ். அத்தனை பேரும் பதவி விலகினர். சென்னை மாகாணத்திலும் ராஜாஜி தலைமையிலான மந்திரிசபை ராஜிநாமா செய்தது.
1940. முந்தைய ஆண்டில் துவங்கிய யுத்தம் ஐரோப்பாவில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இனி இந்த யுத்தத்தால் நடக்கப் போகும் அழிவுகளுக்கு ஹிட்லரே காரணம் என்று காந்திஜி கூறினார். என்னதான் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் கருணையின்றி நடந்து கொண்டாலும் இந்த யுத்தத்தில் தனது அனுதாபம் முழுவதும் இங்கிலாந்திடமும் அதனோடு இணைந்து போரிடும் நேச நாடுகளின் பக்கம்தான் என்றார் காந்திஜி.
பிரிட்டன் யுத்தகளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது, இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் எந்தவித பேரங்களும் நடத்தாமல், ஒதுங்கியும் இராமல் நாம் அவர்களுக்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு நல்க வேண்டுமென காந்திஜி விருப்பம் தெரிவித்தார். தானும், சத்தியாக்கிரகி களும் அமைதி, அகிம்சையில் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் என்ற முறையில் தங்கள் மானசீகமான ஆதரவை மட்டுமே இந்த யுத்தத்தில் இங்கிலாந்துக்குத் தரமுடியும் என்பதையும் அவர் தெளிவு படுத்தினார்.
ஆனால் காந்திஜியைத் தவிர்த்து மற்ற தலைவர்களின் நிலைப்பாடு வேறுமாதிரியாக இருந்தது. தங்களுடைய போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சாதகமான பதிலை இந்த நேரத்தில் கொடுத்து, சில வாக்குறுதிகளையும் பிரிட்டிஷ் அரசு கொடுத்தால் தாங்களும் யுத்தத்துக்கு ஆதரவாக ஆயுதம் எடுத்துப் போரிடத் தயார் என்று அவர்கள் கூறினர்.
இப்படிப்பட்ட இக்கட்டான சமயத்திலும் கூட பிரிட்டிஷ் அரசு தங்கள் பிடிவாதத்தை விடத் தயாரில்லை. யுத்தம் முடியட்டும், மாட்சிமை தங்கிய மன்னர் இந்தியத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்வார் என்ற நிலையிலேயே இருந்தது, காங்கிரசின் கோரிக்கைகளைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது போதாதென்று இந்தியாவை மத ரீதியாக பிரிக்க வேண்டுமென்கிற கிளர்ச்சிக்கு ஆதரவு கொடுத்து முஸ்லீம்களைத் தூண்டிவிடவும் செய்தது பிரிட்டன்.
இந்த அரசியல் சூழ்நிலையில் 1940-ஆம் வருஷம், மார்ச் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் மகாநாடு, பிகாரில் ராம்கரி எனுமிடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு டாக்டர் அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார். அப்போதைய அரசியல் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து விவாதித்த பின் காங்கிரஸ் ‘பிரிட்டிஷ் அரசுக்கு எந்தவிதமான உதவியையும் செய்ய முடியாது’ என்று அறிவித்து விட்டது.
யுத்த முயற்சியில் பிரிட்டனுக்கு உதவுவதா, கூடாதா என்ற பிரச்சனை இந்திய அரசியலில் சூடு பிடித்தது. ஐரோப்பாவில் போரின் போக்கு ஹிட்லருக்கு வெற்றி மேல் வெற்றியாக இருந்து வந்தது. நார்வே, டென்மார்க், ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளை கண்மூடித் கண்திறக்கும் நேரத்தில் ஹிட்லர் பாய்ந்து பிடித்துக் கொண்டான். அடுத்ததாக ஹிட்லர் பிரான்சின் மீது கண் வைத்தான். அதுவும் நிறைவேறிவிடுமானால் அடுத்தது பிரிட்டன் தான். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருந்தது பிரிட்டன். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து இந்த சந்தர்ப்பத்தில் நாம் போராட்டத்தை இந்தியாவில் தொடங்கி நமது சுதந்திரத்தைப் பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம் ஒரு சாராரிடம் தோன்றி பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் மீது காந்திஜிக்கு வருத்தம். 1-6-1940 ‘ஹரிஜன்’ பத்திரிகையில் அவர் எழுதிய கருத்தாவது: “பிரிட்டனின் அழிவில் நாம் சுதந்திரம் பெற எண்ணுவது அகிம்சை தத்துவத்துக்கு ஏற்புடையது அல்ல. இப்போதிருக்கிற உலக அரசியல் சூழ்நிலையில் போராட்டங்கள் எதையும் நாம் நடத்தாமலேயே சுதந்திரம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட காலம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.” இப்படி எழுதினார் காந்திஜி.
1940, ஜூலை மாதத்தில் ஜெர்மனி பிரான்சை தோற்கடித்து ஆக்கிரமித்துக் கொண்டது. மிகுந்த பிரயாசையோடு பிரிட்டன் படைகள் பிரான்சிலிருந்து இங்கிலாந்து திரும்பின. பிரான்சின் துறைமுகமான டன்கிர்க் எனுமிடத்தில் பிரிட்டிஷ் படைகள் மீது குண்டுமாரி பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது ஜெர்மனி. டன்கிர்க் பேரழிவு இங்கிலாந்துக்கு ஒரு பேரிடியாக இருந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத பிரிட்டிஷ் மக்கள் இந்த அழிவினால் தைரியம் இழந்து விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. இங்கிலாந்து மக்களால் டன்கிர்க் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. நாடு முழுவதும் மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். பிரதமர் சேம்பர்லின் என்பார் ராஜிநாமா செய்தார். அவர் இடத்துக்கு சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக வந்தார். இந்தியா மந்திரியாக அமெரி என்பார் வந்தார். இத்தனை அடிகளை வாங்கிய நிலையிலும் பிரிட்டிஷ் அரசு இந்திய சுதந்திரம் பற்றி மூச்சு விடவில்லை.
இப்படி பிரிட்டன் கல்லுளிமங்கனாக இருப்பது கண்டு வெகுண்ட காங்கிரஸ், வார்தாவில் தனது காரியக் கமிட்டியைக் கூடி ஆலோசித்தது. காந்திஜி இந்த யுத்தம் குறித்தும், நாம் பிரிட்டிஷ் அரசுக்கு உதவுவது பற்றியும் தனியானதொரு கருத்தை வைத்திருக்கிறார். ஆனால் கட்சி வேறு மாதிரியாக சிந்திக்கிறது. அப்படி யுத்த முஸ்தீபுகளில் காங்கிரசின் கருத்துப்படி செல்வதென்று கூட்டம் தீர்மானித்தது. இந்த விஷயத்தில் ராஜாஜி, ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஆகியோர் ஒரு பக்கத்திலும் பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர் ஃப்ரபுல்ல சந்த்ர கோஷ், கிருபளானி, சங்கரராவ் தேவ் ஆகியோர் எதிரணியிலுமாக பிரிந்து இருந்தனர். கடைசி நால்வரும் ராஜிநாமா கொடுத்தனர். ஆசாத் தலையிட்டு ராஜிநாமாக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வைத்தார். ஆனால் கான் அப்துல் கபார்கான் மட்டும் ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.
இந்த கூட்டத்தில் ராஜாஜி ஒரு தீர்மானம் முன்மொழிந்தார். அதன் மீது காந்திஜி சொன்ன கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
“சர்தார் வல்லபபாய் படேலின் வழியும் என்னுடைய வழியும் வெவ்வேறானவை என்பது போலத் தோற்றமளித்த போதிலும், நாங்கள் மனத்தளவில் விரோதித்துப் பிரிந்துவிட்டதாக யாரும் கருதத் தேவையில்லை. அவர் எனக்கு எதிரான கருத்தை ஏற்காமல் செய்திருக்க என்னால் முடியும். அப்படி எனக்காக அவர் சொந்தக் கருத்தை மாற்றும் உரிமை எனக்கு இல்லாததால் நான் அப்படிச் செய்யவில்லை. ராஜாஜி தான் கொண்ட கருத்தினின்றும் மாறச் செய்வது அறவழியாகாது என்பதால் அவரையும் நான் தடுக்கவில்லை, அவர் கருத்தை அவர் கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அதுதான் என்னைப் பொருத்தவரை தர்மம் என்பது என் கருத்து. இப்போதுள்ள சூழ்நிலை ஒரு புதிய களம். இதில் நான் என்னுடைய அகிம்சைக் கொள்கையை சோதனை செய்து வெற்றியும் பெற்றுவிட்டால், மக்களும் அந்த வழி சரிதான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டால், சர்தாரும் ராஜாஜியும் திரும்ப என் வழியே சரி என்று என்னிடம் வந்துவிடுவார்கள். வார்தா தீர்மானத்தின் மூலகர்த்தா ராஜாஜிதான். நான் எப்படி என் நிலையில் உறுதியாக இருக்கிறேனோ, அதைப் போல ராஜாஜியும் அவர் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். அவருக்கே உரித்தான பிடிவாதத்தினாலும், தைரியத்தாலும், அடக்க குணத்தாலும் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் சிலரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டார். இதில் வல்லபபாய் படேலும் சிக்கியவர்களில் ஒருவர் என்பது அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றிதான். நான் அந்தத் தீர்மானத்தை தடுப்பேன் என்று அவர் கருதியிருந்தால் இதை கொண்டு வந்திருக்கவே மாட்டார். அவரவர் மனசாட்சிப்படி நடக்க நான் அனுமதித்திருப்பதால் அவர்கள் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்”
-இப்படிச் சொன்னார் காந்திஜி.
இப்படிப்பட்ட சுதந்திரம் அன்றைய காங்கிரசில் இருந்திருக்கிறது. மனசாட்சியின்படியும், அவரவர் சரி என்று நம்புகின்ற கொள்கையின்படியும் காந்திஜியையே எதிர்த்து ஒரு தீர்மானம் கொண்டு வருமளவுக்கு அன்றைய காங்கிரசில் உரிமை இருந்தது, காந்திஜி அதை வழங்கியிருந்தார். அதனால்தான் ஒரு முறை கருத்து வேறுபாடு வந்து மாறுபட்டவர்கள் ஒரேயடியாக கட்சியை விட்டு வெளியே போகவில்லை, மீண்டும் ஒன்று சேர்ந்து கட்சியை வழிநடத்தினார்கள்.
முதலில் காந்திஜியின் கருத்தையும், அவர் ராஜாஜியின் தீர்மானத்தின் மீது பேசியதையும் பார்த்தோமல்லவா. இனி வல்லபாய் படேல் என்ன சொல்கிறார் என்பதையும் பார்க்கலாம். ஜூலை மாதத்தில் குஜராத் காங்கிரஸ் கமிட்டியில் படேல் பேசியதன் சாராம்சம் இதோ:
“பாபுஜி (காந்தி) என்ன சொல்லியிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சர்தார் படேல் தன்னிடம் திரும்பி வந்துவிடுவார் என்று அவர் சொல்லியிருக்கிறார். நான் எப்போது அவரிடமிருந்து பிரிந்து போனேன், இனி திரும்ப வருவதற்கு? நான் காங்கிரஸ் கமிட்டியில் குஜராத் மக்களின் சார்பில் அவர்களது கருத்தை எடுத்துச் சொன்னேன். நாட்டைப் பற்றிய என்னுடைய கணிப்பு தவறாகப் போய்விடுமானால் எனக்கு மகிழ்ச்சியே. நான் பாபுஜியிடம் அவரிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் உத்தரவு இடுங்கள் நான் உங்கள் பின்னால் வருகிறேன் என்றுதான் கூறினேன். மனப்பூர்வமாக என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலொழிய தன்னைப் பின்பற்றி வரலாகாது என்று அவர்தான் கூறினார். ஆனால் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கும்போது எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? நானோ வேறு யாருமோ பாபுவிடம் நேர்மையற்ற முறையில் நடக்கக் கூடாது. இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் அபாயகரமான சூழ்நிலையில் ‘அகிம்சை’ பற்றிய பரிசோதனைகளை செய்து கொண்டிருக்க முடியாது”
படேல் கூறிய கருத்தினைப் போலவே ஜவஹர்லாலும் சொன்னார். இந்த நிலையில் தில்லியிலும், பின்னர் பூனாவிலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி வார்தா தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்தது. அப்போது வைஸ்ராய் தனது நிர்வாகக் கவுன்சிலில் சில இந்தியப் பிரதிநிதிகளைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தமக்கு இருப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. மேலும் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆயுதபலம் கொண்டு அடக்கி ஆளவே விரும்புகிறது என்ற குற்றச்சாட்டையும் கூறியது. மேலும் கொள்கையில் பிடிவாதம் பிடிக்காமல் காந்திஜி காங்கிரசை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தது. யுத்த முஸ்தீபுக்கு காங்கிரஸ் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தும் பிரிட்டிஷ் அரசு அதனை அலட்சியப் படுத்தியது.
இந்திய அரசியல் போக்கு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் வேளையில் காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு அறைகூவல் விடுத்து, சத்தியாக்கிரகிகளை அவரே தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். முதல் சத்தியாக்கிரகியாக தனது தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு காந்திஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வினோபாஜி அவர்கள். யார் இந்த வினோபா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(17)”