– பேரா. அ.ச.ஞானசம்பந்தன்
தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘பாரதியும் பாரதிதாசனும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...

நன்றி: பாரதியும் பாரதிதாசனும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் கங்கை புத்தக நிலையம் 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 017. முதற் பதிப்பு: மார்ச் 1995; இரண்டாம் பதிப்பு: மார்ச் 1999
$$$
பதிப்புரை
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தமிழும் சமயமும் தழைத்தோங்க இடையறாது பணியாற்றி வரும் திறலினர். இவர்தம் பேச்சும் எழுத்தும் – சுவையும் பயனும் மிக்கவை. இவர் தமிழ் இலக்கியங்களில் பேரீடுபாடு கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்யும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்.
பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுத்துறை புதுவதாக தொடங்கப்பெற்ற ஞான்று ஆய்வு மாணவர்க்காக எழுதப்பெற்றது ‘இலக்கியக் கலை’ என்னும் திறனாய்வு நூல். அதனாலேயே திறனாய்வுத் தந்தை என்று பாராட்டும் பெற்றவர்.
மதுரைப் பல்கலைக் கழகத்தில் 1970-ல் இவ்வாசிரியர் நிகழ்த்திய ‘அன்னபூரணி இராமையா ‘ நினைவுச் சொற்பொழிவே பாரதியும் – பாரதிதாசனும் என்னும் இந்நூல். பாரதியைப்பற்றியும் பாரதி தாசனைப்பற்றியும் இவ்வாசிரியர் தரும் செய்திகள் படித்து இன்புறத்தக்கன.
இந்நூலில், இன்றைய இலக்கியம், சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன் ஆகிய இரு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இதனை எம் வெளியீடாக வெளியிட ஒப்புதல் அளித்த இப் பேராசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலாசிரியரின் பல நூல்களும் எம் பதிப்பக வழி வெளிவந்துள்ளன; வாராதனவும் வர உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கங்கை புத்தக நிலையத்தார் (1995)
$$$
உள்ளுறை
1 இன்றைய இலக்கியம்
2 சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன்
3 பாரதி
4 பாரதிதாசன்
$$$

பாரதியும் பாரதிதாசனும்
1. இன்றைய இலக்கியம்
இத்தகைய ஒரு தலைப்பில் பட்டி மண்டபங்களும், கருத்தரங்குகளும், சொற்பொழிவுகளும் நெடுக நடைபெறுகின்றன. ஆனால், அவற்றில் பங்கு கொள்வோர் பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளர்களாகவே இருக்கின்றனர். இலக்கியப் படைப்பாளர்களின் படைப்புகள், என் போன்றோர் படித்து இன்புறு வதற்காகத்தான் படைக்கப்படுகின்றன என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. கலைஞன் தன்னுடைய மனத்தில் தோன்றும் கற்பனைக்கு வடிவு கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப் பட்டுக் கலையைப் படைக்கிறான் என்பது உண்மை யென்றாலும், அதனை அனுபவிக்கின்றவர்கள் பெரும் பங்கைப் பெறுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறானால், அனுபவிக்கின்ற ஒருவன் இலக்கியக் கலையில் எதனை விரும்புகிறான் என்பதையும் சற்றுக் காண்டல் வேண்டும்.
அனுபவிக்கின்றவனுடைய விருப்பு வெறுப்புகளை மனத்தில் கொண்டு கலைஞன் கலையைப் படைப்பது என்பது அவ்வளவு சிறப்புடையது ஆகாது என்ற வாதத்திற்கும் ஓரளவு இடமுண்டு என்றாலும், கலைஞன் இமயமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே அனுபவித்துக் கொள்வதற்குக் கலையைப் படைக்கவில்லை; பிறரும் தன்னுடைய அனுபவத்தைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தால் தான் கலைஞன் கலையைத் தோற்றுவிக்கிறான். தான் எத்தகைய அனுபவத்தைத் தந்தாலும் அனுபவிப்பவன் வாயை மூடிக்கொண்டு, கிடைக்கின்ற அனுபவத்தை இயன்ற அளவு பங்கிட்டு அனுபவிக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால், தன்னால் படைக்கப்பட்ட கலை, பிறரால் நன்கு அனுபவிக்கப்படாத பொழுது கலைஞன் மனம் நோக்கத்தான் செய்கிறான். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்ற பேராற்றல் வந்துவிடுமே யானால், அத்தகைய மன நிலை பெற்ற கலைஞன் எதனை வேண்டுமானாலும் இயற்றலாம்.
ஆனால், இன்றைய நிலையில் எழுத்தாளர்கள் பலரும் தம்முடைய எழுத்தைப்பற்றி இரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் – திறனாய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டுள்ளனர். இரசிகர்கள் கூட்டம் பாராட்டும் பொழுது மகிழ்ச்சி அடைந்தும், அவர்கள் அதனை ஒதுக்கும் பொழுது மனம் மறுக்கவும் செய்கின்றார்கள். இந்த மன நிலை கலைஞனுக்கு இருக்கின்ற வரையில் ஓரளவு இரசிகர்களுடைய மன நிலையை அறிந்தேதான் படைப்பை வழங்க வேண்டும். ‘அப்படி வழங்கப் புறப்பட்டால், கலையின் தரம் குறைந்து விடாதா’ என்ற வினா தோன்றலாம். ‘உறுதியாகக் குறையும்’ என்ற விடையும் கிடைக்கும். ஆனால், கூழுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்படுவதில் அர்த்த மில்லை. ஒன்று, இரசிகர்கள், திறனாய்வாளர்கள் என்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகட்குத் தோன்றிய முறையில் வடிவு கொடுக்க முற்பட வேண்டும்; அல்லது ஓரளவு இரசிகர்களுக்கும் மன நிறைவு தருகின்ற முறையில் தன்னுடைய கலையைப் படைக்க வேண்டும். இந்த நோக்கில் கலைஞர் இருவகைப்படுவர் : முதலாவது வகையினர் உலகைப் பற்றிக் கவலைப்படாத கலைஞர்கள்; இரண்டாவது வகையினர் ஓரளவு விட்டுக் கொடுத்து வாழ்கின்ற இயல்பு படைத்த கலைஞர்கள். முதல் வகையினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமையின் நாமும் அது பற்றி ஒன்றுங் கூற வேண்டா. அக்கலையை அனுபவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தடையின்றி அனுபவிக்கலாம்; ஏனையோர் அது பற்றி ஒன்றும் பேசத் தேவை இல்லை.
நாடு விடுதலையான பிறகு சென்ற கால் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் முன்னேறியுள்ளது என்பதில் ஐயமேயில்லை. சிறுகதை, புதினம், கவிதை, உரைநடை, நாடகம் என்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். வளர்ச்சியுங் கூடச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே வளர்ந்திருக்கக் காண்கிறோம். அதாவது, சிறுகதை முதன்மையாகவும் நாடகம் கடைசியாகவும் வளர்ந்திருக்கக் காண்கிறோம்.
வளர்ச்சி என்று கூறியவுடன் அளவாலா, தரத்தாலா என்ற வினாத் தோன்றும். இலக்கியப் படைப்பாளரும் திறனாய்வாளர்களும் இந்த வினாவிற்கு என்ன விடை கூறுவார்களோ, நாம் அறியோம். இரசிகன் என்ற முறையில் இவ்வினாவிற்கு விடை சொல்ல வேண்டுமேயானால், அளவால் பெரும் பங்கு வளர்ச்சியும், தரத்தால் மிகமிகச் சுருங்கிய வளர்ச்சியும், தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது என்றே விடை கூறத் தோன்றுகிறது. இலக்கியத்தின் தரத்தை எப்படிக் காண்பது? அதற்கெனச் சில அளவு-கோல்கள் உண்டு. எனினும், இரசிகனுடைய மன நிலை, மன வளர்ச்சி கல்வி அறிவு, அனுபவ ஞானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தின் தரத்தை அளக்க முற்படுகின்றார்கள். இந்த அளவுகோல்களைப் பயன்படுத்து முன்னர் மேலே கூறிய இயல்புகளைப் பெற்றவர் – பெறாதவர் ஆகிய இரண்டு பகுதியாரும் சேர்ந்து பயன்படுத்துகின்ற ஒரு புதிய அளவுகோல் உண்டு. அதாவது, ‘தோன்றிய ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழக்கூடிய தன்மை. பெற்றிருக்கிறதா’ என்று கணிப்பது தான் அந்தப் புதிய அளவுகோல்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய ஒருசில பாடல்களை இன்றும் மறக்க முடியவில்லை. ஆனால், அவற்றைப் படிப்பவர் மிகச் சிலர். சென்ற ஆண்டு அனைவராலும் புகழப்பட்ட ஒரு படைப்பு இந்த ஆண்டில் மறக்கப்பட்டு விடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் ஆகியவற்றுள் மக்களுடைய மனத்தில் சாகா வரம் பெற்று நிலைத்துள்ளவை. எத்தனை சிறுகதைகள் எத்தனை, புதினங்கள் எத்தனை, கவிதைகள் எத்தனை என்று காண்டல் வேண்டும். தோன்றிய ஓர் இலக்கியத்தில் எதனையும், மீறி நிலைத்து நிற்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்திருக்குமானால், நிச்சயமாக அது கருத்தால் உயர்ந்தது என்று சொல்லி விடலாம். இதன் எதிராக அன்றாடப் பிரச்சினைக்கு விடையிறுப்பதற்காகவும் தம்மைச் சேர்ந்தவர்கள் கைகொட்டி ஆரவாரித்து “இதோ ஓர் அற்புதப் படைப்பு” என்று சொல்லுவதற்காகவும் தோன்றுபவை மக்களினுடைய ஈடுபாடு திசை திரும்பியவுடன் இருந்த இடம் தெரியாமல் போய்விடக் காண்கிறோம்.
மேலே கூறிய இரண்டு கருத்துகளையும் மனத்தில் வைத்துக்கொண்டு இன்றைய இலக்கியத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோமேயானால் அளவால் மிகுதியாகவுள்ள இவ்விலக்கியப் பகுதிகளுள் எவை எவை நின்று நிலவக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளன என்று அறிய முடியும். ஏன், அளவால் இவ்வளவு குறைந்த இலக்கியங்கள் மட்டுமே நிலை பெறும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞனுடைய மனத்தில் கிடந்து, பல்லாண்டுகள் ஊறி, அவனுடைய கற்பனையிலே வடிவு பெற்று வெளி வருகின்ற கருத்துகள், அவனுடைய ஆழ்ந்த அனுபவம், சிந்தனை என்பவற்றின் அடிப்படையில் பிறந்திருக்குமேயானால், காலத்தை வென்று நின்று நிலவும் வலுவைப் பெற்று விடும். இன்றைய அவசரமான வாழ்க்கையில் – வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கிய எழுத்தாளர்கள் எந்த ஒன்றைப்பற்றியும் இந்த அளவு நின்று நிதானித்து, சிந்திக்கவோ, ஆராயவோ, தெளியவோ, அங்ஙனம் தெளிந்த எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கவோ வாய்ப்பும் வசதியும் அவகாசமும் பெற வில்லை.
மனத்துட் தோன்றிய கருத்துகள் நன்கு தெளிவடையாமல் வெளிவருகின்றன. எனவே, அவற்றில் ஆழமோ உள்ளீடோ இருப்பதில்லை. இவை இல்லாமல் போனாலும் போகட்டும் – கருத்துகளாவது இருக்கின்றனவா என்றால், எல்லா எழுத்தாளர்களுடைய எழுத்திலும் இவை இருக்கின்றன என்று கூறவும் முடியவில்லை. அவருடைய படைப்பைப் பார்த்த பிறகு, ‘இவர் என்ன கூறுகிறார்’ என்றே அறிய முடிவதில்லை. காரணம் – வெறும் சொற் கோவைகளை நீக்கிப் பார்த்தால், அவர் சொல்லியது ஒன்றுமே இல்லை என்ற உண்மை புலப்படுகிறது. அப்படியானால் அவர் ஏன் எழுதினார்? அதனை ஏன் அச்சிட்டு நம்மிடம் வழங்கினார்கள்? ‘ஏதோ எழுத வேண்டும்’ என்று பக்கத்தை நிரப்ப அவரும் எழுதினார்; அச்சுப் பக்கத்தை நிரப்ப அது பயன்பட்டது. பெரும்பாலும் இந்நிலையில் உள்ள எழுத்துக்கள் தாம் இன்றைய நிலையில் இலக்கியம் என்ற பெயருடன் உலவுகின்றன. சிறுகதை முதல் நாடகம் வரை எந்த வடிவத்தில் உலவினாலும் இதே கதைதான்.
ஆனால், இவ்வாறு கூறுவதால் சிறந்த எழுத்துக்களே தமிழ் மொழியில் சென்ற கால் நூற்றாண்டில் தோன்றவில்லையோ என்று கருதிவிட வேண்டா. தோன்றியுள்ளன. ஆனால், அவை அளவால் குறைந்தவையேயாகும். உள்ளீடற்ற தோற்றம் மிகுதியாகவும் ஆழமுடையவை குறைவாகவும் தோன்றக் காரணம் என்ன? காரணம் பலவகைப்படும். அவற்றுள் முதன்மையானது படிப்போர் எண்ணிக்கை மிகுதிப் பட்டது. அவர்கட்கு இரை போட வேண்டி வார இதழ்கள், மாத இதழ்கள் முதலியவற்றுடன் நூல் வெளியீடுகளும் அளவால் மிகுந்துவிட்டன. கருத்துகள் முழுவடிவம் பெறுமுன்னரே அரைவேக்காட்டுடன் எடுத்து வடிக்கப்படுவதன் விளைவை இன்று காண்கிறோம்.
இனி, இரண்டாவதாக, ஒன்றை நோக்கல் வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் எவ்வளவு புதுமைக் கோலங் கொண்டாலும், எவ்வளவு புதிய வழிகளை மேற்கொண்டாலும் தமிழ்மொழி அவற்றை இரு கை ஏந்தி வரவேற்கத் தயாராகவே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மொழி நிலை பெற்று வாழ்கிறதென்றால், வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்று கொண்டதால் தான் அது வாழ்கிறது; இன்றேல் அது வாழும் மொழியாக இருத்தல் இயலாது.
மாற்றமும், வளர்ச்சியும் அடிப்படை உடையனவாக இருத்தல் வேண்டும். பைசா நகரத்துக் கோபுரம் பதினைந்து பாகை சாய்ந்திருப்பதால் நிற்கவும் செய்கிறது; புதுமையாகவும் இருக்கிறது. ஆனாலும் வலுவுடைய கடை காலுடன் இருக்கிறது. ஆனால், அதே கோபுரம் என்பது, பாகை சாய்ந்தால் நிலை பெற முடியாது. மாற்றமும், வளர்ச்சியும் ஓர் அளவுக்குட்பட்டிருப்பதுடன் பழமையின் கடைகாலின் மேல் கட்டப்பட வேண்டும்.
இற்றை நாள் எழுத்துக்கள் பழமையின் தொடர் பில்லாமல் – மரபுவழி உணர்வில்லாமல் – மாற்றம், வளர்ச்சி என்ற பெயருடன் நிலைபெற முற்படும் பொழுது அடிப்படை வன்மை இன்மையின் ஆட்டங் கண்டு வீழ்ந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் நிலைபேறுடைய இலக்கியங்களைப் படைக்கக்கூடிய ஆற்றலுடையவன் தமிழ் எழுத்தாளன் என்பதில் ஐயமில்லை. காலத்தை வெல்லக்கூடிய படைப்பை அவன் வழங்க வேண்டுமானால் நின்று நிதானித்து, கருத்துகளை ஊறப்போட்டு, அவை நன்கு சமைந்தவுடன் வடிவு கொடுக்க முற்படல் வேண்டும். எத்துணைப் புதுமையைப் புகுத்த விரும்பினாலும் அப்புதுமை பழமையுடன் தொடர்பு கொண்டதாய் ஆழ்ந்த கால்கோளுடையதாய் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
$$$