-மு.கருணாநிதி
தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது கொண்டிருந்த அளப்பரிய மரியாதை இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிமுனையில் விவேகானந்தர் அவர்கள் ‘ஞானஒளி’ பெற்றார்கள்; ‘அறிவுஒறி’ பெற்றார்கள். இங்கிருந்து தான் அவர்கள் தங்களுடைய உலக நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதை எல்லாம் விவேகானந்தருடைய வரலாறு கூறுகின்ற நேரத்தில், நாம் உண்மையிலேயே பெருமை அடைகிறோம்.
தமிழ்நாட்டிலிருந்து கிளம்புகின்ற ‘ஒளி’ என்றைக்கும் உலகத்திற்கே வழி காட்டியாக அமைகின்ற ஒளியாகும். அதுவும் சாதாரணமான இடத்திலே அல்ல; மூன்று கடல்களும் கூடுகின்ற இடத்தில், சூரிய உதயத்தையும் சந்திரன் மறைகின்ற காட்சிகளையும், ஒருசேரக் காணுகின்ற மக்கள் கூடுகின்ற இடத்தில், விவேகானந்தர் அவர்கள் அமர்ந்து ‘அறிவுஒளி’ பெற்றார்.
தான் பெற்ற ‘ஒளி’ யினைத் தன்னுடைய தன்னலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், தரணி வாழ்ந்திட, அதுவும் ‘இந்தியா’ ஒரு ‘புதிய இந்தியா’வாக மாறிட, மதத்திலே ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திட அதனைப் பயன்படுத்திக் கொண்டார்.
விவேகானந்தர் அவர்கள், இந்தக் கடற்கரை ஓரத்திலே வந்து நின்று அந்தப் பாறைக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய நேரத்திலே படகுக்காரர்களுக்குத் தருவதற்கு வையிலே காசில்லாத காரணத்தினால், நீந்தியே அந்த பாறைக்குச் சென்று அங்கே மூன்று நாட்கள் அமர்ந்து ‘அறிவு ஒளி’யினைப் பெற்றார் என்பதைக் கேள்விப்படுகின்ற நேரத்தில், விவேகானந்தர் விவேகம் பொருந்தியவர் மாத்திரம் அல்ல; வீரமும் பொருந்தியவர் என்பதை நாம் உணருகின்றோம்.
வங்கத்திலே பிறந்தவர்களுக்கு வீரத்திற்குப் பஞ்சம் கிடையாது. வங்கத்து வீரம் தமிழ்நாட்டு மண்ணிலே அடியெடுத்து வைத்ததால் குறையாது என்பதற்கு அடையாளமாகத் தான் ஆழ்கடலில் அலைகள் உயர உயர எழும்பிக் குதித்த நேரத்திலும் அஞ்சாமல் அவர்கள் அந்தப் பாறையையடைந்து, அறிவு ஒளியினைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அந்த இடத்தை ஆக்கிக் கொண்டார்கள்.
விவேகானந்தருடைய வரலாற்றில் இளமைப் பருவத்திலேயே, பல வீர விளையாட்டுகளைப் பகுத்தறிவிற்கு ஏற்ற வகையிலே அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். அவர் மிகுந்த இளைஞராக இருந்த காலத்தில், ஒரு மரத்திலே ஊஞ்சல் போட்டு, தானும் தன்னுடைய நண்பர்களும் அந்த ஊஞ்சலிலே ஆடவேண்டும் என்று எண்ணிய நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர், அந்த மரக்கிளை ஒடிந்து பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, உண்மையைச் சொன்னால் பிள்ளைகள் நம்பமாட்டார்கள் என்று எண்ணி, “அந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது; ஒரு பிசாசு இருக்கிறது; ஆகவே, அதில் ஊஞ்சல் போடக் கூடாது” என்று சொன்னார்.
மற்ற பிள்ளைகள் எல்லாம் ’பயந்தாங்கொள்ளிப் பிள்ளைகள்’ என்ற காரணத்தினால், ‘அதில் பேய் இருக்கிறது’ என்று எண்ணி ஓடிவிட்டார்கள், விவேகானந்தர், “அந்தப் பேய் எப்படியிருக்கிறதென்று பார்க்கிறேன்” என்று கூறி, மரத்திலே ஏறி கிளையையடைந்து, கிளையை உலுக்கி, “பேயையும் காணவில்லை, பிசாசையும் காணவில்லை” என்று தன்னுடைய இளமைப் பருவத்திலேயே மனம் களித்திருக்கிறார். இன்றைக்கு நாம் அதைச் சொன்னால், “சுயமரியாதைக்காரன்” என்னும் பட்டம் கிடைக்கும். ஆனால், அந்தக் காலத்தில் தனது இளம் பிராயத்திலேயே விவேகானந்தர், ‘பேயென்று ஒன்றில்லை; பிசாசென்று ஒன்றில்லை, இதையெல்லாம் சொல்லி, மக்களை விரட்டக் கூடாது’ என்ற தத்துவத்தைக் கடைப்படித்தார்.
ஒன்றுக்கு ‘வங்கக் கடல்’ என்றும், இன்னொன்றுக்கு அரபிக் கடல்’ என்றும் மற்றொன்றுக்கு ‘இந்து மகா சமுத்திரம்’ என்றும் நாம் பெயர் வைத்துக் கொள்கிறோம். ஆனால், உயர நின்று பார்த்தால் எல்லாம் ஒரே தண்ணீர்க் கடலாகத் தான் தெரிகிறது. நீலக்கடலாகத் தான் தெரிகிறது. அதைப் போல மதங்கள், ‘இந்து மதம்’ என்றும், ‘புத்த மதம்’ என்றும், ‘முஸ்லிம் மதம்’ என்றும், ‘கிறித்தவ மதம்’ என்றும் பல மதங்கள் இருந்தாலும், அவை, ஹிந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், ‘ஒரே கடல் தான்’ என்று நாம் அழைப்பதைப் போல், எல்லா மதமும் ஒரே உண்மையைத் தான் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தின் அடிப்படையிலே தான், விவேகானந்தர் இந்தியத் திருநாட்டிலும், வெளிநாடுகளிலும் தன்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.
விவேகானந்தர் அவர்கள் தமிழ்நாட்டிலே தான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்வினைப் பெற்றர்கள்; ஊக்கத்தினைப் பெற்றார்கள். சென்னை மாநகரத்திலிருந்து சில இளைஞர்களும், இராமநாதபுரம் மாவட்டத்திலே அன்றைய தினம் மன்னராக விளங்கிய சேதுபதி அவர்களும் விவேகானந்தரைச் சந்தித்து, “உங்களுடைய அருமையான கருத்துக்களை வெளிநாடுகளிலே பரப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதற் கிணங்க, விவேகானந்தர் வெளிநாடுகளுக்குச் சென்றார்.

வெளிநாட்டில் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சாதாராண உடையணிந்து, வெளிநாட்டிலே பல்வேறு இன்னல்களை அனுபவித்து ஒரு புகைவண்டி நிலையத்தினுடைய பலகையிலே படுத்திருந்து, அவர் பசியோடு வாடிக் கொண்டிருப்பதை அறிந்த ஓர் அம்மையாரால் காப்பாற்றப்பட்டு, அங்குள்ள ஒரு பேராசிரியர் ‘ரைட்’ என்பவரிடத்திலே அறிமுகப்படுத்தப்பட்டு, அழைப்பில்லாமலே அங்கு நடைபெற்ற ஒரு பெரிய மத மகாநாட்டில் கலந்துகொண்டு, உரையாற்றிய பிறகு, ‘இவருடைய உரையை வெல்லுவதற்கு இந்த மத மகாநாட்டிலே வேறு உரை கிடையாது’ என்கிற அளவிற்குப் பேரும் புகழும் நிலைநாட்டி, அமெரிக்காவிலே மாத்திரமல்லாது, இங்கிலாந்து நாட்டிலும் தன்னுடைய உரையால் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பெரியார் விவேகானந்தர் ஆவார்கள்.
அவர்கள் வந்து இறங்கிய நேரத்தில் சேதுபதி மன்னர் அவரைத் தெண்டனிட்டு வரவேற்றது மாத்திரமில்லாமல், அவர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார் என்ற நினைவாக அவர் இறங்கிய இடத்தில் நாற்பதடி உயரமுள்ள ஒரு கம்பத்தையும், அன்றைக்கே நிலைநாட்டினார். அந்தக் கம்பத்தில் சேதுபதி மன்னர் எழுதிய வாசகமெல்லாம் ‘சத்திய மேவ ஜயதே’ என்பதாகும்.
‘சத்திய மேவ ஜயதே’ என்பதை இன்றைய தினம் இந்திய அரசாங்கம் தன்னுடைய இலச்சினையில், தன்னுடைய சின்னத்தில் வெளியிடுகிறதென்றாலும், ஒரு காலத்தில் சொல்லப்பட்டு, இடையிலே மறைந்துவிட்ட ‘சத்தியமேவ ஜயதே’ – வாய்மையே வெல்லும் – என்கிற இந்த வாசகத்தை முதல் முதலில் மறுமுறை ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவர், மறைந்த பாஸ்கர சேதுபதி மன்னர் என்றால் அது மிகையாகாது. அதற்குக் காரணமாக இருந்தவர் விவேகானந்த அடிகள் ஆவார்கள்.
விவேகானந்தர் ‘உத்திஷ்டத! ஜாக்ரத! பிராப்ய வராந் நிபோதித!’ என்று குறிப்பிட்டார். அதற்குச் சரியான மொழிபெயர்ப்பு ” எழுந்திருங்கள்! விழிப்படையுங்கள்! கருதிய கருமம் கைகூடும் வரையில் ஓயாது உழையுங்கள்!”
நன்றி: விவேகானந்தர் நினைவுச் சின்ன பாறைக் குழு. ஆதாரம்: தமிழர் கண்ட விவேகானந்தர் தொ.ஆ: ஸ்ரீ பெ.சு.மணி, வானதி பதிப்பகம் வெளியீடு, சென்னை, 1974, (பக்கம்: 109- 112).
$$$