-லால் கிருஷ்ண அத்வானி
பெங்களுரு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை 12.01.2009 அன்று திறந்துவைத்து, பாஜக மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி ஆற்றிய உரையின் சுருக்கம் இது...

சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் பணியை எனக்கு அளிக்கப்பட்ட பெரும் சிறப்பாகக் கருதுகிறேன்.
இங்கு இரு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு எஸ்.எம்.கிருஷ்ணா, இந்நாள் (12.01.2009) முதல்வர் மாண்புமிகு எடியூரப்பா ஆகியோரை ஒரே மேடையில் காண்பது மகிழ்ச்சிக்குரியது.
இவ்வாறு நமது அரசியல் மற்றும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பாரதத்தின் வீரர்கள், தியாகிகள் மற்றும் பெரியோரை மதித்துப் போற்றுவதில் நாம் இணைய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் இருள் அடர்ந்த காலகட்டத்தில் சுடர்மிகு தாரகையாக வந்த பேரொளி.
முதல் இந்திய சுதந்திரப் போரில் தோல்வி, தொடர்ந்த ஆங்கிலேயரின் கொடிய அடக்குமுறை ஆகியவை நம் மக்களிடையே விரக்தியையும் செயலின்மையையும் தோற்றுவித்திருந்த காலம்.
ஆங்கிலேயர்கள் உயர் இனத்தைச் சார்ந்தவர்கள்; கலாச்சாரத்தில் சிறந்தவர்கள்; ஆகவே இந்தியாவை ஆளத் தகுந்தவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை நம் மக்களிடையே குறிப்பாக, புதிய மேலைக்கல்வி கற்றவர்களிடையே இருந்த காலம். மக்களின் மனங்களில் இத்தகைய அடிமை மனப்பான்மையைத் தோற்றுவிப்பதே ஆதிக்க வெறியின் மோசமான வெளிப்பாடு.
பாரதத்தின் ஒளிமிகு வரலாறு கேலிக்கு உள்ளாகியது. கலாச்சார – பண்பாட்டு விழுமியங்கள் மோசமாக விமர்சிக்கப்பட்டன. இதனால் நமது தொன்மையான நாகரிகத்தை நமக்கு மீண்டும் கற்றுத் தருவது ‘மேல்நாட்டவரின் சுமை’ என்று நம்மை நம்ப வைத்துவிட்டார்கள்.
இத்தகைய ஓர் இறுக்கமான காலகட்டத்தில் தான் சுவாமிஜி சிங்கம்போல் முழங்கி இந்தியர்களை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பினார். தாய்நாட்டின் பெருமையையும் மக்களின் ரத்தநாளங்களில் செலுத்தினார். தமது வாக்கின் மூலம் இள நெஞ்சங்களைக் கனன்று எழச் செய்தார்.
“தாய்நாட்டிற்காக எந்தத் தியாகமும் செய்ய நீங்கள் தயாரா? அப்படி என்றால் வறுமையையும், அறியாமையையும் இந்த நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றிவிடலாம்……”
“… உங்கள் குறிக்கோளை அடையும் மனஉறுதி உள்ளதா? உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்துவிட்டால், நாம் சுதந்திர மனிதர்கள் ஆக முடியும். நல்ல உறுதியான உடலை வளர்க்க வேண்டும்; கல்வியாலும், மன ஒருமைப்பாட்டாலும் உங்கள் மனதைப் பண்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.
கராச்சியைச் சேர்ந்த ஒரு மாணவனான – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்வயம்சேவகனான என்னுள் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளின் உறுதியான தாக்கம் ஏற்பட்டது. அது கராச்சி ராமகிருஷ்ண மிஷனின் அன்றைய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தர், சுவாமிஜியின் சிந்தனைகளின் அடிப்படையில் கீதைக்கு அளித்த விளக்கங்களால் திடப்பட்டது.
சுவாமிஜி ஓர் அரசியல்வாதியோ, இந்தியப் போராட்டத்தில் செயல்பட்டவரோ அல்ல. என்றாலும் தமது கருத்துகள், லட்சியங்கள் மூலம் தேசிய உணர்விற்கான எழுச்சியையும் ஊக்கத்தையும் அளித்தவர்களுள் மிகச் சிறந்தவர்!
1897 – இல் சுவாமிஜி சென்னையில் உரையாற்றிய போது ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு, நம் நாடு, நம் இனம், நம் மக்கள் இவையே நம் தெய்வங்களாக இருக்கட்டும்’ என்றார்.
‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு’ என்று 1897-இல் சுவாமிஜி மிகச் சரியாகவே தன் அறைகூவலை விடுத்தார். ஆம், சரியாக 50 ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்றது.
சுவாமிஜி வழக்கமான ஆன்மிகத் தலைவராக அல்லாமல், சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சந்ததியினரின் ஒட்டுமொத்த கற்பனைகளையும் கனவுகளையும் கவர்ந்தார். பாரதத்தின் பழம்பெருமை பற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் அவர் நமது சமுதாயத்தின் சீர்கேடுகளையும் எடுத்துக்காட்டினார்;
‘நீங்கள் உயர் ரிஷிகளின் மரபில் வந்ததாகக் கூறி மகிழ்கிறீர்கள். தாழ்த்தப்பட்டவர்களை மேல் குடியினர் கைதூக்கி உயர்த்தும் வரை, அவர்களைச் சுரண்டுவதை நிறுத்தும் வரை இந்தியா இடுகாடாய்த் தான் இருக்கும்’ என்று சாடினார்.
பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், ராணுவ ஆட்சி போன்ற மாறுபட்ட தத்துவங்களால் அச்சுறுத்தப்படும் இன்றைய உலகிற்கு, சகிப்புத்தன்மை, இணக்கம், பரஸ்பரம் ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய சுவாமிஜியின் செய்திகளே நல்ல வழிகாட்டிகளாக அமைகின்றன. அவரது சிந்தனைகள் இளைஞர்களின் மனங்களில் பதியக் காரணம், அவரது நவீனத்துவம் நிறைந்த உலகக் கண்ணோட்டமே ஆகும்.
தொழில், தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் தோன்றும் புரட்சிகரமான வளர்ச்சிகளின் ஆற்றலை சுவாமிஜி ஆழ்ந்து புரிந்துகொண்டு வரவேற்றார். ஏனெனில் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு இவை இன்றியமையாரவை என அவர் உணர்ந்தார். கனிமவளம் மிக்க கிழக்கிந்தியாவில் ஒரு சுதேசி இருப்பு உருக்குத் தொழிற்சாலை, இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISc) ஆகியவற்றைத் தொடங்க ஜாம்ஷெட்ஜி டாடாவை அவர் ஆசீர்வதித்தார்.
சுவாமிஜி இளைஞர்களை முழு நம்பிக்கையுடன் பயமின்றிச் செயல்பட ஊக்குவித்தார். ஆன்மிகப் பலத்தைப் போற்றிய அவர், உடல், மனம் போன்ற பிற சக்திகளையும் அலட்சியம் செய்யக் கூடாது என்றார்.
மேலும், ‘கீதையைப் படிப்பதைவிட கால்பந்து ஆடுவதன் மூலம் நீங்கள் இறைவனை நெருங்கலாம். உங்களது தசைகள் உறுதியாக இருந்தால் பகவத் கீதையை நன்கு புரிந்து கொள்ளலாம்’ என்றார்.
இந்தியா இன்று உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது. இது இன்று நமது மிகப் பெரிய செல்வம்.
நான் அண்மையில் படித்த ‘Imagining India’ என்ற நூலில் அதன் ஆசிரியர் நந்தன் நீல்கானி, நமது தேசம் இன்று பெற்றுள்ள வசதியான மக்கள் தொகையைப் பற்றி விவரிக்கிறார். அதே சமயம் ‘நம் ஆற்றல்மிகு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் நல்ல கல்வி ஆக்க சக்தி அளிப்பதின் மூலமே நல்ல விளைவுகளைப் பெற முடியும்’ என்றும் எச்சரிக்கிறார்.
நமது இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தி அதன் மூலம் வலுமிக்க, வளமிக்க, பாதுகாப்பான பாரதத்தை உருவாக்க ஐந்து கருத்துக்களை உங்கள் முன்பு வைக்கிறேன்.
1. மனிதனை உருவாக்கும், தேசத்தை நிர்மாணிக்கும் கல்வி
தற்போது நம் மக்கள் தொகையின் ஒரு சிறிய பகுதியே தரமான கல்வி பெற்றுச் சிறப்படைகிறது. நன்கு கற்ற, திறமைமிக்க இளைஞர்கள் பலர் தம் வெற்றிக்கதைகளை எழுத்தில் வடித்துள்ளார்கள். இந்தச் சாதனையாளர்கள் உலக அளவில் இந்தியப் பெருமையை உயர்த்தியுள்ளார்கள்.
நமது நாட்டின் எல்லா இளைஞர்களும் இத்தகைய கல்வி கற்றால் இந்தியாவின் பெருமை இன்னும் எத்தனை மடங்கு உயரும்! சிந்தித்துப் பாருங்கள்!
நல்ல கல்வி என நான் கூறுவது சுவாமிஜி கூறிய ‘மனிதனை உருவாக்கும் கல்வி’யைத் தான். சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி ஒவ்வோர் இந்தியக் குழந்தையின் பூரணத்துவத்தையும் வெளிப்படுத்த வைப்பது நமது தார்மிகக் கடமை அல்லவா?
2. உடல், மன, ஆன்மிக ஆரோக்கியம்
மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் ஊற்றாவது ஆரோக்கியமே. உடல்நலம் பேணுவதற்கான, அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெறும் முறையைப் புரட்சிகரமானதாக ஆக்க வேண்டும், விளையாட்டு, ஓய்வு நேர மகிழ்ச்சி, வீரச் செயல்கள், யோகா, தியானம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகியவை மக்களிடையே பல மடங்கு பரவலாக்கப்பட வேண்டும். விளையாட்டின் சிறப்பு தேசிய அளவில் பிரசாரம் செய்யப்படவேண்டும்.
சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்ஸா, அபிநவ் பிந்த்ரா ஆகியோர் தம் தனிப்பட்ட வெற்றிகளால் மட்டும் பிரபலமாகவில்லை. அவர்களது சாதனைகள் ஒவ்வோர் இந்தியனையும் பெருமை கொள்ளச் செய்கின்றன. வரும் நாட்களில் இத்தகைய திறமையாளர்கள் நூற்றுக் கணக்கானோர் உருவாக வேண்டும்.
அதேபோல நம் இளைஞர்கள் தம் கலாச்சார, கவின்கலைத் திறமைகளை இந்தியா மற்றும் உலக அரங்குகளில் வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்.
இவை அனைத்தையும் நிறைவேற்ற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் மிகப் பெரிய மறுமலர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இதற்குத் துவக்கமாக ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டுப் பயிற்சி வசதிகள், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு விளையாட்டு அரங்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுப் பயிற்சிக்காக மாணவர்கள் தங்குமிடம் ஆகியவை நிறுவப்படவேண்டும்
3. வேலை வாய்ப்பு – முனைப்பான பொருளாதார வளர்ச்சி
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலையிழப்பு பரவலாகக் காணப்படும் இன்றைய நிலையில் இந்திய இளைஞர்களின் சிந்தனை, வேலைவாய்ப்பு பற்றியதாகவே உள்ளது. நம் பொருளாதாரக் கொள்கை தகுதியுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பை உறுதி செய்வதாக அமைய வேண்டும்.
4. தேசபக்தி மற்றும் தேசிய விழுமியங்களை மேம்படுத்துதல்
இளைஞர்கள் இயல்பாகவே தேசபக்தியும் லட்சியமும் கொண்டவர்கள். இது எனது நம்பிக்கை. அவர்களின் இப்பண்புகள் மேற்கொண்டு விரிவடையவும் திடப்படவும், அவர்களை பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், பன்முக ஆன்மிக, அறிவியல், பாரம்பரியம் மற்றும் கடந்தகால தற்கால சாதனைகளை அறியும்படியான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்புகளை உண்டாக்கி அவர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இலவசமாகப் பயணிக்க வசதிசெய்ய வேண்டும்.
உதாரணமாக, கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் பள்ளிச் சுற்றுலாப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற வேண்டும். நூலக இயக்கம் பெரிதும் விரிவாக்கப்பட வேண்டும். தேச ஒருமைப்பாட்டை மேம்படுத்த இணையதள வசதி முழுவீச்சில் பயன்படுத்தப்பட வேண்டும்.
5. தொண்டு மனப்பான்மையை வளர்த்தல்

தேசபக்தி போலவே தொண்டு உணர்வும் சிறுவயதிலேயே இயல்பாக வளரக் கூடியது. அருஞ்செயல்கள் ஆற்றவும், நாட்டின் மேன்மைக்காகத் தீரச் செயல்கள் புரியவும் இந்தப் பண்புகள் தூண்டப்படவேண்டும்.
என்.சி.சி, என்.எஸ்.எஸ். போன்ற திட்டங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்து, நம் இளைஞர்களின் அளப்பதிய ஆற்றலை, ‘ஸ்வச்ச பாரதம், ஸ்வஸ்த பாரதம், ஸ்ம்ஸ்கார் பாரதம், ஸுரக்ஷத பாரதம்’ (தூய, ஆரோக்கியமான, பண்பாடு மிக்க, பாதுகாப்பான பாரதம்) போன்ற இலக்குகளை நோக்கித் திருப்ப வேண்டும்.
நமது இளைஞர்களின் ஆர்வமிக்க சேவை, நமது சமயத் தலைவர்களின் ஆசிகளுடன் கூடிய பங்கேற்பு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொருளாதார, நிர்வாகக் கொள்கை இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, நமது தேசத்தின் புனித நதிகள், தீர்த்தத் தலங்கள் ஆகியவற்றைச் சுத்திகரிப்பது போன்ற மாபெரும் பணிகளை நம்மால் ஆற்ற முடியாதா? முடியும்.
என் இளம் நண்பர்களே, உங்கள் சுற்றுப்புறத்தில் பள்ளி, கல்லுரியில் அல்லது பணியிடத்தில் ‘ஏக் காம் தேஷ்கே நாம்’ – நாட்டுக்காக ஒரு நற்செயல் என்ற பெயரில் ஒரு தேசிய சேவை மையம் தொடங்குங்கள்; சேவை செய்யுங்கள். மரம் நடுதல், ரத்த தானம், கல்வி, ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், முதியோர் நலன், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மேம்பாடு போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
இத்தகைய சேவைகளே சுவாமிஜியின் பிறந்த நாளில் நாம் அவருக்குச் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாகும்.
திரு. லால் கிருஷ்ண அத்வானி (95), பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்; முன்னாள் துணைப் பிரதமர். நன்றி: விவேகானந்தரைக் கற்போம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
$$$