-ஜெ.ஜெயலலிதா

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகம் முழுவதுமான ஓராண்டு கால தொடர் கொண்டாட்டத்தை 27.2.2013-இல் சென்னையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதன் சுருக்கம் இது.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என மன்னர்களை வற்புறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். 1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டில், அவருடைய பேச்சு உலக மக்களை கவர்ந்தது.
உலக நன்மைக்காக தொண்டும், துறவும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுவாமி விவேகானந்தரால் ராமகிருஷ்ண மிஷன் தோற்றுவிக்கப்பட்டது. சுயநலத்தை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள் என்று உபதேசம் செய்தவர் விவேகானந்தர். சுயநலம் இல்லாத இடத்தில்தான் தியாக மனப்பான்மை இருக்கும். தியாக மனப்பான்மை இருந்தால்தான் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும்.
விவேகானந்தர் தான் தூண்டுகோல்:
தொண்டு என்பது சுயநலமின்றி, பிறர் நலத்துக்காக உழைப்பது. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவுவதைப் போதிக்கின்றன. இதனால்தான், நமது நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தொண்டுகளில் பல வகை உண்டு. நாட்டுக்குச் செய்யும் சேவை தேசத் தொண்டு. மக்களுக்குச் செய்யும் சேவை மக்கள் தொண்டு. இறைவனுக்குச் செய்யும் சேவை திருத்தொண்டு.
ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் ஒவ்வொரு விதமான சேவையைச் செய்கிறது. ஆனால், இந்த மூன்று சேவைகளையும் செய்கிற அமைப்பாக ராமகிருஷ்ண மடம் திகழ்கிறது.
லாப நோக்குடன் செயல்படும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்கூட, லாபத்தின் ஒரு பகுதியை கல்வி, மருத்துவம் போன்ற பொது நலத் தொண்டுக்காக, சமூக சேவைக்காக ஒதுக்குகின்றன.
அதே நேரத்தில், பொதுத் தொண்டு, பொது வாழ்வு என்று சொல்லி தன்னலத்துக்காக அதையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். தொழில் தொண்டாகலாம். தொண்டு தொழிலாகக் கூடாது.
நான் அரசியலுக்கு வருவதற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக விளங்கினார். இதை அரசியலில் காலடி எடுத்து வைத்தபோதே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
விவேகானந்தர் வழியில் சேவை:

சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள் சேவையைப் புரிந்தார். நானும் அவர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவையைச் செய்து வருகிறேன். எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று எதுவும் தேவையில்லை. எனக்கென்று யாரும் கிடையாது. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான். தமிழக மக்களால் நான், தமிழக மக்களுக்காகவே நான்.
என்னைப் பொறுத்தவரையில், எனக்கு வருகின்ற சோதனைகளை, முட்டுக்கட்டைகளை, தடைகளை சுவாமி விவேகானந்தர் வழியில்தான் தகர்த்து வருகிறேன்.
சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷன், பழமை மாறாமல் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அதே நோக்கத்துக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்புறச் செயலாற்றி வருகிறது. இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள்தான், இளைய சமுதாயத்தினரின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகின்றன.
சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் நாட்டுப்பணி, சமுதாயப் பணி, ஆன்மிகப் பணி ஆகியன மேலும் சிறக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் இடையே மன உறுதியும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் உருவாக்குவதற்கான செயல் திட்டங்களை வகுத்து, அதனை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என மடத்தின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
- நன்றி: தினமணி (28.02.2013)
$$$