பாஞ்சாலி சபதம்- 2.1.10

-மகாகவி பாரதி

பார்த்தனை இழந்த பிறகும் தருமன் தன்னிலை மீளவில்லை. இதுவே சூதின் இயல்பு. அதை மேலும் விசிறி விடுகிறான் சகுனி. வீமனை பந்தயம் வை என்கிறான். சூதே ஆயினும், எதிர்த்தரப்பில் இருப்பவர் பணயப் பொருளைக் கூறல் மரபல்ல. அதையும் மீறுகிறான் சகுனி. ஆனால், தருமன் ‘தக்கது செய்தல் மறந்தனன்’.  “பெரும்புகழ் வீமனை, - உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று போ!’ என்று உரைத்தனன்...விதி அவன் நாவில் வந்து அமர்ந்திருக்கிறதே! 

இரண்டாம் பாகம்

2.1. அடிமைச் சருக்கம்

2.1.10. வீமனை இழத்தல்

கொக்கரித் தார்த்து முழங்கியே – களி
      கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்: – ‘எட்டுத்
திக்கனைத்தும்வென்ற பார்த்தனை – வென்று
      தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான். – தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், – உளஞ்
      சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில் – எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், – அறத்
      தண்ணல் இதனை உரைக்கின்றான்: 31

‘ஐவர் தமக்கொர் தலைவனை, – எங்கள்
      ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, – ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும் – நின்று
      சீறி அடிக்குந் திறலனை, – நெடுங்
கைவளர் யானை பலவற்றின் – வலி
      காட்டும் பெரும்புகழ் வீமனை, – உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் – வென்று
      போ!’ என் றுரைத்தனன் பொங்கியே. 32

போரினில் யானை விழக்கண்ட – பல
      பூதங்கள் நாய்நரி காகங்கள் – புலை
ஒரி கழுகென் றிவையெலாம் – தம
      துள்ளங் களிகொண்டு விம்மல்போல், – மிகச்
சீரிய வீமனைச் சூதினில் – அந்தத்
      தீயர் விழுந்திடக் காணலும் – நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் – களி
      மண்டிக் குதித்தெழுந் தாடுவார். 33

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s