மூன்று கடல்கள், மூன்று நாட்கள்

-சுப்பு

திரு.  சுப்பு  மூத்த தமிழ்  பத்திரிகையாளர்;  தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; மொழி பெயர்ப்பாளர்; ‘திராவிட மாயை- ஒரு பார்வை’ என்ற நூலின் மூலமாக தமிழக அரசியல், இலக்கிய வட்டாரங்களில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

“ஆறு ரூபாய்க்காகத் தன் சொந்தத் தந்தையின், சகோதரர்களின் கழுத்தை அறுக்கக்கூடிய ஆயிரக் கணக்கான மக்களை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டில் காண முடியும்? எழுநூறாண்டு முகமதிய ஆட்சியில் ஆறு கோடி முகமதியர்கள், நூறாண்டு கிறிஸ்துவ ஆட்சியில் திருவாங்கூர் மாநிலத்தில் மட்டும் இருபது லட்சம் கிறிஸ்துவர்கள்.  இதற்குக் காரணம் என்ன? நமது தனித்தன்மை ஏன் முற்றிலுமாக நம் நாட்டைக் கைவிட்டது?

கைத்திறன் மிக்க நம் தொழிலாளர்கள் ஐரோப்பியருடன் போட்டியிட இயலாமல் ஏன் நாள்தோறும் குறைந்து வந்திருக்கிறார்கள்?

பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்ற ஆங்கிலத் தொழிலாளியை, ஜெர்மனி தொழிலாளி எந்த ஆற்றலால் அசைத்து வெற்றி கண்டான்? கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம்.

ஆனால் நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது.  மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை.  அதேவேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான்.  சிரத்தை இல்லாமல் போய்விட்டது என்பதே இதன் காரணம்.  சிரத்தை, வேத வேதாந்தங்களின் ஆதார சுருதியாகும்”

-என்பதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் வெளிப்பட்ட கருத்துக்கள்.

இடம்: குமரிக்கடல்.  அலைகடலின் சுழற்சியையும், ஆர்ப்பரிப்பையும் எதிரொலித்து, அவருடைய உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள்.

காளியின் இருப்பிடமான கிழக்கு இந்தியாவில் தொடங்கிய அவருடைய பயணம் தென்கோடியில் கன்னியாகுமரியின் கடலில் நிலை பெற்றது.

பெயர் என்ற அடையாளத்தையும் துறந்துவிட்டு, உணவுக்கான உத்தரவாதம் இல்லாமல், கம்பீரத்தால் நெய்யப்பட்ட காவித்துணியைப் போர்த்திக்கொண்டு. கன்னியாகுமரியின் கடலுக்கு வந்தார் அவர்.  படகுக்காரனுக்குக் காசு கொடுக்க வழி இல்லாததால், பாறையை நோக்கி நீந்தினார்.  அந்த மூன்று கடல்கள் கூடும் இடத்தில் மூன்று நாட்கள் இருந்தார்.

மூன்று நாட்கள், அந்தப் பாறையில் பராசக்தியின் பாதச்சுவடுகளைப் பார்த்தபடி தவமிருந்தார் அவர்.  முன்னர் நாடு திகழ்ந்த பெருமை, மூண்டிருக்கும் இகழ்ச்சி, பின்னர் நாடுறு வெற்றி ஆகிய மூன்றையும் இந்தியர்கள் உணராமல் போனதற்குக் காரணம், அன்றிருந்த பேடிக் கல்வி தான் என்பதை அவர் உணர்ந்தார்.

வாழ்க்கை என்பது வந்தவருக்கெல்லாம் வளைந்து கொடுப்பது, சமூக உணர்வு என்பது திண்ணையைத் தாண்டித் தெருவில் கூடப் போகாதது என்ற நிலையில் பல்லாண்டுகளாகப் பாழ்பட்டிருந்தனர் இந்தியர்கள்.

வறுமைக்கும், பிரிவினைக்கும் கொடுத்தது போக மிச்சமிருக்கும் உணர்வுகளை அச்சத்திடம் ஒப்படைத்துவிட்டிருந்தனர் அவர்கள்.  அவர்களுடைய முதல் தேவை பசியாறுதல், இரண்டாவது தேவை கல்வி பெறுதல் என்பதை கற்பாறையில் தவம் செய்த சுவாமி விவேகானந்தர் தெரிந்து கொண்டார்.  இந்த ஜன சமூகத்தை மீட்டெடுப்பதற்காக தாம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதும் அவருக்குப் புலப்பட்டது.

இந்தியர்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்திற்கு ஒரு புதிய வழி காட்டுவதற்காகவும் தான் சுவாமிஜியின் அமெரிக்கப் பயணம் அவசியமானது.

இந்தியா என்பது சுரண்டலுக்குரியது; இந்து மதம் என்பது கண்டனத்துக்குரியது என்று தான் நினைத்திருந்தனர், பெரும்பாலான அமெரிக்கரும், ஐரோப்பியரும்.  காலனி ஆதிக்கம் என்ற பெயரில் படுகொலை செய்வது, கொள்ளை அடிப்பது, அதை நியாயப்படுத்துவது என்பது தான் மேலைநாடுகளின் கருத்தாக்கமாக இருந்தது.

இந்தச் சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்;  படைப்பு முழுவதையும் பரவசத்தோடு அணுகும் வேதாந்த அமுதத்தை அங்கே விநியோகம் செய்ய வேண்டும் என்பது சுவாமிஜிக்கு விதிக்கப்பட்டது.

1892 டிசம்பர் மாத இறுதியில் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கற்பாறையில் தவம் செய்த மூன்று நாட்கள் இந்திய வரலாற்றின் யுக சந்தி என்று சொல்லலாம்.

நவீன இந்தியாவின், எழுச்சி பெற்ற இந்தியாவின் துவக்கப்புள்ளி சுவாமி விவேகானந்தர் தான்.  சுவாமிகளின் வார்த்தையால் தூண்டப்படாத தேசியத் தலைவரே இல்லை என்று அடித்துப் பேசலாம்.  சுவாமிஜியின் வாழ்க்கையை உதாரணமாகக் கொள்ளாத பொதுநலத் தொண்டரே இல்லை என்பது பொதுவான நம்பிக்கை.

‘இந்தியாவின் பழமையில் கால் பதித்தவர் விவேகானந்தர்.  இந்தியப் பண்பாடு குறித்த பெருமித உணர்வு அவருக்கு இருந்தது.  இருந்தாலும் வாழ்க்கைப் பிரச்னைகள் பற்றிய அவருடைய அணுகுமுறை புதுமையாக இருந்தது.  இந்தியாவின் பழமைக்கும், புதுமைக்கும் அவர் பாலமாக இருந்தார்’ என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு.

சுவாமிஜியை உந்து சக்தியாகக் கொண்டு செயல்பட்டவர்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.  இருந்தாலும் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட ஒருவரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

திரு. முனுசாமி பிள்ளை 1889-ஆம் ஆண்டில் உதகமண்டலத்தில் பிறந்தார்.  பள்ளிப் படிப்பை கோயமுத்தூரில் இருந்த லண்டன் மிஷன் பள்ளிக்கூடத்தில் முடித்தார்.  பிறகு கல்லூரிப் படிப்பு.

‘திராவிட மாயை’ சுப்பு

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மாணவனாக இருந்தபோது இவர் பட்ட துன்பங்கள் அதிகம்.  அந்தக் காலங்களில் ஓட்டல்களில் கூட சாதி கேட்டுத் தான் சோறு போடுவார்கள்.

தனிப்பட்ட முறையில் இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் முனுசாமி பிள்ளைக்கு பொதுவாழ்வில் ஆர்வம் இருந்தது.  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மதுவிலக்கு பிரசாரம் செய்தார்.  தீவிர மதாபிமானத்தோடு இருந்த இவர், விவேகானந்தர் சங்கம் ஒன்றை நடத்தினார்.

பிறகு, 1937-இல் ராஜாஜி தலைமையில் ஏற்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையில் முனுசாமி பிள்ளை அமைச்சராக ஆனார்.

பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பணம், பணம், பணம் என்று பாயைப் பிராண்டுகிற இன்றைய தமிழகச் சூழலில் முனுசாமி பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அதிசயமாகத் தான் இருக்கும்.

தன்னலமற்ற உள்ளத்தோடும், கறைபடாத பெயரோடும் முனுசாமி பிள்ளை வாழ்ந்து, பணி செய்து மறைந்தார் என்றால் அதற்குக் காரணம் அவரை இயக்கிய சுவாமி விவேகானந்தரின் ஆளுமை தான்.

மூன்று கடல்களும், மூன்று நாட்களும் சுவாமிஜியை வழிநடத்த, அவர் ஓராயிரம் உத்தமர்களை வழிநடத்தி இருக்கிறார்.  இந்தத் தொகையடியார் பட்டியல் இன்னும் தொடர்கிறது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s