-மகாகவி பாரதி
சூதில் தோற்று பணயமாக வைத்த பாஞ்சாலியை தருமன் இழந்து கையறுநிலையில் தவிக்க, அவனது கௌரவ இளையவனான துரியன் கூத்தாடுகிறான் - நெடுநாள் பகை தீர்ந்ததென்று! அப்போது அவையில் நிகழ்ந்த அநியாயங்களை எல்லாம் எனது பாடலில் எழுத என்னால் இயலாது என்கிறார் மகாகவி பாரதி.

இரண்டாம் பாகம்
2.2. துகிலுரிதற் சருக்கம்
2.2.3. துரியோதனன் சொல்வது
நின்று துரியோதனன் – அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கட்டி,
‘என்துயர் தீர்த்தாயடா – உயிர் மாமனே,
ஏளனந் தீர்த்துவிட்டாய்.
அன்று நகைத்தாளடா; – உயிர் மாமனே,
அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா, – உயிர் மாமனே,
என்ன கைம்மாறு செய்வேன்! 45
‘ஆசை தணித்தாயடா, – உயிர் மாமனே,
ஆவியைக் காத்தாயடா.
பூசை புரிவோமடா, – உயிர் மாமனே,
பொங்க லுனக்கிடுவோம்.
நாச மடைந்ததடா – நெடுநாட்பகை,
நாமினி வாழ்ந்தோமடா!
பேசவுந் தோன்றுதில்லை; – உயிர் மாமனே,
பேரின்பங் கூட்டிவிட்டாய்.’ 46
என்று பலசொல்லுவான், – துரியோதனன்
எண்ணி எண்ணிக் குதிப்பான்;
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
கொட்டிக் குதித்தா டுவான்.
மன்று குழப்பமுற்றே, – அவர் யாவரும்
வகைதொகை யொன்றுமின்றி
அன்று புரிந்ததெல்லாம் – என்றன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகுமோ? 47
$$$