-திருநின்றவூர் ரவிகுமார்



அறிவியல் துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது என்று இந்தியர்கள் உட்பட பலரும் நம்புகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. இந்தியா ஆன்மிக பூமி, அறிவியல் பூமி அல்ல என்று சமாதானம் கூறுபவர்களும் உண்டு.
இந்தியா ஆன்மிக பூமி; புராண ரிஷி முனிவர்கள் என்றால் ஆன்மிகவாதிகள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் ரிஷிகள் ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல, அறிவியலாளர்களும் கூட. அவர்கள் இறைவனைத் தேடி அடைந்தவர்கள் மட்டுமல்ல, அவனது படைப்பையும் பகுத்து அறிந்தவர்கள். படைப்பு என்றால் பூமியும் பூமியில் இருப்பவையும் மட்டுமல்ல, பூமிக்கு அப்பால் உள்ளவையும் தான்.
அறிவியலை கோட்பாட்டு அறிவியல் – பயன்பாட்டு அறிவியல் என்று பிரிக்க முடியும். மின்சார சக்தியைக் கண்டுபிடித்தது கோட்பாட்டு அறிவியல். மின்சாரத்தைக் கொண்டு விசிறியைச் சுழற்றுவது பயன்பாட்டு அறிவியல். பயன்பாட்டு அறிவியலாளர்களை இந்நூல் ஆசிரியர் கண்டுபிடிப்பாளர்கள் என்று குறிப்பிடுகிறார். கோட்பாட்டு அறிவியலும் பயன்பாட்டு அறிவியலும் பிணைந்து மழுங்கிக் கிடப்பது ஜோதிடம். ஜோதிடத்தை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்க வேண்டுமென வாஜ்பேயி ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்த அறிவியலாளர் டாக்டர் மு.ம.ஜோஷி கூறியபோது அதை பலரும் எதிர்த்தார்கள். அது அறிவியலும் இல்லை, வாழ்வியலும் இல்லை என்றார்கள் – நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்கும், பொதுவெளியில் சிலை வைத்து வழிபடும் – சில அரசியல்வாதிகள்.
நவீனக் கருவிகள் ஏதுமற்ற அந்தக் காலத்தில் பூமியின் சுற்றளவை துல்லியமாக்க் கூறியுள்ளார் பண்டைய ரிஷி ஆரிய பட்டர். பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம், செவ்வாயின் தன்மை, சனி கோளின் கதிர் தாக்கம் பற்றியெல்லாம் எப்படி கண்டுபிடித்து இருப்பார்கள்? அறிதல் முறைகளில் ஒன்று தியானம். ஒளியின் வேகத்தை விட மேலான வேகத்தில் சென்றாலும் உடையாத, சிதறாத ஒரு கருவி உண்டு என்றால் அது மனித மனமே. மனித மனத்தைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முதல் பாடம் தியானம். மனத்தை செம்மைப்படுத்திப் பயன்படுத்த வழி கூறுபவர் பதஞ்சலி முனிவர். அறிவியலின் உச்சம், ரிஷி முனிவர்களின் வாழ்க்கை.
ஆனால், ரிஷி முனிவர்கள் என்றால் சனாதனம்; சனாதனம் என்றால் ஏற்றத்தாழ்வும் உச்சத்தில் பிராமணர்களும் தான் என்று கூச்சலிடுகிறார்கள் சிலர். அதற்கு நேர் எதிராக பிராமணர்கள் பாரம்பரியமாகவே அறிவாளிகள் என்று சிலரும் பிதற்றுகின்றனர். இருதரப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே. அதுமட்டுமல்ல செல்லாத நாணயத்தின் பக்கங்கள். எப்படி?
தகுதியும் திறமையும் நிரூபிக்கப்பட வேண்டிய அறிவியல் துறையில் ரிசல்ட் (பயன்/ கண்டுபிடிப்புகள்) மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது பிராமணர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு இணையான அல்லது மேம்பட்ட ஜாதியை (பிள்ளை /முதலியார், வடநாட்டில் வெவ்வேறு பெயரில்) சேர்ந்தவர்களும், பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் (டாக்டர் சிவன்), பட்டியல் இனத்திலேயே மிகவும் கீழானவர்கள் என்று கருதப்படும் தீயா ஜாதியினரும் (மனாலி கல்லட் வைணு பாப்பு) அறிவியல் துறையில் சிறப்பாகப் பங்களித்து உள்ளனர். அது இந்நூல்களைப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது.
இந்திய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அறிவியல் துறையில் பங்களித்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் குடியேறிய பார்ஸிகளும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். பொதுவாக இந்திய அறிவியல் துறையில் ஆண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். இந்திய சமூகச் சூழ்நிலை பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்குக் காரணம். அதையும் மீறி பல பெண்கள் சிறப்பாக பங்களித்துள்ளனர். விருதுகளும் கௌரவங்களும் கிடைக்காத போதும் (சாருசீதா சக்கரவர்த்தி போன்ற) சில பெண்கள் தங்கள் துறையில் தடம் பதித்துள்ளார்கள்.
ஊனமுற்ற குழந்தைகள் நலத்திற்காகப் பணிபுரியும் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் கலாம் ராக்கெட் வடிவமைப்பில் பயன்படும் எடை குறைந்த – அதே சமயத்தில் வலிமை மிகுந்த உலோகக் கலவை மூலமாக செயற்கைக் கால்களை தயாரித்துக் கொடுத்தார். வானிலையலில் பிரபல விஞ்ஞானியான பிஷாரத் ராம பிசாரட்டி கேரளத்தில் அதிகமாக உள்ள தென்னையைத் தாக்கும் இலைச் சோகை நோயை தொலை உணர்தல் முறையில் கண்டறிந்தார். இது தென்னை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக ஆனது.
இந்திய விஞ்ஞானிகள் வரட்டு அறிவாளிகளாக இல்லாமல் சாதாரண மக்களுக்கும் கஷ்டப்படுபவர்களுக்கும் பேருதவியாக இருந்துள்ளார்கள். இதை, ‘இந்திய பண்பாடு நிச்சயமாக இந்திய மனத்தை தருகிறது. இந்திய விஞ்ஞானிகளின் மாறுபட்டு சிந்திக்கும் திறனையும் தருகிறது’ என்று சரியாக வார்த்தை படுத்தியுள்ளார் ரோலண்ட் ஜோஃப் என்ற பிரிட்டிஷ்காரர்.
அறிவியல் துறைக்கு அடித்தளமாக இருப்பது கணிதம். கணிதவியலில் முன்னோடியான ஆரிய பட்டர், பூஜ்ஜியத்தை வடிவமைத்த அவரது சீடர் பாஸ்கரர் என தொடங்கும் இந்நூலில், ‘ விஞ்ஞான மூதாதையர், நோபல் விருதாளர்கள், நவீன அறிவியல் முன்னோடிகள், கணித மேதைகள், இஸ்ரோ விஞ்ஞானிகள், அணுவியல் அற்புதர்கள், கணிப்பொறியியல் வித்தகர்கள். புதிய கண்டுபிடிப்பாளர்கள், தாவரவியல் நிபுணர்கள், மருத்துவயியல் வல்லுநர்கள், சிறப்புத்துறை நிபுணர்கள், இயற்பியலாளர்கள்’ என பன்னிரண்டு வகைப்பாட்டில் சுமார் 120 இந்திய விஞ்ஞானிகளைப் பற்றியும் அவர்களது பங்களிப்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பாக். அறிவியல் உலகின் தந்தை என்று பாராட்டப்படுபவர் முகமது அப்துஸ் சலாம். அகமதியா என்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாகிஸ்தானில் பல்வேறு அவமானங்களைச் சந்தித்த போதிலும் அந்நாட்டை அணு ஆயுத நாடாக்கியவர். பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர் என்பதால் அவரைப் பற்றியும் இந்நூலில் உள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகை அச்சுறுத்திய மலேரியா நோய்க்கு லட்சக்கணக்கானோர் பலியாகினர். கொடிய மலேரியா நோய் பரவுவதற்கு காரணமான கொசுவைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்ட் ராஸ். பிறப்பால் பிரிட்டிஷ்காரராக இருந்த போதிலும் இந்தியாவில் பிறந்து, இங்கேயே மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளில் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட ரொனால்டு ராஸ் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன.
அமெரிக்காவுக்குக் குடியேறி, ஒரு அமெரிக்கரை மணந்து, அமெரிக்க விண்வெளிப் பயணத்தில் மரித்தாலும் இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லாவையும் அவரது சாதனைகளையும் இந்தியர்கள் மறக்கவில்லை. இந்திய அரசும் பெண்களுக்கு வழங்கும் விருது ஒன்றிற்கு சாவ்லா விருது என்று பெயரிட்டுள்ளது. அவரைப் பற்றியும் இந்நூலில் விவரங்கள் உள்ளன.
இந்த மூவரைப் பற்றியும் இந்த நூல்களில் கூறக் காரணம் நூலாசிரியரின் பரந்த மனமும் (அகண்ட இந்திய) தேசப்பற்றும்தான் என்று கருதலாம்.
இந்தியா ஆன்மிக பூமியாக மட்டும் இருந்தால் போதாது. அறிவியல் பூமியாகவும் மாற வேண்டும். இதை, சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
"நீங்கள் வாழ வேண்டுமானால் காலத்திற்கு ஏற்ப உங்களை நீங்கள் தகவமைத்துக் கொண்டே ஆக வேண்டும். நாம் அனைவரும் வாழ்ந்தே ஆக வேண்டுமானால் நாம் அறிவியல் தேசமாக மாறியாக வேண்டும். ஏனெனில் அறிவுசார் சக்தியே உலகை வழிநடத்தும் மாபெரும் சக்தியாகும்".
அவர் சொல்லியதை அவரது இயற்பெயரைக் (நரேந்திரன்) கொண்ட பிரதமர் (மோடி) நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதே புதிய கல்விக் கொள்கை (2020). இந்த நூலில் குறிப்பிடப்படுள்ள இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டது அது.
பத்திரிகையாளர் வ.மு.முரளி, தினமணியின் இணைப்பிதழான ‘இளைஞர் மணி’யில் 2015 அக்டோபர் 27 இல் தொடங்கி 2018 டிசம்பர் 20 வரை 120 வாரங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பு இது. “வாரந்தோறும் படித்தாலும் அப்பொழுது ஏற்படாத மலைப்பு நூல் வடிவில் தொகுப்பாக படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது” என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அது பொருத்தமான பாராட்டுத் தான்.
மூன்று நூல்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டு, சேர்த்தியாக பிரசுரிக்கப் பட்டுள்ளன. அதற்காகவும் (மற்றும் நூல் தேர்வுக்காகவும்) வெளியீட்டாளர்களைப் பாராட்டலாம்.
பருந்துப் பார்வையில் இந்திய அறிவியலாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த நூல்களைப் படிக்கலாம். மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்கள் இவை. குறைந்தபட்சம் ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டியவை.
***
நூல் குறித்த விவரங்கள்:
அக்கினிக் குஞ்சுகள் (இந்திய விஞ்ஞானிகளின் வரலாறு) -வ.மு.முரளி 3 தொகுதிகள்: தொகுதி 1- 216 பக்கங்கள்; தொகுதி 2 - 212 பக்கங்கள்; தொகுதி 3 - 242 பக்கங்கள் ஒவ்வொரு தொகுதியும் விலை: ரூ. 250- (மொத்தம்: ரூ. 750) வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், எம்.சி.இ.டி. வளாகம், உடுமலை சாலை, பொள்ளாச்சி- 642 003 தொடர்புக்கு: 99761 44451, 94456 37190
$$$