-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

3. பாரதி (பகுதி- அ)
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினையுடைய தமிழ்த் தாய், பல்லாயிரம் ஆண்டுகள் முன்னர்த்தொட்டு இன்றளவும் கன்னித்தன்மை குலையாமல் வளர்ந்து வரும் இயல்பினை உடையவளாவாள். இவள் காலத்தில், இவளோடு தோன்றிய எத்தனையோ, நூற்றுக் கணக்கான மொழிகள் முற்றிலும் வளர்ச்சி அடையாமலோ, அன்றி நன்கு வளர்ந்த பின்னரோ இன்றைய நிலையில், பொய்யாய்க் கனவாய்ப் பழங் கதையாய்ப் போய்விட்டன. எனவே, அன்றிலிருந்து இன்றுவரை பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் இளமை குன்றாது வளர்ந்து வருகின்ற தனிச் சிறப்பு அகில உலக மொழிகளுள் தமிழ்த் தாய் ஒருத்திக்கே உரியதாகும். 2,000 ஆண்டுகளில் கூட மிகச் சிறிய வேறுபாடுகள் தவிர புரட்சிகரமான மாறுதல்கள் எவையும் இன்றி இருந்து வரும் சிறப்பு தமிழ்த் தாய்க்கே உரியது.
கிறித்துவின் காலத்தையொட்டி வளர்ந்த சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் தவிர, அதனையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், பின்னர்த் தோன்றிய மணிமேகலை இதனையொட்டித் தோன்றிய பெருங்கதை என்பவற்றுடன் திருக்குறள் நீங்கலாக உள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை ஒருபுறம் மிளிர – இடைக் காலத்தில் சிந்தாமணி, கம்ப இராமாயணம், பெரிய புராணம் என்ற பிற இலக்கியங்கள் ஒருபுறம் மிளிர்ந்து நிற்கின்றன. 12-ஆம் நூற்றாண்டை அடுத்து இத்தகைய பெரும் இலக்கியங்கள் தோன்றவில்லை என்றாலும், சாத்திர நூல்கள் தோன்றலாயின. 10 நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களாகவே உள்ள மேலே கூறிய நூல்கள் ஒருபுறம் இருக்க, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 10 – ஆம் நூற்றாண்டுக்குள் சைவ வைணவ சமய குரவர்கள் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பெருநூல்களும் யாத்துத் தந்தனர். இவற்றைச் சமய இலக்கியங்கள் என்று கூறலாம். இச் சமய இலக்கியங்களின் பின்னர் பெருங்காப்பிய இலக்கியங்கள் புதிய முறையில் விருத்தப் பாவில் தோன்றின. சமய இலக்கியங்கள் பழைய சங்கப் பாடல் முறையைத் தவிர்த்து, அதாவது ஆசிரியம், கலி என்பவற்றை நீக்கி, விருத்தப்பா என்னும் புது முறையைக் கையாண்டன.
மனித உணர்ச்சியை வெளியிடும் சாதனமாக உள்ள கவிதை, ஆசிரியம், கலி ஆகிய வகைகளில் வெளிவரும் பொழுது முழு உணர்ச்சியையும் வெளிப் படுத்த இடந்தாராமையால் அதற்கேற்ற முறையில் விருத்தப் பாக்கள் அமையலாயின. இக் காரணத்தாற் போலும் பின்னர்த் தோன்றிய இலக்கியங்கள் யாவும் ஒரோவழி ஆசிரியப்பா முறையை மேற்கொண்டனவே தவிர, நூற்றுக்கு 90 விழுக்காடு விருத்தப்பா முறையையே மேற்கொண்டன.
12-ஆம் நூற்றாண்டை அடுத்துப் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை என்றாலும், 19- ஆம் நூற்றாண்டு முடிய சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. தமிழில் உரைநடையும் உரையாசிரியர்களால் பெரிதும் போற்றி வளர்க்கப்பட்டது. இவ் இடைக் காலத்தில் கவிதைக் கலைஞர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நிற்பவர்கள் குமரகுருபர சுவாமிகளும் சிவப்பிரகாசரும் ஆவர். உரைநடைக்கு எடுத்துக்காட்டாக நிற்பவர் மாதவச் சிவஞான யோகிகள் ஆவார். 7-ஆம் நூற்றாண்டு முதல் 19 – ஆம் நூற்றாண்டு முடியத் தோன்றிய நூல்களுள் ஏறத்தாழ அனைத்துமே சமயச் சார்புடையனவாக அமைந்து விட்டன. 17, 18, 19 ஆகிய நூற்றாண்டுகளில் தல புராணங்கள் என்னும் புதிய முறை இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. இவை அனைத்தும் சமயச் சார்புடையனவே யாயினும் ஒரு சில தல புராணங்கள் தவிர பிற அனைத்தும் கவிதைத் தன்மையை இழந்து வெறும் செய்யுள் என்ற நிலைமையை எய்தின் இந்தக் கட்டத்துள் சிறந்த கவிதை என்று சொல்லத் தகுந்த சிறப்புடன் கூடிய பாடல்களை இயற்றிய பெருமை இருவருக்கே உரியது. அவர்கள் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும் வடலூர் இராமலிங்க வள்ளலாரும் ஆவர்.
இவ்விருவர் இடையேயும் மலை அத்தனை வேறுபாட்டைக் காண முடியும். மகாவித்துவான் பிள்ளையவர்களுடைய பாடல்கள் நாளிகேர பாகம் (தேங்காய்) என்று சொல்லத் தகுந்த முறையில் கடுமையான சொல்லாட்சியைப் பெற்று நின்றன. இதனெதிராக வள்ளலாருடைய பாடல்கள் திராட்சா பாகம் என்று சொல்லக்கூடிய முறையில் மிக எளிய தொடர்களைக் கொண்டு சுற்றாரும் கல்லாதவரும், வல்லாரும் மாட்டாதவரும் படித்துப் பயன் அடையக் கூடிய முறையில் அமைந்தன.
வள்ளலாருடைய பாடல்களில் உள்ள எளிமைச் சிறப்பு ஒருபுறமிருக்க, அதுவரையில் நாட்டில் இல்லாத ஒரு புதுமையைப் புகுத்திய சிறப்பும் அவரைச் சார்ந்ததாகும். சமரசம் என்ற சொல்லை அவருக்கு முன்னர் தாயுமானவப் பெருந்தகை கையாண்டிருந்தாலும், அவருடைய பாடல்கள் கடினமாக இருக்கின்ற காரணத்தால், அதிகம் நாட்டில் செலாவணி யாகவில்லை. அந்தச் சமரசத்தையடுத்து அனைவரும் அறிந்து பயனடையக்கூடிய முறையில் மிக எளிய பாடல்களில் புகுத்தி மக்கட்கு வழங்கிய பெருமை வள்ளலாருக்கே உரியதாகும். ஒரு வகையில் பார்த்தால், கவிதை உலகிலும், சமய உலகிலும், பண்பாட்டு உலகிலும் 19-ம் நூற்றாண்டில் மாபெரும். புரட்சி செய்து தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிப் பக்தி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்த பெருமை இராமலிங்க வள்ளலாருக்கே உரியதாகும்.
19- ஆம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றி 20 – ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வாழ்ந்த மாபெரும் கவிஞர்களைத் தமிழர்கள் என்றும் மறத்தற்பாலர் அல்லர். துரதிருஷ்டவசமாக இம் மூவருமே இன்று இல்லை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவிச்சக்கரவர்த்தி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற மூவருமே 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்கள் ஆவர்.
20-ஆம் நூற்றாண்டின் கவிஞர்கள் என்ற காரணத்தாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று பாரதியும் பாரதிதாசனும் பெயர் சூட்டப் பெற்ற காரணத்தாலும் புதிய புதிய கவிதைகளையும் பாடல் முறைகளையும் கையாண்ட காரணத்தாலும், இவர்கள் மூவருள்ளும் ஒரு சிறந்த ஒற்றுமை உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று கூறப்பெற்ற காரணத்தால், இவர்கள் மூவரும் பழமையோடு தொடர்புடையவர்கள் இல்லையோ, இவர்கள் பழைய இலக்கியங்களையே யில்லாமல் பாடினார்களோ என்று ஐயுற வேண்டியதில்லை.
இம் மூன்று பெருமக்களும் தமிழ் இலக்கியச் சுனையில் ஆழக் குளித்து முத்துக்கள் எடுத்ததுடன் அச்சுனையிலேயே ஆடி வளரும் பேறு பெற்றவர்கள். சிறந்த இலக்கிய இலக்கணப் பயிற்சியும் உடையவர்கள். எத்துணை இலக்கண அறிவு பெற்றவர்களும் இவர்கள் பாடல்களில் குறை காண முடியாது. குறிப்பாக பாரதிதாசனும், பாரதியும் புதியன புனைந்தார்கள் எனில், பழமையை நன்கு அறிந்து, வேண்டும் திருத்தம் செய்து, புதியன புனைந்தார்களே தவிர பழமையை அடியோடு வெருட்டிப் புதியன. புனையவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
கவிச் சக்கரவர்த்தி பாரதி 1882-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் நாள் எட்டையாபுரத்தில் திரு. சின்னசாமி ஐயர் அவர்கட்கும் இலட்சுமி அம்மைக்கும் மகனாகத் தோன்றியவர். 11-ஆவது வயதிலேயே எட்டையாபுரம் சமஸ்தானப் புலவர்களால் சோதனை செய்யப் பெற்றுப் ‘பாரதி’ என்ற பட்டம் அளிக்கப் பெற்றவர். திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று, அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேச பரீட்சையில் தேர்வு பெற்று காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம், இந்தி ஆகிய இரண்டும் பயின்றார். 1921- ஆம் வருடம் செப்டம்பர் 11 – ஆம் தேதியன்று 39 வயது நிரம்பும் முன்னரே இறைவன் திருவடி எய்தினார்.
இந்த 39 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான பாடல்களும், ஞான ரதம், நவ தந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை. சின்னச் சங்கரன் கதை, வேடிக்கைக் கதைகள் ஆகிய கதைகளும், கலைகள், மாதர், சமூகம் என்பவை பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளும் எழுதிச் சென்றுள்ளார். முறையாகப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாது போனதே அவருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்று நினைக்க வேண்டியுள்ளது. பிறப்பிலேயே கவிஞனாகப் பிறந்த ஒருவனுடைய ஆற்றலை சாதாரண மக்களுக்குரிய நடைமுறைகளைக் கொண்டுள்ள பள்ளிக் கல்வி, வளர்ப்பதற்குப் பதிலாக அமுக்கவே பயன்படுகிறது என்று இன்றைய மனோதத்துவ வாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாரதியின் பள்ளிப் படிப்புத் தடைப்பட்டது ஒரு பெரிய நன்மைக்கே ஆகும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
சிறந்த கலைஞனாகப் பாரதி தோன்றிய நிலையில் பொதுவாக இந்தியாவின் நிலையையும் சிறப்பாக தமிழ்நாட்டின் நிலையையும் சற்றுக் கூர்ந்து காண்டல் வேண்டும். இந்திய நாட்டின் அரசியல் நிலைமையும், தமிழ்ச் சமுதாய வாழ்க்கை நிலைமையும், தமிழ் இலக்கிய உலகின் நிலைமையும் அவ்வளவு விரும்பத் தகுந்ததாக இல்லை என்று அறிய முடியும். அதுவரை அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் உரிமை வேட்கை ஏற்பட்டு திலகர், லஜபதி போன்ற பெரியோர்களின் தூண்டுதலால் நாடு முழுவதும் தோன்றிய கொந்தளிப்பு மகாத்மா என்ற உதய சூரியனால் திசைதிருப்பப் பெற்றிருந்த காலமாகும் அது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற பெரும் புரட்சியாளர்கள் மக்களைத் தட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக இறங்கித் தம்மைத் தாமே தியாகம் செய்கின்ற சூழ்நிலையில் இருந்து வந்தனர். அரசியல் நிலைமையில் ஏற்பட்ட இந்தக் கொந்தளிப்பும் புரட்சியும் சமுதாயத்தையும் பற்றாமல் இல்லை. அரசியலில் விடுதலை வேண்டுமானால், அந்த விடுதலையைப் பெற்று அனுபவிக்கக்கூடிய ஆற்றல் சமுதாயத்திற்கு வேண்டுமென்றும், சமுதாயத்தில் வாழும் மக்கள் சாதி, சமயப் போராட்டங்களில் கருத்தைச் செலுத்தி ஒருவரையொருவர் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வாழ்வார்களேயானால், அத்தகைய மக்கள் உரிமைக் குரல் எழுப்பத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் மகாத்மா போன்ற அரசியல் புரட்சி வீரர்களால் விரிவாகப் பேசப் பெற்றது.
எனவே, பன்னெடுங் காலமாக இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஊறியிருந்த மூடப்பழக்க வழக்கங்களைத் தகர்த்து எறியும் முறையில் சமுதாயப் புரட்சிக்கும் விதை விதைக்கப்பட்டது. கவிஞன் தான் தோன்றிய காலத்தை வென்று நின்று பாடக் கூடியவன் என்றாலும், அவன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அந்தக் காலத்தின் சாயை அவனுடைய இலக்கியத்தில் காணப்படாமல் போகாது. தன்னுடைய கால நிலையை உணர்ந்து இலக்கியம் படைக்காமல் அறவே விட்டு விடுகின்ற கவிஞன் மக்கள் தொடர்பு இல்லாதவனாகி விடுவான். மக்கள் தொடர்பு இல்லாத கவிஞன் சிறந்த கவிதைகள் இயற்றினாலும் அக்கவிதைகள் மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப் பெறுவதில்லை. எனவே, அரசியல் வானிலும் சமுதாய உலகிலும் பெரும் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கவிஞன் ஒருவன் தோன்றுவானேயானால், அவனுடைய கவிதை இந்த அரசியல், சமுதாயப் புரட்சிகட்கு இடந் தாராமல் இருக்க முடியாது. இந்த அடிப்படையை நன்கு உணர்ந்து கொண்டால் பாரதி, பாரதிதாசன் என்ற இருவரும் இத்தகைய கவிதைகள் இயற்றுவதற்குரிய நிலைக்களத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
இவ்விருவரில் பாரதி அரசியல் விடுதலை வேட்கை அதிகம் பெற்றவராக அதற்குரிய பாடல்களை மிகுதியும் பாடியுள்ளார். அவரின் இளையவராய் அவருடைய அன்பார்ந்த தோழராய் அமைந்த புரட்சிக் கவிஞர் சமுதாய விடுதலையில் நாட்டம் அதிகம் செலுத்தினார். எனவே, அவருடைய பாடல்களில் சமுதாயப் புரட்சி மிகுதியாக இடம் பெற்றது. பாரதியைப் பொறுத்தமட்டில் இளமையில் பெற்ற துன்பங்களும், மறுவேளைச் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கிய கலக்கமும், அலாகாபாத், காசி போன்ற இடங்களில் சென்று வடமொழி, இந்தி ஆகிய மொழிகளைக் கற்ற அறிவும், வடமொழி இலக்கிய ஊற்றில் திளைத்த அனுபவமும் அவருடைய தெய்வபக்தியை வளர்ப்பதற்குக் காரணமாய் அமைந்தன.
ஒருவேளை இந்த வடநாட்டு யாத்திரையும் வடமொழிப் பயிற்சியும் இல்லாமல் இருந்திருப்பின் இவ்வளவு தூரம் பக்திப் பாடல்களை, தெய்வப் பாடல்களை அவர் பாடாமலும் இருந்திருக்கலாம். இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்துபட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.
பல்வேறு வகையான சாதிகள், சமயங்கள், கடவுள் வழிபாடு, மாறுபட்ட உணவு முறை. சமுதாயப் பழக்கவழக்கங்கள் ஆகிய இவையனைத்தும் நிரம்பி இருந்தும், மனித உணர்வில், பண்பாட்டில், குறிக்கோளில் ஓர் ஒற்றுமை நிலவுவதை இந்தியா முழுவதும் சுற்றி வந்த பாரதி. இளமையிலேயே கண்டு கொண்டார். அத்துடன் அவருடைய ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி இந்திய மண்ணில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பினும் அவர்களுள் ஓர் ஒற்றுமை என்னும் இழை அந்தரங்கத்தில் செல்வதை அறிந்து கொள்ள உதவியது. தம்முடைய மொழியின் பெருமையையும் தாய்நாட்டின் பெருமையும் அறிகிற அதே நேரத்தில், பிற மொழிகளின் சிறப்பையும் அவற்றிலும் அவற்றின் பண்பாட்டை வளர்க்கும் ஆற்றல் உண்டு என்பதையும் அவர் அறிய முடிந்தது.
“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”, “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே” என்றும் பாடிய கலைஞர், இந்தக் குறுகிய நோக்கத்தோடு நின்றுவிடாமல், பாரத சமுதாயம் முழுவதையும் தம்முடையதாக நினைந்து. அதற்கு மேலும் ஒருபடி சென்று அகில உலகத்தையும் சகோதர பாவத்துடன் நோக்கும் பேராற்றலைப் பெற்றிருந்தார்.
தாய்மொழி மாட்டும் தாய்நாட்டின் மாட்டும் இத்துணை ஆழ்ந்த பக்தி கொண்ட ஒருவர், இவற்றைக் கடந்து அகில உலக சகோதரத்துவத்தைக் காண நேரிட்டதற்குக் காரணம் இந்த நாட்டின் பழைய இலக்கியத்தைப் பயின்றிருந்தமையும் பிற மொழிகளை நன்கு பயின்றமையும் ஆழ்ந்த தெய்வ பக்தி உடைமையுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.
வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் ‘ப்ரிலூட்’ (Prelude) கவிதையில் தம் சுய சரிதையைப் பேசுவது போல், பாரதியும் சுயசரிதை பாடியிருக்கின்றார். அதனைப் படிக்கும் பொழுது, ‘தேச பக்திப் பாடல்களும் புதிய ஆத்திசூடியும் எழுதிய அதே கவிஞரா – இவர்?’ என்ற ஐயம் தோன்றத்தான் செய்கிறது. மிக இளமையிலேயே வறுமையோடு போராடிய கவிஞருக்கு நாடு முழுவதும் அல்லலுறும் அவல நிலைமையைக் கண்டு நாளாவட்டத்தில் தம்முடைய சொந்த வறுமையை மறந்துவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இளமையில் அவரைத் தாக்கிய வறுமையின்பால் சினமுற்று, அந்த வறுமைக்குக் காரணமானவர்களைச் சாட வேண்டுமென்ற நினைவு இருத்தல் கூடும். ஆனால், அதனை அடுத்துத் தோன்றிய நாட்டின் அவல நிலையைக் கண்ட பொழுது தன் வறுமையின்மாட்டுத் தோன்றிய சினம் நாட்டின் அவல நிலையை உண்டாக்கியவர்கள் மேலும் பாயத் தொடங்கியிருக்கிறது. நிகழ்கின்ற இந்துஸ்தானமும் வருகின்ற இந்துஸ்தானமும்’, ‘சுதந்திரப் பெருமை’, ‘சுதந்திரப் பயிர்’, ‘சுதந்திர தாகம்’ என்ற பாடல்களையும் ‘சத்திரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது’ என்ற பாடலையும் பார்க்கும்பொழுது பழைய பாரதியின் சின உண்மை தெரிகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட பகுதியில் வரும் இவ்வடிகள் காண்க :
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
வீரிய மழிந்து மேன்மையு மொழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
பெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து கொல் வாழ்வீர்?
மொக்குள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்,
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் றிரலது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?
பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.
தம்முடைய கட்சியில் மாறுபட்ட கருத்துடையவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற பாரதியை ’கோகலே சாமியார்’ என்ற பகுதியில் காண்கிறோம். தீவிர வாதத்தில் இத்துணைப் பற்றுக் கொண்டிருந்தால்தான் இம்மாதிரிப் பாட வரும். இத்தகை ஒருவருக்கு ’கோகலே’ போன்ற மிதவாதிகளிடம் வெறுப்புத் தோன்றியதில் புதுமை இல்லை.
களக்கமறும் மார்லி நடம் கண்டு கொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு கனிதான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினு மென்றன் கரத்தில் கப் படுமோ?
வளர்த்த பழம் கர்சானென்ற குரங்கு கவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சி செயும், அணில் கடித்து விடுமோ?
துளக்க மறயான் பெற்றிங் குண்ணுவனோ, அல்லால்
தொண்டை விக்குமோ, ஏதும், சொல்லரிய தாமோ?
“ஆங்கிலேயன் ஒரு தேச பக்தனுக்குக் கூறுவது” என்ற பாடலும், “தேச பக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி” என்ற பாடலும் “நடிப்புச் சுதேசிகள்” என்ற பாடலும் இளங் கவிஞராகிய பாரதியின் மனம் எந்தத் திசையில் சென்றது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. வெறுப்பு. சினம், மாற்சரியம், தன்னால் ஒன்றும் செய்ய முடியாமையினால் ஏற்படுகின்ற கழிவிரக்கம் ஆகிய உணர்ச்சிகளே கவிஞன் மனத்தை ஆட்கொண்டிருந்தன என்று அறிய முடிகிறது.
இத்தகைய நிலையிலிருந்து கவிஞர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் பண்பட்டு, உள்ளத்தில் வெறுப்பு, சினம் என்பவற்றிற்குப் பதிலாக, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிரம்பப் பெறுகிறார். அத்தகைய மனோ நிலையில் தான் ‘செந்தமிழ் நாடு என்னும் போதினிலே’ என்ற பாடலும் “மாஜினியின் பிரதிக்ஞை”, “பெல்ஜிய நாட்டு வாழ்த்து”, ‘புதிய ருஷ்யா’ என்ற பாடல்களும் முகிழ்க்கின்றன. மேலும், இந்த நாடுகள் பெற்ற வெற்றியைக் காணும் பொழுது தம்முடைய நாட்டிற்கும் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி என்ற எண்ணம் கவிஞர் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். இந்த அமைதி தோன்றியவுடனேயே விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கிடைக்க வழியில்லாமல் அதனைத் தடை செய்வது எது என்ற வினாவும் அடுத்துத் தோன்றியிருக்கும். இந்த இரண்டாவது வினாவிற்கு விடை காண முற்பட்ட கவிஞர் தமிழர் வரலாற்றையும், தமிழ் மக்கள் பண்பாட்டையும் நன்கு சிந்தித்துப் பார்த்து, வெற்றி கிடைக்காமைக்குரிய காரணம் நம்மிடமே இருக்கிறது என்ற பேருண்மையை, அறியத் தொடங்குகிறார். ‘எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்’ என்ற குறளை நன்கு அறிந்த பாரதி நம்மிடையே உள்ள குறைகளை நினைந்து வருந்துவதுடன் எள்ளி நகையாடு முகமாகக் கிளிக் கண்ணியில் கீழ்வருமாறு பாடுகிறார்:
நெஞ்சி லுரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடீ. கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்ற லன்றி நாட்டத்திற் கொள்ளாரம் - கிளியே நாளில் மறப்பாரடீ. ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர்கணமும் - கிளியே வாழத் தகுதியுண்டோ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தன்னில் - கிளியே இருக்க நிலைமையுண்டோ? பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை - கிளியே பாமர ரேதறிவார்? பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போலத் துஞ் சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே சோம்பிக் கிடப்பாராடீ
பாரத சமுதாயம் முழுவதிலுமுள்ள குறைகளைப் பேசுவது கிளிக் கண்ணிப் பாடல்கள். ’தமிழ்ச் சாதி’ என்ற பாடலில் அவரால் போற்றி வணங்கப்படும் தமிழும் தமிழரும் இருந்த உச்ச நிலை அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதை நினைத்து மனம் மறுகுகிறார்.
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைந்தா யெனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாந் தகத்தக்க மாறித்
தன்மையுந் தனது தருமமு மாயா
தென்றுமோர் நிலையா யிருந்து நின் னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்
வள்ளுறு தருமமு முண்மையு மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களிற் சேர்ப்பையோ?
'அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை யெவ்வகை
விதித்தா' யென்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
“சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவு மழகுங் கருதியும் 'எல்லை யொன் றின்மை' யெனும் பொரு ளதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலு முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச் சாதியை யமரத் தன்மை வாய்ந்தது "வென் றுறுதி கொண்டிருந்தேன் ஒரு பதி னாயிரஞ் சனிவாய்ப் பட்டுந் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக் கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்.
“தமிழச் சாதி” மாட்டு இத்துணை உயர்ந்த எண்ணம் கொள்வதற்குக் காரணத்தையும் ‘சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்’ என்பது முதலான அடிகளில் அவரே குறிக்கிறார். அப்படிப் பட்ட தமிழ் இனம் இன்று தரையோடு தரையாகக் கிடக்கின்ற சூழ்நிலையை நினைத்து வருந்துகிறார். குறிப்பாக இந்த ஒரு பாடலில் சினம் முதலியவற்றைக் கடந்து நிற்கின்ற கவிஞன் மனம் பச்சாத்தாபம் என்ற உணர்ச்சியால் உந்தப்பெற்று அந்த உணர்ச்சியின் சிகரத்தில் நின்று பாடுவதைக் காணமுடிகிறது.
இங்ஙனம் தமிழச் சாதியினிடத்தும் இந்தியர்களாகிய மக்களிடத்தும் உள்ள குறைகளை உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காண முடிந்த பிறகு அவருடைய மனத்தில் வெள்ளையர்மாட்டுக் கொண்டிருந்த வெறுப்புக் குறையத் தொடங்கியதை அறிகின்றோம். நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் நம்முடைய அறியாமை, கல்வியின்மை, மூட நம்பிக்கைகள், பைத்தியக்காரப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கை-யின்மை, உறுதியின்மை ஆகியவையே என்பதை நன்கு உணர்ந்த பின்னர்க் கவிஞருடைய மன வளர்ச்சியில் புதியதொரு திருப்பத்தைக் காண்கின்றோம். அடிப்படையாக இந்தக் குறைகளைப் போக்கினாலொழியச் சுதந்திரம் வாராது என்பதை ஏறத்தாழ இதே காலத்தில் மகாத்மா காந்தியும் உணர்த்தத் தொடங்கினார்.
இந்த உண்மையை நன்கு அறிந்து கொண்ட பின்னர் கவிஞருடைய மனம் இவற்றைப் போக்குகின்ற முறையில் கவிதைகள் புனையத் தொடங்கியது. நாட்டுப் பாடல் பாடிக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் நாட்டின் அவல நிலையைப் போக்குவதற்கு நம்மை நாமே நம்பிக் கொண்டு இருக்கவேண்டுமென்ற எண்ணம் உறுதிப் பட்டு, அதற்கு உறுதுணையாகக் கடவுளுடைய அருளும் வேண்டுமென்று நினைக்கின்ற புதிய மனப் பான்மை தோன்றத் தொடங்கியதையும் ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ என்ற பாடல் மூலம் அறிகின்றோம். உள்ளத்தை உருக்கும் இப்பாடலில்,
பஞ்சமு நோயுநின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள் செய்யுங் கடமையில் லாயோ?
ஆரிய நீயுநின் அறமறந் தாயோ?
வெஞ்செய லரக்கரை வீட்டிடு வோனே!
வீர சிகாமணி! ஆரியர் கோனே
என்ற பகுதி கவிஞன் பெற்ற புதிய மன நிலையை நமக்குக் காட்டுகிறது.
1910 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதியின் ஏற்பாட்டின்படி அரவிந்தர் புதுவை வருவதும், அவரோடு கவிஞர் நெருங்கிப் பழகுவதும் கவிஞருடைய வளர்ச்சியில் மூன்றாவது திருப்பமாகும். 1908- இல் இருந்து 1910 வரை உள்ள இரண்டு ஆண்டுகளில் “சுதேச கீதங்கள்”, “ஜென்ம பூமி” என்ற இரண்டு தொகுப்புகளில் கவிஞனின் நாட்டுப் பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விடுகின்றன.
கீதை மொழிபெயர்ப்பும், ’கண்ணன் பாட்டு’. ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ ஆகிய அனைத்தும் 1912 என்ற ஒரே ஆண்டில் வெளிவந்தன என்றால் 1910 ஆம் ஆண்டு பாரதிக்கும் 1912 ஆம் ஆண்டு பாரதிக்கும் இடையேயுள்ள கடலனைய வேற்றுமையைக் காண முடிகிறது. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் 1910ல் ஏற்பட்ட அரவிந்தரின் சேர்க்கையே ஆகும் என்று நினைப்பதில் தவறில்லை. கீதை, உடநிடதங்கள், வேதங்கள் என்பவற்றில் அரவிந்தர் வந்த பிறகு மூழ்கியிருந்ததாகவும் அறிகிறோம். பக்திப் பாடல்கள் என்று சொல்லப் பெறுகின்ற “விநாயர் நான்மணி மாலை” , ’தோத்திரப் பாடல்கள்’, ‘வேதாந்தப் பாடல்கள்’ என்பவையும் ‘குயில் பாட்டு’, ‘கண்ணன் பாட்டு’, ’பாஞ்சாலி சபதம்’ ஆகியவையும் 1912க்குப் பின் தோன்றின வென்றால், தேசபக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பாடல்கள் பாடி, தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பி நிமிர்ந்து நிற்குமாறு உபதேசம் செய்த பாரதியாரை – புற நோக்கிலேயே வாழ்நாளைக் கழித்த பாரதியாரை – திசை திருப்பி அக நோக்கில் செலுத்திய பெருமை மகான் அரவிந்தரைச் சாரும் என்று தெரிகின்றது.
இந்தத் தொடர்புமட்டும் அல்லாமல் சித்தர்கள் பலருடைய தொடர்பும் பாண்டியில் கவிஞருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டியுள்ளது. நாட்டு விடுதலைக்காக உயிரையே கொடுக்கவேண்டு மென்று பாடிய பழைய பாரதி, புதிய ஆத்திசூடியில் ‘ஆண்மை தவறேல்’ என்றும், ‘கொடுமையை எதிர்த்து நில்’ என்றும், ‘நையப்புடை’ என்றும், ‘வெடிப்புறப் பேசு’ என்றும் பாடிய பாரதி திடீரென்று ‘மரணத்தை வெல்லும் வழி’யையும், பொறுமையின் பெருமையும், சினத்தின் கேட்டையும் மிக விரிவாக ‘பாரதி அறுபத்தாறு’ என்ற பகுதியில் பேசத் தொடங்கிவிடுகிறார்.
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவு மங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரண மில்லை.
துச்சமெளப் பிறர் பொருளைக் கருத லாலே,
சூழ்ந்த தெலாங் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமா ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.
என்றும்,
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள் கொண்டு கிழித்திடுவார் மாளுவாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சிளம்பிறர்மேற் றாங்கொண்டு கவலை யாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தி லெதற்குமினிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பது நஞ் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர் நீர் கேளீரோ , படைத்தோன் காப்பான்
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தா லெமக்கென் னென்றே.
என்றும்,
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்
திருத்தணிகை யென்பதிங்குப் பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண் டீர், பகுதி 'தணி'யெ னுஞ் சொல்,
பொருத்தமுறுந் தணிகையினாற் புலமை சேரும்
பொறுத்தவரே பூமியினை ஆள்வா ரென்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்.
என்றும் பாடுகின்ற பாரதியாரின் ஆளுமையில் ஒரு. புதிய திருப்பதைக் காணுகின்றோம்.
தேச பக்திப் பாடல்களில் காட்சி தரும் பாரதியும், பாரதி அறுபத்தாறில் காட்சி தரும் பாரதியும் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றார்கள் என்பதைக் காணும் போது. இது கவிஞன் உள்ளத்தில் காணப் பெறும் முரண்பாடு [Inconsistency] என்று பலர் பேசக் கேட்கிறோம். கவிஞனுடைய உள்ள வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்ளாமையால் இப்பிழைபாட்டைச் செய்கின்றோம். இந்த வளர்ச்சி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால் பாரதியின் கவிதைகள் காலத்தை வென்று நின்று நிலவுமா என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும். பாரதியின் நாட்டுப் பாடல்களின் கவிதைச் சிறப்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், இன்னும் நூறாண்டுகள் கழித்து இப்பாடல்கள் இலக்கியம் என்ற பெயருடன் நிற்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வளர்ச்சி ஏற்படுவதற்குரிய காரணத்தையும் முன்னர்ச் சுருக்கிக் கூறினோம்.
மகான் அரவிந்தர் வங்காளத்திலிருந்து வந்தவர் என்பதும், வங்காளம் சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது என்பதும், அரவிந்தர், தமிழ்நாட்டில் அதிகம் நிலை கொள்ளாத அந்தச் சக்தி வழிபாட்டு முறையைப் பாரதிக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டுமென்பதும் நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஒரு தொடர்பே பாரதியின் மனம் மாறப் போதுமானது ஆகும் என்றாலும், கவிஞனின் நல்ல காலம் சித்தர்கள் பலரைச் சந்திப்பதோடு அல்லாமல் அவர்களுடைய உண்மை வடிவை அறிந்து கொள்ளவும் அவர்களோடு பழகவும் அவர்களுடைய உபதேசத்தைப் பெறவும் வாய்ப்புக் கூட இருந்திருக்கிறது. குறிப்பாக குள்ளச்சாமி என்ற அழுக்கு மூட்டைச் சாமியின் நட்பு, பாரதியின் மாற்றத்திற்குப் பெருங் காரணமாய் அமைந்திருந்தது என்று அறியமுடிகிறது.
குள்ளச்சாமியின் புகழ், யாழ்பாணத்துச்சாமி, குவளைக்கண்ணன், மாங்கொட்டைச் சாமி என்ற பெரியார்களுடைய புகழைப் பாடிக்கொண்டே வருகின்ற பாரதியார் திடீரென்று “பெண் விடுதலை”, “தாய் மாண்பு”, “காதலின் புகழ்”, “விடுதலைக் காதல்” என்பவற்றை இடையே பாடி அவற்றை முடிக்காமல், அடுத்துச் ’சர்வ மத சமரசம்’ என்ற தலைப்பில் கோவிந்தசாமியோடு நிகழ்ந்த உரையாடல்களையும் அவர் தமக்குச் செய்த மெய்ஞான உபதேசம் ஆகியவற்றையும் ஒரே பாடலில் பாடியுள்ளார்.
இப்பகுதிக்கு ‘பாரதி அறுபத்தாறு’ என்ற தலைப்பைப் பிற்காலத்தில்தான் தந்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரே பகுதியில் கடவுள் வாழ்த்து, சித்தர் வாழ்வு, பெண்கள் விடுதலை, ஞான உபதேசம் என்பவை இடம் பெறுமேயானால், இதைவிட அக் கவிஞனுடைய மன வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி வேறு இருத்தல் இயலாது. முன்னர்க் கூறியபடி அரவிந்தருடைய உபதேசமும், சித்தருடைய உபதேசமும் ஒன்றாகக் கலந்து பாரதியை உருவாக்கி யிருக்கின்றன என்பதற்கு இப்பகுதியே எடுத்துக் காட்டாகும்.
சமுதாயத்தில் காணப்பெறும் மூட நம்பிக்கைகள் சாதி வெறி என்பவற்றைத் தேச பக்திப் பாடல் பகுதியைவிட வேதாந்தப் பாடல்களைப் பாடும் பொழுதும் இவர் சாடினார். ‘இஃது எம்முடைய மூதாதையர் காலத்திலிருந்தே வருகின்ற சிறந்த பழக்கம்’ என்ற பெயரில் நடமாடும் நம்பிக்கைகளைத் தகர்க்க நினைத்த கவிஞர், யார் மூதாதையர் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு நகைச்சுவை ததும்ப இதோ பேசுகிறார்:
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர் - (நாற்பதிற் றாண்டின்
முன்னிருந் தவரோ, முந்நூற் றாண்டிற்
கப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம்
ஆண்டின் முன் னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ?
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் றானோ? தனிமுதற் கடவுள்
என்று நம் முன்னோ ரேத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமது மூதாதைய ரென்பதிர் கெவர்கொல்?) –
நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமு நடையுங் கிரியையுங் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய வவ்வப் படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு.......
இதே கருத்தைக் ’கண்ணன் என் தாய்’ என்ற பாடலிலும்,
சாத்திரங் கோடி வைத்தாள்; - அவை
தம்மினு முயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும் -- மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும் – இள
மூடர்தம் கவலையு மவள் புனைந்தாள்
என்ற முறையிற் பாடிச் செல்கிறார். பழமை என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் பைத்தியக்கார நம்பிக்கைகளை ’மூட பக்தி’, ‘ஜாதிக்குழப்பம்’, ‘ஜாதி பேத விநோதங்கள்’ என்ற தலைப்புகளில் கட்டுரைகளிலும் சாடுகின்றார். ஜாதிக் குழப்பம் என்ற கட்டுரையில் கடையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட வருணிக்கின்றார். பிராமணன் ஒருவன் தன் தொழிலை விட்டு யானைப் பாகனாக மாறிச் சங்கரநயினார் கோவில் யானையைப் பராமரிக்கும் தொழிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் யானையைப் பற்றிப் பேசும்போது இந்த யானை கீழ்ச்சாதி யானை; யானைகளில் பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திர யானைகள் என்று நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் இது ‘சூத்திர ஜாதி யானை’ என்று கூறினானாம். இதை எடுத்துக் கூறும் கவிஞர் மனிதர்கள் மனத்தில் ஆழப் பதிந்து விட்ட இந்த ஜாதிக் கொள்கை காரணமாக யானை. குதிரை, ஆகாயத்திலுள்ள கிரகங்கள், இரத்தினங்கள் என்பவற்றிற்கூட ஜாதி பிரிக்கும் அளவிற்குச் சென்று விட்டது என்று கூறி வருந்துகிறார்.
‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலில்,
பிறந்தது மறக்கு லத்தில்; - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்கு லத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் ;
துறந்த நடைகளுடையான்; - உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
நாலு குலங்க ளமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் முட மனிதர்;
சீல மறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினிற் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண் டென்பான்
என வரும் பகுதிகள் சமுதாயத்தின் இந்த அவகேட்டைக் கண்டு நொந்து பாடியனவாம்.
சமுதாயத்தில் காணப்பெறும் குறைபாடுகளைக் கண்டு உளம் நைந்துதான் இத்தகைய பாடல்களைக் கூறியுள்ளார் என்றாலும், இவற்றைப் படிக்கும் பொழுது வெறும் சமூக சீர்திருத்தவாதியின் கூற்றுக்களாக இவை காணப்படவில்லை. அதன் மறுதலை யாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்ந்து மக்கட்கு அதனை உபதேசிக்கத் துடிக்கும் ஒரு தத்துவ ஞானியின் குரலைத்தான் இப்பாடல்களிற் கேட்க முடிகிறது.
$$$