-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 22
எங்கெங்கு நோக்கினும் பற்றி எரியுது!
கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
முதல் நிகழ்ச்சியில், திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம். முதலில் திருவையாற்று நிகழ்ச்சி.
ஆன்மிகத் துறையில் மட்டுமல்லாது அரசியலிலும் திருவையாறு முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த 1942 ஆகஸ்ட் புரட்சி எனும் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளில் ஒன்று திருவையாற்றில் நடந்தது. திருவையாறு நிகழ்ச்சியில் அரசர் கல்லூரி மாணவர்களாயிருந்த சோமசேகர சர்மா, ராம சதாசிவம், ஏ.ஆர்.சண்முகம், கு.ராஜவேலு, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் போன்றவர்களும், பெரும்பாலும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியால் திருவையாறுக்கு அரசியல் வரைபடத்தில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கும்படி நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை சிறிது பார்க்கலாம்.
திருவையாறு புரட்சி
திருவையாறு நகரத்தில் போலீசுக்கு எதிராக கலகம், கல்லெறி வைபவம், போலீஸ் தடியடி, அதனைத் தொடர்ந்து மக்கள், திருவையாறு தபால் அலுவலகம், முன்சீப் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகுந்து அடித்து நொறுக்கி, தீ வைத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 44 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் எதிர்ப்பின் ஒரு பங்காக திருவையாறு நகரத்திலும் மக்கள் கொதிப்படைந்தனர். காந்திஜி கைதான 9-8-1942க்கு மறுநாள் 10-8-1942 அன்று திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவர்கள் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த அரசர் கல்லூரி என்பது மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்திரங்கள் நிர்வாகத்தால் நடத்தப்பட்டன. இந்த அரசர் கல்லூரி மாணவர்கள் தான் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தோடு தலைவர்கள் கைதை எதிர்த்து ஓர் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தனர். அதற்கு ஆந்திரா பகுதியிலிருந்து இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிப்பதற்காக வந்து விடுதியில் தங்கிக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சோமசேகர சர்மா என்பவர் ஏற்பாடுகளைச் செய்தார்.
அவரோடு கு.ராஜவேலு, பின்னாளில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்டவர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கீற்றுப் பந்தல் பிறகு தீப்பிடித்து எரிந்து போயிற்று. இந்த விபத்து பற்றி விசாரணை செய்ய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கல்லூரிக்கு வந்து விசாரணை செய்தார். இதில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினார். அவர்கள் கவிஞர் சுந்தரம், கோவிந்தராஜன் என்போர். கல்லூரிக்குள் நடந்த இந்த நிகழ்வு, வெளியேயும் பரவும் என்று போலீஸ் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.
12-8-1942 அன்று மாலை 5 மணிக்கு புஷ்யமண்டபத் துறையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவிக்கரை ஆசிரியர் சிதம்பரம் பிள்ளை என்பவரும் முன்னாள் ஆசிரியர் சங்கரய்யர் என்பவரும் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், தேசபக்தியைத் தூண்டியும் பேசினர்.
மறுநாள் காலை திருவையாறு கடைத்தெருவில் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் மகாத்மா மற்றும் இதர தலைவர்களின் கைதை எதிர்த்து கடைக்காரர்கள் கடையடைப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்போது சுமார் 200 அல்லது 300 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இருந்தார்கள். இந்தக் கூட்டம் அப்படியே கடைத்தெருவுக்குள் நுழைந்து வரத்தொடங்கியது. இந்தச் செய்தி போலீசுக்குப் போயிற்று. உடனே போலீஸ் தாங்கள் பாதுகாப்பளிப்பதாக உறுதி கூறினர்.
கூட்டத்தினரை போலீசார் கலைந்து போய்விடுமாறு கேட்டுக் கொண்டனர், அவர்கள் போகாததால் எச்சரித்தனர். பிறகு மக்கள் கூட்டம் மீது தடியடி நடத்திக் கலைந்து போகச் செய்தனர். ஆனால் கூட்டம் கலைந்து போகாமல் மேலும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை எடுத்து வீசினர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்தின் ஒரு பகுதியினர் அங்கிருந்து மெல்ல நகர்ந்து தபால் ஆபீசுக்குச் சென்று விட்டனர். அங்கு சென்று தபால் ஆபீசின் மீது கற்களை எறிந்து தந்தி ஒயர்களை அறுத்தெறிந்து அறிவிப்பு பலகையையும் உடைத்துத் தெருவில் விட்டெறிந்தனர்.
சுமார் 10 மணிக்கு மக்கள் கூட்டம் மிகப் பெரிதாக ஆனது. 300 அல்லது 400 பேருக்கு மேல் இருந்த கூட்டம் விரைந்து ஊரின் தென்பகுதியில் காவிரி நதியின் தென் கரையில் இருந்த முன்சீப் கோர்ட் வளாகத்தை நோக்கி நகர்ந்தது. கோர்ட் கட்டடத்தில் கூட்டம் கல்லெடுத்து வீசி, கூறையில் பதித்திருந்த கண்ணாடிகளையும், பெயர் பலகையையும் உடைத்தனர்; அங்கிருந்த மேஜை நாற்காலி ஆகியவற்றை உடைத்தனர். ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் மன்னரின் போட்டோ உடைத்தெறியப்பட்டது. பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டப் புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. இங்க் புட்டிகள் உடைத்தெறியப்பட்டன. டைப் அடிக்கும் மெஷின் உடைக்கப்பட்டு சாலையில் கொண்டு போய் போட்டு நசுக்கப்பட்டு, பின்னர் அருகிலிருந்த காவிரி ஆற்றில் வீசி எறியப்பட்டது. வாசலில் நெருப்பு அணைக்க மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த வாளிகள் நசுக்கி தூக்கி எறியப்பட்டன.
கோர்ட் அறை தவிர ஆபீசின் இதர பாகங்களில் இருந்த மேஜை நாற்காலிகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து ஆபீஸ் பணம் சூறையாடப்பட்டது. அலுவலக கேட் உடைக்கப்பட்டு நடு சாலையில் போடப்பட்டு போக்குவரத்தை நிறுத்தினர். இவை அனைத்தும் சுமார் 15 நிமிஷ நேரத்துக்குள் நடந்து முடிந்தன.
கூட்டம் உடனே அங்கிருந்து அடுத்த கட்டடத்தில் இருந்த சப் ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கும் கோர்ட்டில் நடந்தது போன்ற அழிவுகளும், உடைத்தலும் நடைபெற்றன. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து கோர்ட் மற்றும் சப் ரிஜிஸ்திரார் அலுவலகக் கட்டடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டு கூடியிருந்த கூட்டத்தைத் தடிகொண்டு தாக்கி விரட்டலாயினர்.
சம்பவம் நடந்த நாளன்று மாலையிலிருந்தே நூற்றுக் கணக்கானோரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கடைத்தெருவில் நிறுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தினர். நூற்றுக் கணக்கானோர் விசாரிக்கப்பட்டு, பிறகு இறுதியில் 44 பேர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.
அரசாங்கத் தரப்பில் மொத்தம் 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் முன்சீப், போஸ்ட் மாஸ்டர், சப் ரிஜிஸ்திரார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அடங்குவர். இந்த வழக்கு, சம்பவம் நடந்து 6 மாத காலத்துக்குப் பிறகு விசாரணைக்கு ஏற்கப்பட்டு 4-1/2 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் சுமார் 85 பேர் எதிரிகளின் தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சாட்சிகளில் பெரும்பாலோர் குற்றவாளிகளுக்கு அலிபி இல்லை – அதாவது குற்றம் நடந்த நேரத்தில் அவர்கள் அங்கு இல்லை- என்றே சொன்னார்கள். அவை எதுவுமே ஏற்கப்படவில்லை.
வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இந்திய பாதுகாப்புச் சட்டப்படி பதிவானது. வழக்கின் தீர்ப்பில் 4 பேர் விடுதலை யானார்கள். மீதமுள்ள 40 பேருக்குத் தண்டனை. மேற்படியான தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் ஜெயிலுக்கு அனுப்பி ‘C’ வகுப்பில் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
சீர்காழி சதி வழக்கு
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அடுத்ததாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுவது இந்த சீர்காழி சதி வழக்கு.
தொடக்கத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வந்தவர்களை, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளைக்காரனின் பேச்சு விழித்து எழச்செய்து விட்டது. ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடொன்றில் பேசுகையில் சென்னை கவர்னர் “இந்தியாவின் இதர பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், ரயில்வே பாலங்களிலும் வெடிகுண்டுகளை வைத்து நாசவேலைகள் நடைபெற்று வரும்போது, சென்னை மாகாணம் மட்டும் அப்படிப்பட்ட நாச வேலைகள் எதுவும் நடைபெறாமல் அமைதியாகவே இருக்கிறது என்பது சென்னை மாகாணத்துக்குப் பெருமை, ஆகவே இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி” என்று கூறினார்.
இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதைப் படித்த தேசபக்தர்களுக்கு, கவர்னரின் பேச்சு ஒரு சவாலாக இருந்தது போலும். நம் தேசபக்தியையும், வட இந்திய மக்களைப் போலவே நாமும் காண்பித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது போலும். சென்னை மாகாணம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தோன்றலாயின. அந்த வரிசையில் சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம்.
அந்த நாளில் மிகப் பிரபலமான பத்திரிகைகளாக விளங்கிய, ஆங்கில ஏடு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, தமிழ் நாளேடு ‘தினமணி’ இவற்றின் அதிபராக விளங்கியவர் திரு. ராம்நாத் கோயங்கா. அந்த பத்திரிகைகளில் தினமணியில் பணியாற்றியவரும் பின்னர் அதன் ஆசிரியராகவும் இருந்தவர் மேதை திரு. ஏ.என்.சிவராமன். இவர்களோடு தினமணி என்.ராமரத்தினம் ஆகியோர் ஒன்று கலந்து தமிழ்நாட்டில் முக்கிய பகுதியிலுள்ள ஏதாவதொரு பாலத்துக்கு வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் பல படித்த தேசபக்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் கொண்டனர். எத்தனை தலைவர்கள், அத்தனை பேரும் ‘அஹிம்சை சத்தியம்’ என்று தங்கள் போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்கள். அவர்களைப் பிடித்து எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாமல் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை செய்யும் இந்த வெள்ளை அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினர். இவர்களோடு பாமர மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தனர்.
அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்வதால், தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது? அதைப் பற்றிய சிந்தனையே அந்த இளைஞர்களுக்கு இல்லை. நம் நாடு, நம் மக்கள், நம் தலைவர்கள், நமக்கு சுதந்திரம், அடக்குமுறையைக் கையாளும் வெள்ளையனுக்கு சரியான பாடம் இதுதான் அவர்கள் மனதில் ஓடிய எண்ண அலைகள். அப்படிப்பட்ட தியாக மனம் படைத்த தஞ்சை மாவட்ட படித்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து செயல்படத் துடித்துக் கொண்டிருந்தனர்.
ராம்நாத் கோயங்காவுக்கு நாடு முழுவதிலும் நல்ல செல்வாக்கு உண்டு. கோயங்காவும் சிவராமனும் ஆந்திரா, ஒரிசா எல்லையிலுள்ள செல்லூர் எனும் இடத்துக்கு ரகசியமாகச் சென்று அங்கிருந்த மைக்கா சுரங்கத்தில் வெடி வைத்துத் தகர்க்கப் பயன்படுத்தும் டைனமைட் குச்சிகளை சுமார் 200 பவுண்டு வாங்கிக் கொண்டு வந்தனர். இந்த டைனமைட் குச்சிகளைப் பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வந்து, நம்பகமான தொண்டர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
ஏ.என்.சிவராமன் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு தகுதியான வீரர்களைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைக்கக் கிளம்பினார். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்த என்.ராமரத்தினம் கும்பகோணம் சென்றார். கும்பகோணம் காங்கிரசில் தலைவராக இருந்தவர் பந்துலு அய்யர். ஏ.என்.சிவராமன் பந்துலு அய்யரின் மூன்றாவது புதல்வரான டி.வி.கணேசன் (இவரும் தினமணியில் உதவி ஆசிரியர்) என்பாரை அழைத்துக் கொண்டு திருக்கருகாவூர் சென்றனர்.
இருவரும் அந்த கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசித்தனர். பிறகு இருவரும் அம்மாபேட்டைக்குச் சென்றனர். அங்கு சில காங்கிரஸ் நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஆலோசனை செய்தனர். அப்படிச் சந்தித்த அவ்வூர் காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் இரண்டு டைனமைட் குச்சிகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தனர்.
அவந்திபுரம் கிட்டு எனும் கிருஷ்ணமூர்த்தி, தினமணி என்.ராமரத்தினம், பந்துலு ஐயரின் மூன்றாவது மகனும் தினமணி உதவி ஆசிரியருமான கணேசன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை செய்தனர். இவர்கள் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு தன் செயல்பாட்டை இழந்து தவிக்கும்படியாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து, இறுதியாக மாயவரத்துக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் ரயில் மார்க்கத்தில் ஏதாவதொரு ஆற்றுப் பாலத்திற்கு வெடி வைத்துத் தகர்ப்பது என்று முடிவாகியது.
அது எந்த ஆறு, எந்தப் பாலம், யார் செய்வது – போன்றவற்றை அந்தந்த இடத்திற்குப் போய் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.
தெற்கேயிருந்து சென்னைக்குப் போகும் மெயின் லைன் இந்தப் பகுதி வழியாகப் போவதாலும், ஏதாவதொரு முக்கியமான ஆற்று ரயில் பாலம் தகர்க்கப்படுமானால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படும்.
மூவரும் சீர்காழிக்குச் சென்று அவ்வூரில் ரகுபதி ஐயரின் குமாரனும், துடிப்பும், தேசபக்தியும், வீரமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ்காரராக விளங்கிய சுப்பராயனைச் சந்தித்தனர். வந்த அன்பர்கள் சுப்பராயனிடம் தங்கள் திட்டத்தை விளக்கி அதைச் செயல்படுத்தும் விதம் குறித்து விவாதித்தனர். இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுப்பராயன், தனது உள்ளூர் நண்பர்களிடமும் இதுபற்றி பேசி, விவாதித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். தினமணி ராமரத்தினமும், கணேசனும் சென்னை திரும்பிவிட்டனர்.
சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரரும், பின்னாளில் திருச்சியில் சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நிறுவி பெரும் புகழோடு விளங்கியவருமான சுப்பராயன், தனது சீர்காழி நண்பர்களுடன் திட்டம் குறித்து விரிவாக விவாதித்து உப்பனாறு பாலத்தைத் தங்கள் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டனர்.
நாடு முழுவதும் பாலங்களைத் தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வந்ததால், ரயில் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு மைல் தூரத்திற்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த குழுவில் உறுதியும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கிய இருவர். இவர்கள் இருவரும் திட்டம் உருவானவுடனேயே அதைச் செயல்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாயினர். இவர்கள் கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் வரை தினமும் தொடர்ந்து செய்து ஒரு வழியாக வேலை முடிந்தது.
இதுவரை எந்தவித அபாயமான சூழ்நிலையும் தோன்றாதபடி வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டனர். சுவற்றில் போட்ட துளையில் டைனமைட்டைப் பொறுத்தி, அதில் திரியை இணைத்து, அது கீழே உள்ள நீரில் விழுந்து நனைந்து விடாமல் இருக்க திரியோடு ஒரு குடைக்கம்பியை இணைத்துக் கட்டி நீட்டிக் கொண்டிருக்கும்படி வைத்தனர். இப்போது திட்டப்படி எல்லா ஏற்பாடுகளும் தயார். திரியைப் பற்ற வைக்க வேண்டியதுதான், மெயின் லைனில் உள்ள அந்த பாலம் வெடித்துச் சிதற வேண்டியதுதான், வெள்ளை அரசாங்கம் ஆடிப்போகப் போகிறது. இளைஞர்கள் பாலத்தில் வெடிகுண்டுகளை வைத்து, திரிக்கு தீ வைக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டு, புதர்களுக்கிடையில் மறைந்து கொண்டனர்.
அந்த நேரம் பார்த்து ரயில் தண்டவாளங்களைப் பாதுகாக்கும் போலீஸ் பார்ட்டி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது பாலத்தடியில் வைக்கப்பட்டிருந்த குண்டும், அதன் திரி குடைக்கம்பியோடு நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை அங்கிருந்து அகற்றி விட்டு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். பாலத்துக்கு சேதம் இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை மிகப் பெரிய நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.
சுப்பராயன், தினமணி என்.ராமரத்தினம், டி.வி.கணேசன் ஆகியோரையும், கணேசனின் அண்ணன் வி.சேஷு ஐயர், கிருஷ்ணய்யர், ஜே.வெங்கடேஸ்வரன் முதலியவர்களையும் கைது செய்து வழக்கு தொடுத்தனர். சுப்பராயனுக்கு ஐந்து வருஷம் சிறை, வெங்கட்டராமனுக்கும், வெங்கடேசன், சுப்பிரமணியனுக்கு தலா மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்கள் பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
(கர்ஜனை தொடர்கிறது)
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2 (22)”