ஸ்வதந்திர கர்ஜனை- 2(23)

-தஞ்சை வெ.கோபாலன்

பகுதி: 2.22

மதுரை வைத்தியநாத ஐயர்

பாகம்-2 :பகுதி 23

மதுரை மாநகரத்தில் பெண்கள் இட்ட தீ!

காந்திஜி பம்பாய் ஆசாத் மைதானத்தில் எழுப்பிய “செய் அல்லது செத்து மடி” எனும் கோஷம் இந்தியாவின் நாலாபுறங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் போராட்டம்; இதுவரை காந்திய வழியில் நடந்த போர் இப்போது யாருடைய உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காமல் முக்கியமான தொலைதொடர்பு சாதனங்களை அழித்து,  ஆளும் ஆங்கிலேய வர்க்கத்துக்கு போர்க்காலத்தில் நெருக்கடி கொடுக்கும் போராக அமைந்திருந்தது.

காந்திஜி தன்னுடைய தீர்மானத்தில் இப்படித்தான் இந்தப் போராட்டம் இருக்கும் என்பதைச் சொல்லவில்லையாயினும், அவருடைய சீடரும் காந்தியவாதியுமான கிஷோரிலால் மஷ்ரூவாலா என்பவர் காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதிய வரிகள் இவ்வகை போராட்டத்தைக் கோடிட்டுக் காட்டுவதாக இருந்ததாக சிலர் கருதுகின்றனர். அதனால்தானோ என்னவோ இந்தியா மந்திரி அமெரி, ‘காந்தியே இப்படித் தான் இந்தப் போராட்டம் இருக்கும் 2 என்று கூறுகிறார்’ என்ற கருத்தை இங்கிலாந்தில் தெரிவித்திருக்கிறார்.

கிஷோரிலால் மஷ்ரூவாலா எழுதியது: “சதிச் செயல்களும்கூட சாத்வீகப் போராட்டத்தில் அடங்கும்; பாலங்களைத் தகர்ப்பது, தபால் தந்தித் தொடர்புகளைத் துண்டிப்பது போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத செயல்களும் சாத்வீகப் போராட்டத்திற்கு உட்பட்ட செயல்கள்தான்”.

(‘சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்’ நூலில் சிவலை இளமதி)

இந்தக் கருத்து இந்திய சுதந்திரப் போரின் தன்மை இதுகாறும் இருந்த அகிம்சை நிலைமையிலிருந்து சற்று மாறுபடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காந்திஜி சொன்ன கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதில் ஒருவர் காந்திஜியை, “இந்தத் தடவை நீங்கள் கைதாவீர்களா?” என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்: “இல்லை, இம்முறை நானாகக் கைதாகும் பிரச்னையே எழவில்லை. அப்படியே கைது செய்யப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற பழைய முறைகளைக் கையாளுவேனா இல்லையா என்பதையும் இப்போது கூற முடியாது”.

இந்தக் கருத்தோடு காந்திஜி முடித்துக் கொள்ளவில்லை, அவர் அடுத்ததாகச் சொன்ன கருத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர் சொன்னார்: “பிரிட்டிஷ் அரசாங்கம் முன்கூட்டியே என்னைக் கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதிப் போராட்டம் தொடங்கிவிடும். அந்தப் போராட்டம் தொடங்கியவுடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். இம்முறை அப்படிப்பட்ட பலாத்கார புரட்சி ஏற்பட்டால் நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன்”

(சிவலை இளமதி ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ எனும் நூல் பக்கம் 369-இல்).

‘காங்கிரஸ் சரித்திரம்’ எழுதிய காந்திஜிக்கு மிக நெருக்கமான பட்டாபி சீதாராமையா என்பார் ஒரு சுற்றறிக்கையை எல்லா மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கும் அனுப்பியிருந்தார். அது ‘ஆந்திரா சுற்றறிக்கை’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில் கண்ட விஷயங்களும் மேலே குறிப்பிட்ட மஷ்ரூவாலாவின் கருத்தையொட்டியே அமைந்திருந்ததாகத் தெரிகிறது.

இப்படி நாடே அமளிதுமளிபட்டுக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு என்ன தனித்தீவா? இங்கும்தான் அந்த அதிர்வலைகள் வீசத் தொடங்கியது.

கோவையில் நடந்தவை, தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், சீர்காழியிலும் நடந்தவற்றை முந்தைய பகுதியில் பார்த்தோமல்லவா? இப்போது மதுரையைச் சற்று பார்க்கலாம்.

மதுரையில் துப்பாக்கிச்சூடு

மதுரை – ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்திருந்த இடம். அங்கு இதன் தாக்கம் சற்று அதிகமாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. மதுரையில் பிரபலமான காங்கிரஸ்காரர் ஆர்.சிதம்பர பாரதி கைதானார்.

திலகர் சதுக்கம் எனுமிடம் மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் மதுரையின் மாபெரும் தலைவரும், ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்தியவருமான ஏ.வைத்தியநாதையர் வீரமுழக்கம் செய்து கொண்டிருந்தார்.

அவர் சொன்னார்:

“எந்தப் போராட்டமாயிருந்தாலும் முன்னணியில் நின்று போராடுகின்ற மதுரை, சுதந்திரத்தை அடைந்தே தீருவோம் என உறுதிகொண்டு போராடும் இந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராகவே இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயம் சுதந்திரத்தைப் பெறுவோம்; அல்லது நடக்கும் இந்த வேள்வியில் நம் நல்லுயிர்களை ஆஹூதியாக்கிக் கொள்வோம்”.

-இந்த வரிகளை அவர் குரலை உயர்த்தி உறுதியோடு சொன்னார்.

மக்கள் வெள்ளம் அவரது பேச்சை கரவொலி எழுப்பி அங்கீகரித்தது. அடுத்த நாள் மதுரை முடங்கியது; கடைகள் அடைக்கப்பட்டன; தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதற்கு முன்பு இல்லாத வகையில் இம்முறை போராட்டமும் கடையடைப்பும் பூரண வெற்றி. அன்று மதுரை நகரம் முழுவதுமே மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. என்ன நடக்கும், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.

அன்று மாலை திலகர் சதுக்கத்துக்குள் மக்களை காவல்துறை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். மக்கள் ஜான்சி பார்க் அருகில் குவிந்தனர். வந்தேமாதரம் செட்டியார் என்பவரும் சீனிவாசவரதன் எனும் காங்கிரஸ் தலைவரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். மூன்று லாரிகளில் போலீசார் வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ரிசர்வ் போலீசார் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்; சிலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இளைஞர்கள் கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் தூக்கி வந்து சாலையின் நடுவில் போட்டு போக்குவரத்தை முடக்கினர். மதுரை நகரம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. காங்கிரசார் அனைவரும் பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.

பெண்களின் கர்ஜனை

அந்த ஆண்டு அக்டோபர் 2-இல் காந்தி ஜெயந்தி கொண்டாட காங்கிரஸ் தலைவர்கள் யாருமே இல்லாததால், பெண்கள் மட்டும் கலந்துகொண்ட ஓர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பல பெண்கள் அமைதியாக ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலையும் ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலையும் பாடிக் கொண்டு காந்திஜியின் உருவப் படத்தை ஏந்திய வண்ணம் சென்று கொண்டிருந்தனர்.

தடை உத்தரவு அமலில் இருப்பதாகச் சொல்லி அந்தப் பெண்களை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் என்பார் கைது செய்தார். அவர்களில் சொர்ணம்மாள் என்பாரும், மதுரையில் வசித்து வந்த லட்சுமி பாய் எனும் மராத்தியப் பெண்ணையும் வேறு சிலரையும் கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள அழகர்கோயில் சாலையில் ஒரு அடர்ந்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள்.

அவர்களுடைய புடவைகளை போலீசார் கழற்றி விட்டு, ‘இதுதான் உங்களுக்குச் சுதந்திரப் பாதை’ என்று சொல்லி விரட்டிவிட்டனர். இரவு முழுக்க துணியில்லாமல் தவித்த அந்தப் பெண்களின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்து கிராமப் பெண்கள் ஓடிவந்து இவர்கள் மானத்தைக் காக்க புடவைகளைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தனர்.

மறுநாள் காலை அத்தனை பெண்களும் மதுரை நகருக்குள் வந்ததும், தங்களுக்கு நடந்த அவமானத்தைச் சொல்லி அரற்றினர். இதனைக் கேட்ட தேசபக்தர்களும், அவர்களில் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் கண்ணீர்விட்டுக் கதறினர். இந்தக் கொடுமையைச் செய்த அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயருக்குச் சரியான தண்டனை அளிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த விஸ்வநாதன் நாயருக்கு ‘தீச்சட்டி கோவிந்தன்’ எனும் பெயரை அவ்வூர் மக்கள் சூட்டியிருந்தனர். காரணம் அப்போதெல்லாம் அங்குள்ள சுடுகாடுகளில் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்குமாம். அந்த சூதாடிகளைப் பிடிப்பதற்காக போலீஸ் குழு ஒருவரை பாடையில் கிடத்தி, இவர் கையில் தீச்சட்டியை ஏந்தி அங்கு பிணம் எரிக்க வந்தவர்கள் போல நாடகமாடி அவர்களைப் பிடிப்பாராம். அந்த விஸ்வநாதன் நாயரின் நடவடிக்கைகளை சில இளைஞர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

ஒருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து நாயர் வெளியே வந்தார். வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகமாயிருந்தது. திடீரென்று விஸ்வநாதன் நாயரை சில இளைஞர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ‘விஸ்வநாதன் நாயரே, எங்கள் சகோதரிகளை அவமானப் படுத்திய உன்னை சும்மா விட மாட்டோம்” என்று சத்தமிட்டுக் கொண்டு அவர் மீது அக்னி திராவகத்தை ஊற்றினார்கள். அவர் முகம், தலை, காது இவை திராவகத்தால் வழிக்கப்பட்டு, கதறக் கதற அவரை விட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

இந்தச் செயலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. பின்னர் சிலரைப் பிடித்து அவர்கள் மீது வழக்கு போட்டு மதுரை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அந்த வீரர்களின் பெயர்கள் கே.பி.ராஜகோபால், டி.ராமகிருஷ்ணன் போன்ற சிலர். இவ்விரு வீரர்களுக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் கொடுமை என்னவென்றால், அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நாயர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் போலீஸ் பணியில் மாவட்ட சூப்பிரண்டண்டாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் அரசு காமராஜ் தலைமையில் இருந்தபோதும் அவர் பதவியில் இருந்திருக்கிறார். ஆனால் பழைய நிகழ்ச்சிக்காக அவர் பழிவாங்கப்படவில்லை என்பது அன்றைய தலைவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

மகாத்மா காந்திஜி உட்பட எந்த காங்கிரஸ் தலைவரும் வெளியில் இல்லாத நேரத்தில் நாட்டில் நடந்த வன்முறை வெறியாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக தந்திக் கம்பியை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்தல், அரசாங்க அலுவலகங்களை எரித்தல் போன்றவை எப்படி நடக்க முடியும்? இதன் பின்னணி என்ன எனும் ஐயப்பாடு எழத்தானே செய்யும்?

ஒரு இடத்தில் நடக்கும் செயல்களைப் பார்த்து மற்ற இடங்களிலும் செய்திருப்பார்கள் என்று கருதலாம் என்றால், ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாளில் அல்லவா நடந்தது. தொலைதொடர்பு இப்போது போல இல்லாத நேரம், மேலும் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிற நேரம். அப்படியிருந்தும் நாடு முழுவதும் ஒரேமாதிரியிலான போராட்டம் நடந்து கொண்டிருந்தது என்பது வியப்பானது தான். மக்கள் ஒரு இறுதிப் போருக்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் புரட்சி தீர்மானத்தின் சில பகுதிகளை இந்த கட்டத்தில் படித்துப் பார்ப்போம். அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமல்லவா? இதோ:

“… வருகின்ற போராட்டத்தில் அகிம்சைதான் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அவை மாகாண கமிட்டிகளை அடைவதும், மாகாண கமிட்டிகளின் மூலம் அந்த உத்தரவுகள் மக்களைச் சென்றடைவதும், காங்கிரஸ் கமிட்டிகள் முறையாகச் செயல்படுவதும் சாத்தியமில்லாமல் போகக்கூடிய காலம் ஒன்று உருவாகலாம்.”

“அப்படிப்பட்ட நிலைமை தோன்றுமானால், அப்போது இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகளின் அடிப்படையில் அவற்றின் வரம்புக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.”

“சுதந்திரத்தை விரும்பி அதைப் பெறுவதற்காகப் பாடுபடும் ஒவ்வொரு இந்தியரும் தமக்குத் தாமே வழிகாட்டியாக மாறி, ஓய்வு கொள்ள இடமே அற்ற கரடுமுரடான பாதையில் இறுதி லட்சியமான இந்திய சுதந்திரத்திற்கும், விமோசனத்திற்கும் இட்டுச் செல்லும் பாதையில் பயணம் செய்யவும் மேலும் மேலும் முன்னேறவும் தமக்குத் தாமே உத்வேகமூட்டிக் கொள்ள வேண்டும்.”

-இதுதான் ஆகஸ்ட் போராட்டம் பற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வமான தீர்மான வாசகங்களின் சாரமாகும்.

இதில் சொல்லப்படும் முக்கிய கருத்து ‘காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுமானால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வழிகாட்டியாகி முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும்’. இந்த வாசகங்களிலிருந்து ஒவ்வொருவரும் ஊகித்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். அதன் விளைவுகள் தான் நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான கடுமையான இறுதிப் போராட்டம்.

மதுரையை அடுத்து வேறு பல இடங்களிலும் நடந்த வரலாற்றுச் செய்திகளைத் தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

(கர்ஜனை தொடர்கிறது)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(23)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s