பாஞ்சாலி சபதம்- 2.3.8

-மகாகவி பாரதி

சினம் கொண்ட பீமன், விஜயனின் பேச்சைக்கேட்டு அமர்ந்தான். அப்போது கௌரவர் பக்கம் இருக்கும் ஒரே நியாயவானான விகர்ணன்,  ‘தமையன்கள் செய்வது அதர்மம்’ என்று அவையில் எழுந்து சொல்கிறான். “தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது?” என்று பெண்ணரசு கேட்பது நிட்யாயம் தானே? என்கிறான். அப்போது அவையில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது...

இரண்டாம் பாகம்

2.3. சபதச் சருக்கம்

2.3.8. விகர்ணன் சொல்வது

அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்.
      அப்போது விகர்ணனெழுந் தவைமுன் சொல்வான்:
‘பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
      பேச்சதனை நான்கொள்ளேன். பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
      ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்.
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
      வழங்குவதிந் நெறிஎன்றான்; வழுவே சொன்னான். 80

‘எந்தையர்தாம் மனைவியரை விற்ப துண்டோ?
      இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோ? விலைமாதர்க்கு
      விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
      சொல்லளவேதானாலும், வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை; சூதர் வீட்டில்
      ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம். 81

“தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த்
      தாரமெது? வீடேது? தாத னான
பின்னையுமோர் உடைமை உண்டோ?” என்றுநம்மைப்
      பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே, களிப்பதுதான் சூதென் றாலும்
      மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ?
      தாத்தனே, நீதிஇது தகுமோ?’ என்றான். 82

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
      எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார்;
‘ஒவ்வாது சகுனிசெயுங் கொடுமை’ என்பார்;
      ‘ஒருநாளும் உலகிதனை மறக்கா’ தென்பார்;
‘எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்;
      ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா.
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
      செருக்களத்தே தீருமடா பழியிஃ’தென்பார். 83

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s