-படுதலம் சுகுமாரன்
திரு. படுதலம் சுகுமாரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர்; கார்ட்டூனிஸ்ட்; சிறுகதை ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

ஒரு காலத்தில் இந்தியா என்றால் மேலைநாட்டாருக்கு ரொம்ப இளக்காரம். அது பாம்புகளின் தேசம், பண்டாரங்களின் தேசம் என்று பழித்தனர்.
இந்து மதம் குறித்து அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று சொல்லவே தேவையில்லை.
விவேகானந்தர் அவதரிக்காமல் இருந்திருந்தால்…
உலக சமய மாநாட்டில் அவர் பங்கேற்காது போயிருந்தால்…
இன்னமும் அவர்கள் இந்து மதம் பற்றிய போதிய தெளிவு பெறாமலே இருந்திருப்பர்.
தக்க சமயத்தில் ‘பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ ஞானக் கண்ணை (!) திறந்து வைத்தார் விவேகானந்தர்.
நமக்கு விவேகானந்தர் கொடுத்திருப்பது அனேகம். எடுக்க எடுக்க சுரபி போல வழிந்தோடும் கருத்துக்கள். ஒன்றிரண்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் கூட கடைத்தேறிவிடலாம்.
நாம் எல்லோரும் செயல் புரிகிறோம். ஆனால் நாம் எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களிலும் வெற்றியடைவதில்லை. ஏன் அப்படி?
விவேகானந்தர் சொல்கிறார், “நமது குறிக்கோளும் லட்சியமும் மிகவும் கவர்வதாக, வசீகரிப்பதாக இருக்கிறது. சுண்டி இழுத்து, மனிதனின் அடிவானத்தில் பெரிதாகப் பரிமாணம் காட்டுகிறது. அதன் காரணமாக, அதை அடைவதற்கான வழிமுறைகளை பெரிதாக எண்ணாமல் விட்டு விடுகிறோம்” என்று!
வழிமுறைகளில் கவனத்தைச் செலுத்தாமல் வெறும் லட்சியத்தை மட்டுமே ரசிப்பவனால் எப்படி வெற்றி பெற முடியும்?
நமது முழு ஆற்றலுடன் இடைவிடாமல் செயல்புரிய வேண்டும். செயல் எதுவாயினும் முழு மனதைச் செலுத்தி செய்ய வேண்டும். அதே வேளையில் அதில் பற்று கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்கிறார்.
தோளில் சுமக்கவும் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் இறக்கிவைக்கவும் சித்தமாக இருக்க வேண்டும். பற்றின்மையின் சூட்சமம் அது. அந்த மனோநிலையில் செய்யப்படும் செயல்கள் முழுமையடையும்; பலன்தரும்; நிலைத்திருக்கும்.
மர நிழலில் படுத்து, ஆகாயத்தைப் பார்த்து, காமதேனுவும் கற்பக மரமும் வரப் போகிறது பார் என்று காத்திருப்பவன், அந்தக் கற்பனைச் சுகத்தோடு இருக்க வேண்டியது தான். வேண்டிய அளவு பேசி விட்டோம். தேவைக்கு அதிகமாகவே சிந்தித்து விட்டோம். இனி செய்ய வேண்டியது செயல் ஒன்று தான் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் அவர்.
நாட்டிலும் சரி… வீட்டிலும் சரி… தனி மனிதராயினும் சரி…
எத்தனையோ நல்ல பல திட்டங்கள் பேச்சளவிலும், ஏட்டளவிலும் நிற்கின்றன.
பல மசோதாக்கள் சட்ட வடிவம் பெற்றும் அமலுக்கு வராமலும், அமலுக்கு வந்தாலும் அது முழுமை பெறாமலும் அந்தரத்தில் நிற்கின்றன. பாதி முடிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்பட்ட எத்தனை வேலைகளை நாம் பார்க்கிறோம்!
முழுமையடையாத ஒரு நூறு பெரிய வேலைகளைக் காட்டிலும் முழுமையாக, பூரணமாக செய்யப்பட்ட சிறிய வேலை பெரியது அல்லவா?
உண்மையான வெற்றியின், ஆனந்தத்தின் மாபெரும் ரகசியத்தை நரேந்திரர் இப்படிச் சொல்கிறார்:
பிரதிபலனை எதிர்பாராதீர். தன்னலமற்றவனாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்துவிடுங்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடுங்கள். அது பல மடங்காக திரும்ப வரும். ஆனால் அதன் மீது கவனம் செலுத்தாதீர்கள். கொடுக்கத் திறன் உடையவராய் இருங்கள். கொடுங்கள். அத்துடன் அது முடியட்டும். முழு வாழ்க்கையே கொடுத்தல் நலம். உங்களை கொடுக்கும்படி இயற்கை வலியுறுத்துகிறது. கொடுப்பதை முழுமனதுடன் கொடுங்கள்.
கொஞ்சம் சிரமம்தான். இப்போதைய காலகட்டத்தில். எல்லாமே வர்த்தகமயமாகிவிட்ட சூழலில் ஒரு செயலைச் செய்துவிட்டு வெறுமனே வீசித் திரும்ப முடியுமா? வீட்டில் அடுப்பு எரியுமா? பசி அடங்குமா? இருப்பதைக் கொடுத்துவிட்டால் அடுத்த வேளைக்கு என்ன செய்வது? என்று கேட்கிறார் பக்கத்தில் இருப்பவர்.
‘நீ அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு சம்பளம் வாங்காமல் வா’ என்று சொல்லவில்லை. ஆபத்தில் இருப்பவனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுக்கலாமில்லையா? நீ பட்டினி கிடந்து அடுத்தவருக்குத் தர வேண்டாம். உண்ணும் போது ஒரு பிடியை கையேந்துபவன் கையில் இடலாமில்லையா?’ என்று கேட்கிறேன் நான்.
வெளியிலிருப்பவர் மீது பழி சொல்லாதீர்கள். குறை தேடாதீர்கள். யாரையும் சபிக்காதீர்கள். நிந்திக்காதீர்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக்கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை
-என்பதும் சுவாமியின் அறிவுரை; அருளுரை.
அவர் சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிப்பது நல்லது.
இயன்றவரை கடைபிடித்தாலும் நல்லதே!
$$$