ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!

-காம்கேர் கே.புவனேஸ்வரி

பெண் சாதனையாளர், தொழிலதிபர், எழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் எனப் பன்முகம் கொண்ட செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி கூறும் வெற்றி மந்திரம் இக்கட்டுரை....

ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!

ஒரு வேலையை செய்யத் தெரிவது என்பது திறன் சார்ந்தது.

ஒரு வேலையைச் செய்வது என்பது அணுகுமுறை (Attitude) சார்ந்தது.

முன்னது திறமை சார்ந்தது. பின்னது பண்பு சார்ந்தது. இரண்டும் சேர்ந்தாற்போல எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.     

எங்கள் உறவினர் திருமணத்தில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணின் சகோதரனின் மனைவியிடம் ‘உன் பெண்ணுக்கு எப்போ மாப்பிள்ளைப் பார்க்கப் போகிறாய்?’ என்று மற்றொரு பெண் கேட்க, ‘நான் தான் வெந்நீர் வைக்கக்கூட தெரியாத ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படறேன். என் மகளுக்காவது சமைக்கத் தெரிந்த பையனை பார்க்கணும்…’ என்றார்.

‘ஏன், என் தம்பிக்கு என்ன குறைச்சல்?  நன்றாக சமைக்கவே தெரியுமே…’ 

‘ஆமாமாம். சமைக்கத் தெரியும். ஆனால் சமையலில் மனைவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லையே. மனசு முழுக்க ஈகோ தானே நிரம்பிக் கிடக்கிறது…’

இப்படியாக விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.

விதிவிலக்குகளை விட்டுவிட்டு, இதுகுறித்து சற்று விவாதிப்போமா? 

பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு வேலைகள் செய்யத் தெரிந்திருந்தாலும் தேவையானபோது செய்வதில்லை. வீட்டில் மனைவியுடன் சங்கடம் வந்தால் செய்வதில்லை; ஆஃபீஸ் வேலை அதிகம் இருந்தால் செய்வதில்லை; தன் வீட்டு உறவினர்கள் வந்தால் செய்வதில்லை; தங்களுக்கு சின்னதாக தலைவலி வந்துவிட்டாலும் செய்வதில்லை; மனசு சரியில்லை என்றால் செய்வதில்லை; தொலைக்காட்சியில் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தால் செய்வதில்லை.

இப்படி அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேலைகளே என்றாலும் ‘ஐந்து மனசும் குளிர்ந்திருந்தால்’ என்று ஒரு சொல்லாடல் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த ‘ஐந்து மனசும் குளிர்ந்திருந்தால்’ மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த வேலைகளைக் கூட மனமுவந்து செய்வார்கள். 

ஆனால், பெண்கள் தங்களுக்கு உடம்பு சரியாக இருந்தாலும் சரியில்லை என்றாலும், பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும், அலுவலக ஸ்ட்ரெஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனக்குப் பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும்  வேலை செய்தே ஆக வேண்டும். இதனை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. வீட்டில் அவள் கண் முன் இருக்கும் அவளுடைய பிள்ளைகளை பட்டினி போடக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் செய்துதான் ஆக வேண்டிய கட்டாயம்.

‘எனக்கு போரடிச்சுதுன்னா ஏதேனும் ஒரு புது டிஷ் செய்து அசத்துவேன்…’ என்று சொல்லும் எத்தனை ஆண்கள், ‘என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னா நான்தான் முழுக்க முழுக்க வீட்டை கவனித்துக் கொள்வேன்…’ என்று சொல்கிறார்கள்?  ‘வீட்டில் மனைவிக்கு முடியலை… அதனால் ஹோட்டல் சாப்பாடு…’, ‘வீட்ல முடியல, அதனால்தான் ஆர்டர் செய்து சாப்பிடறேன்…’ என்று கொஞ்சம் சுயபச்சாதாபத்தில் சொல்லும் ஆண்களைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? அவர்களுக்கு என்னவோ ஹோட்டல் சாப்பாடும், ஆர்டர் செய்து சாப்பிடுவதும் தான் இஷ்டமாக இருக்கும். வெளியில் சொல்லிக்கொள்வது இதுபோல.   

ஒரு ஆண் வீட்டு வேலை செய்வதை ஏதோ செயற்கரிய செயலைச் செய்வதைப் போன்று ‘Great’ என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவிக்கும் இந்த சமுதாயம்,  ஒரு பெண் வேலைக்கும் சென்றுகொண்டு வீட்டு வேலைகளையும் செய்து வந்தால் ‘இப்போதெல்லாம் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்களே… பெண்களின் நிலை முன்னேறிவிட்டது..’ என்று அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லாதாதைப் போன்ற தொணியில் பேசுகிறது. முரண்.

இதே மனநிலைதான் அலுவலகங்களிலும். தங்களுக்கு ஒரு வேலை செய்யத் தெரிந்திருந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை பலர். சொன்னால் அந்த வேலையையும் தங்கள் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு தெரியாது என்றே சொல்வார்கள். இது மோசமான அணுகுமுறை என்று சொல்ல மாட்டேன். அவர்களுக்கான வளர்ச்சிப் பாதையில் அவர்களே முட்டுக்கட்டை போட்டுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.

ஒரு சிலர் தங்களுக்கு ஒரு வேலை செய்யத் தெரியவில்லை என்றாலும் அதுகுறித்துத் தெரிந்துகொண்டு, செய்யத் தெரியும், முயற்சிக்கிறேன் என்று சொல்லி தங்களை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். வேலைப் பளு சற்றுக் கூடும்தான். ஆனால், நாளடைவில் அவர்கள் அந்த புதுப் பணியில் சம்பள உயர்வுடன் புதிய அங்கீகாரமும் பதவி உயர்வும் பெற்று முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். 

ஆனால், வேலை தெரிந்தாலும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள், எங்கு தொடங்கினார்களோ அங்கேயே நின்று கொண்டிருப்பார்கள். 

X, Y என இரண்டு நபர்களை எடுத்துக்கொள்வோம். இருவருமே பத்திரிகையில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட். இருவருக்குமே டைப் செய்து லேஅவுட் மட்டுமே செய்யத் தெரியும். ஒருநாள் திடீரென கிராஃபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் உடல்நலன் சரியில்லாமல் ஒருவாரம் விடுப்பு எடுக்க கிராஃபிக்ஸ் செய்யும் பணியை யாரிடம் கொடுப்பது என டீமில் பேச்சுவார்த்தை நடந்தது. X-க்கு கிராஃபிக்ஸ் வேலைகள் கொஞ்சம் தெரியும். வீட்டில் கிடைக்கும் நேரங்களில் புகைப்படங்களை ஆல்பமாக்கும் பணியைச் செய்து வருகிறார். Y-க்கு அதுபோல எந்த அனுபவமும் இல்லை.

X தனக்கும் கிராஃபிக்ஸுக்கும் எனக்கும் ‘ஸ்நான ப்ராப்தி’ கூட கிடையாது என ஒதுங்கிக்கொள்ள, Y முயற்சி செய்கிறேன் என்று சொல்லி அந்தப் பணியை எடுக்கிறார்.

வீட்டில் அவர் மகள் போட்டோஷாப்பில் சின்னச் சின்ன வேலைகள் செய்வதைப் பார்த்திருக்கிறார். அவளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு வீட்டிலேயே அந்தப் பணியை முடிக்க முயற்சித்து ஒரு கட்டத்தில் வேலையை முழுமையாக்கி டீம் லீடரிடம் காண்பிக்க அவர் அசந்து போகிறார்.

கிராஃபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் வரும் வரை அவருக்கு லே-அவுட் செய்யும் பணியுடன் சேர்த்து கிராஃபிக்ஸ் பணியையும் கொடுக்கிறார். இப்படியாக Y லே-அவுட்டுடன் சேர்த்து கிராஃபிக்ஸ் வேலைகளையும் செய்து அனுபவம் பெறுகிறார். 

சில நாட்களில் கிராஃபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாகவே பணி உயர்வு பெற்று கூடுதல் சம்பளமும் பெறுகிறார். X லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டாகவே பின்தங்குகிறார். என்னதான் வீட்டில் தனியாக வேலை செய்து சம்பாதித்தாலும் பணி செய்யும் இடத்தில் கிடைக்கின்ற கெளரவம் என்பது ஆகச் சிறந்த விஷயம்தானே? X அதை தவறவிட்டார்.

Y அலுவலகத்தில் கெளரவம் பெற்றதுடன் வீட்டில் மகளுக்காக கிராஃபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்துக்கொடுத்து தானும் அவ்வப்பொழுது அதில் ஈடுபட்டு தன் திறமையை சரியாகப் பயன்படுத்துகிறார்; வாழ்க்கையில் திருப்தியுடன் முன்னேறுகிறார்.

அதனால்தான் சொல்கிறேன், ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல.

ஒருவரின் திறமை சார்ந்த திறனும், அணுகுமுறை  சார்ந்த பண்பும் ஒருங்கிணையும்போது கிடைக்கின்ற பலனை அளவிட முடியாது. அது வீடாக இருந்தாலும், பணியிடம் என்றாலும்.

கூடுதல் பணிச்சுமை அந்த நேரத்துக்கு சிரமமாக இருந்தாலும் உங்கள் வெற்றிப் பாதையில் உங்களை மேலே ஏற்றிவிட உதவும் ஏணியாகவும் இருக்கக் கூடும். ஆனால் உங்கள் சுய முயற்சி இல்லை என்றால் வெற்றி உயரத்தில் உங்கள் கண் முன் காத்திருந்தாலும், ஏணி உங்கள் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அது எட்டாக்கனியாகப் போய்விடும்.

திறனும், பண்பும் ஒருங்கிணையும்போது கிடைக்கும் வெற்றிக்கனி மிகவும் சுவையாக இருக்கும். சுவைத்துத்தான் பாருங்களேன். 

குறிப்பு:

கட்டுரையாளர், காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர்.

தொடர்புக்கு: compcare@hotmail.com

$$$

One thought on “ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s