-ச.சண்முகநாதன்
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்தில் தன் மனதைப் பறிகொடுத்தவர்; தனது எழுத்துகளால் நம்மை வசீகரிப்பவர். இதோ அவரது இனிய கட்டுரை….

“சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே” (சிலப்பதிகாரம் / ஆய்ச்சியர் குரவை-36)
கரும்புடன் பொங்கல் கொண்டாடியிருக்கிறோம்.
கம்பருடனும் பொங்கல் கொண்டாடலாம் இந்த வருடம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
ராம லக்ஷ்மணனுடன் அறிமுகமான ஹனுமன் அவர்களை சுக்கிரீவனிடம் அறிமுகம் செய்து வைக்க விழைகிறான். மகிழ்ச்சி பொங்க, வாலியினால் துன்பத்தில் வாடும் சுக்ரீவனிடம் சென்று வாலியின் “உயிர் தேறக் காலன் வந்தான்… நம் துயர் எல்லாம் தீரும் வேலை வந்தது” என்று சிவபெருமானைப் போல ஒரு கால் தூக்கி நடனம் ஆடிக்கொண்டே செய்தி சொல்கிறான் ஹனுமான். [பின்னாளில் மீட்சிப்படலத்தில் ராமனின் வெற்றியை சீதையிடம் சொல்லும்பொழுதும் சோபானம் ஆடிக்கொண்டே செல்வதும் ஹனுமான் தான்]. இராமாயணத்தில் ஆடல் செய்த ஒரே ஆள் ஹனுமான் தான்.
ராமனைப் பற்றி மேலும் சொல்கையில், “அவர்கள் தசரதன் மைந்தர், பேர் அறிவினார்; அழகினார்; ஊழிக்காலம் வரை நம்முடன் இருப்பர்; உனக்கு அரசு தந்து உதவுவார்” என்றும் “நீதியார்; கருணையின் நெறியினார்” என்றும் “நன்னெறியில் இருந்து எள்ளளவும் பிறழாத உறுதியுடையவர்” என்றும் மகிழ்ச்சியில் தோய்த்தெடுத்த வார்த்தைகளை சுக்ரீவன் செவியில் சேர்க்கிறான்.
இப்படி நீதி நெறி வழுவாத ராமலக்ஷ்மனர், கொஞ்சம் அறத்தில் இருந்து விலகிய, வாலியின் எமன் என்று உணர்கிறான் ஹனுமான்.
இன்றைய அரசியல் களம் இதை அப்படியே எதிரொலிக்கிறது. அறத்தில் இருந்து விலகிய தேசவிரோதிகளை “நீதியார்; கருணையின் நெறியினார்” சிதறடிப்பதைக் கண்கூடாக காண்கிறோம்.
Coming back. “ஐயா! அவர்கள் சீதையைத் தொலைத்துவிட்டு அவளைத் தேடி அலைகின்றனர். நீயும் நல்லவன், உன் விதியும் அவர்கள் விதியும் கிட்டத்தட்ட ஒன்றே. அவர்கள் உன் நட்பை விரும்புவார்கள். வா, போய் சந்திக்கலாம்” என்று சுக்ரீவனின் கையைப் பிடித்து அழைத்துப் போகின்றான் அனுமன்.
ராமன் சுக்ரீவனிடம் அறிமுகம் செய்துகொண்ட பின்னர், “எங்கள் துயரம் தீர உன் உதவி வேண்டும். அதற்காக உன்னிடம் வந்தோம்” என்று தங்கள் வந்த நோக்கத்தைச் சொல்கிறான் ராமன்.
“....யாங்கள் உற்ற கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்; ஐய! நின் - தீரும்' என்ன, அரிக் குலத்து அரசன் சொல்வான்”
செருக்கில்லாதவன் ராமன்! “யாங்கள் உற்ற கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்” என்று சுக்ரீவனிடத்தில் கேட்கிறான் வீரன் ராமன். எப்பேர்ப்பட்டவன் ராமன்! இங்கே சுக்ரீவனிடம் வந்து “உன் உதவி தேவை” என்று எந்தவிதச் செருக்கும் இல்லாமல் உதவி கோருகிறான்.
பதிலுக்கு உன்னுடைய துன்பங்களை நான் தீர்ப்பேன். “உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன் நாள் சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்” என்று உடன்படிக்கை ஏற்படுத்துகிறான்.
“இனி உன் துன்பம் என் துன்பம். கவலை கொள்ள வேண்டாம்” என்று ராமன் உறுதி அளிக்கிறான். ராமனுடைய Team formation-இல் அனுமனும் சுக்ரீவனும் தான் முதலில் சேர்ந்தவர்கள்.
அதன் பின் ஒரு hightea விருந்தளிக்கிறான் சுக்ரீவன். அந்த விருந்தில் வாலி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து சென்ற கதையைத் தெரிந்து கொள்கிறான் ராமன். “சுக்ரீவனிடம் நான் வாலியை வென்று உன் மனைவியை மீட்டுத்தருகிறேன். அவன் இருக்குமிடம் காட்டு” என்று சீறுகிறான்.
“....வில்லிடை வாளியின் வீட்டி, தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்; புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு”
சுக்ரீவனுக்கு சிறிது ஐயம் ஏற்படுகிறது. வாலியின் வலிமை தெரியும். ஹிரண்யனின் மார்பு கீண்ட நரசிம்ம மூர்த்தியும் வாலியின் தோளை அடக்க முடியாது.
“மார்பு இடந்த மா எனினும், மற்றவன் தார் கிடந்த தோள் தகைய வல்லதோ”
காற்றும் அவனை முந்திச் செல்லாது, முருகனின் ஆற்றல் மிக்க வேலும் வாலியின் மார்பில் புக முடியாது.
“கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள் வேல் செலாது அவன் மார்பில்”
“இப்பேர்ப்பட்ட வாலியை இந்த மானிடன் என்ன செய்ய முடியும்? இவனைக் கூட்டிக்கொண்டு வாலியிடம் சண்டைக்குப் போனால் கதை வேறு மாதிரி ஆகிவிடும்” என்று நினைத்து “ராமா! கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன்” – இன்சூரன்ஸ் ஏஜென்ட்டிடம் சொல்வது போல “I will come back” – என்று பின்வாங்குகிறான்.
இதை உணர்ந்து கொண்ட ஹனுமன், “சுக்ரீவா! இவனல்லால் வேறு யார்? ஒத்துக்கொள். அவன் கடவுள் சொரூபம். கைகளில் சங்கு சக்கர முத்திரை இருக்கக் கண்டேன். ராமன் திருமாலே, சந்தேகம் வேண்டாம்” என்று சொல்லி வற்புறுத்துகிறான்.
மேலும் “சரி உனது திருப்திக்காக ஒரு சோதனை வைப்போம். அங்கே ஏழு மராமரம் இருக்கிறது. அவற்றில் ஒன்றே ஒன்றை (எழில் ஒன்றை) ராமனை அம்பு தொடுத்து துளைக்கச் சொல்வோம். அவன் சிறப்பாய்ச் செய்து முடித்தால் ஒத்துக்கொள்வாயா, இவன் வலிமையானவன் என்று?” என்று ஹனுமன் கேட்க ராமனுக்கு இந்த ஒரு சிறிய test வைக்க ஒத்துக் கொள்கிறான் சுக்ரீவன்.
ராமனின் வில் சம்பந்தமான இரண்டாவது test இது. முதலில் சிவ தனுசு; இப்பொழுது ஒரே ஒரு மராமரம் துளைத்தல்.
இது பற்றி ராமனிடம் தெரிவிக்க அவனும் ஒத்துக்கொள்கிறான். ஒரு வார்த்தை பேசவில்லை ராமன்.
ராமன் தன் வில்லோடு மரங்கள் இருக்கும் இடம் செல்கிறான்.
“எறுழ் வலித் தடந் தோள்களால் ...சிலையை நாண் ஏற்றி, அறிவினால் அளப்ப அரியவற்று ...அருகு சென்று, அணைந்தான்”
***

அந்த வனத்தில் இருக்கும் மராமரங்கள் எப்பேர்பட்டவை? சூரியனும் சந்திரனும் அந்த மரத்தின் உச்சிக்குக் கீழேதான் செல்லுமாம், அதனால் தான் சூரியனில் கட்டப்பட்டிருக்கும் ஏழு குதிரைகளும் தளர்ச்சியில்லாமல் ஓடிக்கொண்டிருந்ததாம்.
infact, நிலவில் இருக்கும் கறை, அந்த மராமரங்களின் கொம்பு உரசியதால் தேய்ந்துபோன இடமாம்.
“ஓடு மாச் சுடர் வெண் மதிக்கு, உட்கறுப்பு, உயர்ந்த கோடு தேய்த்தலின், களங்கம் உற்ற ஆம் அன்ன குறிய”
அவ்வளவு பெரிய மரங்கள்!
அவ்வளவு பெரிய மரங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்!
“ஒன்றினுக்கு ஒன்றின் இடை, நெடிது யோசனை உடைய”
ஒவ்வொரு மரத்துக்கிடையேயும் ஒரு யோசனை தூரம் (மைல் கணக்கில்). அவ்வளவு பெரிய மரங்களின் அடி எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்!
இப்படி இருக்கும் ஏழு மரங்களில் ஒன்றையாவது ராமன் அம்பு துளைத்து வெளிவர வேண்டும் என்பதே சோதனை.
ஏழில் ஒன்றையாவது! எந்த ஒன்று என்பது ராமனின் choice.
ராமன் அவ்விடம் சென்று அந்த மரங்களை நோக்குகிறான்.
அவன் மனதில் வைராக்கியம்.
சீதையை மீட்க இவன் துணை வேண்டும். அதற்கு முதல் படி இந்த மராமரங்களைத் துளைத்து இவர்களின் நம்பிக்கையைப் பெறுவது.
ராமனின் மனதில் கோப அக்கினி. ஆனால் அவன் இதழில் புன்முறுவல்.
அந்த மராமரங்களை பார்த்தபடியே வில்லின் நாணேற்றுகிறான். அவன் ஏற்றிய வில்லின் நாணொலி அண்டத்தை அதிரச் செய்கிறது. அந்த நாணொலி செவியில் படாத உயிரினங்களே இல்லை. உலகம் திகைத்து நின்றது. ஈதென்ன பேரொலி என்று அதிசயித்தது உலகம். The whole world came to a standstill. இதற்கு முன் உலகம் இப்படி ஒரு பேரொலியை உலகம் கேட்டதில்லை.
இது ராமன் அதிர்வு!
இன்னும் ராமன் அம்பு விடவில்லை, ஆனால் அந்த நாணின் ஒலி கேட்டு தேவர்களெல்லாம் இது உலகத்தின் இறுதியோ என்று ஐயம் கொண்டனர்.
“அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும், அமரர் இரிந்து நீங்கினர், கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார்”
ராமன் இன்னும் மரங்களில் இருந்து பார்வையை எடுக்கவில்லை.
ராமன் அதிர்வில் இருந்து உலகத்தவர் இன்னும் மீளவில்லை.
அனுமன் முதலான அனைவரும் ஆவலுடன் “இதுவரை நாம் காணாத ஒன்றை காணப் போகிறோம்” என்ற ஆவலுடன் ராமனின் கையையும் வில்லையும் அவனின் புன்னகை சிந்தும் முகத்தையும் விழி விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிருந்த நேரத்தில் அந்த மாபெரும் வீரன் நாணை இழுத்து அம்பு எய்கிறான்.
‘எய்தல் காண்டும்கொல், இன்னம்?’ என்று, அரிதின் வந்து எய்தி, பொய் இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில், மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி, வெய்ய வாளியை, ஆளுடை வில்லியும், விட்டான்”.
ZUPPP என்று வில்லில் இருந்து அம்பு நீங்கியது. மின்னலும் தோற்கும் வேகம். சீதையை இழந்த கோபத்தீயை சுமந்துகொண்டு சென்றது அம்பு.
“கானகம் போ” என்ற ஒரே ஒரு சொல்லினால் வனவாசம் புகுந்த ராமன்,
“அந்த மான் வேண்டும்” என்ற ஒரே ஒரு சொல்லினால் சீதை தொலைத்த ராமன்
ஒரே ஒரு அம்பினால் ஏழு மராமரங்கள் துளைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
ஏழில் ஒன்றையாவது துளைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ராமன், ஒன்றுக்கொன்று ஒரு யோசனை தூரத்தில் இருக்கும் ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால் துளைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு வில் எறிகிறான்.
சீதை இருக்கும் திசை தெரியவில்லை. அவளைக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்ற கோபத்தில் ராமன் தொடுத்த அம்பு, தேடித்தேடி ஏழு மராமரங்களையும் துளைத்தது.
அவன் தொடுத்த அம்பு அவன் மனதை ஒத்திருந்தது.
தேடித்தேடி துளைத்தது.
ஒருவகையில் இந்த மராமரம் துளைக்கும் நிகழ்வு இதற்குப் பின் நடந்தவற்றின் முன்னோட்டம் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது.
ராமன் எய்த அம்பு ஏழு மராமரங்களைத் துளைத்ததோடு நின்றுவிடவில்லை. ஏழு உலகம் முழுமையும் துளைத்துச் சென்று அதன் பின் இதெல்லாம் ஏழின் எண்ணிக்கையில் உள்ளதோ அவை அனைத்தையும் துளைத்து சென்றதாம்.
“ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும் ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி”
அது ராமன்!
ஏழில் ஒன்றையாவது துளைத்தால் இவன் வாலியை எதிர்த்துப் போரிட சரியானவன் என்று ஒத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ராமன், ஏழு மரத்தையும் ஏழு உலகையும் துளைத்து விடும் அளவு வலிமையுடன் அம்பு தொடுக்கிறான்.
இவனா, வாலியை மறைந்திருந்து கொள்வான்?
இப்பொழுது சுக்ரீவன் நிலை எப்படி இருக்கும்? 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்றால் இவன் 3,50,000 மதிப்பெண்கள் எடுக்கிறானே! இவன் ஆற்றல் மீதா ஐயம் கொண்டோம்? என்று நாணி நேரே ராமனிடம் சென்று அவன் திருவடிகளை தன் தலைமீது வைத்துக்கொள்கிறான்.
ராமன் மனதில் இருந்து இன்னும் சீதையை மீட்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, தன் செயல் மீது கர்வமோ வேறு எண்ணங்களோ தோன்றவில்லை. ராமன் எதுவும் பேசவில்லை. ஒற்றைப் பார்வை மட்டும் கொண்டிருக்கிறான். எண்ணங்கள் மட்டும் சீதையுடன்.
வெற்றியின் மௌனம் அங்கே குடியேறியது.
சுக்ரீவன் அந்த மௌனத்தைக் கலைக்க வேண்டி
“வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல் ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ! செய்ய தீ அனைய அத் தேவும் நீ! நாயினேன், உய்ய வந்து உதவினாய், உலகம் முந்து உதவினாய்!”
என்று “நீயே எங்கள் தெய்வம். எங்கள் நற்கதிக்கு உன்னைவிட்டால் ஏழுலகத்திலும் ஆளில்லை” என்று ராமனை தெய்வமாக ஏற்றுக்கொள்கிறான்.
ராமனைப் பார்த்து நாமும் சொல்வோம். நம் துன்பங்களையும் அவன் மராமரம் போல துளைத்து நம்மைக் காப்பான்.
“வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல் ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ”.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
$$$
One thought on “மராமரப் படலம்”