– கி.வைத்தியநாதன்
தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் திருவண்ணாமலையில் 26.12.2014, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களின் 22-ஆவது மாநில மாநாட்டில் பேசியதன் சுருக்கம் இது:

இந்தியாவில் நமக்கு நம்மை உணர வைத்து தன்னம்பிக்கை ஊட்டிய முதல் குரல், சுவாமி விவேகானந்தருடையது. நமக்கு நமது கலாசாரத்தின் பெருமைகளை எடுத்துரைத்த முதல் குரலும் அவருடையதுதான்.
மேலைநாடுகளைப் பார்த்து அப்படியே பின்பற்றுவதுதான் முற்போக்கு என்றும், மேலைநாட்டுச் சிந்தனைகள்தான் சிறந்தவை என்று நினைப்பதே சீர்திருத்தம் என்றும் கருதிய ஒரு கூட்டம், அன்று அதிகமாக இருந்தது.
அப்படியிருந்த காலகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் சில தவறுகளும் இருந்தன. இந்தத் தவறுகளை களைவதற்குப் பதிலாக நமது பண்பாட்டையே தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தை அன்றைய படித்தவர்களும், சீர்திருத்தவாதிகளும் முன்னெடுத்துச் செல்ல முனைந்தனர். அப்போது, இது தவறு என்று தடுத்து நிறுத்தி இந்தியாவின் பாரம்பரியத்தை, கலாசாரத்தைக் காப்பாற்றி நம்மிடம் தந்தவர் விவேகானந்தர். இதுதான் மறுமலர்ச்சி.
விவேகானந்தரால் 5 ஆண்டுக்குள் ஏற்பட்ட மறுமலர்ச்சி, திருப்பம், சிந்தனை ஆகியவை இந்தியர்களிடையே உற்சாகம், தன்னம்பிக்கையை ஏற்படுத்தி மிகப் பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது. இந்தப் பாதையின் முடிவுதான் இந்தியாவில் 1947 ஆகஸ்ட் 15இல் மூவர்ணக் கொடி ஏற்ற வழிகோலியது.
அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் வெளியில் சொல்லாத, மனதுக்குள்ளேயே வைத்திருந்த மிகப் பெரிய ரகசியம் என்னவென்றால் எங்களின் வழிகாட்டியும், தலைவனும் சுவாமி விவேகானந்தர் என்பதுதான்.
ஆங்கிலேயன் வந்த பிறகுதான் இந்தியா ஒரே நாடாகியது, இந்தியன் என்கிற உணர்வு வந்தது என்பதை ஏற்க முடியாது. உணர்வால், பண்பாட்டால், கலாசாரத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த அத்தனை மக்களும் இந்தியர்களாகத்தான் இருந்தார்கள்.
அன்றைக்கு இந்தியாவை பல்வேறு குறுநில மன்னர்களும், ராஜாக்களும், நவாபுகளும் ஆண்டு கொண்டிருந்தனர் என்பது உண்மை. ஆனால், ராமேசுவரத்திலிருந்து காசிக்குச் செல்லும் ஹிந்துமத நம்பிக்கையுள்ள எந்தவொரு யாத்திரீகனையும், நவாபோ, ராஜாவோ கடவுச் சீட்டு இருக்கிறதா என்று கேட்பதில்லை. அதேபோல, வங்கதேசத்து டாக்காவிலிருந்து, ராஜஸ்தானிலுள்ள ஆஜ்மீர் ஷெரீப் தர்காவுக்குப் பயணிக்கும் இஸ்லாமிய யாத்ரீகரை எந்தவொரு ராஜாவும், நவாபும் கடவுச்சீட்டுக் கேட்டதில்லை. மன்னர்கள் பலர் இருந்தனர். ஆனால் இந்தியா உணர்வாலும், கலாசாரத்தாலும் ஒன்றாகத்தான் இருந்தது. இருக்கிறது.
ஹிந்து என்றால் இந்தியன்:
ஹிந்து என்று சொன்னால், அது இந்தியன் என்பதைக் குறிக்கும் என்பதை எடுத்துரைத்த முதல் மனிதர் சுவாமி விவேகானந்தர்.
விவேகானந்தரின் செயல்பாடுகள் இந்தியாவை ஒருங்கிணைத்தன. சுதந்திர, தேசிய உணர்வை இந்தியாவில் முதல் முதலில் தட்டி எழுப்பியவர் விவேகானந்தர்.
குஜராத்தில் இருந்து வந்த காந்தி, மேற்கு வங்கத்தில் இருந்து வந்த சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு சுதந்திரம் என்ற உணர்வை, போராட வேண்டும் என்ற வைராக்கியத்தை, பாரதம் ஒன்றுபட வேண்டும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தைத் தட்டி எழுப்பியவர் விவேகானந்தர்தான் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியா மாறும்:

1897 பிப்ரவரி 6 முதல் 15ஆம் தேதி வரை விவேகானந்தர் சென்னையில் தங்கி ஆற்றிய 6 உரைகளையும், 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஒன்று வீதம் பள்ளிப் பாடத்தில் சேர்த்துவிட்டால், இந்தியா தேச பக்தியுள்ள இந்தியாவாக மாறி விடும்.
உங்களுடைய அறிவு வேலை செய்வதால் பயனில்லை. இதயம் வேலை செய்ய வேண்டுóம். பட்டினி கிடக்கின்ற ஒருவனைப் பார்த்து சோறிடத் தோன்றவில்லை என்றால், அறிவிருந்து பயனில்லை என்கிறார் விவேகானந்தர். உங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்த்து உங்கள் இதயம் எப்போது அழுகிறதோ அதற்குப் பெயர்தான் தேச பக்தி என்கிறார் விவேகானந்தர்.
விவேகானந்தரின் கருத்துகள், கொள்கைகளை சாமானியனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை, இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் உண்டு.
இந்தியாவின் ஆன்மாவுக்குள், விவேகானந்தர் என்கிற அக்னிக் குஞ்சு ஒளிர்ந்து கொண்டிருக்கும் வரை, எரிந்து கொண்டிருக்கும் வரை இந்தியாவில் தேச பக்தி, ஒற்றுமை, கலாசாரம், பண்பாடு காக்கப்படும் என்றார்.
- நன்றி: தினமணி (27.122.2014)
$$$