அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

முன்னுரை:

இந்திய சுதந்திரப்போரில் அனுசீலன் சமிதி என்ற ரகசிய இயக்கத்தின் பங்கு பெரிய அளவில் பேசப்படுவதில்லை. ஆங்கிலேயர்களை ஆயுதக் குழுக்களால் தாக்கி நாட்டை விடுவிப்பதே அவர்களின் திட்டம். காங்கிரஸ் கட்சியிலிருந்த தீவிரவாதிகளின் அபிமானம் பெற்றதாக இந்த அமைப்பு இருந்திருக்கிறது. இந்தக் குழுவுடன் அரவிந்த கோஷும் அவரது தம்பி பரீந்திரகுமார் கோஷும் தொடர்பு கொண்டிருந்தனர். அக்காலத்தில் வங்கம் புரட்சியாளர்களின் புனித பூமியாக விளங்கியது.

1908இல் அனுசீலன் சமிதியைச் சேர்ந்த குடிராம் போஸும், பிரஃபுல்ல சாகியும் ஆங்கிலேய அதிகாரி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயன்றனர். இந்த  வழக்கில் குடிராம் போஸ் கைதானார்; பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கு ‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று பெயர் பெற்றது. இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளாக அரவிந்தர், அவரது தம்பி உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் பிற்பாடு அரவிந்தர் விடுதலையானார். பரீந்திர கோஷ் உள்பட பலர் பலவேறு சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்; குடிராம் போஸ் தூக்கு தண்டனை பெற்றார்.

இதுவே இந்தக் குற்ற வழக்கின் சாரம். இவ்வழக்கில் 1908 மே 2-இல் கைது செய்யப்பட்ட அரவிந்தர், 1908 மே 5 முதல் 1909 மே 6 வரை அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கபட்டிருந்தார்; அங்கு பல சித்ரவதைகளை அனுபவித்தார். எனினும், இவ்வழக்கில் அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு 1909 மே 30இல் உத்தர்பாரா என்ற நகரில் தனது ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டம் ஒன்றில் அரவிந்தர் உரை நிகழ்த்தினார். அதுவே, புகழ்பெற்ற ‘உத்தர்பாரா பேருரை’ என்று அழைக்கப்படுகிறது. விடுதலை வீரரான அரவிந்தர் ஆன்மிகவாதியாக மலர்ந்ததன் பின்னணியை அவரே இந்த உரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, ‘சநாதன தர்மமே தேசீயம்’ என்ற அறைகூவலையும் அரவிந்தர் இந்த உரையின் இறுதியில் தெரிவித்திருக்கிறார். சநாதனத்தைக் காப்பதே, அதாவது இந்து மதத்தைக் காப்பதே, பாரத நாட்டைக் காப்பது என்ற நிலைப்பாட்டுக்கு அரவிந்தர் வந்திருப்பதன் காட்சியை இந்த உரையில் காண்கிறோம்.

$$$

அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

உங்களுடைய சபையின் ஆண்டு விழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டபொழுது இன்றைய  பேச்சுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ‘இந்து மதம்’ என்ற தலைப்பில் சில வார்த்தைகள் பேசக் கருதியிருந்தேன். இப்பொழுது எனது உத்தேசத்தை நிறைவேற்றுவேனா என்பதைச் சொல்ல முடியாதவனாய் இருக்கிறேன்.

ஏனெனில், நான் இங்கே அமர்ந்ததும் என் மனத்தில் ஒரு வார்த்தை உதித்தது. அந்த வார்த்தையை நான் உங்களுக்கும், பாரத சமுதாயம் முழுவதற்கும் பேச வேண்டியதிருக்கிறது. அந்த வார்த்தை நான் சிறையிலிருந்தபோது எனக்குத் தரப்பட்டது; அதை என் மக்களுக்குச் சொல்வதற்காகவே நான் சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.

இங்கு நான் கடைசித் தடவையாக வந்து ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. அப்பொழுது நான் இங்கு தனியாக வரவில்லை; தேசத்தின் தீர்க்கதரிசுகள் அனைவரினும் சக்தி படைத்தவர் அன்று என் பக்கத்தில் இருந்தார். அவர் தனிமைச் சிறையிலிருந்து வெளி வந்திருந்தார். அத்தனிமை ஆண்டவனாலேயே வாக்குக் கொடுக்கப்பட்டது. அவன் சொல்லும் வார்த்தையை அவர் கேட்க வேண்டுமென்பதற்காகவே அந்தத் தனிமை. அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அன்று நீங்கள் நூற்றுக்கணக்கான பேர் இங்கு கூடியிருந்தீர்கள். இன்று அவர் நம்மிடையே இல்லை. நம்மிடமிருந்து பிரித்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கொண்டுபோகப்பட்டுள்ளார். என்னுடன் வழக்கமாக வேலை செய்துவந்த வேறு பலரும் இன்று இங்கில்லை. நாட்டில் வீசிய புயல் அவர்களை நான்கு திசையிலும் சிதறடித்து விட்டது. இந்தத் தடவை நான் ஓராண்டு தனிமையில் இருக்க நேரிட்டது. இப்பொழுது நான் வெளியே வந்ததும் எல்லாம் மாறிப் போயிருப்பதைக் காண்கிறேன். எப்பொழுதும் என் பக்கத்தில் இருப்பவரும் என்னுடன் சம்பந்தப்பட்டவருமான ஒருவர் இன்று பர்மாவில் சிறையிலிருக்கிறார். இன்னொருவர் வடக்கே காவல் கைதியாக நலிகிறார். நான் வெளிவந்ததும் என்னைச் சுற்றிலும் பார்த்தேன்; நான் அறிவுரை கேட்கவும் ஆவேசம் பெறவும் வழக்கமாக நாடும் நண்பர்களைத் தேடினேன். அவர்களை நான் காணவில்லை.

அது மட்டுமன்று. நான் சிறைச்சாலை சென்றபோது வந்தேமாதர கோஷத்தால், ஒருநாட்டு மக்களின் – இழிநிலையிலிருந்து புதிதாக எழுந்த கோடிக் கணக்கான மக்களின்- உள்ளத்தில் உதித்த நம்பிக்கையால், நாடு துடிப்புடன் இருந்தது. நான் சிறையிலிருந்து வெளிவந்ததும் அந்தக் கோஷத்தை எதிர்பார்த்தேன். ஆனால், எங்கும் ஒரே நிசப்தமே நிலவியது. நாட்டின் மீது ஒரு மோனப் போர்வை கவிந்திருந்தது; மக்கள் திக்குத் தெரியாது தவித்தனர். ஏனெனில், எதிர்கால நம்பிக்கையென்னும் ஆண்டவனின் ஒளி நிரம்பிய வானத்திற்குப் பதில் மனித மின்னல்களும் இடிகளும் வெட்டி முழங்கும் இருள் வானமே கவிந்திருப்பதாகத் தோன்றியது.

யாருக்கும் என்ன செய்வதென்றே தோன்றவில்லை; எல்லாத் திக்கிலிருந்தும், “நாம் இனிச் செய்வதென்ன? நாம் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?” என்ற கேள்வியே எழுந்தது. எனக்கும் எந்த வழியே போவது, எதைச் செய்வது எனறு தெரியவில்லை. ஆனால் ஒன்று எனக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. அந்தக் கோஷத்தை எழுப்பிய ஆண்டவனின் சர்வ வல்லமையுள்ள சக்தியே இந்த மோனத்தையும் அனுப்பியிருக்கிறது என்பதை நான் அறிந்தேன். அந்தக் கூச்சலிலும் இயக்கத்திலும் இருந்த அவனே இந்த ஓய்விலும் இந்த மோனத்திலும் இருந்தான். நாடு ஒரு கணம் சலசலப்பிலிருந்து விலகி நின்று, தன்னுள்ளே நோக்கி, அவன் இச்சையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவன் இதை அனுப்பியுள்ளான்.

இந்த மோனத்தினால் நான் மனந்தளர்ந்து விடவில்லை; ஏனென்றால் சிறைவாசத்தின் போது எனக்கு மோனம் பழக்கமாகிவிட்டது. மேலும், எனது நீண்டகால தடுப்புக் காவலின் போதுதான், அந்த இடைக்கால ஓய்விலும் சந்தடியின்மையிலுந்தான் நான் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

விபின சந்திரபாலர் சிறையிலிருந்து வெளிவந்தபோது ஒரு செய்தியுடன் வந்தார்; அது ஒரு தெய்வாவேசச் செய்தி. அவர் இங்கு பேசிய பேச்சு எனக்கு நினைவிருக்கிறது. அது அரசியல் பேச்சாக இருக்கவில்லை, அதன் போக்கிலும் நோக்கிலும் அது ஒரு சமயப் பேச்சாகவே இருந்தது. சிறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபூதியைப் பற்றியும், நம்மனைவருள்ளும் இருக்கின்ற கடவுளைப் பற்றியும் நாட்டினுள் இருக்கின்ற ஆண்டவனைப் பற்றியும் அவர் பேசினார். அதற்குப் பின்னால் அவர் பேசிய பேச்சுகளிலும், தேசிய இயக்கத்தில் வேலை செய்வது சாதாரண சக்தி அன்று, தெய்வ சக்தியே அதில் வேலை செய்கிறது; இயக்கத்தின் நோக்கமும் சாதாரண நோக்கமன்று. அதன் நோக்கம் தெய்வீகமானது என்றே பேசினார்.

இப்போது நானும் உங்கள் முன் நிற்கிறேன்; நானும் சிறையிலிருந்தே வந்திருக்கிறேன். மேலும் என்னை முதலில் வரவேற்பது உத்தரபாராவாசிகளாகிய நீங்கள்தாம். என்னை நீங்கள் ஓர் அரசியல் கூட்டத்தில் பேசச் சொல்லவில்லை; நமது சமயத்தைப் பாதுகாக்கச் தோன்றிய கழகத்தில் பேசச் சொல்லியிருக்கிறீர்கள். பக்சார் சிறையில் விபின சந்திர பாலருக்குக் கிடைத்த அதே செய்தியை ஆண்டவன் எனக்கு அலிப்பூர் சிறையில் கொடுத்தான். எனது பன்னிரண்டு மாத கால சிறைவாசத்தில் ஒவ்வொரு நாளும் எனக்குக் கொடுத்த பந்த ஞானத்தையே உங்களிடம் பேசும்படி இன்று வெளியே வந்துள்ள எனக்கு ஆண்டவன் ஆணையிட்டுள்ளான்.

நான் வெளியே வருவேனென்பது எனக்குத் தெரியும்; ஓராண்டுச் சிறைவாசம், ஓராண்டுத் தனிமைக்கும் சாதனைக்குமே. கடவுளுடைய காரியத்திற்குத் தேவையான அளவிற்கு அதிகமாக யாரே என்னைச் சிறையில் வைக்க முடியும்? அவன் எனக்குப் பேச ஒரு வார்த்தையும், செய்ய ஒருவேலையும் கொடுத்திருக்கிறான். அந்த வார்த்தையைப் பேசுமுன் எந்த மனித பலமும் என்னை வாயடைக்க முடியாது; அந்த வேலை முடியும் வரை ஆண்டவனின் கருவியை- அந்தக் கருவி எவ்வளவு பவவீனமாயும் அற்பமாயும் இருப்பினும்- எந்த மனித பலமும் தடுத்து நிறுத்த முடியாது.

இப்பொழுது நான் வெளியே வந்ததும் இந்தச் சில நிமிடங்களுக்குள் எனக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்பட்டது. அதைப் பேச வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. நான் பேச வேண்டுமென்று எண்ணியிருந்ததை என் மனத்திலிருந்து அகற்றிவிட்டான். நான் இப்பொழுது பேசுவது அவனுடைய தூண்டுதலினாலும் அவனுடைய கட்டளையினாலுமே பேசுகிறேன்.

என்னைக் கைது செய்து லால் பஜாரிலுள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றபோது சிறிது நேரத்திற்கு எனது நம்பிக்கை ஆட்டங்கண்டது. ஏனெனில், அவனுடைய செயலின் உட்பொருள் எனக்கு விளங்கவில்லை. அதனால் நான் கணநேரம் தடுமாறினேன், எனது உள்ளத்தில் அவனிடம் இவ்வாறு கேட்டேன்: “எனக்கு இது ஏன் நேர்ந்தது? எனது நாட்டு மக்களுக்காக நான் செய்ய வேண்டிய பணி ஒன்றிருந்தது என்றும், அந்த வேலை முடியும்வரை எனக்கு உன் பாதுகாப்பு இருக்கும் என்றும் நம்பிருந்தேன். அப்படியிருக்க நான் இங்கு இந்தக் குற்றச்சாட்டுடன் ஏன் கொண்டு வரப்பட்டிருக்கிறேன்?” ஒரு நாள் சென்றது; இரண்டு நாள்; மூன்றாம் நாள் என்னுள்ளிருந்து ”பொறுத்துப் பார்” என்று ஒரு குரல் கேட்டது.

அதன்மேல் நான் அமைதியாகக் காத்திருந்தேன். என்னை லால் பஜாரிலிருந்து அலிப்பூருக்குக் கொண்டுபோய் ஒரு மாதம் பிற மனிதர்களின் தொடர்பின்றித் தனி அறையில் வைத்தனர். அங்கு நான் இரவும் பகலும் என்னுள் உள்ள ஆண்டவனின் குரலுக்காக, அவன் எனக்கு என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, நான் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தேன்.  இந்தத் தனிமையில் எனது ஆதி அனுபூதி, எனது முதல் பாடம் எனக்குக் கிடைத்தது.

அப்பொழுது, நான் கைதாவதற்குச் சுமார் ஒரு மாதத்திற்கு முன் எனது வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, அவனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுவதன் பொருட்டு தனிமையிலிருந்து என்னுள்ளே நோக்கும்படி எனக்கு அவனது அழைப்புக் கிடைத்தது நினைவிற்கு வந்தது. எனக்குப் பலமில்லாததால் என்னால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. எனது வேலையைப் பெரிதாகக் கருதினேன்; எனது இதயத்தின் இறுமாப்பில், நான் இல்லாவிட்டால் வேலை கெட்டுவிடும், தோற்றுவிடும், மாய்ந்துபோகும் என்று எண்ணினேன். ஆகவே அதை விட முடிவதில்லை. இப்போது அவன் மீண்டும் என்னுடன் பேசி இவ்வாறு கூறுவதை அறிந்தேன்.  “நீ அறுக்க வலுவற்றிருந்த உனது தளைகளை உனக்காக நானே அறுத்து விட்டேன். ஏனெனில் நீ தொடர்ந்து அப்பணியில் இருக்க வேண்டுமென்பது எனது இச்சையன்று; அது ஒருபோதும் எனது நோக்கமாகவும் இருக்கவில்லை. நான் உனக்கு வேறு ஒரு வேலை வைத்திருக்கிறேன்; அதற்காகவே உன்னை இங்கு உன்னை இங்கு கொண்டுவந்துள்ளேன், நீயாகக் கற்றுக்கொள்ள முடியாததை உனக்குக் கற்றுக் கொடுக்கவும் உன்னை என் வேலைக்குப் பயிற்றவுமே நான் உன்னை இங்கு கொண்டுவந்துள்ளேன்.”

பிறகு அவன் கீதையை என் கைகளில் கொடுத்தான். அவனுடைய சக்தி என்னுள் புகுந்தது. என்னால் கீதையின் யோகத்தைப் பயில முடிந்தது. நான் கீதையைப் புத்திபூர்வமாக மட்டும் அறியவில்லை. ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கோரியதை, அவனுடைய வேலையைச் செய்ய ஆர்வமுறும் அனைவரிடமும் அவன் கோருவதை ஆத்மானுபவமாக உணர்ந்தேன். அவன் வேலையைச் செய்வோர் விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபட்டோராய், பலனைக் கோராமல் அவனுக்காகவே வினை செய்வோராய், தங்கள் சுய இச்சையைத் தியாகம் செய்துவிட்டு அவனுடைய கைகளில் அவன் ஆட்டுவித்தபடி ஆடும் உண்மையுள்ள கருவிகளாய், உயர்ந்தோர் – தாழ்ந்தோர், நண்பன் – எதிரி, வெற்றி – தோல்வி என்னும் வேறுபாடுகளற்று, அனைத்திலும் சம சித்தமுடையோராய், ஆயினும் அசட்டை சிறிதுமின்றி அவனது பணியைச் செய்வோராய் இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன்.

இந்து மதத்தின் பொருளை நான் உள்ளபடி உணர்ந்தேன். இந்து மதம் என்றும், சநாதன தர்மம் என்றும் நாம் அடிக்கடிப் பேசுகிறோம்; ஆனால் நம்முள் அதன் உண்மைத் தன்மையை அறிந்தோர் அனேகமாக யாரும் இல்லை. பிற சமயங்களெல்லாம் முதன்மையாக சில நம்பிக்கைகளையும் கொள்கைகளையுமே அடிப்படையாகக் கொண்டவை; ஆனால் சநாதன தர்மம் வாழ்வே ஆகும். சநாதன தர்மம் வெறுமனே நம்புவது அன்று. அது வாழ வேண்டிய உண்மை, இந்தத் தர்மமே மனித இனத்தின் கதிமோட்சத்திற்காகத் தொன்றுதொட்டு இத்தீபகற்பத்தின் ஒதுக்கத்தில் பேணிப் பாதுகாச்கப்பட்டு வந்துள்ளது. இந்த தர்மத்தை உலகிற்கு விளக்கவே இந்தியா எழுந்து கொண்டிருக்கிறாள். பிற நாடுகளைப்போல சுயநல நோக்கங்களுக்காகவும், வலுவடைந்தபோது வலுவற்றவர்களை மிதித்துத் துவைப்பதற்காகவும் அவள் எழவில்லை. தனது பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நித்திய ஜோதியை உலகம் முழுவதிலும் பரப்புவதற்காகவே பாரத மாதா எழுந்து கொண்டிருக்கிறாள். என்றுமே அவள் தனக்காக அல்லாமல் உலகத்திற்காகவே வாழ்ந்திருக்கிறாள்; இன்றும் அவள் பெருமையடைய வேண்டுமென்பது அவளுக்காகவன்று; அது உலகத்திற்காகவே.

ஆகவே அவன் எனக்கு காட்டிய இரண்டாவது விஷயம் பயில முடிந்தது. நான் கீதையைப் புத்திபூர்வமாக மட்டும் இது – அவன் என்னை இந்துமதத்தின் சாரமான உண்மையை அறியும்படி செய்தான். அவன் எனது சிறைக்காவலாளிகளின் மனத்தை மாற்றினான். அவர்கள் சிறை அதிகாரியான ஆங்கிலேயரிடம், “அவர் உள்ளே அடைபட்டுத் துன்புறுகிறார். காலையிலும் மாலையிலும் அரைமணி நேரம் வெளியே உலாவவாவது அவரை அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினர். அவ்வாறே ஏற்பாடாயிற்று. அவ்வாறு நான் உலவிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய பலம் என்னுள் மீண்டும் பிரவேசித்தது. பிற மனிதரிடமிருந்து என்னைப் பிரித்த சிறையை நோக்கினேன். அதன் உயர்ந்த சுவர்களால் நான் சிறைப்படவில்லை; இல்லை, வாசுதேவனே என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தான். எனது அறைக்கு முன்னாலிருந்த மரத்தின் கிளைகளுக்கு அடியில் உலவினேன். ஆனால் அங்கு நின்றது மரமன்று, வாசுதேவனே நின்றான்; ஸ்ரீ கிருஷ்ணனே அங்கு நின்று எனக்கு நிழல் தந்து கொண்டிருப்பதைக் கண்டேன். சிறைக் கதவின் கம்பிகளை, கதவிற்குப் பதிலாக வைத்திருந்த இரும்புக் கிராதிகளை நோக்கினேன். மீண்டும் வாசுதேவனையே கண்டேன். நாராயணனே காவலாளியாக நின்று என்னைக் காத்துக் கொண்டிருந்தான். எனக்குப் படுக்கையாகக் கொடுத்திருந்த முரட்டுக் கம்பளங்கள் மீது படுத்தேன்; அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணனுடைய, எனது நண்பனுடைய, எனது காதலனுடைய கரங்களே என்னை அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். இதுவே அவன் எனக்கு அருளிய ஆழ்ந்த காட்சியின் முதற்பலன்.

சிறையிலிருந்த திருடர்கள், கொலைகாரர்கள், மோசக்காரர்களை நோக்கினேன். அவர்களைப் பார்த்தபோது வாசுதேவனையே அங்கு கண்டேன்; அவ்விருளடைந்த ஆன்மாக்களிலும், தவறாகப் பயன்படுத்தப்பட்ட அவ்வுடல்களிலும் நாராயணனையே கண்டேன். இத்திருடர்கள் கொள்ளைக்காரர்களிடையேயும் தங்கள் பரிவாலும், அன்பாலும் அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் மேலோங்கி நின்ற அவர்களுடைய மனிதத்தன்மையாலும் என்னை நாணங்கொள்ளச் செய்தவர்கள் பலர் இருந்தனர். குறிப்பாக அவர்களிடையே நான் கண்ட என் நாட்டினனான எழுதப் படிக்கத் தெரியாத குடியானவன் ஒருவன் – சாதிச் செருக்கு அவனைக் கீழ்ச்சாதி என்னும் – கொள்ளைக் குற்றத்திற்காகப் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றிருந்த அவன் எனக்கு ஒரு மெய்யடியாராகவே தோன்றினான். மீண்டும் ஆண்டவன் என்னிடம் இவ்வாறு பேசினான்: ”இதோ இம்மக்களைப் பார்; அவர்கள் மத்தியில் எனது வேலையைச் சிறிது செய்யுமாறு உன்னை அனுப்பியுள்ளேன். இதுவே நான் உயர்த்திக் கொண்டிருக்கும் நாட்டினரின் இயல்பு; அதுவே நான் அவர்களை உயர்த்துவதற்கான காரணமும்”.

எங்கள் வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எங்களை மாஜிஸ்டிரேட் முன் நிறுத்தினார்கள். எனக்கு அதே அகக் காட்சி இங்கும் இருந்தது. அவன் என்னிடம் சொன்னான்: ”உன்னைச் சிறையில் தள்ளியபோது, நீ உள்ளம் தளர்ந்து ‘உனது பாதுகாப்பு எங்கே?’ என்று கூக்குரலிட்டாயல்லவா? இப்பொழுது மாஜிஸ்டிரேட்டைப் பார்; அரசாங்க வக்கீலைப் பார்”. நான் பார்த்தேன். நான் பார்த்தது மாஜிஸ்டிரேட்டை அல்ல; வாசுதேவனே, நாராயணனே நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அரசாங்க வக்கீலை நோக்கினேன்; அரசாங்கத் தரத்து வக்கீலை அங்கு காணவில்லை. கிருஷ்ணனே, எனது நண்பனும் காதலனுமான அவனே அங்கு உட்கார்ந்திருந்தான். அவன் என்னைப் பார்த்து முறுவலித்து, “இப்பொழுது நீ அஞ்சுகிறாயா? நான் எல்லா மனிதருள்ளும் இருக்கிறேன்; நானே அவர்களுடைய செயல்களையும் சொற்களையும் ஆள்கிறேன். இன்னும் எனது பாதுகாப்பு உனக்கு உண்டு; நீ ஏன் அஞ்ச வேண்டும்? உன் மீது கொண்டு வரப்பட்டுள்ள இந்த வழக்கை என்னிடம் விட்டுவிடு. அது உன் பொறுப்பன்று. இந்த விசாரணைக்காக உன்னை நான் இங்கு கொண்டுவரவில்லை; வெறொன்றிற்காகவே கொண்டுவந்துள்ளேன். இந்த வழக்கும்கூட எனது வேலைக்கு ஒரு சாதனமேயன்றி, வேறன்று.”

அதன்மேல் ஜில்லா நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது எனது வக்கீலுக்கு உதவியாக இருக்க, எனக்கு விரோதமான சாட்சியத்தில் பொய்யானவை எவை, சாட்சிகளை எந்த விஷயங்களில் குறுக்கு விசாரணை செய்யலாம் என்பன போன்ற பல குறிப்புகளை எழுதத் தொடங்கினேன். அப்பொழுது நான் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. எனக்காக எதிர் வழக்காடுவதற்குச் செய்யப் பட்டிருந்த ஏற்பாடு திடீரென மாற்றப்பட்டது. வேறொரு வழக்கறிஞர் எனது வழக்கை நடத்த முன்வந்தார். அவர் எனது நண்பர். அவர் வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எதிர்பாராத விதமாக அவர் வந்தார். தமது மற்ற வழக்குகளையெல்லாம், பிற அலுவல்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு என்னைக் காப்பாற்ற பல மாதங்கள் இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் உழைத்து, தமது ஆரோக்கியத்தையே கெடுத்துக்கொண்ட அவருடைய பெயரை நீங்களெல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரே ஸ்ரீயுத சித்தரஞ்சன் தாசர்.

அவரைப் பார்த்ததும் எனக்கு எனது வழக்கைப் பற்றி திருப்தி உண்டாயிற்று ஆனால் வக்கீலுக்கான குறிப்புக்களை எழுதுவது அவசியமென்றே இன்னும் நினைத்தேன். அப்பொழுது உள்ளிருந்து செய்தி வந்தது: ”இந்த மனிதனே உனது காலைச் சுற்றி வீசப்பட்ட வலையை அறுத்து உன்னை மீட்கப் போகிறவன். அந்தத் தாள்களைத் தூர வை, அவனுக்கு ஆலோசனை கூற வேண்டியது நீ அன்று. நான் கூறுவேன்.”

நான் குறிப்புகள் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அப்போதிலிருந்து நான் வழக்கு விஷயமாக எனது மக்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவோ எந்தவிதமான ஆலோசனை கூறவோ இல்லை. என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டபோதும்கூட என்னுடைய பதில் வழக்கிற்கு உதவியாக இருக்கவில்லை என்பதைக் கண்டேன். வழக்கை அவரிடமே விட்டுவிட்டேன். அவரும் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொண்டார், அதன் பலனை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள்.

எனக்கு அவன் கட்டளை என்ன என்பது பற்றி எனக்குச் சந்தேகமே ஏற்படவில்லை. ஏனெனில் அவன் குரலை அடிக்கடி கேட்டேன். என் உள்ளிருந்து அவன் இவ்வாறு கூறினான்:

“நான் நடத்திச் செல்கிறேன்; ஆகவே, அஞ்சாதே. எதற்காக உன்னைச் சிறைக்குக் கொண்டு வந்தேனோ அந்த உனது வேலையின் மீது கவனம் செலுத்து. நீ வெளியே வந்ததும் உனக்கு அச்சமோ தயக்கமோ கூடாது என்பதை நினைவில் வை. நானே இதைச் செய்கிறேன், நீயோ வேறு யாரோ அன்று என்பதை மறவாதே. ஆகவே, எத்தனை மேகங்கள் சூழ்ந்தாலும், என்ன ஆபத்துகள் துன்பங்கள் நேரிட்டாலும், என்ன கஷ்டங்கள் அசாத்தியமானவை எதிர்ப்பட்டாலும் கலங்காதே. முடியாதவை, கஷ்டமானவை என எவையும் இல்லை. நாட்டினிடை, அதன் எழுச்சியினிடை நானே இருக்கிறேன். நான் வாசுதேவன், நான் நாராயணன்; நான் நிச்சயிப்பதே நடக்கும், பிறர் நிச்சயிப்பவை அல்ல. நான் நடக்க வேண்டுமென்று நினைப்பதை எந்த மனித பலமும் தடுத்து நிறுத்த முடியாது.”

இதற்கிடையில், அவன் என்னைத் தனிமைச் சிறையிலிருந்து கொண்டுவந்து என்னோடு குற்றஞ் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் வைத்தான். இன்று எனது தியாகத்தைப் பற்றியும் எனது தேசபக்தியைப் பற்றியும் நீங்கள் அதிகமாகப் பாராட்டிப் பேசினீர்கள். நான் சிறையிலிருந்து வெளிவந்ததிலிருந்து இத்தகைய பேச்சைக் கேட்டுவருகிறேன். அதைக் கேட்கும்போது எனக்குச் சங்கடமாகவும், சிறிது வேதனையாகவும் இருக்கிறது. ஏனெனில், எனது பலவீனம் எனக்குத் தெரியும். நான் குறைகளுடையவன், சறுக்கி விழக் கூடியவன். எனது குறைகளை நான் முன்பே அறிவேன். எனினும், எனது தனிமையில் அவை எல்லாம் ஒன்றுபோலப் படையெடுத்தபோது அவற்றை முழுவதுமாக நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. அப்பொழுது மனிதனாகிய நான் பலவீனமானவன், குறையுடைய, அபூரணமான கருவி, ஓர் உயர்ந்த சக்தி என்னுள் புகும்போதே நான் வலிமை பெறுகிறேன் என்பதை அறிந்தேன்.

அப்பொழுதுதான் நான் இவ்விளைஞர் மத்தியில் வைக்கப்பட்டேன். அவர்களுள் பலரிடம் பெரும் துணிவையும் அசாதாரணத் தியாகத்தையும் கண்டேன்; அவற்றின் முன்பு நான் எம்மாத்திரம் என்று உணர்ந்தேன். அவர்களுள் ஒன்றிரண்டுபேர் சக்தியிலும் குணச் சிறப்பிலும் மட்டுமல்லாமல்- அப்படிப்பட்டவர்கள் பலர் இருந்தனர். நான் பெருமை கொண்டிருந்த அறிவுத் திறன் வளர்வதற்கான வாய்ப்பிலும் என்னிலும் சிறந்தவர்களாக இருந்தனர். அவன் என்னிடம் இவ்வாறு கூறினான்: ”இந்த இளம் தலைமுறையே, இந்தப் புதிய ஆற்றல் மிக்க சமுதாயமே, எனது ஆணையினால் எழுந்து கொண்டிருப்பது. அவர்கள் உன்னிலும் பெரியவர்கள். பின் எதற்காக நீ அஞ்ச வேண்டும்? நீ விலகிக் கொண்டாலும், உறங்கிவிட்டாலும் அப்பொழுதும் இந்த வேலை நடக்கும். நாளை உன்னை அப்பால் எறிந்துவிட்டால் அப்பொழுதும் இந்த வேலை நடக்கும்; இதோ இந்த இளைஞர்கள் உனது வேலையை எடுத்துக்கொண்டு நீ செய்ததைவிட அபாரத் திறமையோடு அதைச் செய்வார்கள். இந்த நாட்டை உயர்த்தக்கூடிய வாக்கை, அதைச் சொல்வதற்கு வேண்டிய பலத்தை மட்டுமே நீ என்னிடமிருந்து பெற்றிருக்கிறாய்.” இதுவே அடுத்து அவன் என்னிடம் சொன்ன செய்தி.

பிறகு திடீரென ஒரு நிகழ்ச்சி நடந்தது. கணப்பொழுதில் என்னைத் தனிமைச் சிறையின் தனிமையில் தள்ளினர். அத்தனிமைச் சிறைவாசத்தின்போது எனக்கு ஏற்பட்டதைச் சொல்வதற்கு ஆணை பிறக்கவில்லை, ஆனால் இதை மட்டும் சொல்லலாம். ஒவ்வொரு நாளும் அவன் தனது அற்புதங்களை எனக்குக் காட்டி, இந்துமதம் முற்றிலும் உண்மை என்பதை நான் அறியும்படி செய்தான். முன்பு எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. நான் இங்கிலாந்தில் அந்நியக் கருத்துக்களிடையே, முற்றிலும் அந்நியச் சூழ்நிலையில் வளர்ந்தேன். முன்பு நான் இந்து மதத்திலுள்ள பல விஷயங்கனை வெறும் கற்பனைகள் என்றும், கனவுகள் என்றும், அதில் சொல்லப்பட்டிருப்பவற்றுள் பல மதி மயக்கத்தில் எழுந்தவை என்றும், வெறும் மாயை என்றும் எண்ணியிருந்தேன். ஆனால், இப்பொழுது ஒவ்வொரு நாளும் என் மனத்திலும், என் உள்ளத்திலும். என் உடலிலும் இந்து மதத்தின் உண்மைகளை உணரலானேன். அவை எனக்கு உயிருள்ள அனுபவங்களாயின; அறிவியலால் விளக்கம் கூற முடியாத பல விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. முதலில் ஆண்டவனை அணுகியபோது நான் முற்றிலும் ஒரு பக்தனுடைய பான்மையுடனோ ஒரு ஞானியினுடைய பான்மையுடனோ அணுகவில்லை. வெகு நாளைக்கு முன், சுதேசி இயக்கம் தொடங்கி நான் பொதுவாழ்விற்கு இழுக்கப்படுவதற்கு முன், நான் பரோடாவில் இருக்கும்போது. அவனை அணுகினேன்.

அந்தச் சமயத்தில் நான் கடவுளை அணுகும்போது அவன் இருக்கிறான் என்ற உயிருள்ள நம்பிக்கை என்னிடம் இருந்தது என்று சொல்ல முடியாது. என்னிடம் உலோகாதயக் கருத்துகளும், நாத்திக எண்ணங்களும், சந்தேக மனப்பான்மையும் இடம் பெற்றிருந்தன; கடவுள் ஒருவன் இருக்கிறான் என்ற நிச்சயம் எனக்கில்லை. அவனுடைய சாந்நித்தியத்தை நான் சிறிதும் உணரவில்லை. எனினும், ஏதோ ஒன்று, வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் உண்மையின்பாலும், இந்து மதத்திலுள்ள உண்மையின்பாலும் என்னை ஈர்த்தது. இந்த யோகத்தில் எங்கோ ஒரு மகத்தான உண்மை இருக்க வேண்டும், வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மதத்தில் ஒரு மாபெரும் உண்மை இருக்க வேண்டும் என்று எண்ணலானேன். ஆகவே, எனது கருத்து சரிதானா என்று அறிவதற்காக யோகத்தை அணுகி அதைச் சாதனை செய்யத் தீர்மானித்தபோது நான் இந்தப் பாவனையுடனும் இந்தப் பிரார்த்தனையுடனுமே அவனை அணுகினேன்: “நீ இருப்பது உண்மையானால் நீ என் உள்ளத்தை அறிவாய். முக்தியையோ பிறர் கேட்கும் வேறு வரங்களையோ நான் உன்னிடம் கேட்கவில்லை. இந்தச் சமுதாயத்தை உயர்த்துவதற்கு வேண்டிய பலத்தையே நான் உன்னிடம் கேட்கிறேன்; நான் அன்பு செய்யும் இந்த மக்களுக்காக வாழவும், அவர்களுக்காக உழைக்கவும், அவர்களுக்கு எனது வாழ்வை அர்ப்பணிக்கவும் அனுமதி கொடு என்று மட்டுமே உன்னைப் பிரார்த்திக்கிறேன்”.

யோக சித்திக்காக நான் நீண்ட காலம் முயற்சி செய்தேன்; இறுதியில் சித்தியும் பெற்றேன். ஆனால் நான் மிக அதிகமாக விரும்பிய விஷயத்தில் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. சிறைச்சாலையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அந்தத் தனிமையில் அதைத் தரும்படி மீண்டும் வேண்டினேன். நான் இவ்வாறு அவனிடமும் முறையிட்டேன்:  “எனக்கு உனது ஆவேசத்தைத் தா. எந்த வேலையைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதை எதனால் அறிய முடியவில்லை எனக்கு ஒரு திருவாக்குக் கொடு.”

யோகத்தில் அவனுடன் உட்கலந்தபோது இரு திருவாக்குகள் கிடைத்தன. முதல் வாக்காவது:  “நான் உனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறேன். இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்கு உதவுவதே அந்த வேலை. விரைவிலேயே நீ சிறையை விட்டு வெளியேறும் நாள் வரும். ஏனெனில், இந்தத் தடவை நீ தண்டிக்கப்பட வேண்டுமென்பதோ பிறர் செய்ய வேண்டிய திருப்பதைப்போல, நாட்டிற்காக நீயும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதோ எனது இச்சை அன்று. நான் உன்னை எனது வேலையைச் செய்ய அழைத்திருக்கிறேன்; நீ வேண்டிக்கொண்ட ஆவேசம் அதுதான். போய் அந்த வேலையைச் செய்வதற்காக இதோ எனது ஆதேசத்தைத் தந்தேன்.”

இரண்டாவது திருவாக்காவது: “உனது ஓராண்டுச் சிறைவாசத்தில் உனக்குச் சில விஷயங்கள் காட்டப்பட்டன. இந்து மதத்தைப் பற்றி உனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன; இப்போது அதன் உண்மை உனக்குக் காட்டப்பட்டது, இந்து மதத்தையே நான் உலகின் முன் உயர்த்திக் கொண்டிருக்கிறேன். இந்த மதத்தையே நான் ரிஷிகள் மூலமாகவும் பக்தர்கள், அவதார புருஷர்கள் மூலமாகவும் பூரணமாக்கி அபிவிருத்தி செய்துள்ளேன். இந்த மதம் இப்பொழுது உலக நாடுகளிடையே எனது வேலையைச் செய்யப் சேய்யப்போகிறது. எனது வாக்கை உலக மக்களிடம் எடுத்துச் செல்லவே நான் இந்த நாட்டை உயர்த்திக் கொண்டிருக்கிறேன். அந்த வாக்கே சநாதன தர்மம். அதை நீ முன்பு உண் மையாக அறியவில்லை; இப்போது அதன் உண்மையை உனக்கு நான் காட்டியுள்ளேன். உன்னிடமிருந்த உலோகாதயக் கருத்துகளுக்கு, உன்னிடமிருந்த ஐயுறவுவாதத்திற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. உனக்குத் திருப்தி ஏற் படும் வகையில் உள்ளும் புறமும், தூலமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உனக்கு அத்தாட்சிகள் தந்துள்ளேன்; அவை உனக்குத் திருப்தியளித்துள்ளன. நீ வெளியே போகும்போது உனது நாட்டினருக்கு,  ‘அவர்கள் சநாதன தர்மத்திற்காக எழுகின்றார்கள்’ என்ற வார்த்தையைச் சொல். உலகிற்குப் பணி செய்வதற்காகவே நான் அவர்களுக்குச் சுதந்திரம் தருகின்றேன். ஆகவே, இந்தியா எழுகின்றது என்று சொன்னால் சநாதன தர்மம் எழுகின்றது என்றுதான் பொருள்; இந்தியா பெருமை பெறும் என்று சொன்னால், பாரதமாதா அகண்ட பாரதமாக விரிவடைவாள் என்று சொன்னால், சநாதன தர்மம் விரிந்து பரவும் என்றுதான் பொருள். பாரத தேவி தர்மத்திற்காகவே, தர்மத்தாலேயே வாழ்கிறாள். சமயத்தை மேன்மைப்படுத்துவது என்றால் நாட்டை மேன்மைப்படுத்துவது என்றுதான் பொருள். நான் எங்கும் இருக்கிறேன். எல்லாரிடத்திலும், எல்லாவற்றிலும் இருக்கிறேன், என்பதையும், நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன், நாட்டிற்காகப் போராடுவோரிடை மட்டுமல்லாமல், அவர்களை எதிர்த்து அவர்களுடைய பாதையில் தடையாக நிற்போரிடைபும் இருக்கிறேன் என்பதையும் நான் உனக்குக் காட்டியுள்ளேன். நான் எல்லாரிடமும் வேலை செய்கிறேன். மனிதர்கள் என்ன நினைத்தாலும், என்ன செய்தாலும் அது எனது காரியத்திற்கு உதவியாகவே முடியும். எதிர்த்து நிற்போரும் என் வேலையையே செய்கிறார்கள். அவர்கள் எனது பகைவர்கள் அல்லர். அவர்களும் எனது கருவிகளே ஆவர். உனது செயல்களிலெல்லாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே நீ முன்னேறிக் கொண்டிருக்கிறாய். ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்கிறாய். ஒரு பயனைக் கருதி நீ முயற்சி செய்கிறாய். உனது முயற்சி கருதியதற்கு வேறான அல்லது எதிரான பயனை உண்டாக்க உதவுகிறது. பராசக்தியே இப்போது இந்த சமுதாயத்தில் புகுந்துள்ளாள்; நீண்ட காலமாகவே இந்த எழுச்சியை நான் ஆயத்தம் செய்துவந்துள்ளேன்; இப் பொழுது அதற்குரிய நேரம் வந்துவிட்டது; நானே அதை அதன் வெற்றிக்கு நடத்திச் செல்வேன்.”

ஆகவே, இதையே நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய திருக்கிறது. உங்கள் கழகத்தின் பெயர்  ‘தர்ம ரக்ஷணி சபை’ என்பதாகும். தர்மத்தைப் பாதுகாத்து அதை உயர்த்துதலே, நமது முன்னால் உள்ள கடமை, ஆனால் இந்து சமயமாவது யாது? நாம் சநாதனம் – நித்தியமானது – என்று கூறும் இம் மதம் என்ன?

இந்த இந்து சமுதாயம் அதைக் காப்பாற்றி வந்ததனாலும் இமயமலையாலும் கடல்களாலும் சூழப்பட்ட இத் தீபகற்பகத்தில் அது வளர்ந்ததனாலும், இப்பழமையான புனிதபூமியில் ஆர்ய இனத்தின் பாதுகாப்பில் அது பல யுகங்களாக இருந்து வந்தமையாலும், அதை இந்து மதம் என அழைக்கிறோம். ஆனால், உண்மையில் அது ஒரு நாட்டின் எல்லைக்குள் அடங்கிய ஒன்று அன்று; உலகின் ஒரு சிறு பகுதிக்கே அது விசேஷமாகவும், என்றென்றும் உரிமையானது அன்று. நாம் இந்து மதம் என அழைக்கும் அது உண்மையில் சநாதனமான மதம். ஏனெனில் அது எல்லா மதங்களையும் தழுவிக்கொண்டுள்ள அகண்ட மதமாகும். ஒரு மதம் அகண்டமானதாய் இல்லாவிட்டால் அது சநாதன மதமாக இருக்க முடியாது. குறுகிய மதம், பிளவுபடுத்தும் சாதி, வகுப்புகளில் குறுகிய மதம் இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே வாழ முடியும். இந்த மதம் ஒன்றே அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தத்துவவாதக் கொள்கைகளையும் உள்ளடக்கிக்கொண்டும், அவற்றை முந்திக்கொண்டும் சடவாதத்தை வெற்றிகொள்ள முடியும். இந்த மதம் ஒன்றே கடவுள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவன் என்பதை மக்கட்குலத்தின் உணர்வில் அழுத்தமாகப் பதியச் செய்வதாயும் மனிதன் கடவுளை அடைவதற்கான எல்லா வழிகளையும் தன்னுட் கொண்டதாயும் உள்ளது. இந்த மதம் ஒன்றே, ‘அவன் எல்லா மனிதரிடத்தும் எல்லாப் பொருள்களிடத்தும் உறைகின்றான். நாம் அவனிடத்தேதான் இயங்கிறோம்’ என்னும் உண்மையை – எல்லா மதங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் இவ்வுண்மையை – ஒவ்வொரு கணமும் வற்புறுத்திகொண்டிருக்கிறது. இந்த மதம் ஒன்றே இவ்வுண்மையை புரிந்துகொள்வதோடும் நம்புவதோடும் நின்று விடாமல் நமது ஜீவனின் ஒவ்வொரு பாகத்தாலும் அனுபவபூர்வமாக அதை அறிவதற்கு உதவுகிறது.

இந்த மதம் ஒன்றே உலக மக்களுக்கு உலகின் உண்மைத் தன்மையை, அது வாசதேவனின் லீலை என்பதைக் காட்டுகிறது, இந்த மதம் ஒன்றே உலகலீலையின் மிக நுட்பமான சட்டங்களையும் மிகப் பெருமிதங்கொண்ட விதிமுறைகளையும் நமக்கு எடுத்துக்காட்டி லீலையில் நமது பாகத்தைச் சிறப்பாகச் செய்ய வழிகாட்டுகிறது. இந்த மதம் ஒன்றே வாழ்க்கையின் ஒரு சிறு அம்சத்தைக்கூட சமயத்திலிருந்து பிரிக்கவில்லை; இது ஒன்றே அமரநிலை என்பது என்ன என்பதை உணர்த்தி மரணத்தைப் பொய்யாக்கிவிடுகிறது.

இதுவே இன்று உங்களிடம் பேசுவதற்காக எனக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தை. நான் பேச நினைத்திருந்தது விலக்கப்பட்டுவிட்டது; எனக்கு கொடுக்கப்பட்டதைவிட அதிகமாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை; எனக்குப் பேசக் கொடுத்த வார்த்தையை மட்டுமே என்னால் பேச முடியும். அந்த வார்த்தை இப்பொழுது முடிந்துவிட்டது. இதே சக்தி என்னைத் தூண்டியபடி நான் முன்பு ஒரு தடவை பேசினேன். அப்பொழுது இந்த இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்றும், தேசியம் அரசியல் அன்று, அது சமயம், ஒரு சமயக் கொள்கை, ஒரு சமய நம்பிக்கை என்றும் சொன்னேன். அதையே மீண்டும் சொல்கிறேன், ஆனால் வேறு வார்த்தைகளில் சொல்கிறேன்.

தேசீயம் ஒரு சமயம், சமயக்கொள்கை. சமய நம்பிக்கை என்று சொல்லவில்லை. சநாதன தர்மமே நமக்குத் தேசியம் என்று சொல்கிறேன். இந்து இனம் சநாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனுடனேயே அது இயங்குகிறது, அதனுடனேயே அது வளர்கிறது. சநாதன தர்மம் நலியும்போது இந்த இனமும் நலிகிறது.

சநாதன தர்மம் அழியக் கூடுமானால் அதனுடன் இந்த இனமும் அழிந்து போகும். சநாதன தர்மம் – அதுவே தேசீயம். இதுவே நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி.

$$$

3 thoughts on “அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s