-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம்- 10
கர்மயோகின் – சந்திர நாகூர்
அரவிந்தர் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்த பிறகு அப்பொழுது பிரபலமாக இருந்த ‘பெங்காலி’ என்ற தினசரியின் ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். அந்த பத்திரிகையின் மூலம் அவர் தனது வழக்குs செலவுக்காக அவரது தங்கை சரோஜினி நிதி திரட்டியபோது அதற்கு சிறிதும் பெரிதுமாக பணம் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். எளிய ஆனால் அழகிய வார்த்தைகளை கொண்ட கடிதமது. அக்கடிதம்…
ஐயா, எனக்கு கஷ்டமான நேரத்தில் உதவி செய்த அனைவருக்கும் உங்கள் பத்திரிகையின் மூலம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த, தெரியாத நண்பர்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்றதை வழக்கு நிதிக்குக் கொடுத்துள்ளனர். அத்தனை பேரின் பெயர்களைக் கூட தெரிந்துகொள்ள முடியாதபடி எண்ணற்றோர் நிதி வழங்கியுள்ளனர். நான் வெளியே வந்த பிறகு ஏராளமான தந்திகளும் கடிதங்களும் வந்தன. எல்லாவற்றிற்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாதபடி எண்ணற்றவை அவை. அத்தனை பேருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியாத காரணத்தால், இந்த பொதுவான நன்றி நவிலலையே தனிப்பட்டதாகக் கருதி ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் செய்த சிறிய பணிக்குப் பதிலாக என் நாட்டு மக்கள் என் மீது காட்டிய அன்பு மிகப் பெரியது. நான் தப்பிப் பிழைத்ததற்கு எந்த மனித முயற்சியையும் காரணமாகக் கூற முடியாது. நம் அனைவரின் அன்னையாகிய அவள்தான் என்னைக் காத்தாள். அவளது அரவணைப்புதான் என்னை துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் காத்தது. இரண்டாவதாக, நான் கைது செய்யப்பட்ட பிறகு ஆயிரக் கணக்கானோர் என்னைக் காக்கும்படி அவளிடம் செய்த பிரார்த்தனை. என் நாட்டு மக்கள் மீது நான் கொண்ட அன்புதான் இந்த அபாயத்தை நோக்கித் தள்ளியது. என் நாட்டு மக்கள் என் மீது கொண்ட அன்புதான் என்னைப் பாதுகாப்பாக மீட்டது. -அரவிந்த கோஷ் 6, கல்லூரி சதுக்கம், 1909 மே 14
அரவிந்தருக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபோது அவர் முற்றிலும் மாறியவராக இருந்தார். அதே வேளையில் வெளியிலும் சூழ்நிலை மாறிவிட்டிருந்தது. அவர் சிறைப்பட்ட காலத்தில் ‘வந்தே மாதரம்’ பத்திரிகை நின்று விட்டிருந்தது. திலகர் பெருமானுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து பர்மாவுக்கு நாடு கடத்தி இருந்தனர். தேசியவாதிகள், புரட்சியாளர்களின் மீது அரசு கடுமையான அடக்குமுறையை ஏவி ஒடுக்கி இருந்தது. மேலோட்டமான அமைதிக்கு கீழ் அதிருப்தி நிலவியது. ஆனால் அது, இங்கொன்றும் அங்கொன்றுமான வன்முறைச் சம்பவங்களாகவேயன்றி பெரிதாக வெளிப்படவில்லை.
அரவிந்தர் 1909 மே 30 தேதி உத்தரபாராவில் உரை நிகழ்த்திய போது பத்தாயிரம் பேர் அதை அமைதியாகக் கேட்டனர். கைதுக்கு முன்னும் இப்போதும் உள்ள முரணான சூழ்நிலையைப் பற்றித் தான் அந்த உரையில் துவக்கத்தில் பேசினார். அவர் சொன்னார்:
“நான் இங்கு வந்து ஓராண்டுக்கும் மேலான காலம் ஆகிறது. அப்போது நான் தனியாக வரவில்லை. தேசியத்தை வலியுறுத்திக் கூறிய மகான் என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இன்று அவர் நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சிறைப்பட்டிருக்கிறார். என்னுடன் அப்போதிருந்த பல சகாக்களும் இப்போது இல்லை. தேசத்தின் மீது வீசிய புயலில் அவர்கள் சிதறி இருக்கிறார்கள்”… “நான் சிறைக்குச் செல்லும்போது ‘வந்தே மாதரம்’ என்ற கோஷம் தேசம் முழுக்கவும் உயிர்ப்புடன் இருந்தது. அவமானத்திலிருந்து விடுபட்டு ஆயிரக்கணக்கானோர் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். தேசம் நம்பிக்கையுடன் உயிர் பெற்றது. நான் சிறையில் இருந்து வெளிவந்ததும் அந்த கோஷத்தை எதிர்பார்த்தேன். ஆனால் அதற்குப் பதிலாக ஆழ்ந்த அமைதியைக் கண்டேன். தேசத்தின் மீது அமைதி கவிழ்ந்திருக்கிறது. தேச பக்தர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். பிரகாசமான சொர்க்கபுரியாக நாம் எதிர்காலத்தைப் பார்த்தோம். இப்போதோ இருண்டு, இடியும் மின்னலுமாக இருக்கிறது. எந்தத் திசையில் போவது என்று எவருக்கும் தெரியவில்லை. நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வியே எல்லாத் திசைகளிலும் எழுகிறது. அடுத்து என்ன செய்வது, எந்தத் திசையில் நகர்வது என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெரியும். நம்மிடையே நம்பிக்கையும் கோஷத்தையும் எழுப்பியது சர்வ வல்லமை உடைய இறைசக்தி. அதே சக்திதான் இன்று அமைதியைக் கவிழ்த்துள்ளது”… “நாம் நிதானித்து நமக்குள்ளே நோக்க வேண்டும். அவளது இச்சை என்னென்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அமைதியைக் கண்டு நான் நிராசை அடையவில்லை. ஏனெனில் சிறையிலே இந்த அமைதிக்கு நான் பழக்கப்பட்டு இருந்தேன். நீண்ட தனிமைச் சிறைவாசத்தின் போது இந்த அமைதிக்கும் நிச்சலனத்திற்கும் நான் பழக்கப்பட்டுள்ளேன்”.
பிறகு அரவிந்தர் சிறையில் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களைப் பற்றியும் ஹிந்து மதத்தின் உண்மையான சாரத்தை அவர் தெரிந்து கொண்டதைப் பற்றியும் எடுத்துக் கூறினார். அவர் சொன்னார்:
“ஹிந்து மதம் என்றால் என்னவென்று நான் உணர்ந்து கொண்டேன். நாம் அடிக்கடி ஹிந்து மதம் என்றும் சனாதன தர்மம் என்றும் பேசுகிறோம். ஆனால் நம்மில் வெகு சிலரே அந்த மதத்தை உண்மையில் தெரிந்து வைத்துள்ளோம்.....” “.... நாட்கள் செல்லச் செல்ல அவர் தனது அற்புதங்களை எனக்கு காட்டினார். ஹிந்து மதத்தின் உண்மையை என்னை உணரச் செய்தார். அதற்கு முன் எனக்கு ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. நான் இங்கிலாந்தில் முற்றிலும் அந்நியமான சூழ்நிலையில், அந்நியமான கருத்துக்களுடன் வளர்க்கப்பட்டேன். ஹிந்து மதத்தில் உள்ள பல விஷயங்கள் கற்பனைகளென்றும் கனவுகளென்றும் ஏமாற்று, மாயை என்றும் நம்பி இருந்தேன். ஆனால் இப்பொழுது நாட்கள் செல்லச் செல்ல ஹிந்து மதத்தின் உண்மைகளை என்னுடைய மனதில், என்னுடைய புத்தியில், என்னுடைய உடலில் உணர்ந்துகொண்டே வருகிறேன். அது எனக்கொரு வாழும் அனுபவமாக இருக்கிறது. அறிவியல் சொல்லாத பல விஷயங்களை அது எனக்குப் புரிய வைக்கிறது. நான் முதன்முதலில் அவனை அணுகியபோது ஒரு பக்தனைப் போலவோ ஒரு ஞானியைப் போலவோ அணுகவில்லை. சுதேசி இயக்கம் தொடங்குவதற்கு முன் நான் பரோடாவில் இருந்த காலத்தில் அவனை அணுகினேன். அதனால்தான் நான் பொது வாழ்க்கைக்கு வந்தேன்.” “நான் இறைவனை அணுகும்போது நம்பிக்கையற்றவனாக இருந்தேன். கண்ணுக்குத் தெரியாத கடவுளை ஏற்க மறுத்து, நாஸ்திகவாதியாக இருந்தேன். இறைவன் இருக்கிறான் என்றும்கூடத் தெரியாதவனாக இருந்தேன். அவர் இருப்பதை உணராதவனாக இருந்தேன். அப்படி இருந்த போதிலும் ஏதோ ஒன்று வேதத்தின்பால் கீதையின்பால் ஹிந்து மதத்தின் உண்மையை நோக்கி என்னை ஈர்த்தது. ஏதோ ஒரு வலிமையான உண்மை இந்த யோக மார்க்கத்தில் எங்கோ இருக்கிறது, வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மதத்தில் ஓர் உண்மை புதைந்திருக்கிறது என்று உணர்ந்தேன். உணர்ந்தது உண்மைதானா என்று அறிய, யோக சாதனைகளில் ஈடுபடத் தொடங்கினேன். அதில் ஈடுபடத் தொடங்கும்போது ‘இறைவா என் மனம் உனக்குத் தெரியும். நான் முக்தியை வேண்டவில்லை. மற்றவர்களைப் போல வேறு எதையும் நான் கேட்கவில்லை. இந்த தேசத்தை உயர்த்துவதற்கு எனக்கு வலிமையைத் தா. நான் நேசிக்கும் இந்த நாட்டு மக்களுக்காகப் பணி செய்யவும், அவர்களுக்காகவே வாழவும், அவர்களுக்காகவே என் வாழ்க்கை அர்ப்பணம் செய்யவும், எனக்கு வல்லமை தா’ என்ற பிரார்த்தனையுடன் ஆரம்பித்தேன்”… “நீண்ட காலம் யோக சாதனையில் ஈடுபட்டு ஓரளவு முன்னேற்றமும் கண்டேன். ஆனால் அது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. தனிமைச் சிறையில் இருந்தபோது மீண்டும் கேட்டேன், ‘எனக்கு வழிகாட்டு. எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அது பற்றிய செய்தியைத் தா’ என்று அவரிடம் இறைஞ்சினேன். தியானத்தில் எனக்கு இரண்டு செய்திகள் கிடைத்தன. முதல் செய்தி: ‘இந்த தேசத்தை உயர்த்த வேண்டும். அதற்காக நீ பணி செய்ய வேண்டுமென்றேன். சிறையில் இருந்து வெளியே போவாய். நீ மற்றவர்களைப் போல சிறையில் கட்டப்பட்டு அதன் மூலம் தேசம் தொண்டாற்றி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல. உனக்கென ஒரு பணி இருக்கிறது. அதற்கான செய்தியை நான் உனக்குத் தருகிறேன். அதை முன்னெடுத்துச் சென்று என் பணியை செய்”… “இரண்டாவது செய்தி: ‘தனிமைச் சிறையில் இருந்த போது சில விஷயங்களை உனக்குக் காட்டி இருக்கிறேன். உனக்கிருந்த பல சந்தேகங்களைப் போக்கி இதுதான் உண்மையான ஹிந்து மதம் என்று காட்டி இருக்கிறேன். இந்த மதத்தைத் தான் உலகத்தின் முன்பு நான் உயர்த்த இருக்கிறேன். அதை ரிஷிகள், மகான்கள், அவதாரங்கள் மூலம் செம்மைப்படுத்தி இருக்கிறேன். அது உலகத்தில் தன் பணியைச் செய்யப் போகிறது. இந்த தேசத்தை உயர்த்துவதன் மூலம் உலகிற்கு என் செய்தியைத் தருகிறேன். அது, சனாதன தர்மம். அழியாத, நிரந்தரமான மதம். அது இதுவரை உனக்கு உண்மையில் தெரியாது. அதை உனக்குக் காட்டியிருக்கிறேன். உனக்குள் இந்த நாஸ்திக வாதத்திற்கு, அவநம்பிக்கைகளுக்கு பதில் அளித்திருக்கிறேன். அதற்காக சான்றுகளை நீ திருப்தி அடையும்படி உனக்குள்ளேயும் வெளியேயும் அறிவியல் ரீதியாகவும் அதற்கு அப்பாற்பட்டும் கட்டி இருக்கிறேன். எனவே நீ உன் தேசத்து மக்களிடம் போய் கூறு, சனாதன தர்மத்திற்காக தான் அவர்கள் எழுச்சி பெற வேண்டும். அந்த எழுச்சி அவர்களுக்காக அல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்காக”… “ஹிந்து மதம் என்றால் என்ன? சாஸ்வதமானது என்று நாம் அழைக்கும் சனாதன மதம் என்பது எது? முப்புரமும் கடல்களால் சூழப்பட்டு இமயமலையை ஒருபுறம் கொண்ட பழமையான இந்தப் புண்ணிய பூமி ஹிந்து தேசம். இந்த தேசத்தில் ஆரிய இனத்தவரால் காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால் இது ஹிந்து மதம். ஆனால் இது ஒரு தேசத்துக்குள்ளோ அல்லது புவிப் பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளோ கட்டுப்பட்டதல்ல. நாம் ஹிந்து மதம் என்று சொல்வது உண்மையில் எப்பொழுதும் இருக்கக்கூடிய மதம். ஏனெனில் அது எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் உலக மதம். எந்த ஒரு மதமும் எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அது உலக மதமாக, உலகம் தழுவிய மதமாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான, குறுகலான மதம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறும் வரையில் மட்டுமே உயிருடன் இருக்கும்”.
- காண்க: உத்தர்பாரா பேருரை
உத்தரபாரா உரையில் உள்ள அற்புதமான வார்த்தைகள், அரவிந்தரின் செயல்களுக்குப் பின்னணியில் இருந்த அவரது புரிதல்கள், தேசியம், மதம் பற்றிய உண்மையான அர்த்தத்தை நமக்குப் புரிய வைக்கின்றன. அவர் அதன் பிறகு தன் உள்மனக் குரலை – தெய்வீகக் கட்டளையை, தெய்வச் செய்தியை – மட்டுமே நம்பி தன் செயல்களை அமைத்துக் கொண்டார். சிக்கலான ஒவ்வொரு சமயத்திலும் அவர் அந்த தெய்வக் கட்டளையை ஏற்றுப் பணிந்தார். அதே வேளையில் சனாதன தர்மம் என்பது ஒரு குறுங்குழுவோ, பிரிவோ, சடங்கு சம்பிரதாயமோ அல்ல என்று அவர் குறிப்பிட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



இதை, “வலிமையான வாழ்க்கை விதி ஒன்றுள்ளது. மனிதப் பரிணாமத்திற்கு ஒரு கொள்கை உள்ளது. ஆன்மிக அறிவு, அனுபவங்களில் தொகுப்பு உள்ளது. காலந்தோறும் அதைப் பாதுகாக்கின்ற காப்பாளனாக, அதன் வாழும் எடுத்துக்காட்டாக, அதைப் பரப்பும் பணியாளனாக இருக்கும்படி இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது” என்று அதை பின்னாளில் ’கர்மயோகி’னில் எழுதியுள்ளார்.
இருளும் அவநம்பிக்கையும் சூழ்ந்த நிலையில் அதை எதிர்கொள்ள அரவிந்தர் இரண்டு வார இதழ்களைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் ‘கர்மயோகின்’, வங்க மொழியில் ‘தர்மா’. கர்மயோகினின் முதல் இதழ் 1909 ஜூன் 19ஆம் தேதியும், ‘தர்மா’வின் முதலிதழ் 1909 ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் வெளிவந்தன. தேசிய மதம், இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்றவற்றின் விமர்சனமாகவும் மறு பரிசீலனை செய்வதாக இருப்பதே கர்மயோகினின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. முதல் இதழின் அட்டையில் குருஷேத்திரப் போர்முனையில் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் ரதத்தில் வீற்றிருக்கும் காட்சியும் அந்தப் படத்திற்கு மேல் ‘என்னைச் சரணடைந்து போர் புரி’ , ‘செயலில் திறனென்பதே யோகம்’ என்ற இரண்டு குறிக்கோள் வாக்கியங்கள் பதியப்பட்டிருந்தன. வாரந்தோறும் அரவிந்தர் அதில் எழுச்சிமிகு கட்டுரைகளை எழுதி வந்தார்.
அதன் ஆரம்பகால இதழ்களில் ஈஸா, கேன, கடோபநிஷதங்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். அவரது கவிதைகள் பலவும் அதில் பதிப்பிக்கப்பட்டன. பங்கிம் சந்திரரின் ‘ஆனந்தமடம்’ புதினத்தின் முதல் பதிமூன்று அத்தியாயங்களையும் அரவிந்தர் மொழிபெயர்த்து அதில் வெளியிட்டார். பின்னர் அந்த இதழில் தேசிய கல்வி, கலையின் தேசிய மதிப்பு, இந்திய சிந்தனை போன்ற தேசக் கட்டமைப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதினார். கர்மயோகினும் தர்மாவும் விரைவில் பிரபலம் ஆகின; அதிகமான வாசகர்கள் ஏற்பட்டனர். ‘வந்தேமாதரம்’ போலல்லாமல் இந்தப் பத்திரிகைகளுக்கு நிதிச் சிக்கலோ சுமையோ ஏற்படவில்லை.
கர்மயோகின் பத்திரிகையில் அரசியல் தவிர்க்கப்பட்டது என்று கருத முடியாது. வந்தேமாதரத்தைப் போல இதிலும் கூரான அரசியல் கட்டுரைகள் வந்தன. ஆனால் அதைவிட பெரிதான கல்வி, இலக்கியம், தார்மீகம், தத்துவம், ஆன்மிகம் போன்றவற்றுக்கு முன்னுரிமையும் அழுத்தமும் தரப்பட்டன. பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை சமாதானப்படுத்த சில அரைகுறையான அரசியல் சீர்திருத்தங்களை வெளியிட்டது. ஆனால் அதிகாரப் பகிர்வை அளிக்கவில்லை. அரவிந்தர் அவற்றை ஏற்கவில்லை. வங்காளத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் இருந்த மிதவாதிகள் சூரத் மாநாட்டில் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்ய தேசியவாதிகளுடன் ஏதோவொரு வகையில் சமரசம் செய்ய முனைந்தனர். அதற்காக ஹூப்ளியில் நடந்த மாநாட்டில் அரவிந்தர் தலைமையில் தேசியவாதிகளும் மிதவாதிகளும் கூடினர். சுரேந்திரநாத் கூட்டிய சில தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அரவிந்தர் சென்றார். சமரசத்தைக் காண வாய்ப்புகள் ஆலோசிக்கப்பட்டன. பூரண சுதந்திரம் என்ற கருத்திலும், காங்கிரசின் புதிய அமைப்பு விதிமுறைகளைக் குறித்தும் அரவிந்தர் தன் கருத்தில் உறுதியாக நின்றார். அதனால் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது. ‘முழுமையான சுதந்திரம் தான் நம்முடைய குறிக்கோள்’ என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்தக் கருத்தை நாட்டு மக்களின் மனதில் ஊன்றுவதில் அவர் முனைப்பாக இருந்தார்.

அரவிந்தரை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அரசு சங்கடப்பட்டது. பீச்கிராஃப்ட் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாமா என்று ஆலோசித்தது. ஆனால் அதில் வெற்றி கிடைக்காது என்று தெரிந்ததும் அந்த யோசனையைக் கைவிட்டது. அவரை நாடு கடத்த வேண்டும் என அதிகாரிகள் பலர் வலியுறுத்திய போதிலும் அதன் பின்விளைவுகளாக நாட்டில் வன்முறை வெடிக்கலாம், இங்கிலாந்தின் மீது கடும் விமர்சனம் எழலாம் என்று வைஸ்ராய் கருதினார். எனவே அதுவும் கைவிடப்பட்டது. அரசு அரவிந்தரை நாடு கடத்தலாம் என்று சகோதரி நிவேதிதை அவரிடம் எச்சரித்திருந்தார். அதற்கு அரவிந்தர், ‘கவலை வேண்டாம். அதை முன்கூட்டியே தடுத்து விடுகிறேன்’ என்று சகோதரி நிவேதிதையிடம் கூறினார்.
அதன்படியே 1909 ஜூலை மாதம் கர்மயோகினில் நாட்டு மக்களுக்கோர் வெளிப்படையான கடிதத்தை அரவிந்தர் எழுதினார். அதில் அரசின் நோக்கத்தை அம்பலப்படுத்தி தான் அரசியல் களத்தில் இல்லாமல் போனால் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்று தன் அரசியல் உயிலை, மரண சாசனத்தை வெளியிட்டார். அந்த அபாரமான யுக்தி அவரை நாடு கடத்த வேண்டுமென்ற அதிகாரிகளை வாயடைக்கச் செய்தது. இரண்டு விஷயங்களிலும் தோல்வி கண்ட அரசு விரக்தி அடைந்தது. ராஜத்துரோக வழக்கு தொடுக்கலாம் என, கர்மயோகின் கட்டுரைகளை விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ந்து வந்தது.
தேசத்தின் அரசியல் சூழ்நிலை இருள் கவிழ்ந்து வருந்தத்தக்க நிலையில் இருந்தது. இந்நிலையில் 1909 டிசம்பர் 25 –ஆம் தேதி ‘என் நாட்டு மக்களுக்கு’ என்ற தலைப்பில் அரவிந்தர் கர்மயோகினில் ஒரு கடிதம் எழுதினார். அதில் அப்பொழுது இருந்த அரசியல் சூழ்நிலை பற்றியும் தேசியவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை பற்றியும், அதன் தோல்வி குறித்தும், மிண்டோ- மார்லே சீர்திருத்தத்தை நிராகரித்து கடும் விமர்சனங்களையும், அதை மிதவாதிகள் ஏற்றுக்கொண்ட அவலத்தையும் குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தின் இறுதியில் அரசு அடக்குமுறைகளைக் கையாண்டால் அதை எதிர்த்து சாத்விக எதிர்ப்பு இயக்கத்தை மீண்டும் நடத்தத் தயாராகுமாறு அறைகூவல் விடுத்திருந்தார். அந்தக் கடிதக் கட்டுரை அரசியலில் சூடான விவாதத்தைக் கிளப்பிய அருமையான யுக்தி.

இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி அவரது தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திய நேர்காணல் வெளியானது. தமிழகத்திலிருந்து வெளியான, மகாகவி பாரதி ஆசிரியராக இருந்த தேசிய வார இதழான ‘விஜயா’ பத்திரிகை நிருபருக்கு அரவிந்தர் ஒரு நேர்காணலை அளித்தார். அது 1910 ஜனவரி மாதத்தில் வெளியானது. அதில் அரவிந்தர், “1907-லிருந்து இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் ஒரு யுகம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் திடீரென்று கிளர்ச்சியும் புரட்சியும் வெடிக்கும். உயர்ந்தது சரிந்து வீழும்; தாழ்ந்து கிடந்தது உயரும். தாழ்த்தப்பட்டவை, ஒடுக்கப்பட்டவை மேன்மையுறும். தேசங்களுக்கும் மனித இனத்திற்கும் புதிய விழிப்புணர்வு, புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய இலக்குகளை நோக்கி புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரட்சிகரமான மாறுதல்களில் ஒன்றாக இந்தியா விடுதலை பெறும்” என்று கூறியுள்ளார்.
- காண்க: ‘விஜயா’வில் அரவிந்தர்
1910 ஜனவரி 24 தேதி காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் இணை சூப்பிரண்டென்டாக இருந்த சம்சூல் ஆலம் கல்கத்தா நீதிமன்ற படிக்கட்டுகளில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைப் பற்றி அரவிந்தர் ‘காராகாஹினி’யில் நகைச்சுவையோடு எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம். அரசுப் பணியில் அவர் காட்டிய திறமையும் தீவிரமும் புரட்சியாளர்களின் பார்வையில் இருந்து தப்பவில்லை; அவர்கள் குறியும் தவறவில்லை. அந்த திடீர்க் கொலையின் விளைவால் அரசு அடக்கு முறையை அதிகரித்தது. அரசியல் களம் மீண்டும் இறுக்கமானது.
கல்கத்தாவில் ஷாம் பஜார் பகுதியில் ஷியாம்புகுர் தெருவில் ‘கர்மயோகின்’ பத்திரிகை அலுவலகம் இருந்தது. வழக்கமாக மாலை வேலையில் அரவிந்தர் அங்கு பணி நிமித்தமாக வருவார். 1910 பிப்ரவரி மாதம், அனேகமாக 15 தேதியாக இருக்கலாம், வழக்கம்போல அங்கு வந்தார். தலையங்கம் எழுதும் பணியில் ஈடுபட்டார். அது முடிந்ததும் சில இளம் நண்பர்களுடன் அமர்ந்து எழுதுவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதில் ஒருவர் மோனி என்றழைக்கப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி. அவரது நினைவுக் குறிப்பில் இருந்து:
“சூழ்நிலை சிரிப்பும் கிண்டலுமாக, மகிழ்ச்சிகரமாக இருந்தது. அப்பொழுது கர்மயோகினில் வேலை செய்பவரான ராம் மஜும்தார் திடீரென்று அறைக்குள் வந்தார். ‘அரவிந்தரைக் கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது, எப்பொழுது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தனக்குத் தெரிந்த போலீஸ் உயர் அதிகாரியிடம் இருந்து தகவல் வந்துள்ளது என்று தெரிவித்தார். அதைக் கேட்டதும் நாங்கள் திகைத்து அமைதியில் ஆழ்ந்தோம். பிறகு அரவிந்தர், ‘நான் சந்திரநாகூர் போகிறேன்’ என்று அமைதியாகச் சொன்னார். அவர் எழுந்து ராம்பாபுடன் வீட்டை விட்டு வெளியேறினார். நாங்களும் அவரைத் தொடர்ந்து அமைதி ஊர்வலம் போல் சென்றோம்”.
“வழக்கமாக போலீஸ் அரவிந்தரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும். ஏனோ அன்று அவர் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் போது கவனிக்க ஆள் இல்லை. நாங்கள் பதினைந்து நிமிடம் நடந்து கங்கை நதியில் உள்ள படகுத்துறையை அடைந்தோம். ராம்பாபு ஒரு படகை அழைத்தார். அரவிந்தர் அதில் ஏறினார். நானும் பைரேனும் அவருடன் படகில் ஏறினோம். ராம்பாபு திரும்பிச் சென்றார். படகு புறப்பட்டது. அது முழு நிலவு நாள். நீரில் வெள்ளிப் புன்னகை வீசிக்கொண்டிருந்தது….
“நீண்ட இரவு பயணத்திற்குப் பிறகு அதிகாலை அந்தப் படகு சந்திரநாகூரை அடைந்தது. புரட்சியாளர்களுக்கு நன்கு அறிமுகமான சாரு சந்திர ராயைப் பார்த்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்க பைரேனை அனுப்பினார். ராய் உதவி செய்யாதது மட்டுமின்றி, இந்தியாவை விட்டு பிரான்ஸுக்குப் போய்விடும்படி கூறிவிட்டார். அரவிந்தர் வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்ட இளம் புரட்சியாளர் மோதிலால் ராய், தன் வீட்டிற்கு தங்க அழைத்துச் சென்றார். பாதுகாப்பான இடம் கிடைத்தது என்றதும் நாங்கள் இருவரும் அதே படகில் கல்கத்தா திரும்பினோம்”.
இந்தச் சம்பவங்களைப் பற்றி மிகப் பொருத்தமாக அரவிந்தரே கூறியுள்ளார்:
“கைது பற்றிய செய்தியைக் கேட்டவுடன் என்ன செய்வது என்று நான் யோசித்தேன். திடீரென்று எனக்கு ஒரு கட்டளை கிடைத்தது, ‘சந்திரநாகூருக்குப் போ’. நான் உடனே தயாரானேன். பயந்தோ அல்லது அவநம்பிக்கைலோ அல்ல. மாறாக என்னுடைய யோக சாதனைகள் தடைப்படக் கூடாது என்பதால் நான் அங்கிருந்து வெளியேறினேன். என்னுடைய அரசியல் தொடர்புகளையெல்லாம் விட்டுவிட்டேன். ஏனெனில் நான் தொடங்கிய பணி தொடர்ந்து நடக்கும்; வெற்றியில் முடியும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். நான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ‘கர்மயோகின்’ பத்திரிகைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நிவேதிதையை நான் கேட்டுக் கொண்டேன்”.
$$$
(அடுத்த அத்தியாயம் ஞாயிறன்று வெளியாகும்)
.