அந்தரடிச்சான் ஸாஹிப் கதை

-மகாகவி பாரதி

நையாண்டியும் கற்பனையும் கலந்து செய்த இக்கதை, யாரையோ மறைமுகமாகச் சாடுகிறது. அது யாராயிருக்கும்?

மொகலாய ராஜ்யத்தின்போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் ஸாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம் ரூபாய் மதிக்கத் தகுந்த பூஸ்திதியும் பணமும் நகைகளும் வைத்துவிட்டுப் போனார். அவன் அவற்றை யெல்லாம் பால்யத்தில் சூதாடித் தோற்றுவிட்டான். அந்தரடிச்சான் ஸாஹிபுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவனுக்குச் செத்தான் ஸாஹிப் என்று பெயர். இந்தப் பிள்ளையும் அவன் மனைவியாகிய வில்ரில்லாப்பா என்பவளும் அவளுடைய சிறிய தகப்பன்- ஒரு கிழவன் அவன் பெயர் மூர்ச்சே போட்டான் ஸாஹிப் ஆகிய மேற்படி கிழவனுமாக இத்தனை பேர் அடங்கிய பெரிய குடும்பத்தை அவன் புகையிலைக் கடை வைத்து ஸம்ரக்ஷணை செய்து வந்தான்.

இப்படியிருக்கையில் அந்தரடிச்சானுக்குத் தீராத வயிற்று வலி வந்தது. அத்துடன் கண்ணும் மங்கிவிட்டது. எட்டு யோஜனை தூரத்துக்கப்பால் ஒரு அதிர் வெடிச் சத்தம் கேட்டால், அவன் இங்கே பயந்து நடுங்கிப்போய் நூறு குட்டிக்கரணம் போடுவான்.

தலைக்குமேல் காக்கை பறக்கக் கண்டால், தெருவிலே போகையில் ஆந்தை கத்தினால், பூனை குறுக்கிட்டால், வண்டி எதிரே ஓடிவந்தால், சிப்பாயைக் கண்டால் இப்படி எவ்வித அபாயக்குறி நேரிட்டாலும், ஒவ்வொரு முறையும் நூறு நூறு குட்டிக் கரணம் போடுவது அவனுடைய வழக்கம்.

இங்ஙனம் தெருவில் போகும்போது, வீட்டில் இருக்கும் நேரத்திலும் குட்டிக்கரணம் போட்டுப்போட்டு அவனை நெட்டைக் குத்தலாக நிறுத்துவதே கஷ்டமாய் விட்டது. ஒரு நாள் மேற்படி அந்தரடிச்சானிடம் அவனுடைய பிள்ளையாகிய செத்தான் ஸாஹிப் வந்து பின்வருமாறு சொல்லலானான்-

பப்பாரே! சுத்தமாக ரஸமில்லை. காசு கொண்ட காலையில் நம்கீ ரொட்டி ஜாஸ்தி. மீன் இல்லை சாப்பாட்டுக்குக் கஷ்டம். நமக்கு எதுவும் கைகூடவில்லை. ஹிம் ஹீம் ஹுகும்! நீ ரொம்பக் கெட்டிக்காரன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். உம் ஹும்! உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நாளை கேட்கிறேன். ஹிக்கீம்! ஹிக்கீம். இப்போதே கேட்டு விடட்டுமா? ஹிக்கா ஹிக்கா ஹ்ம். ஹம். ஜிம். ப்ஸ்ஸ்ஸ்ஸ் நீ யன்றோ இந்த நிலைமையே குடும்பத்தைக் கொண்டு வந்துவிட்டாய். ஒய்யோம்! ப்யோம்! ப்யோம். நம்கீ ரொட்டி ஜாஸ்தி, மீன் இல்லை. சாப்பாட்டுக்குக் கஷ்டம்! பாலா, மணிலாக் கொட்டை வாங்கிக் கொடு’’ என்றான்.

அப்போது அந்தரடிச்சான் சொல்லுகிறான்-

க்யாரே? நம்கீ ரொட்டி இல்லை. நீ மீனில்லையென்று நம்மிடத்தில் கோபிக்கிறாயே? அந்தக் கிழ மூர்ச்சே போட்டான் ஸாஹப் இருக்கிறார். அவராலே வீட்டுக்கு ஒரு தம்படி வருமானம் கிடையாது. ஹாம்! என்ன சொன்னாயடா! நானா சூதாடினேன்? என்னையாடா சொன்னாய்?” என்று கேட்டான். உடனே முந்நூறு பல்டியடித்துச் செத்தான் ஸாஹப் மேலே விழுந்தான்.

இப்படி இருக்கையில் அந்தவூர் பாத்ஷாவுக்குப் பிறந்த நாள் பண்டிகை வந்து பெரிய கூட்டம். தோரணங்கள்; டால்கள் பந்தர்கள்; மாலைகள்; விளக்கு வரிசைகள், புலி வேஷங்கள். பெரிய பெரிய வஸ்தாதுகள் வந்து குஸ்திச் சண்டைகள், அதிர்வெடி ஜமா!

அதுக்கு நடுவே அந்தரடிச்சான் ஸாஹப் போய் நுழைந்தான். இதனை ஜமாவையும் பாத்ஷா ஏழாம் உப்பரிகையின் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் கத்திச் சண்டை நடந்து கொண்டிருந்தது.

காலை ஏழுமணி முதல் பகல் பத்து மணி வரையில் மூன்று மணி நேரமாக ஒரு க்ஷணம் கூட சிரமபரிஹாரமில்லாமல் அங்கு இரண்டு பயில்வான்கள் கத்திப் போர் செய்து கொண்டிருந்தனர். போர் வெகு ஜமூதமாக நடக்கிறது. அந்த இடத்தில் பெரிய கும்பல் கலையாமல், அத்தனை பேரும் சித்திரப் பதுமைகள் போலே அசையாமல் மேற்படி பயில்வான்களின் சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.

பல இடங்களில் அத்தரடிச்சான் ஸாஹப் தட்டுண்டு கொட்டுண்டு அங்கே வந்து விழுந்தான். கூட்டம் பளீரென்று விலகிற்று ஒருத்தன் ஹோ! என்று கத்திக் கொண்டோடிப் போனான். அத்தனை கூட்டமும் ஹோ, ஹோ, ஹோ என்று கத்திக் கொண்டு ஓடிப் போயிற்று இவன் படபடவென்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே கத்திச் சண்டை வஸ்தாதுகளின் மேலே போய் விழுந்தான் அவர்கள் ஹோ என்று கதறி ஒருவர் வாள் ஒருவர் மீது பாய இரத்தம் பீறிட்டுக் கீழே சாய்ந்தனர். இதையெல்லாம் ஏழாம் உப்பரிகையின் மேலேயிருந்த பார்த்துக் கொண்டிருந்த பாத்ஷா  ’ஹோ, ஹோ, இவனையன்றோ நமது ஸேனாபதியாக நியமிக்க வேண்டும்’ என்று கருதி அவனை அழைத்து, ”நீ நமது ஸேனாபதி வேலையை ஏற்றுக் கொள்” என்றான். இவன் அந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஸேனையென்ற ஞாபகமும், சண்டையென்ற நினைவும், அதிலிருந்து மரணமென்ற ஞாபகமும் மனதில் தோன்ற உடனே பயந்து நடுங்கிப் போய் முப்பது குட்டிக்கரணம் போட்டுப் பாத்ஷாவின் மேலே போய் விழுந்தான்.

ஓஹோ! இவன் தனது வணக்கத்தையும் பராக்ரமத்தையும் நம்மிடத்தில் நேரே காண்பித்தான் என்று பாத்ஷா ஸந்தோஷத்துடன் வியந்து அவனுக்கு லக்ஷம் மோஹரா விலையுள்ள ஒரு வயிர மாலையை ஸம்மானம் கொடுத்து, ஸேனாபதி நியமன உத்தரவும் கொடுத்தனுப்பினார்.

அந்த பாத்ஷாவின் காலத்தில் எங்கும் சண்டையே கிடையாதாகையால், அந்தரடிச்சான் ஸாஹப் போரில் தனது திறமையைக் காட்ட ஸந்தர்ப்பமே வாய்க்காமல் சாகுமளவும், ஸேனாபதி என்ற நிலைமையில் ஸௌக்கியமாக நாளொன்றுக்கு லக்ஷம் குட்டிக் கரணங்கள் போட்டுக் கொண்டு, இதனாலேயே எட்டுத் திசைகளிலும் கீர்த்தியோங்க மிகவும் மேன்மையுடன் வாழ்ந்திருந்தான்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s