மகாவித்துவான் சரித்திரம்- 1(23)

இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, "விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார்.

தராசு கட்டுரைகள்- 10

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள் ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன். இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.