மகாவித்துவான் சரித்திரம்- 1(23)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

23. கும்பகோண நிகழ்ச்சிகள்

சாமிநாத தேசிகர்

இவருடைய மாணாக்கர்களாகிய புரசவாக்கம் பொன்னம்பல முதலியாரும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் குமாரராகிய சாமிநாத தேசிகரும் கும்பகோணம் காலேஜில் ஒருவர் காலத்திற்குப் பின்பு ஒருவர் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பெற்று வேலை பார்த்துவந்தார்கள். அவர்களுடைய விருப்பத்தின்படி அந்தப்பக்கம் செல்லுங் காலங்களிற் கும்பகோணத்திற் சிலநாள் இவர் இருந்து வருவதுண்டு. அதனால் அங்கே காலேஜில் இங்கிலீஷ் உபாத்தியாயராக இருந்து நாடெங்கும் புகழ்பெற்று விளங்கிய ராவ்பகதூர் தண்டாலம் கோபாலராயரவர்களுடைய பழக்கம் இவருக்கு மிகுதியாக உண்டாயிற்று. நான் அந்தக் காலேஜில் வேலையாக இருந்தபொழுது ராயரவர்கள் இவருடைய கல்வி மிகுதியையும் கம்பீரமான தோற்றத்தையும் ஆற்றலையும் பற்றிச் சொல்லிப் பாராட்டிவிட்டு, “அவர்களுடைய நெற்றி விசாலத்தைக் கண்டபொழுதே சிறந்த அறிவாளியென்பதைக் கண்டுகொள்ளலாம்” என்றும் சொன்னார்கள்.

ஒருசமயம் திருவநந்தபுரம் திவான் மாதவராயரவர்களிடமிருந்து அந்நகரிலுள்ள மகாராஜா காலேஜிற்கு ஒரு தமிழ்ப் பண்டிதர் வேண்டுமென்றும் அவருக்குத் தக்க செளகரியங்கள் பண்ணிவைக்கக் கூடுமென்றும் கோபாலராயருக்குக் கடிதம் வந்தது. காலேஜில் அப்பொழுது பண்டிதராக இருந்த சாமிநாத தேசிகரை அவர் அழைத்து, “அவ்வேலைக்குத் தக்க பண்டிதர்கள் கிடைப்பார்களா?” என்று கேட்கவே, தேசிகர், “என்னுடைய ஆசிரியராகிய பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள்; அவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன்” என்றார். ”அப்படியா? அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?” என்று சொல்லிப் பின்பு ராயரவர்கள் பிள்ளையவர்களைச் சந்தித்து, “மாதவராயரவர்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமே. அவர்கள் இப்பொழுது திருவநந்தபுரத்தில் திவானாக இருக்கிறார்கள். தாங்கள் திருவநந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வேலையை ஒப்புக்கொண்டால் முதலில் மாதவேதனம் ரூ.100 கொடுப்பார்கள். பின்பு வேண்டிய செளகரியங்களைச் செய்து வைப்பார்கள். எங்களுக்கும் கெளரவமாக இருக்கும். ராஜாங்க வித்துவானாகவும் இருக்கலாம். சமஸ்தானத்திற்கும் கெளரவம் ஏற்படும்” என்று வற்புறுத்திச் சொன்னார்கள்.

அப்பொழுது இப் புலவர் பிரான் , “பராதீனனாக இருந்தால் என்னுடைய நோக்கத்திற்கு மிகவும் அஸெளகரியமாக இருக்கும். ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும், அவர்களுடன் ஸல்லாபஞ் செய்து கொண்டும், காவேரிஸ்நானமும் சிவதரிசனமும் செய்துகொண்டுமிருப்பதே எனக்குப் பிரியமான காரியமாக இருக்கின்றது. சாதாரண ஜனங்களோடு பழகுதல் தான் இன்பத்தை விளைவிக்கும். திருவாவடுதுறை மடத்தில் எல்லாவிதமான சௌகரியங்களும் இப்பொழுது கிடைக்கின்றன” என்று தமக்கு உடன்பாடின்மையைத் தெரிவித்தனர்.

இவருக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணிவைக்கலா மென்றெண்ணியிருந்த கோபாலராயர் தம் எண்ணத்தை நிறைவேற்றக் கூடவில்லையேயென்று வருத்தமுற்றார்; பின்பு, “தங்களிடம் படித்த மாணாக்கர்களுள் சிறந்த கல்விமானாகிய ஒருவரைக் குறிப்பிட்டால் நான் அவரைப் பற்றி எழுதி அனுப்புகிறேன்” என்றார். இவர், “இப்பொழுது தங்கள் காலேஜில் உள்ள சாமிநாத தேசிகரையே அனுப்பலாம். அவர் தஞ்சாவூர் அரண்மனையிலும் சென்னைக் கல்விச்சங்கத்திலும் முன்பு தமிழ்ப் பண்டிதராக இருந்த சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரர்; என்னிடத்திலும் வாசித்தவர். அவருக்கு அவ் வேலையைச் செய்வித்தால் நன்றாகப் பாடஞ் சொல்லுவார்; எனக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும்” என்றார்.

அங்ஙனமே ராயரவர்கள் சாமிநாத தேசிகரைப் பற்றித் திருவநந்தபுரத்திற்கு எழுதி அந்தக் காலேஜ் தமிழ்ப்பண்டித வேலையை அவருக்குக் கிடைக்கும்படி செய்தார். அதன் பின்பு சி.தியாகராச செட்டியார் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதர் வேலை பார்க்க அமர்த்தப் பெற்றார். அவர் அவ்வேலை பார்க்க ஆரம்பித்தகாலம்: 3-7-1865.

செட்டியார் தமிழ்ப் பண்டிதராக வந்த பின்பு அவர் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் அடிக்கடி கும்பகோணம் சென்று சில நாள் இருந்துவிட்டு வருவார்கள். அக்காலங்களில் அந்நகரிலுள்ள பலவகையாரும் வந்து வந்து பிள்ளையவர்களுடைய பழக்கத்தால் தமிழ்ச்சுவையில் ஈடுபட்டு இன்புற்றுச் செல்வார்கள்.

கும்பகோண புராணம் இயற்றத் தொடங்கியது

அக்காலத்திற் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாத பிள்ளை யென்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருடம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தைத் தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோணம் புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழ்வசனமாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழி பெயர்த்தற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராசாரியர் மடத்து வித்துவானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார். அப்புராணச் செய்யுட்களை இவர் சொல்ல அப்பொழுதப்பொழுது எழுதிக்கொண்டே வந்தவர் இவர் மாணாக்கருள் ஒருவராகிய திருமங்கலக்குடி சேஷையங்காரென்பவர்.

அந்தப் புராணத்தில் சிறுசிறு பகுதிகள் ஒவ்வொரு நாளும் இயற்றப்பட்டு அன்றன்று பிற்பகலில் ஸ்ரீ ஆதி கும்பேசுவரருடைய ஆலயத்தின் முன் மண்டபத்தில் அரங்கேற்றப்படும். அரங்கேற்றுகையிற் பலர் வந்து கேட்டு இன்புற்றுச் செல்வார்கள்; அங்கே தியாகராச செட்டியாரும் நாடோறும் தவறாமல் வந்து கேட்டு மகிழ்வார். அந்நகரில் நிகழும் விசேஷங்கட்கு வரும் மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாரும் இடையிடையே வந்து கேட்டு இன்புறுவார்கள். சிவகுருநாத பிள்ளையே சபாநாயகராக இருந்து அரங்கேற்றத்தை நடப்பித்து வந்தார்.

அப்பொழுது சிவகுருநாத பிள்ளையுடன் பல உத்தியோகஸ்தர்களும் தினந்தோறும் வந்து கேட்டுச் சிறப்பிப்பாராய்ச் செய்யுட்களின் சுவையை அறிந்து சந்தோஷம் அடைந்து வந்தனர். இங்ஙனம் முயன்ற சிவகுருநாத பிள்ளையின் கௌரவம் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது.

சிவகுருநாத பிள்ளையின் மனம் வேறுபட்டது

இப்படி இருக்கையில், பிள்ளையவர்கள்பால் அழுக்காறுள்ள வேறு மதத்தினராகிய ஒருவர், ‘சிவகுருநாத பிள்ளையாலேயே இவருக்குக் கெளரவம் உண்டாகி வருகின்றது. அவருடைய ஆதரவை நீக்கிவிட்டால் எல்லாம் ஓய்ந்துவிடும்’ என்று தம்முள் நிச்சயஞ்செய்து கொண்டு தனித்த சமயத்திற் சென்று சிவகுருநாத பிள்ளையைப் பார்த்தனர்.

சிவ: இப்பொழுது பிள்ளையவர்கள் அரங்கேற்றும் புராணப் பிரசங்கத்திற்கு நீங்கள் வரவில்லையே. பலபேர்கள் வந்து கேட்டுச் சந்தோஷித்துச் செல்லுகின்றார்கள். நீங்கள் மட்டும் ஏன் வரவில்லை?

வந்தவர்: வேலை மிகுதியால் வர இயலவில்லை. இது சம்பந்தமாகச் சில விஷயங்கள் எனக்குத் தெரிந்தமையால் அவற்றைச் சொல்லிப் போவதற்குத்தான் இப்போது வந்தேன். அவை கவனிக்க வேண்டியவையே.

சிவ: என்ன விஷயம்? சொல்ல வேண்டும்.

வந்தவர்: பிள்ளையவர்கள் சிறந்த வித்துவானென்பதற்கும் அவர்களால் இயற்றப்படும் நூல் மிகச் சிறந்ததென்பதற்கும் அதனால் ஊரிலுள்ளவர்கள் சந்தோஷிக்கின்றார்களென்பதற்கும் யாதொரு ஸந்தேகமும் இல்லை. ஆனாலும் இப்பொழுது நான் கேள்விப்பட்ட சிலவற்றைத் தங்களிடத்தில் உண்மையான அன்புடையனாதலால் சொல்ல வந்தேன். சொல்லலாமென்றாற் சொல்லுகிறேன்.

சிவ: அவசியம் சொல்ல வேண்டும்.

வந்தவர்: ஊரிலுள்ள வர்த்தகர்களும் பிறரும் இந்தப் புராணம் அரங்கேற்றி முடிந்தவுடன் தாங்கள் மிகுதியாகச் சம்மானம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் அதற்காகத் தாங்கள் தங்களைப் பொருள் கேட்கக் கூடுமென்றும் பேசிக்கொள்கிறார்கள். நாடோறும் போய் உடனிருந்து பிள்ளையவர்களிடம் தாங்கள் அளவிறந்த பிரீதி பாராட்டுவதும் அந்த அபிப்பிராயத்தைப் பெருக்கி விட்டது. எல்லோரும் தாங்கள் என்ன கேட்பீர்களோ என்று எண்ணி அங்கங்கே கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரஸ்தாபம் நேற்று கலெக்டராபீஸ் சிரஸ்தேதார் வீட்டிலும் நான் போயிருந்தபொழுது நடந்தது. கோள் விண்ணப்பம் எழுதுவதில் வல்லவர்கள் சிலர் இந்த ஊரில் இருப்பது தங்களுக்குத் தெரிந்தது தானே. எனக்கு அதைப்பற்றி யோசனையாகத் தான் இருக்கிறது. முக்கியமானவர்கள் யாரிடத்திலாவது இதை மேற்போட்டுக் கொள்ளும்படி ஒப்பித்துவிட்டுத் தாங்கள் மெல்ல விலகிவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். தாங்களும் இதைப்பற்றி நன்றாக யோசிக்க வேண்டும். சில வார்த்தைகளை நான் சொல்லிவிட்டேனேயென்று குற்றமாக நினைக்கக் கூடாது. தங்கள் நன்மைக்காகத்தான் சொன்னேன்.

சிவகுருநாத பிள்ளை, “யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது மிகச் சரியென்றே எனக்குப் படுகிறது. நான் யோசியாமல்தான் இத்துறையில் இறங்கி விட்டேன். எதையும் யோசித்துத்தான் செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏதோ நல்ல விஷயமாயிற்றே என்று என் மனந் துணிந்தது. நீங்கள் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னதைக் குறித்து நான் தங்கள்பால் நன்றியறிவுடையவனாக இருக்கிறேன். இனிமேல் ஜாக்கிரதையாகத் தானிருப்பேன். இது சம்பந்தமாக ஏதேனும் காதில் விழுந்தால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்று அவரை அனுப்பிவிட்டார்.

நிஷ்கபடியாதலால் மனம் வேறுபட்டுச் சிவகுருநாதபிள்ளை, ‘யோசியாமற் செய்த இந்தச் செயல் என்ன விபரீதத்தை விளைவித்துவிடுமோ’ என்று திகிலடைந்தவராகி மனக்குழப்பமுற்று எப்படியாவது இந்தச் சம்பந்தத்தை இன்றோடே விட்டுவிடவேண்டுமென்று நினைத்துக்கொண்டேயிருந்து ஸ்நானம் செய்து ஆகாரம் செய்யச் சென்றார். மனக்கவலையினால் அவருக்கு ஆகாரம் செல்லவில்லை. ஒருவாறு முடித்துக்கொண்டு கச்சேரிக்குப் போனார். அவருக்கு ஒரு வேலையிலும் புத்தி செல்லவில்லை. கச்சேரி வேலையானவுடன் வழக்கம்போல் அரங்கேற்றம் நடைபெறுகின்ற இடத்திற்குப் போகாமல் வீட்டிற்கே வந்துவிட்டார்; வந்து சாய்வு நாற்காலியிற் சாய்ந்து யோசித்துக்கொண்டே இருந்தனர். பிரசங்கம் கேட்பதற்கு வழக்கப்படி போகக்கூடுமேயென்று மாட்டை யவிழ்த்து விடாமல் வண்டிக்காரன் காத்துக்கொண்டிருந்தான்; அதை வேலைக்காரன் வந்துசொல்ல அவர், “இப்பொழுது போகவில்லை” என்று சொல்லிவிட்டார்.

கோயிலிற் புராணப் பிரசங்கம் ஆரம்பிக்க எண்ணிய பிள்ளையவர்கள் சிவகுருநாத பிள்ளையின் வரவை நெடுநேரம் எதிர்பார்த்தும் வாராமையால் அன்று நடத்த வேண்டிய ஒரு பகுதியை நடத்தி முடித்தார். விசாரித்ததில் ஏதோ அஸெளக்கியமாக இருத்தலால் சிவகுருநாத பிள்ளை வரவில்லை என்று ஒரு செய்தி இவர் காதுக்கு எட்டியது.

அப்பால் மறுநாட் காலையில் இவர் அவரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டிற்குச் சென்றார்; சென்றவர் தாமே ஒரு நாற்காலியிலமர்ந்தார். கண்ட அவர் எப்பொழுதும் போல முகமலர்ச்சியோடு இவரை நோக்குதலின்றித் தலைப்பொட்டைக் கையாற் பிடித்துக்கொண்டு யோசித்த வண்ணமாக இருந்தார். மிகுதியான வேலையுள்ளவர்போலப் பின்பு கையை எடுத்துவிட்டு அங்கேயிருந்த ஏதோ ஒரு புத்தகத்தை அடிக்கடி புரட்டிப் பார்த்துக் கொண்டும் கடிதங்களை எழுதி எழுதிக் கிழித்துக் கிழித்து அயலில் வைத்திருந்த பெட்டியில் எறிந்து கொண்டும் இருந்தார்; முகங் கொடுக்கவுமில்லை; முதல்நாள் வாராமைக்குக் காரணம் சொல்லவுமில்லை.

அந்த நிலையைக் கண்ட இவர், ‘இனி நாம் பேசாமல் இருப்பது முறையன்று’ என்றெண்ணி, ”உங்களுக்கு என்ன அசௌகரியம்? நேற்று மாலையில் அரங்கேற்றுமிடத்திற்கு நீங்கள் வாராதிருந்தது ஒரு குறைவாகவே இருந்தது. நெடுநேரம் பார்த்தும் நீங்கள் வாராமையால் ஆரம்பித்து முடித்துவிட்டேன். தேகஸ்திதி உங்களுக்கு ஸெளக்கியமாக இல்லையென்று கேள்வியுற்றேன். இப்பொழுது என்ன நிலையிலிருக்கிறதென்று பார்ப்பதற்கு வந்தேன்” என்றார்.

சிவகுருநாத பிள்ளை, ”நான் உங்களிடம் சில வார்த்தைகள் சொல்ல எண்ணிக் கொண்டிருக்கையில் நீங்களே வந்துவிட்டீர்கள். நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். நான் மற்றவர்களைப்போலக் கைநீளம் உடையவனல்லன். எலுமிச்சம் பழங்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்தால் வாங்க மாட்டேன். ஏதோ நல்ல காரியமென்று சில பேருடைய போதனையின்மேல் இத் துறையில் இறங்கினேன். நீங்கள் ஏதோ என்னுடைய முயற்சியினால் தான் புராணம் நடைபெறுகிறதென்று பல இடங்களிற் பிரஸ்தாபிப்பதாகவும் சிலர் என்னுடைய நிர்ப்பந்தத்திற்காகப் புராணத்திற்கு நன்கொடையளிக்கப் போவதாகவும் நான் கேள்வியுற்றேன். எனக்கு அது வருத்தத்தைத் தந்தது. அவர்கள் பிரஸ்தாபித்தாலும் நான் இந்த விஷயத்தில் அதிக முயற்சியுடையவனாயிருக்கிறேனென்று நீங்கள் சொல்லலாமா? நான் சில பேரை நிர்ப்பந்திப்பதாக மேலதிகாரிகள் அறிவார்களாயின் என் உத்தியோக நிலைக்கு அது பரம விரோதமல்லவா? நான் ஒழுங்காக இருந்து காலங்கழித்துப் பென்ஷன் வாங்க வேண்டியவனல்லவா? என் சம்பந்தத்தை இன்று முதல் நிறுத்திக்கொள்ளுகிறேன். வேறு யாரைக் கொண்டேனும் தாங்கள் தக்க செளகரியங்கள் செய்வித்துக் கொள்ளுங்கள். இனி என்னைப்பற்றிய பிரஸ்தாபத்தையே செய்ய வேண்டாம்” என்று அதிகப் படபடப்பாகச் சொன்னார். பிள்ளையவர்கள் ஏதாவது சமாதானம் சொல்லக் கூடுமென்பதை அவர் எதிர்பாராமலே பேசினார்.

கேட்ட பிள்ளையவர்கள் பரம சாந்தமூர்த்தியாக இருந்தாலும் மிகுந்த குற்றம் செய்யினும் குணமெனக்கொண்டு வாழ்பவர்களாகவிருந்தாலும் திங்களுள் தீத் தோன்றியது போல் மிக்க கோபமுற்றவர்களாகி, ‘இவருடைய சம்பந்தத்தை ஏன் யோசியாமல் நாம் பெற்றோம்! இந்த வார்த்தைகளைக் கேட்கும்படி நேரிட்டது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே!’ என்று நினைந்து, ”ஐயா! நான் உங்களையே நம்பிக்கொண்டு இவ்வூருக்கு வரவில்லை. அந்த வழக்கமும் எனக்கு இதுவரையில் கிடையாது. அன்புள்ளவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும் அவர்களை மதிப்பேனேயன்றி, அன்பில்லாதவர்கள் குபேர சம்பத்தை உடையவர்களாக இருந்தாலும் மதியேன். உங்களாலே நான் கெளரவத்தையடைய வேண்டுமென்பதில்லை. இயல்பாகவே இருக்கிற கெளரவம் எனக்குப் போதுமானது. உங்களைக்காட்டிலும் எவ்வளவோ மேலான அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட என்னிடத்தில் அன்பு பாராட்டி வருகிறார்கள். என்னை இத் தமிழ்நாடு முற்றும் அறியுமன்றோ? உங்கள் பெயரைச் சொல்லித்தானா நான் ஜீவிக்க வேண்டும்? உங்களுடைய தயைதானா எனக்கு வேண்டும்? என்னை நீங்கள் சிறிதும் அறியவில்லையே. நீங்கள் இனி இதில் சம்பந்தப்படுவதாயிருந்தாலும் நான் விரும்பேன். உங்களுடைய சம்பந்தத்தை இன்றே இப்பொழுதே அடியோடே விட்டுவிட்டேன்” என்று சொல்லிவிட்டு, உடனே எழுந்து கூட வந்தவர்களோடும் புறப்பட்டுத் தம்முடைய விடுதிக்கு வந்து விட்டார். அன்றைத் தினம் இவருக்கு வந்த கோபத்தையும், நடந்த விஷயத்தையும் உடனிருந்த சில பெரியோர்கள் சொல்லிப் பிற்காலத்தில் ஆச்சரியப்பட்டதை நான் கண்டிருக்கிறேன்.

அப்பால் சிவகுருநாத பிள்ளை இவர் சொல்லிய வார்த்தைகளைக்கேட்டு அச்சங்கொண்டு இவருடைய கோபம் தமக்கு என்ன தீங்கை விளைவிக்குமோ என்றெண்ணித் தமக்கு நம்பிக்கையுள்ள ஒருவரை அழைத்து, “நீர் திருவாவடுதுறைக்கு இப்பொழுதே சென்று சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் அவர்களாதீன வித்துவானாகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை, என்னிடத்தில் மிகுந்த கோபம் உடையவராயிருக்கிறாரென்றும் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை யென்றும் என்னைப் பார்த்துத் தாறுமாறாக அவர் பேசி விட்டாரென்றும் என்னிடம் மரியாதையாக நடக்கும்படிக்கும் கோபமில்லாமலிருக்கும்படிக்கும் அவருக்குக் கட்டளையிட வேண்டுமென்றும் சொல்லி வரவேண்டும்” என்று சொல்லி அனுப்பினார். அவர் அவ்வண்ணமே சென்று தெரிவித்தார்.

உடனே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ”எதிர்பாராத விபரீதச் செயல் ஏதோ நடந்திருக்கிறதே. பிள்ளையவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுவார்களே; எப்படியேனும் சமாதானம் செய்விக்க வேண்டும்” என்று எண்ணி, ஆதீன வித்துவான் தாண்டவராயத் தம்பிரானிடத்திற் படித்தவரும் சொல்வன்மையுடையவரும் ஆகிய விசுவலிங்கத் தம்பிரானென்பவரை அழைத்து, “சிவகுருநாத பிள்ளைக்கும் பிள்ளையவர்களுக்கும் ஏதோ மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நீக்கிவிட்டு வரவேண்டும்” என்று சொல்லி அனுப்பினார். அவர் சிவகுருநாத பிள்ளை வீட்டிற்கு வந்து அவரைக் கண்டார்.

கண்டவுடன் சிவகுருநாத பிள்ளை, ”உங்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னிடத்தில் மரியாதையின்றி நடந்து கொண்டார்; அளவுக்கு மேற் பேசினார். என்னுடைய கௌரவத்தை அவர் அறிந்து கொள்ளவில்லை. அவரைக் கண்டிக்க வேண்டும். இவ்வூரில் இருக்கும்வரையில் என்னிடத்தில் மரியாதையுடன் நடந்துகொள்ளும்படி சொல்லிவிட்டுப் போகவேண்டும். அவர் உங்களுடைய ஆதீன வித்துவானல்லவா?” என்றார்.

விசுவலிங்கத் தம்பிரான், ”நிகழ்ந்தவற்றையெல்லாம் சந்நிதானம் கட்டளையிடத் தெரிந்து கொண்டேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை நீங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லையென்று எனக்குத் தோற்றுகின்றது. அவர்கள் சாமானியமானவர்களா? பழைய காலத்தில் இருந்த கம்பர், ஒட்டக்கூத்தர் முதலியவர்களைப் போன்றவர்கள். அவர்கள் இருப்பதால் மடத்திற்குக் கெளரவமேயன்றி மடத்திலிருப்பதால் தனியாக அவர்களுக்கு ஒரு கெளரவமும் ஏற்படவில்லை. மடத்து வேலைக்காரர்களாகவாவது மடத்துக்கு அடங்கியவர்களாகவாவது அவர்களை நினைக்கக் கூடாது. அவர்கள் அவதார புருஷர்கள்; ஏதோ பக்தி விசேஷத்தால் மடத்திற்கு வந்து பாடஞ் சொல்லிக் கொடுக்கிறார்களேயன்றி மடத்தின் அதிகாரத்திற்குள் அடங்கி அவர்கள் இருக்கவில்லை. மடத்திலிருந்து அவர்களுக்குச் சம்பளம் யாதும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் மட்டும் கவனிக்கப்பெற்று வருகின்றன. நாங்கள் அவர்களைக் கண்டிக்க இயலாது. ஒருபொழுதும் நடவாத விஷயம் இது. அவர்கள் மரியாதை ஒன்றுக்கே கட்டுப்பட்டவர்கள். பெரிய அதிகாரிகளெல்லாம் அவர்களிடம் மரியாதையாக இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதிலும் அவர்களுக்குச் செல்வாக்குண்டு. எல்லோரும் தமிழ்த் தெய்வமாக அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; எல்லோரிடத்திலும் மிகவும் மரியாதையாக அவர்கள் நடப்பார்கள். அவர்களுக்கு மன வருத்தமுண்டாகும்படி தாங்களே நடந்திருக்கலாமென்று தோற்றுகிறது” என்று பின்னும் பிள்ளையவர்களுடைய பெருமையைச் சொல்லி வருகையில், சிவகுருநாத பிள்ளை, ‘பிள்ளையவர்களால் நமக்கு என்ன என்ன விபரீதங்கள் உண்டாகுமோ’ என்று அச்சத்தையும் முன்னையினும் அதிகக் கவலையையும் அடைந்து, “ஒன்றையும் கவனியாமல் அவர்களிடத்தில் தாறுமாறாகப் பேசிவிட்டேனே! என்னுடைய கால வித்தியாசத்தால் இந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டேனே” என்று கையை மேஜையில் ஓங்கி அடித்தார்; கைகளைப் பிசைந்தார். பின்பு விசுவலிங்கத் தம்பிரானைப் பார்த்து, “ஸ்வாமி, பிள்ளையவர்களிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்; என்னிடம் வித்தியாசமான எண்ணங் கொள்ளாமல் அன்போடு இருக்கும்படி மட்டும் எப்படியாவது செய்ய வேண்டும். நானும் ஜாக்கிரதையாகவும் மரியாதையாகவும் இனி நடந்துகொள்வேன்” என்றார்.

விசுவலிங்கத் தம்பிரான், ”வேண்டுமாயின் அது செய்ய முடியும். அவர்களும் சம்மதிப்பார்கள். அதைப்பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்கள் யாருடைய குற்றத்தையும் உடனே மறந்து விடுவார்கள்; நீங்கள் மாத்திரம் அவர்களிடம். மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். நான் சொல்லவேண்டுவது அதுதான்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பிள்ளையவர்களிடம் வந்தார். பிள்ளையவர்கள் எழுந்து அவரை இருக்கச் சொல்லி வந்தனம் செய்து, ”இவ்வூருக்கு எழுந்தருளியது என்ன விசேஷம்? புராணம் நடந்து வருகின்றது. கூட இருந்து நடத்த வேண்டும்” என்றபொழுது விசுவலிங்கத் தம்பிரான் நிகழ்ந்தவற்றைச் சொல்லித் தாசில்தாரிடம் வருத்தமில்லாமல் இருக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.

இவர், “அவரிடத்துப் பிரீதியுள்ளவனாகத் தான் இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். அவராகவே தம்மை *1 இன்னாரென்று மிக எளிதில் தெரிவித்துவிட்டார். நமச்சிவாய மூர்த்தியின் திருவருளாலும் சந்நிதானங்களின் திருவருளாலும் அங்குத்தியின் ஆதரவாலும் எனக்கு என்ன குறைவுண்டாகும்? எல்லாம் நன்கு நிறைவேறி வருகின்றனவென்று சந்நிதானத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்” என்று சொல்லியனுப்பினார். விசுவலிங்கத் தம்பிரான் திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்ல அவர் ஸந்தோஷம் அடைந்தனர்.

மேலே புராண அரங்கேற்றம் நடைபெறுவதற்கு வேண்டிய முயற்சிகள் சில நண்பர்களாற் செய்விக்கப்பெற்றன. அவர்கள், சில பிரபுக்கள் உதவி செய்ய நிச்சயித்திருக்கிறார்களென்றும் அவர்களை ஒருமுறை சென்று பார்த்துவந்தால் நலமாக இருக்குமென்றும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இசைந்து சிலரிடம் இவர் சென்றபொழுது அவர்களுட் சிலர் தமிழருமையறியாதவர்களாதலின் வாக்களித்தபடி செய்யவில்லை; இவர் தங்களைப் பார்க்க வந்தாரென்று பலரிடம் கூறிவந்தார்களேயன்றி வேறொன்றும் உதவி செய்ய அவர்கள் முன் வாராமையால், ‘அத்தகையவர்கள் பால் இனிச் செல்லலாகாது என்று இவர் உறுதி பூண்டனர். அதனால் இவருக்கு மனவருத்தமுமுண்டாயிற்று; உண்டாகவே யாதொரு முயற்சியும் செய்யாமல் திருவருளையே சிந்தித்துக்கொண்டு சும்மா இருந்தனர். அப்படியிருக்கையில், இதனைக் கேள்வியுற்ற வேறு தக்க கனவான்கள் *2 சிலர் இவரிடம் வலிய வந்து, ”நீங்கள் இந்த விஷயத்திற் சிறிதேனும் கவலையடைய வேண்டாம். வழக்கம் போலவே அரங்கேற்றம் நடைபெற வேண்டும்” என்று கூறித் தம்முடைய நண்பர்களிடத்தும் சொல்லி இவருக்கு வேண்டிய செளகரியங்களை அமைக்கச்செய்து புராணம் அரங்கேற்றி முடியும் வரையில் ஆதரித்து வந்தார்கள். புராணப் பிரசங்கம் செவ்வனே நடை பெற்று வந்தது.

அந்தப் புராணம் முதலில் சிவகுருநாத பிள்ளையின் வேண்டுகோளின்படி தொடங்கப்பெற்றதாதலின் புராணம் செய்வித்தோரைக் குறிக்கும் செய்யுளில் அவர் பெயரை இப்புலவர்பிரான் அடியில் வருமாறு அமைத்திருந்தார் :

விருத்தம்

“சீர்பூத்த நடுநாட்டிற் றிகழுமஞ்சை நகர்வாழ்
      சிவஞானச் செல்வனமச் சிவாயமுகின் மைந்தன்
பார்பூத்த மன்னரிரு கண்மணியிற் பொலிவோன்
      பலகலை தேர்ந் தவனாட்டிற் கியனீதி யுடையோன்
ஏர்பூத்த மயற்பரமங் கையரிரக்க மில்லான்
      எனவுள்ளான் றருமம் வளர்த் தெழுமேழிக் கொடியான்
கார்பூத்த கொடைத்தடக்கைப் பேரதிகா ரஞ்செய்
      கனதனவான் கருதுசிவ குருநாத வள்ளல்” 

         (ஏட்டுச்சுவடியிலிருந்த பழைய பாட்டு)

வேறு

“சதுமுகன் முதலோர் போற்றுந் தம்பிரான் கும்ப கோண
முதுவட மொழிப்பு ராண முழுமையு மொழிபெ யர்த்துக்
கதுமெனத் தமிழாற் பாடித் தருகெனக் கனிந்து கேட்ப
அதுகடைப் பிடித்தவ் வாறே யறைதர லுற்றேன் மன்னோ.”

         (குடந்தைப்புராணம், பாயிரம், 29.)

அவர் பின்பு மனவேறுபாட்டால் தம்முடைய தொடர்பு எவ்வகையிலும் இருத்தலே கூடாதென்று வேண்டிக்கொண்டமையின், அவ்விரண்டனுள் முதற் செய்யுளை மாற்றி வேறு செய்யுளொன்று இயற்றிச் சேர்க்கப்பட்டது. அதுவே அச்சுப் பிரதியிற் காணப்படும். ”சீர்பூத்த” என்னும் பழைய செய்யுள் ஏட்டுச் சுவடியில் எழுதி அடிக்கப்பட்டிருந்தது; பின்பு அமைக்கப்பட்ட செய்யுள் வருமாறு:-

“அத்தி சூழ்வைப் பவாவுங் குடந்தையார்
பத்தி யேயுரு வாகிய பண்பினார்
தித்தி யாநின்ற செஞ்சொற் பெருமையார்
முத்தி வேட்கு முதற்பெருஞ் சைவர்கள்.”

      (குடந்தைப்புராணம், பாயிரம், 28.)

முதலில் இயற்றப்பட்ட சிறப்புப்பாயிரச் செய்யுளிலும் சிவகுருநாத பிள்ளையின் பெயர் அமைக்கப்பட்டிருந்தது.

“நீதியுரு வமைந்தசிவ குருநாத மகிபனரு ணிரம்பு மேனிப்
பாதியிறை கும்பகோ ணப்புரா ணந்தமிழாற் பாடு கென்ன
ஓதியுணர் பவர்விரும்பப் பாடினான் சிராமலைவாழ் வுடையா னன்ன
மாதியல்பா தியனருள்சான் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே”

என்ற அச்செய்யுளின் முதலடி மட்டும் முற்கூறிய காரணத்தால், ”நீதியுருவமைந்த சிவ சமயத்தார் பலருமரு ணிரம்பு மேனி” என மாற்றி அமைக்கப்பட்டது.

கா.சபாபதி முதலியார் வந்தது

அப்போது ஸ்ரீ ஸேதுஸ்நானத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்த காஞ்சீபுரம் வித்துவான் சபாபதி முதலியார் மீண்டு வருகையில் கும்பகோணத்தில் இவர் புராணம் அரங்கேற்றி வருதலைத் தெரிந்து அங்கே வந்தார். இவர் அவருக்குத் தக்க விடுதியமைத்துச் சிலதினம் இருந்து செல்லும்படி கேட்டுக் கொண்டு வேண்டிய சௌகரியங்களைச் செய்துவைத்தார். அவர் சிலநாள் அங்கே இருந்து இவர் புராணம் அரங்கேற்றுகையில் இவருடைய பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்றார். அவர் காஞ்சிப் புராணம், தணிகைப்புராணம் முதலிய நூல்களை வாசித்தறிந்தவராதலின் அந் நூல்களை இயற்றியவர்களுடைய ஆசாரிய பீடமாகிய திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சென்று குருமூர்த்திகளைத் தரிசனம் செய்ய விரும்பினார். அது தெரிந்த இவர் அவரையும் உடன்வந்தவர்களையும் திருவாவடுதுறை மடத்துக்கு அழைத்துச் சென்றார்; இரண்டு குருமூர்த்திகளையும் தரிசனம் செய்வித்தார்; சபாபதி முதலியாருடைய பெருமைகளைத் தலைவர்களுடைய முன்னிலையில் எடுத்துப் பாராட்டி மிக்க மரியாதையோடு நடந்துவந்தார். தாண்டவராயத் தம்பிரானவர்களாலும் சபாபதி முதலியாரைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் முன்னரே அறிந்திருந்தாராதலின் அவரை அன்போடு விசாரித்துத் தக்க ஸம்மானங்களைச் செய்வித்தனுப்பினார்.

பிள்ளையவர்கள் அவரிடம் மரியாதையோடு நடந்துகொண்டதைப் பற்றிப் பிற்காலத்திற் சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுக்கு மேற்பட்ட தமிழ் வித்துவான்கள் இல்லையென்றும் இவர்களுக்கே எல்லோரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் எண்ணியிருந்தோம். காஞ்சீபுரம் சபாபதி முதலியார் இங்கே வந்திருந்தபொழுது அவரைத் தம் வித்தியா குருவென்று சொல்லி இவர்கள் மிகப் பாராட்டினார்கள். அன்றியும் அவருக்கே முதல் இடத்தைக் கொடுத்துத் தாம் அப்பால் இருந்தார்கள். இவர்களுடைய செயலைப் பார்க்கையில் நமக்கு வியப்பும் இன்பமும் உண்டாயின. அவரிடத்துச் சில நூல்களே இவர்கள் கேட்டிருத்தல் கூடும். அதற்காக இவர்கள் பாராட்டிய நன்றியறிவின் திறம் இவர்களுடைய உயர்ந்த குணத்தைப் புலப்படுத்தியது. இவ்வாறு இக்காலத்தில் யார் இருக்கின்றார்கள்?” என்று ஒருமுறை எங்களிடம் சொன்னதுண்டு.

கோமளவல்லித் தாயார் பிள்ளைப்பருவத்தைப் பாராட்டிப் பாடியது

இவர் கும்பகோண புராணம் அரங்கேற்றி வருகையில், சார்ங்கபாணிப் பெருமாள் கோயில் தர்மகர்த்தாவாகவிருந்த ஸ்ரீநிவாஸ் பாட்ராச்சாரியாரென்பவருடைய விருப்பத்தின்படி அப்புராணத்தில் ஆராவமுதப் படலத்தில் ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடைய அவதாரத்தைச் சொல்லுகையிற் பத்துப் பருவங்களையும் பத்துப்பாடல்களில் அமைத்து இனிமை பயப்பப் பாடியுள்ளார். அவை அப்படலத்தில் 26 – ஆவது முதல் 35 – ஆவது வரையுள்ள செய்யுட்களாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

“பலகதிர் விரிக்கும் பகன்முன மலரும் பங்கயத் தவிசென நெடியோன்
நலநிற மமர்ந்து கணக்கில்பல் லுயிர்க்கும் நாடுகாப் பியற்றிடு பவட்கு
நிலமளந் தறியாப் பெருந்தவ முனிவன் நிறைபெருங் கருணையிற் சீர்த்த
வலனுயர் தெய்வம் பலவுணர் தரக்கூய் வயங்குகாப் பியற்றினன் மாதோ.”

        (நிறம் - மார்பு; முனிவன் - ஏமருஷி.)

“பதியெனக் கானோன் வயினுற்று வந்தும் பயந்தவ னென்றுளங் கொளாது
மதிவிருப் பமைந்து புவிமக ளேயம் மாயனை மணாளனாக் கொண்டாய்
திதியுனை நோக்கே னெனத்தலை யசைக்கும் செய்கையிற் கோமள வல்லி
துதிமுக நிமிர்த்துச் சென்னிமற் றசைத்துத் தூயசெங் கீரையா டினளே.”

“பெற்றதாய் செம்பொற் றாமரை யாகப் பிறங்குற வளர்க்குந்தா யெல்லாம்
கற்றமா முனிகைத் தாமரை யாகக் கலந்தருள் கோமள வல்லி
குற்றமோ விதய தாமரை மலர்ந்து குவலயத் துயிரெலாந் தழையப்
பொற்றதா லோதா லென்றிட வுவந்து பொற்றிருத் தொட்டின்மே வினளே.” 

       (பொற்ற - பொலிவுபெற்ற.)

“அறிதுயி லராமே லமருமெம் பெருமான் அடிமலர் வருடல்செய் யாது
பொறியறப் பிரிந்த செங்கைகா ளும்மைப் புடைத்தன்றி விடேனென முயன்று
முறிவறப் புடைக்குஞ் செயலென வகங்கை முகிழ்த்தொன்ற னோடொன்று தாக்கச்
செறிகருங் கூந்தற் கோமள வல்லி திகழ்ந்துசப் பாணிகொட் டினளே.”

“முடங்கலின் முத்த மதன்றழல் குளிக்கும் முகின்முத்த மிடித்தழன் முழுகும்
மடங்கலில் யானைக் கோட்டுறு முத்தம் மற்றதன் கட்டழ லழுந்தும்
உடங்கிவை யன்னாய் வெப்பமுண் மையினால் வேண்டிலோ முனதுசெம் பவளத்
தடங்கரு முத்தந் தாவென முத்தம் அளித்தனள் கோமள வல்லி.”

     (முடங்கல் - மூங்கில்.)

“வருகதெள் ளமுதே வருகசெங் கரும்பே வருகசெந் தாமரை மகளே
வருகபொற் கொம்பே சிறுசிலம் பாதி மலரடி யிடைக்கல கலென
வருகவற் புதமே யெங்குலக் கொழுந்தே வருகபே ரானந்த வாழ்வே
வருகசித் திரமே யென்று சரிப்ப வருவள்பூங் கோமள வல்லி.”

*3 “முன்னநீ யுதித்த விடத்திவ ளுதித்தாள் முயற்கறை சிறிதுமில் லாதாள்
நன்னர்நீ யிந்தத் தலத்தினை யடைந்தால் நைதலற் றுயர்வது சாதம்
உன்னரும் விடவா யாயிர மமைந்த உரகமற் றிவண்மொழி கேட்கும்
மன்னவம் புலியே வருகென வழைப்ப மகிழ்ந்தனள் கோமள வல்லி.”

“மலர்செழுங் கரந்தா மரையெனக் கருதி வந்துவீழ் பலகருஞ் சுரும்பர்
புலர்தலி லஃதன் றெனத்தெளிந் தெழுந்து போதல்போ லொன்றன்பி னொன்று
பலர்புகழ் நீல மணியிழைத் தனவே பற்பல தொடர்ந்தெழ வினமென்
றலர்விழிச் சுரும்புந் தொடரவம் மனைதொட் டாடினள் கோமள வல்லி”

“கயல்விழிக் கயலைச் சைவல நறிய கருங்குழ லாயசை வலத்தை
அயல்வரால் கணைக்கா லாகிய வராலை அங்கொடி மருங்குனுண் கொடியை
இயல்பல கமல முகமுத லாக இயைபல கமலத்தை நட்க
உயலுற வந்த கோமள வல்லி உவந்துநீ ராடினள் பொன்னி”

“செய்யதா மரைமே னெடியவ னிறமேற் செறிந்தமர் தருதிறம் விளங்க
ஐயசெம் மணியா னீலவொண் மணியால் ஆய்வெவ்வே றாய்ப்பொலி பலகை
எய்யநன் கேறி இகுளையர் பல்லோர் இருபுறம் வடங்கடொட் டாட்டத்
தையலங் கொழுந்து கோமள வல்லி தவாவொளி யூசலா டினளே.”

       (எய்ய - பலரும் அறிய.)

ஒரு சமயோசிதச் செய்யுள்

அக்காலத்தில் சைவ வைணவ சமயத்தவர்களாகிய இரு வகையாரும் மிகுந்த அன்பு பாராட்டி இவரை ஆதரித்து வந்தார்கள். இரு திறத்தாருடைய மனத்திலும் வேறுபாடு தோற்றாதபடி அவ்வக்காலத்திற்குத் தக்கவண்ணம் இவர் நடந்துவந்தார். ஒருநாள் அப்புராணச் செய்யுட்கள் செய்யுங்காலத்தில் மேற்கூறிய இருதிறத்தார்களும் இருந்து ஒவ்வொரு செய்யுளும் முடிந்தவுடன், கேட்டு ஆனந்தித்துக்கொண்டு வந்தார்கள். அச்சமயம் கும்பேசுவரரையும் சார்ங்கபாணிப் பெருமாளையும் பற்றிச் சொல்லவேண்டிய தருணத்தில் இவர் சிறிதும் கவலையின்றி, ‘கும்பேசுவரரையும் ஆராவமுதப் பெருமாளையும் அடியார்கள் தந்தை தாயென்று போற்றுவார்களாயின் பலவகைப் போகங்களையும் நுகர்ந்து சிவலோக வாழ்வைப் பெறுவார்கள்’ என்னும் பொருளமைய,

விருத்தம்

“எண்ணிய கும்ப லிங்கநா யகரை இலங்குமா ராவமு தரைச்சீர்
நண்ணிய சைவர் யாவருங் கண்டு நாடொறுந் தந்தைதா யென்றே
கண்ணிய சிறப்பிற் போற்றிடு வாரேற் கருதுபல் போகமுந் துய்த்துப்
புண்ணிய மிகுந்த பெருஞ்சிவ லோகம் புக்குவாழ்ந் தமர்வது சரதம்”

        (ஆராவமுதப். 70.)

என்ற செய்யுளைச் சொல்லி முடிக்கவே இருதிறத்தாருங் கேட்டு ஒருவரை ஒருவர் மெல்ல நோக்கிச் சந்தோஷம் அடைந்தனர். நுண்ணிய அறிவுள்ள சைவரிற் சிலர் இவருடைய புத்தி சாதுரியத்தை மெச்சினர்.

செய்யுட்களை விரைவிற் பாடியது

புராணம் அரங்கேற்றுங் காலத்துட் சில நாட்களில் மாலையில் அரங்கேற்ற வேண்டிய செய்யுட்களைக் காலையிற் பாடி எழுதுவிப்பது வழக்கம். ஒருநாட் காலையில் அன்பர்கள் சிலர் வந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தமையால் செய்யுட்கள் செய்யப்படவில்லை. அப்பாற் பகற் போசனத்தின் பின்பு அயர்ச்சி மிகுதியால் இவர் நித்திரை செய்தார். மாணாக்கர் முதலியோர், ‘இன்று மாலையில் அரங்கேற்றுவதற்குச் செய்யுட்கள் செய்யப்படவில்லையே; எழுந்தால் ஏன் ஞாபகப்படுத்தவில்லை யென்று சேஷையங்காரைக் கோபித்துக் கொள்வார்களே என்றெண்ணி அச்சத்தோடு இருந்தார்கள். அப்போது இவர் எழுந்திருந்து தாகசாந்தி செய்து கொண்டார்; பிறகு அங்கே வந்த சிலரோடு யாதொரு கவலையுமின்றிப் பேசிக்கொண்டே இருந்தார். சேஷையங்கார் வந்து நின்றார். இவர், ”என்ன விசேடம்?” என்று கேட்க, அவர், ”இன்று மாலையில் அரங்கேற்றுவதற்குப் பாடல்கள் இயற்றப்படவில்லை; முன்னமே தெரிவிக்கக் கூடவில்லை; இன்று காலையிலும் தெரிவித்தற்குச் சமயம் வாய்க்கவில்லை” என்று கவலைக் குறிப்போடு தெரிவித்தார். இவர் சிறிதேனும் கவலையுறாமல், ”ஏட்டைக் கொண்டு வரலாமே” என்றார். சேஷையங்கார் புராணச்சுவடியைக் கொண்டுவரவே, நடந்தவற்றுள் இறுதிச் செய்யுளைப் படிப்பித்துக் கேட்டுவிட்டுக் கதைத் தொடர்ச்சியை அறிந்துகொண்டு சிலநேரம் யோசனை செய்து பின் அவர் கையோயாமலெழுதும்படி சில நாழிகைக்குள் ஐம்பது செய்யுட்களைப் பாடி முடித்தார். அச் செயலில் இவர் ஒரு வியப்பையும் புலப்படுத்தவில்லை. உடனிருந்தவர்களெல்லோரும் அதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். அவ்வூரிலும் அதனைச் சுற்றிய ஊர்களிலுமுள்ளவர்கள் இந்த ஆச்சரியச் செய்தியைச் சொல்லிக்கொண்டு வருவாராயினர்.

அரங்கேற்றி வருகையிற் சில வைஷ்ணவர்களாலும் பிறராலும் இடையிடையே சில இடையூறுகள் நேர்ந்தன. ஒருநாள் அயலூரிலிருந்து வந்த ஸ்ரீ வைஷ்ணவ வித்துவானொருவர் வலிந்து வந்து அடிக்கடி விதண்டாவாதம் செய்ய ஆரம்பித்தார். பின்பு தியாகராச செட்டியாருடைய சமாதானங்களால் தம் முயற்சியை நிறுத்திக்கொண்டு அவர் சென்றுவிட்டார். இங்ஙனம் அவர் வந்து வாதித்தது பிள்ளையவர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது; நெடுநாள் வரையில் அவ்வருத்தந் தணியவில்லை. அது பின்பு இவர் இயற்றிய திருக்குடந்தைத் திரிபந்தாதியிலுள்ள,

கட்டளைக் கலித்துறை

“பேசவந் தானல மார்க்கமுள் ளாரினொர் பேதையுள்ளார்
ஏசவந் தானல மோநிற் கெனவேகி னான்விடம்பூ
வாசவந் தானல மார்குட மூக்கர் வயக்கிடினை
யோசவந் தானல வோவவன் றாழ்புரு டோத்தமனே” (58)

என்னும் பாடலால் விளங்கும்.

அரங்கேற்றத்தின் நிறைவு

கும்பகோண புராணம் அரங்கேற்றி முடிந்த பின்பு அவ்வூரிலுள்ள பிரபுக்கள் இவருக்குச் சால்வை, பட்டு, வஸ்திரம் முதலிய சம்மானங்களும் பொதுவில் தொகுத்த ரூபாய் இரண்டாயிரமும் வழங்கினர். புராணமெழுதிய சுவடியை வெகுவிமரிசையுடன் யானை மேலுள்ள தவிசில் வைத்து ஊர்வலம் செய்வித்தார்கள். அப்பொழுது பெரிய *4 மேனாப்பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து அதில் பிள்ளையவர்களை இருக்கச்செய்து தக்கபிரபுக்களிற் சிலர் தாமே சில தூரம் சுமந்து சென்று தமிழ்மொழியில் தங்களுக்குள்ள அன்பைப் புலப்படுத்திப் பண்டைக்கால வழக்கத்தைத் தெரிவித்தார்கள். அப் புராணம் அரங்கேற்றிப் பூர்த்தியான காலம் குரோதன வருடம் தை மாதம் (1866.) அந் நூல் அச்சிடப்பெற்றுள்ளது.

அது திருக்குடந்தைப் புராணமென வழங்கும். அதிலுள்ள படலங்கள் 68; செய்யுட்கள் 2384. அதில் அவையடக்கமாக நான்கு செய்யுட்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று வருமாறு:

விருத்தம்

“விதிவழி யாயுஞ் சில்லோர் விதிவிலக் காகத் தத்தம்
மதிவழி யாயுஞ் சில்லோர் மாதேவன் றனைப்பூ சித்தார்
கதிவழி காணா ரில்லை கடையனேன் பாட்டிற் குற்றப்
பொதிவழி தருவ தேனும் வெறுத்திலா னனைய புத்தேள்.”

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் பூமிதேவியை மகளாகப் பெற எண்ணி உப்பில்லாத உணவைப் புசித்துப் பல வருடங்கள் நோற்றனர். அவர் தவத்திற்கு மகிழ்ந்து அத்தேவி மகளாக அவதரித்து வளர்ந்து வந்தாள். அப்பொழுது அவளை மணந்து செல்ல எண்ணித் திருமால் மூப்புவேடம் பூண்டுவந்தனர். அவரை மார்க்கண்டேயர் வினவுதலும் அவர் விடை கூறுதலுமாக உள்ள செய்யுட்களில் ஒன்று வருமாறு:

விருத்தம் 

“வந்தது பசித்தீ மாற்ற வென்றனன் மாயக் கள்வன்
அந்தநன் மொழிகேட் டைய வலவண வுணவுண் டிங்கே
நந்தவுண் டிடுவாய் கொல்லோ வென்றன னற்ற வத்தோன்
எந்தமண் ணேனு முண்பே னென்றனன் விருத்த மாயன்.”

       (திருநாகேச்சுரப். 22)

இதன்கண் ‘எந்தமண் ணேனு முண்பேன்’ என்பது அவசரத்தில் உலகினர் கூறும் வாக்கியமாக இருந்தாலும் மண்மகளைத் திருமால் விரும்பிய குறிப்பும் அதிற் புலப்படுகின்றது.

சிவபெருமான் அமுத கும்பத்தில் தோற்றியதைப் பற்றிக் கூறும் செய்யுட்களில் ஒன்று வருமாறு.

“மேடமூர் மதலை கடகமென் மலர்க்கை விளங்கருஞ் சிங்கமென் மருங்குல்
ஆடக மகரக் குழைச்செவி மீனம் அடுவிழி படைத்துலாங் கன்னி
மாடமர் தரவ விருச்சிக மிதுனம் மரூஉந்தனு வதுவென வடியார்க்
கூடவோ ரிடபந் தோன்றிடும் பொருளோர் கும்பத்துத் தோன்றிய தன்றே.“''”

       (கும்பேசுரப்படலம், 31)

(மாடு அமர்தர அவிர் உச்சி கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென; கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென – மேகத்தையும் மிதுன ராசியையும் பொருந்தும் உயர்ச்சியையுடைய வில்லாகிய மேருமலையைப்போல. இச் செய்யுளின்கண் பன்னிரண்டு இராசிகளின் பெயர்களும் தொனித்தல் காண்க.)

*5 மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

பின்பு அந்நகரிலுள்ள ஜவுளிக்கடைக் கனகசபைப்பிள்ளை யென்னும் ஓரன்பருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழும், அம்பலவாண செட்டியாரென்பவர் வேண்டுகோளின்படி திருக்குடந்தைத் திரிபந்தாதியும் இவராற் செய்யப்பட்டன. பிள்ளைத்தமிழில் அம்புலிப் பருவத்திலுள்ள *6 கணித சம்பந்தமான சிலேடைகள், அப்பொழுது கும்பகோணத்திற்கு வந்திருந்த மன்னார்குடி ஸ்ரீமத் மகாமகோபாத்தியாய ராஜு தீக்ஷிதரவர்களிடம் அறிந்து செய்யப்பட்டன.

அப்பிள்ளைத் தமிழ்ச் செய்யுட்களுட் சில வருமாறு:-

“ஈன்றவற் கில்லவளு முணவுமா கப்புவியும் இயல்கடி மணஞ்செய்தேமும்
இனியவுவ ளகமுமா கக்கடலு மாலையும் இருப்பிடமு மாகவனமும்
தோன்றவழி யுங்குடையு மாகவரை யுஞ்செய்து சுதன்மகன் றிறவுகோலாத்
தூயதாய் மனைவிதற் குறையுளுஞ் செய்துமகிழ் தோன்றனான் முகனளிக்க
நான்றசடை யார்கும்ப நாயக ரெனும் பெயர் நயத்தல்கண் டங்கண்மீன
நாயகி யிடைச்சிங்க நாயகி யருட்கன்னி நாயகி யறம்பலவும்வாழ்
ஆன்றகைக் கடகநா யகிகாது மகரநா யகிநுதற் றனுநாயகி
அடியமித யத்துலா நாயகி யெனப்பல அமைந்தமங் களவுமையையே.”

             (காப்புப். 5)

“தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
      தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
      கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
      செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருள்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே.”

            (வருகைப். 10)

“பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை
      பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரை செய்துகாத்தேம்
தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர்
      திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை
வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த
      வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கும்
அருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுடன் அம்புலீ யாடவாவே
      அலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.”

            (அம்புலிப். 10)

இந்தப் பிள்ளைத்தமிழ் அக்ஷய வருடம் சித்திரை மாதத்தில் (1866) இயற்றி அடுத்த ஆனி மாதத்தில் அரங்கேற்றப்பட்டது. பின்பு விபவ வருடம் ஆனி மாதம் (1867) அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.

*7 குடந்தைத் திரிபந்தாதி

குடந்தைத் திரிபந்தாதி மிகவும் சுவைமலிந்தது. அதில் இவர் அனுபவச் செய்திகள் சில அங்கங்கே காணப்படும். சிவகுருநாத பிள்ளையின் பிற்கால நடையும் பின்பு சிலர்பால் தாம் அலைந்தமையும் இவருடைய நெஞ்சில் இருந்து வருத்தி வந்தன. அவ் வருத்தம்,

*8 “திறம்பாவ மென்று குறிப்பார் மனைதொறுஞ் சென்றுழன்ற
மறம்பாவ மென்று மறிதரும்” (18)
 “என்னையப் பாவலர் தூற்றுநர் தூற்ற” (31)

என்ற பாடற்பகுதிகளால் விளங்கும்.

இவ்வந்தாதியின் கண் அமைந்துள்ள திரிபு மிகவும் விசித்திரகரமானது. இந்த அந்தாதி அரங்கேற்றப்பட்ட பொழுது இதனைச் செய்வித்தவராகிய அம்பலவாண செட்டியாரென்பவர் ரூ. 300 ஸம்மானம் செய்தனர்.

விஷ்ணுபுராணம் இயற்ற உடன்படாமை

பின்பு பலரால் ஆதரிக்கப்பெற்று இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, “விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டார். வேறொருவரைக் கொண்டு செய்விக்க ரங்கசாமி ஐயங்காருக்கும் பிறருக்கும் விருப்பமில்லாமையால் அம் முயற்சி அன்றோடு நின்று விட்டது.

கும்பகோணத்தைவிட்டு இவர் புறப்படுங்காலத்து ஸம்மானமாகக் கிடைத்த பொருள்கள் யாவும் அரிசிக்கடை மளிகைக்கடை முதலியவற்றில் இருந்த கடன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆடைவகைகளை மாணாக்கர்கள், சிநேகிதர்கள் முதலியவர்களுக்கு இவர் கொடுத்துவிட்டார். புறப்படும்பொழுது வண்டிச் செலவுக்கு இவர் கடன் வாங்கிக்கொண்டே புறப்பட்டாரென்று சொல்லுவார்கள்.

கும்பகோணம் காலேஜிற்குச் சென்று பிள்ளைகளைப் பரீட்சித்தது

தியாகராச செட்டியாருடைய வேண்டுகோளால் ஒருமுறை கும்பகோணம் காலேஜுக்கு இவர் போயிருந்தபொழுது இவரை நாற்காலியில் அமரச் செய்துவிட்டுச் செட்டியார் நின்று கொண்டிருந்தார். இவர், “பாடத்தை நடத்தலாமே” என்றபோது அவர், “ஐயா அவர்கள் மாணாக்கர்களைப் பரீட்சை செய்ய வேண்டும்” என்றார். இவர் சில பிள்ளைகளைப் பரீட்சித்து விட்டு ஒரு மாணாக்கனைப் பார்த்து, “ஏதாவது ஒரு பாடலைச் சொல்” என்று சொன்னார். அவன்,

“கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்”

என்ற நளவெண்பாப் பாடலைச் சொல்லி இவருடைய கட்டளையால் சுருக்கமாகப் பொருளுங் கூறிவிட்டு, ”இன்றைக்கு எங்களுக்கு உண்டான மகிழ்ச்சியும் அத்தகையதே” என்றான். இவர் சந்தோஷமடைந்து, “இவ்வாறு சமயத்திற்குத் தக்க பாடலைச் சொல்லும்படி நீ கற்பித்துவைத்திருப்பது மிகப் பாராட்டற்குரியது” என்று செட்டியாரைப் பார்த்துச் சொல்லி மகிழ்ந்தார்.

எப்பொழுதாவது இவர் தியாகராச செட்டியார் வீட்டிற்குப் போனால், இவரை உபசரிப்பதற்காகச் செட்டியார் காலேஜுக்குப் போகாமல் இருக்க உத்தரவு வாங்கிக் கொள்வது உண்டு. அதற்காக விண்ணப்பம் செய்து கொள்ளுகையில், “என்னுடைய ஆசிரியர் இங்கே எழுந்தருளியிருக்கின்றார்; உடனிருந்து உபசரிக்க வேண்டியவனாக இருக்கிறேன்” என்று எழுதுவது வழக்கம். இவருடைய அருமையை அறிந்தவர்களாதலின் காலேஜ் தலைவர்கள் உடனே அவருக்கு உத்தரவு கொடுத்துவிடுவார்கள். ஒருமுறை இங்ஙனம் எழுதி அனுப்பியபொழுது காலேஜில் அக்காலத்தில் ஆசிரியராக இருந்த ராவ்பகதூர் பூண்டி அரங்கநாத முதலியார் எம்.ஏ., பிள்ளையவர்கள் செட்டியார் வீட்டிற்கு வந்திருப்பதை அக்கடிதத்தாலறிந்து உடனே சில அன்பர்களுடன் சென்று பார்த்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தார். இவரைக் கண்டு பேசியதைப் பெரிய லாபமாக நினைத்து மகிழ்ந்ததன்றிப் பிறரிடத்தும் இவருடைய பெருமையைப் பாராட்டினார்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இன்னாரென்பதற்குப் பகைவரென்னும் பொருளும் இங்கே கொள்ள வேண்டும்.
2.  இவர்கள் பேட்டைத் தெருவிலிருந்த கோபு நடலஞ் செட்டியார், கோபு சுப்பராய செட்டியார், பஞ்சநத செட்டியார், முடுக்குத்தெருக் கந்தப்ப செட்டியார் முதலியோர்.
3.  இச்செய்யுளில் ‘முன்னநீ ……… உதித்தாள்’ என்றதனால் சாமமும், ‘முயற்கறை சிறிதுமில்லாதாள்’ என்றதனாற் பேதமும், ‘நன்னர் நீ…….. சரதம்’ என்றதனால் தானமும், ‘உன்னரும் ……. கேட்கும்’ என்றதனால் தண்டமும் ஒருங்கே குறிப்பிக்கப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழ்களில் அம்புலிப் பருவத்துக்குரிய செய்யுட்கள் பத்தில் அமைக்கப்பெறும் இவ்வரிய செய்திகளை இச்செய்யுளொன்றிலேயே அமைத்த திறன் மிகப் பாராட்டற்பாலது.
4.  இந்தப் பல்லக்கு இவருடைய தேகவியோக காலம் வரையில் வேண்டிய சமயங்களில் இவரைத் தாங்கிச் செல்லும் பேறு பெற்றிருந்தது.
5.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 389-490.
6.  இச் செய்தியைப் பிள்ளையவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
7.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் பிரபந்தத் திரட்டு, 2129-2230.
8.  திறம்பா வம்மென்று – மாறுபாடாக வாருமென்று.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s