இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ரொட்டித் துண்டம்

அரசியலில் திலகரின் தீவிரவாத கோஷ்டியைச் சார்ந்திருந்த மகாகவி பாரதிக்கு, கோகலே தலைமையிலான நிதானக் கட்சியாரின் மன்றாடல்களும், ஆங்கிலேயரை உயர்த்திப் பேசும் தன்மையும் கசந்ததில் வியப்பில்லை. அதனை தனது ‘இந்தியா’ பத்திரிகையில் அவ்வப்போது கடுமையாகத் தாக்கி வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. தனக்கு இதழியலில் முகவரி கொடுத்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே ஆயினும், நிதானக்கட்சியாரின் கருத்தை ஆதரித்தால், பாரதியின் கண்டனத்துக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். இந்த செய்தியில் இதழாளர் பாரதியின் தார்மிக நெறியும், தனது நெஞ்சுக்கு நீதி என்று பட்டதைச் சொல்லும் இதழியல் துணிவும் இருப்பதைக் காண்கிறோம்.

பாரதி-அறுபத்தாறு- (57-66)

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும். “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம், “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்....