பாரதி-அறுபத்தாறு- (57-66)

-மகாகவி பாரதி

 “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும்.  “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம்,   “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்.

பாரதி-அறுபத்தாறு (57-66)

சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)

”மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
      மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை, அவனி வேந்தர்
      அனைவருக்கும் மேலானோன், அன்பு வேந்தன்
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
      நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
      வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.       57

காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
      கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
      மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
      குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குருவந்தான்; இவன்பால் ஞானப்
      பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்” என்றெனுள்ளே.       58

சிந்தித்து ”மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
      தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்”என்றேன்.
      வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்:
”அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
      அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை; பந்தமில்லை; பந்தம் இல்லை;
      பயமில்லை; பயமில்லை; பயமே இல்லை;       59

”அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
      அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;
      அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்; நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை; ஆத லாலே,
      அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
      மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா!       60

‘பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
      பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
      நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
      கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
      சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு       .61

”ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
      அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
      பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
      நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டிநினை அன்னை காத்தாள்;
      பாரினிலித் தருமம்நீ பகரு வாயே.       62

”ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
      ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
      ஒருமொழி ‘ஓம் நமச் சிவாய’ வென்பர்;
‘ஹரிஹரி’யென் றிடினும் அஃதே; ‘ராம ராம’
      ‘சிவசிவ’வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே ‘ஓம்சக்தி’யென்று மேலோர்
      ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.       63

”சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
      சஞ்சலங்கள் இனிவேண்டா; சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
      எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
      எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
      பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.       64

”பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
      புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
      சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் ‘தாவு’ மார்க்கம்,
      நல்ல ‘கண் பூசி’ மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
      யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.       65

”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
      பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
      தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
      புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
      சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!”       66

$$$

(பாரதி- அறுபத்தாறு- சுயசரிதை நிறைவு)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s