தென்றலுடன் பிறந்த பாஷை

-மகாகவி பாரதி

நமது தாய்மொழியாம் தமிழின் மகிமை அறியாமல் இதைத் தூற்றும் கூட்டம் இன்றும் உண்டு; அன்றும் இருந்தது. அப்போது, அத்தகையோரை எள்ளி நகையாடி, தமிழ் மீது பற்றுக் கொண்ட ஜி.யு.போப்பை உதாரணமாகக் காட்டி, மகாகவி பாரதி தந்த செய்தி இது. கூடவே, சுதேசமித்திரன் இதழில் வெளியான செய்தியின் நறுக்கையும் இணைத்துள்ள அவரது பாங்கு மெச்சத் தக்கது...

‘தமிழ்ப் பாஷையின் இனிமை’ என்ற தலைப் பெயருடன் சென்னை, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே இனியதோர் குறிப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை மற்றோரிடத்திலே (*கீழே கொடுக்கப்பட்டுள்ளது) எடுத்துப் பிரசுரித்திருக்கிறோம். தென்றலுடன் பிறந்த தமிழ் மொழியின் இளமையைப் பற்றி டாக்டர் ஜி.யு.போப் என்னும் புகழ் பெற்ற விற்பன்னர் கொண்டிருக்கும் மதிப்பை அதில் எடுத்துக் காட்டியிருப்பது தமிழர்கள் அனைவரும் கண்டு மகிழத் தக்கதாக இருக்கின்றது. ஆங்கிலப் பெண்களின் இதழ் நயத்திற்கும், செவி நுடபத்திற்கும், அபிசிருக்கும் தமிழைப் போன்ற பொருத்தமுடையது வேறெந்த பாஷையும் இல்லையென்று போப் கூறுகிறார். தற்காலத்திலே நம் நாட்டவர்கள் நமது அருமைத் திருமொழியின் சுவையை வளர்க்க முயலாமல் அதன் இன்பமெல்லாம் பாழாகவிட்டிருப்பதைப் பற்றி மேற்படி குறிப்பெழுதியவர் மிகுந்த கோபமுணர்த்தி இருக்கின்றார். நாம் அந்த விஷயங்களில் நமக்கேற்பட்டிருக்கும் அன்புகளைப் பல வாரங்களின் முன்பு ஒரு தடவை விஸ்தாரமாக எழுதியிருக்கிறோம்.

பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு  மேலிட்டவர்களாகித் தமிழ் மொழியே இறந்து போய்விட வேண்டுமென்று கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றப்படிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாக சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹாவித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகல மாட்டாது.

மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு ‘மீட்டிங்’ நடந்தது. தமிழ்ப் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்:- “ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒரு விதமான அபிப்பிராயமும் என்னால் கொடுக்க முடியாது என்ற போதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ்ப் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல்லும் பொழுது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல்களிற் பயிற்சியில்லாத இவர்கள் அவற்றைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்கதாக இருக்கின்றது. ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவற்றை பற்றி ஒர் அபிப்பிராயம் கொடுக்க வேண்டும்? “போப் முதலான விற்பன்னர்கள் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக” நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிறார்களென்று மேற்கூறப்பட்ட ‘மித்திரன்‘”’ குறிப்பில் எழுதபட்டிருப்பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிறோம்.

  • இந்தியா (29.09.1906)

$$$

தமிழ்ப் பாஷையின் இனிமை

(’மித்திரன்‘, 1906 ஸெப்டம்பரில் வெளிவந்த குறிப்பு)

பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கி வரும் உண்மையாகும்.  அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர் திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை இங்கிலீஷிலே மொழி பெயர்த்தவரும் அநேக இலக்கண நூல்கள் பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ் நாட்டாரில் பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:- “அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக் கொண்டு இடர்படுகிறார்கள். இப்படிச் செலிவடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக (ஆங்கில) மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும் செவி நுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப் போல் எந்தப் பாஷையும் ஒத்து வருவதில்லை” என்றார். இவர் தமிழ்ப் பாஷையின் இனிமையையும் பெருமையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை.

தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களிற் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் தமது கடமையை முற்றும் மறந்துவிடுகிறார்கள். இவர்கள் தமிழ்ப் பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்தில் இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள் அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s