-உ.வே.சாமிநாதையர்

15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது
இலக்கண விளக்கம் கேட்க விரும்பியது
பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் பல நூல்களை இயற்றியும் வந்த காலத்திலுங்கூடத் தாம் அறியாத விஷயங்களை யாரேனும் சொல்வார்களாயின் அன்புடன் கேட்பது வழக்கம். இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை இடைவிடாமற் பயின்று வந்தாலும் ஒவ்வொரு நூலையும் உரையையும் பரம்பரைக் கேள்வியினாலறிந்து கொண்டவர்களிடத்து அவர்கள் விருப்பப்படி ஒழுகியேனும் பொருளுதவி செய்தேனும் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுத் தெளிந்து கொள்வார். ஐந்திலக்கணங்களும் ஒருங்கேயமைந்ததும் குட்டித் தொல்காப்பியமென வழங்கப்படுவதும் சைவ வித்துவானால் இயற்றப்பெற்றதுமாகிய இலக்கண விளக்கத்தை உரையுடன் பெற்று அதனை ஆராய்ந்து பலமுறை படித்தார். படித்தும் அதிற் சிலசில இடத்துள்ள கருத்து விளங்கவில்லை. பல மேற்கோட் செய்யுட்களுக்குப் பொருள் தெரியவில்லை. ஆதலால் அதனை முறையே பாடங்கேட்டுத் தெளியவேண்டுமென்னும் எண்ணம் இவருக்கு உண்டாயிற்று.
கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டல்
உண்டாகவே அதனைப் பாடஞ் சொல்லும் திறமையுடையவர், அந் நூலாசிரியராகிய திருவாரூர் வைத்தியநாத தேசிகரிடம் கற்றுத்தேர்ந்த மாணாக்கர் பரம்பரையைச் சேர்ந்தவரான கீழ் வேளூர்ச் *1 சுப்பிரமணிய தேசிகரென்று விசாரித்தறிந்தார். பின்பு, மிகமுயன்று அவரைக் கையுறைகளுடன் போய்த் தரிசித்துத் தம்முடைய குறிப்பைத் தெரிவித்தார். அப்பால் அவருடன் இருக்கும் ஒருவரைத் தனியே அழைத்து, “பாடங் கேட்பேனாயின் இவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவர், “ஐயா அவர்களை ஆறு மாதத்திற்குக் குறையாமல் வைத்திருந்து மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாயாவது அவர்கள் செலவுக்குக் கொடுக்க வேண்டும். பாடம் கேட்டாலும் கேளாவிட்டாலும் சொன்னபடி கொடுத்துவிட வேண்டும். ஆறு மாதத்திற்குப் பின் ஏதாவது தக்க ஸம்மானம் செய்ய வேண்டும். அவர்களுடைய கைக்குறிப்புப் புத்தகத்துள்ள மாணாக்கர்களின் பெயர் வரிசையில் உங்களுடைய பெயரை மாணாக்கரென்பது புலப்பட உங்கள் கையினாலேயே எழுதிவிட வேண்டும். மூன்று மாதத்தின் தொகையை முன்னதாகக் கொடுத்துவிட வேண்டும். பாடங் கேட்கும்போது ஆஸனப் பலகையில் அவர்களை இருக்கச்செய்து மரியாதையாகக் கேட்க வேண்டும்” என்று சொன்னார். இவர் அங்ஙனமே செய்வதாக அவரிடஞ் சொல்லிப் பிரயாணச் செலவிற்குப் பணம் கொடுத்து விட்டு, “திரிசிரபுரம் எழுந்தருள வேண்டும்” என்று தேசிகரிடம் சொல்லித் தாம் முன்னர் வந்துவிட்டார். பிறகு குடும்பத்துடன் தேசிகர் இருத்தற்கு ஒரு தனி விடுதியை அமைத்து, வர வேண்டுமென்று அவருக்கு விண்ணப்பப் பத்திரிகையொன்றை யனுப்பிவிட்டு அவர் வரவை இவர் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பிட்ட காலத்தில் சுப்பிரமணிய தேசிகர் வந்துசேர்ந்து அவ் விடுதியில் தங்கினார்.
அப்பொழுது முன் வாக்குத்தத்தம் செய்தபடி அவருக்கு மாதவேதனம் கொடுப்பதற்குக் கையிற் பொருளில்லாமையால், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றிய காலத்தில் தமக்குக் கிடைத்த கடுக்கன் ஜோடியைக் கழற்றி விற்று ஆறு மாதத் தொகையையும் முன்னதாகக் கொடுத்தனர். அவரை உயர்ந்த ஆஸனத்தில் இருக்கச் செய்து தாம் கீழேயிருந்து அவர் கொடுத்த கைப்புத்தகத்திலுள்ள மாணாக்கர் பெயர் வரிசையில் தம்முடைய பெயரையும் வரைந்து கொடுத்துவிட்டுப் பாடங்கேட்கத் தொடங்கினார். அதிற்கேட்க வேண்டிய பாகங்களையெல்லாம் சில மாதங்களிற் கேட்டு முடித்துவிட்டு அப்பால் திருக்குறள் பரிமேலழகருரை, யாப்பருங்கலக்காரிகை உரை, நன்னூல் விருத்தியுரை இவைகளிலுள்ள உதாரணச் செய்யுட்களுக்குப் பொருளும் பிறவும் கேட்டுத் தெளிந்தார்; ‘இவ்வளவு தெளிந்த பயிற்சியுள்ள பெரியவரிடத்தே பாடங்கேட்கும்படி நேர்ந்தது நம்முடைய பாக்கியம்’ என எண்ணி மகிழ்ந்தார். இலக்கண விளக்கமூலமானது பழைய இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி, தண்டியலங்காரம், வச்சணந்திமாலை முதலிய பாட்டியல்கள் ஆகிய இவற்றின் மூல அமைப்பையும், அதன் உரையானது அவற்றின் உரைகளையும் தழுவி, ‘பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி’ என்னும் வழி நூல் விதிக்கேற்பச் சிறிது சிறிது வேறுபடுத்தி இயற்றப்பட்டது. உரையிலுள்ள உதாரணங்களுட் பெரும்பாலன பழைய உரைகளில் உள்ளனவே. ஆதலின் அந்த நூலை நன்றாகப் பாடங்கேட்டமையால் முன்னமே படித்திருந்த மேற்கூறிய நூல்களிலும், அவற்றின் உரைகளிலும், அவற்றிற் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்களிலுமுள்ள ஐயங்கள் இவருக்கு அடியோடே நீங்கிவிட்டன. அதனால் இவருக்குண்டான தெளிவும் திருப்தியும் அதிகம்; ‘பலரிடத்திலும் சென்று சென்று பலவருடத்தில் அறியவேண்டிய பல அரிய விஷயங்களைச் சில மாதங்களில் இவர்களாற் பெற்றோம்’ என எண்ணி இவர் இன்புற்றார்.
திரிசிரபுரத்தில், தாம் படித்ததே போதுமென்று நினைந்து தமக்குள்ளே திருப்தியடைந்திருந்த சிலர், இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டலையறிந்து, “சிறந்த வித்துவானான இவரும் பாடங்கேட்கின்றாரே! இவர் பாடங்கேட்க வேண்டுவதும் உண்டோ? என்ன கேட்கின்றார்?” என்று நினைந்து இவர் பாடங்கேட்கத் தொடங்கியபின் வந்துவந்து அருகில் இருந்து கேட்பாராயினர். இவர் மற்றவர்களைப் போல நூல் முற்றும் கேளாமல், வாசித்துக் கொண்டே போய் இடையிடையே ஐயங்களை மட்டும் கேட்பதையும் அவற்றை அவர் விளக்கிச் செல்வதையும் கேட்ட அவர்களுக்குப் பொருட்டொடர்பும் இன்ன விஷயம் கேட்கப்படுகின்றதென்பதும் புலப்படாமல் இருந்தமையால் மீண்டும் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். நூல்களை முறையே படித்திருந்தாலல்லவோ சந்தேகங்கள் உண்டாகும்? சந்தேகங்களை நீக்குதற்குரிய விடைகளும் விளங்கும்?
இவ்வாறு பல ஐயங்களைத் தீர்த்துக் கொண்டும் அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டும் வருகையில் ஆறு மாதங்கள் ஆயின. பின் இவர் தேசிகருக்குத் தக்க மரியாதைகள் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் மனமகிழுமாறு செய்து அவரை ஊருக்கு அனுப்பினர். இவருக்குப் பாடஞ்சொல்லி வருகையில் இவருடைய இலக்கிய இலக்கணப்பயிற்சி, நுண்ணறிவு, பணிவு முதலிய குணங்களையறிந்து அவர் இவரை நன்கு மதிப்பாராயினர். இவருக்குப் பாடஞ்சொல்ல வாய்த்தது தமக்கு ஒரு பெருமையென்பதையும் அவர் உணர்ந்தார். அவர் ஊர் சென்ற பின்னர் இவர் அடிக்கடி சென்று அவரைப் பார்த்துச் சல்லாபம் செய்துவருவார். அவருடைய கேள்விவன்மையையும் ஞாபக சக்தியையும் பாடங் கேட்டிருந்த முறையையும் பற்றி இவர் பிற்காலத்திற் பலமுறை வியந்து பேசியதுண்டு.
கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.
சிங்கவனம் சுப்பு பாரதியார் முதலியோர்
பிள்ளையவர்களுக்குப் பாடஞ் சொன்னமையால், கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் பலருக்கு மதிப்புண்டாயிற்று. பிள்ளையவர்களே சென்று பாடங்கேட்கும் தகுதி இருத்தலாற் பல நூல்களை அவர்பால் அறிந்து கொள்ளலாமென்று சிலர் அவரிடம் சென்று படித்து வரலாயினர். அவர்களுட் சிங்கவனம் சுப்பு பாரதியார் என்பவரும், கிருஷ்ணாபுரம் சுப்பிரமணிய பாரதியார் என்பவரும் முக்கியமானவர்கள். சிங்கவனம் சுப்பு பாரதி அவரிடம் இலக்கண விளக்கம் முதலியவற்றைக் கேட்டார்; பின்பு அவருடைய ஏவலின்மேல் திரிசிரபுரம் வந்து பிள்ளையவர்களிடம் சில நூல்களைப் பாடங்கேட்டு வரலாயினர்.
செவ்வந்திப் புராணம் பதிப்பித்தது
இவர் இயற்றிய உறையூர்ப் புராணத்தின் நயத்தையும், அதனை யாவரும் வாசித்து இன்புறுவதையும் அறிந்த திரிசிரபுரத்திலிருந்த தமிழபிமானிகளும், செல்வர்களும் திரிசிரபுரத்திற்கு வடமொழியில் 64 அத்தியாயங்களுடன் இருந்த புராணத்தைத் தமிழிற் செய்யுளாக மொழிபெயர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். இவர், “முன்னமே இத்தலத்திற்கு எல்லப்பா நாவலராற் செய்யப் பெற்ற புராணம் ஒன்று உண்டு; அது நல்ல நடையுள்ளது” என்று சொல்லி அதிலுள்ள சில பகுதிகளைப் படித்துக் காட்டினர். கேட்ட திரிசிரபுரவாசிகள், “அதையேனும் அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும்” என்று இவரை வேண்டிக்கொள்ள, அவ்வாறே இவர் அதனை எழுதுவோரால் நேர்ந்த பிழைகளறப் பரிசோதித்து விரோதிகிருது வருஷத்தில் (1851) அச்சிட்டு வெளியிட்டார். அப்பதிப்பில் இவர் பெயருக்கு முன் வித்துவானென்னும் அடைமொழி இருத்தலைக் காணலாம்.
தருமபுர ஆதீனப் பழக்கம்
இடையிடையே இவர் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று, படித்த தம்பிரான்மார்களோடு சல்லாபம் செய்துவிட்டு வருவார். அப்பால் அழைக்கப்பெற்று ஒருமுறை தருமபுர ஆதீனத்திற்குச் சென்று அப்பொழுது ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த தேசிகரைத் தரிசித்து அவருடைய பேரருளுக்குப் பாத்திரராயினார்; அவரால் வழங்கப்பெற்ற பல மரியாதைகளையும் ஏற்றுக்கொண்டார். இவருடைய கல்வித் திறத்தையறிந்த தேசிகர் அடிக்கடி வந்து போகவேண்டுமென்று கட்டளையிட அவ்வாறே இவர் செய்துவந்தார்.
அடிக்குறிப்பு மேற்கோள்:1. இவர் சுப்பையா பண்டாரமெனவும் வழங்கப் பெறுவர்.
$$$