லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்

-மகாகவி பாரதி

வங்கப் பிரிவினையால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த விரோதத்தை சம்பாதித்தவர் கர்சன் பிரபு. அவர் கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘இந்தியர்கள் உண்மைக்கு மாறானவர்கள்’  என்ற பொருளில் பேசியதை மகாகவி பாரதி இச்செய்தியில் கண்டிக்கிறார். தனது செய்திக்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் ஒருவரே கர்சனின் மோசடித்தனத்தைக் கண்டித்ததையும் எடுத்தாண்டிருக்கிறார். ஓர் இதழாளரின் கடமை என்பது நாட்டு மக்களுக்கு உண்மையை உரைப்பதும் தெளிவான சான்றுகளை முன்வைப்பதும் தான் என்பதை இதழாளர் பாரதி  இதன்மூலம் செய்து காட்டி இருக்கிறார்...

கல்கத்தா யூனிவர்சிடியில் பட்டம் பெற்ற இளைஞர்களின் முன்பு லார்டு கர்ஸன் செய்த உபந்நியாசத்தில் ஹிந்துக்களைப் பற்றியும், அவர்களது பிரதான கிரந்தங்களைப் பற்றியும் கூறிய பழிச்சொல் நம்மவர்கள் மனதிலிருந்து ஒருபோதும் நீங்க மாட்டாது. இந்தியர்கள் பெரும்பாலும் அசத்தியவாதிகளென்று அந்த மனிதன் வாய் கூசாமல்  பேசினான். கொரியா தேசத்து மந்திரியிடம் தாம் பொய் வார்த்தை சொல்லி ஏமாற்றியதாகத் தமது புஸ்தகத்திலேயே அவர் எழுதி வைத்திருப்பதை உடனே இத்தேசத்துப் பத்திரிகைகள் எடுத்துக் காட்டின. அப்பொழுதே, அவருக்கு நேர்ந்த அவமானத்திற்குக் கணக்கில்லை. இப்போது மறுபடியும், மிஸ்டர் டி.ஸ்மிட்டன் (Donald Smeaton) என்ற ஒரு ஆங்கிலேயர் லார்டு கர்ஸன் யோக்கியத்தைப் பற்றி ஓர் வேடிக்கையான திருஷ்டாந்தம் தெரிவிக்கிறார். இப்போது மிஸ்டர் ஸ்மிட்டன் (பார்லிமெண்டு) மெம்பராக இருப்பவர். இவர் ஆதியில் பர்மாவிலே உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் அபின்  ஏலத்தைக் குறைக்க வேண்டுமென்ற விஷயத்தைப் பற்றி மிஸ்டர் ஸ்மிட்டன் லார்டு கர்ஸனுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டார். அதற்கு லார்டு கர்ஸன் தமது கையாலேயே எழுதிய மறுமொழியில் பின்வருமாறு கூறினார்:-  “நீர்தாம் ஒழுங்கையும் மனச்சாக்ஷியையும் அதிகமாகக் கவனிக்கின்றீர். ஆகையினால், நீர் ஓர் பிரிட்டிஷ் மாகாணத்தில் உத்தியோகம்  பார்க்க உதவ மாட்டீர்” என எழுதியிருந்தார். எனவே தர்ம ஒழுங்குள்ளவனும் மனச்சாக்ஷிப்படி நடப்போனும் பிரிட்டிஷ் ஆட்சியில் உத்தியோகம் பார்க்கத் தகுதியில்லாதவனென்று லார்டு கர்ஸன் எண்ணியிருந்ததாகத் தெளிவுபடுகிறது. வெளிக்கு, பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் எல்லாம் மகாதர்மப் பிரியர்களென்றும், தேவ  புருஷர்களென்றும் பேசிக் கொண்டிருந்த லார்டு கர்ஸன் தமது அந்தரங்கத்திலே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உத்தியோகம் பார்ப்பவன் சிறிதேனும் தர்ம வெறி அறியாத நீச்சனாயிருக்க வேண்டுமென்ற்  நிச்சயித்துக் கொண்டிருக்கிறார்.  மிஸ்டர் மார்லி இங்கிலாந்திற் கென்று ஓர் மனச்சாக்ஷியும், இந்தியாவுக் கென்று மற்ற மனச்சாக்ஷியும்  வைத்துக் கொண்டிருப்பது போல, லார்டு கர்ஸனும் பிரிட்டிஷ் மாகாணங்களின் அதிகாரங்களைப் பற்றி வெளியில் சொல்வதற்கோர் அபிப்பிராயமும் மனதுக்குள்ளே மற்ற அபிப்பிராயமும் வைத்துக் கொண்டிருக்கிறார். 

இப்படி ராக்ஷசத்தனமான கொள்கை வைத்திருந்த இந்த மனிதன் இஷ்டப்படி  ஆளும்படியாய் முப்பதுகோடி ஜனங்கள் இவருக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைக்கும்போதே மனம் பதறுகிறது. இவருடைய ஆட்சிக் காலத்தில் இவரைப் பற்றி இந்திய ஜனங்களும் ஜனத்தலைவர்களும் கொண்டிருந்த  எண்ணம் பலம் அடைவதற்கு நாள்தோறும் புதிது புதிதாகக் காரணங்களேற்பட்டுக் கொண்டே வருகின்றன.

  • இந்தியா (07, 07.1906)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s