-மகாகவி பாரதி
காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.

பாரதி- அறுபத்தாறு (54-56)
விடுதலைக் காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார். 54
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்.
காரணந்தான் யாதெனிலோ; ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! 55
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே! 56
$$$