-மகாகவி பாரதி

அரசியலில் திலகரின் தீவிரவாத கோஷ்டியைச் சார்ந்திருந்த மகாகவி பாரதிக்கு, கோகலே தலைமையிலான நிதானக் கட்சியாரின் மன்றாடல்களும், ஆங்கிலேயரை உயர்த்திப் பேசும் தன்மையும் கசந்ததில் வியப்பில்லை. அதனை தனது ‘இந்தியா’ பத்திரிகையில் அவ்வப்போது கடுமையாகத் தாக்கி வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. தனக்கு இதழியலில் முகவரி கொடுத்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே ஆயினும், நிதானக்கட்சியாரின் கருத்தை ஆதரித்தால், பாரதியின் கண்டனத்துக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். இந்த செய்தியில் இதழாளர் பாரதியின் தார்மிக நெறியும், தனது நெஞ்சுக்கு நீதி என்று பட்டதைச் சொல்லும் இதழியல் துணிவும் இருப்பதைக் காண்கிறோம்.
“அழுதபிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்து” ஏமாற்றுவதுபோல (இன்னும் ஒரு நல்ல பழமொழி இருக்கின்றது. அதை எழுத நமக்கு கூசுகின்றது.) இந்தியர்கள் கேட்பதற்கு இடையிடையே சொற்ப அனுகூலங்கள் கவர்ன்மெண்டார் செய்து வருகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து இந்த அனுகூலமும் நமக்குத் தீமையாகுமன்றி நன்மையாக மாட்டாது.
“ஸர்காரில் இந்தியர்களுக்கு உயர்ந்த பதவி கொடுக்க வேண்டும், உயர்ந்த பதவி கொடுக்க வேண்டும்” என்று நிதானக் கட்சியார் கூச்சலிடுகிறார்கள். இதன் பலன் என்னவாயிற்று? நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை உத்தியோகங்கள் நமக்குக் கொடுக்கவே மாட்டார்கள். கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்குப் பிழையில்லாமல் போய்விடும். நீதி இலாகாவில் மட்டும் ஓரிரண்டு பெரும் பதவிகள் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நமது நாட்டிற்குக் கெடுதியே தவிர நன்மை கிடையாது. நமக்குள் நல்ல தேசபக்தர்களாகவும் ஜனத் தலைவர்களாகவும் இருப்போர்களுக்கு தக்க சம்பளங்களை லஞ்சமாகக் கொடுத்து கவர்ன்மெண்டார் தமது வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இதனால் முப்பது கோடி ஜனங்களிலே ஒரு மனிதனுக்குச் சிறிது பணலாபமும், தேச முழுமைக்கும் நஷ்டமும் ஏற்படுகின்றது. ஐயோ! இந்தவிதமான சொற்ப லாபங்களுக்கெல்லாம் நாம் ஆசைப்பட்டா வாழப் போகிறோம்? ஜப்பான் தேசத்திலே சுதேசிய ராஜாங்கம் இருந்த போதிலும் அந்நாட்டு ஜனங்கள் ஸர்க்கார் உத்தியோகங்களிலே சிறிதேனும் ஆசைப்படாமல் வர்த்தகம், கைத்தொழில், நூலாராய்ச்சி முதலிய மார்க்கங்களால் செல்வமும் கீர்த்தியும் பெற விரும்புகிறார்கள். அன்னிய ராஜாங்கத்தின் கீழிருக்கும் நம்மவர்களோ ராஜாங்கத்தார் கொடுக்கும் கடைத்தரமான உத்தியோகங்களிலே மிகவும் ஆவலுடையவர்களாய் இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் மனநிலைமை வெகு விசித்திரமாய் இருக்கிறது. ஸர்கார் உத்தியோகங்களை எவரும் விரும்பக் கூடாதென்றும், ஸர்க்காரின் உதவியில்லாமல் பலவித பிரயத்தனங்கள் செய்து பிழைக்க முயல வேண்டுமென்றும் இப்பத்திரிகை பல முறை உபதேசிப்பதை கேட்டிருக்கிறோம். எனினும் கவர்மெண்டார் நம்மவர்க்கு ஏதேனும் புதிய உத்தியோகங்கள் கொடுக்கப்போவதாக வதந்தி வரும் பக்ஷத்தில் இந்தப் பத்திரிகைக்கு அளவிறந்த ஆனந்தம் பிறந்துவிடுகின்றது. முன்னுக்குப் பின் தமது ஸபையிலேயும் வைசிராய் ஸபையிலேயும் ஒவ்வொரு இந்தியரை நியமிக்க எண்ணியிருப்பதாக நெடுநாளாய் ஒரு வதந்தி ஏற்பட்டு வருகிறது. அது மெய்யான வதந்தி என்று நினைப்பதற்கு யாதொரு பலமான ஆதாரத்தையும் காணவில்லை, என்ற போதிலும் மேற்கண்ட விஷயமாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை எத்தனை ஆனந்தத்துடன் எழுதுகிறது பாருங்கள்:-
“ஆகையால் லண்டன் நியமனம் நம்மவர்க்கு ஆவது சுலபம். இந்த லண்டன் நியமனம் மிஸ்டர் கோகலேயிற்காவது, மிஸ்டர் ஆர்.ஸி.தத்துக்காவது ஆகுமென்ற வதந்தி இப்போது மாறி, பம்பாயில் நமது தேசாபிமானிகளில் சிம்மத்தைப் போன்ற வல்லமையும் தைரியமும் கொண்டு எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருக்கும் ஸர் பிரெளஸிஸா மோவான்ஜி மேட்டா, நைட், சி.ஐ.இ-க்கு ஆகக் கூடுமென்று நம்பப்படுகிறது. அப்படியானால் ஸர்வதோ மனனென்றே நினைக்கவேண்டும்.”
ஐயோ போகட்டும்! மார்லியின் ஸபையிலே இந்திய விரோதிகளாகிய அநேக ஆங்கிலேயருக்கிடையில் ஒரு தனி இந்தியன் இருந்து நமக்கு வெகு காரியங்கள் சாதித்துவிட முடியுமல்லவா? அதிலும் சுதேசிய முயற்சியிலே கூடப் பற்றில்லாதவரும் சில வருஷங்களாக ஆங்கிலேய அபிமானம் அதிகப்பட்டு வருபவருமாகிய மேட்டாவைப் போன்றவர்கள் அங்கே போய் ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்த உடனே இந்தியாவிற்கு சகல சாம்ராஜ்யமும் கிடைத்துப் போய்விடும்!
அற்ப சந்தோஷிகளுக்கு திருஷ்டாந்தம் வேண்டுமானால் நமது நிதானக் கட்சியாரையே சொல்ல வேண்டும். கவர்ன்மெண்டாரிடமிருந்து எவ்விதமான தயவை எதிர்பார்க்கிறவனும் அந்த க்ஷணத்திலேயே பிரஜைக்கு உபயோகமில்லாமல் போய்விடுகிறான். சுதேசிய ராஜாங்கமாய் இருந்தால் இப்படியிராது. அன்னிய ராஜாங்கத்திற்கு இதுவே முதலாவது லக்ஷணம். இதை அறியாதவர்களும் அறிந்திருந்து மறைத்துவைப்பவர்களும், ஜனத் தலைமைக்குத் தகுதியுடையவர்களாக மாட்டார்கள்.
- இந்தியா (01.12.1906)
$$$