-எஸ்.எஸ்.மகாதேவன்

19. போடு ‘நாட்’டுக்கு ஒரு ஜே!
’ஒழுங்கு’ தெரியும். ’ஒலுங்கு’? கொசு வகை சிறிய பூச்சியாம். ஆங்கிலத்தில் இதை நாட் (Gnat) என்கிறார்கள். 1965 ல் பாகிஸ்தான் ஊடுருவுவதை ஒழிக்கும் போரில் பாரத விமானப் படையில் ’நாட்’ ரக குட்டி போர் விமானம் எதிரியை துவம்சம் செய்தது போன தலைமுறைக்காரர்களுக்கு ஞாபகம் இருக்கும். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு படா படா அதிநவீன சேபர் ஜெட்கள், பாட்டன் டாங்கிகள் எல்லாம் வண்டி வண்டியாகக் கொடுத்து உதவியிருந்தது. பாரதத்திடம் இருந்தது ‘நாட்’ படைதான். ஆனால் பாரத விமானப் படை வீரர்கள் காட்டிய ஊக்கமும் தீரமும் பாகிஸ்தானிய போர்விமான பைலட்டுகளிடம் இல்லாததால் பாரத வான்வெளியில் நுழைந்த சேபர் ஜெட்கள் எல்லாம் காயலான் கடைக்கு அனுப்பப்பட்டன. பாரத மண்ணை ஆக்கிரமிக்க வந்த பாட்டன் டாங்கிகள் நூற்றுக்கணக்கில் முடக்கப்பட்டு, பிறகு மக்கள் வேடிக்கை பார்க்க அருங்காட்சியகத்தில் அணிவகுத்தன.
சொல்ல வந்தது, வீரதீர பராக்கிரம குறும்பு மிகுந்த ‘நாட்’ விமானம் பற்றித்தான். குண்டு போடும் விமானம் என்பதால் இரண்டு சீட் மட்டுமே. விமானம் தரையில் நிற்கும் போது ஒரு சிறுவன் விரலால் லேசாக அழுத்தினாலே நாட் சற்றே அசைந்தாடும். அது அப்படி ஒரு வாமன அவதாரம். நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு ‘நாட்’ விமானத்தை தொட்டுப் பார்க்க, சில நிமிடங்கள் ஏறி உட்கார வாய்ப்பு கிடைத்தது.

தமிழகத்தில் உள்ள ஒரு விமானப் படைத் தளத்தில் பராமரிப்புக்காக வந்திருந்த ‘நாட்’ அது. விமானப்படை வீரரான என் சகோதரி கணவர் ஹரிஹரனுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு போயிருந்தேன். அன்றைய தினத்திலிருந்து சரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் சொன்ன பாரத – பாகிஸ்தான் போர் வெடித்தது. அதனால் அவருக்கு இடமாற்றல். போர்முனை பாசறைப் பணி. காஷ்மீரில் மிக மிகக் குறுகலான பனிஹால் கணவாய் வழியே தினமும் ஒரு முறை விமானத்தில் போர் முனைக்குப் போய் விமானத்தில் பாசறைக்குத் திரும்ப வேண்டும். பறக்கும் விமானத்தின் இறக்கை நுனி இமயப் பாறையை லேசாகத் தொட்டால் போதும், எதுவும் மிஞ்சாது. இதுபோல வாரக்கணக்கில் தினமும் இரண்டு முறை உயிர் போய் உயிர் வரும் என்று அவர் பின்னாளில் வர்ணிப்பார். 1950 களின் மத்தியில் அவர் என் சகோதரியை மணந்தார்.

மருமகன் இதுபோல் ஒரு பணியில் இருப்பது என் தாய் தந்தைக்கு கவலை அளித்தாலும் நாட்டுக்காக என்ற எண்ணம் மேலிடும்போது சமாதானமாவார்கள். நாட்டுக்காக என்று முன்பே வீட்டிலிருந்து என் மூத்த அண்ணன் வெளியேறி அதனால் ஏற்பட்ட அனுபவம் பெற்றவர்கள் என் தாய் தந்தையர். எங்கிருந்தாலும் ஏற்றெடுத்த பணியில் காலுறைத்து நிற்க வேண்டும் என்பதுதான் என் தாய் தந்தை மனதில் எதிர்பார்ப்பாக இருந்தது. அண்ணனார் 20 வயதில் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியானார்; 80 வயது வரை பேலூர், ஷில்லாங், சேலம், ஊட்டி, பெரியநாயக்கன்பாளையம், பிஹாரின் முஸபர்பூர், சிங்கப்பூர், காசி என்று மடத்தின் பல்வேறு மையங்களில் பக்தர்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்து சேவை முயற்சியில் ஈடுபடுத்தி வந்தார். மடத்தின் மூத்த துறவிகளில் ஒருவராக இருந்து இறைவனடி சேர்ந்தார். அவரை சுவாமி ரகுநாதானந்தர் என்று அழைப்பார்கள். தமிழகம் நன்கறிந்த (மதுரை மடத்தின் தலைவர்) சுவாமி கமலாத்மானந்தர், தற்போது தஞ்சாவூர் மடத்தின் தலைவராகியுள்ள சுவாமி விமூர்த்தானந்தர் போன்ற பெரியோர்கள் துறவு வாழ்க்கையின் தொடக்கம் முதல் சுவாமி ரகுநாதானந்தரின் இனிய வழிகாட்டல் பெற்றவர்கள்.

எதற்காக இதையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால் 1970களின் தொடக்கத்தில் நான் ஆர்.எஸ்.எஸ். பணியில் முழு நேரமாக ஈடுபட வீட்டை விட்டு வெளியே வந்த போதும் என் பெற்றோரின் அதே எதிர்பார்ப்பு எனக்கு பலத்த ஆசீர்வாதமாக அமைந்தது. எனவே என் மனதில் சஞ்சலம் இல்லாமல், பணி புரிந்தேன். 1989இல் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டை ஒட்டி தமிழில் ’ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ நூலும் RSS: A VISION IN ACTION என்ற அதன் ஆங்கில மூல நூலும் தயாராகிய காலகட்டத்தில் மிக மூத்த சங்கப் பெரியோர் பலர் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபடுவதை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிறகு 1990களின் மத்தியில் ’தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ தமிழில் வெளியான போது அதன் தயாரிப்பில் தோள் கொடுக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மாபெரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்த மிக முக்கியமான இரண்டு நூல்களின் பதிப்புப் பணியில் என் போன்ற ஒரு கத்துக்குட்டி பங்களிப்பு செய்ய வேண்டியிருந்ததால், பணியின் சவாலான தன்மை காரணமாக மனதில் வீட்டைப் பற்றிய சஞ்சலம் தலை தூக்கவில்லை என்று தோன்றுகிறது.
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் ‘ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில் தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.
$$$