சத்திய சோதனை- 4(6-10)

-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்

6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி

     தியாகம், எளிமை என்ற லட்சியங்கள் என் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக நிறைவேறி வந்தன. சமய உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக எனக்கு ஏற்பட்டு வந்தது. அதே சமயம், சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.

ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ உணவு விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கூனேயின் நீர் சிகிச்சையிலும் அந்த ஜெர்மானியர் நம்பிக்கை உடையவர். நான் அந்த விடுதிக்குப் போவது உண்டு. ஆங்கில நண்பர்களை அங்கே அழைத்துக்கொண்டு போயும் அதற்கு உதவி செய்தேன். ஆனால், அவ்விடுதி என்றுமே பணக் கஷ்டத்தில் இருந்ததால் அது நீடித்து நடக்க முடியாது என்பதைக் கண்டேன். அதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்யலாமோ அவ்வளவும் செய்தேன். கொஞ்சம் பணத்தையும் அதற்காகச் செலவிட்டேன். ஆயினும், கடைசியாக அதை மூடும் படியாயிற்று.

     அநேகமாக எல்லாப் பிரம்மஞான சங்கத்தினரும் சைவ உணவுக்காரர்கள். அச்சங்கத்தைச் சேர்ந்த உற்சாகமுள்ள ஒரு பெண்மணி, சைவச் சாப்பாட்டு விடுதி ஒன்றைப் பெரிய அளவில் ஆரம்பிக்க முன் வந்தார். அவர் கலைகளில் அதிகப் பிரியமுள்ளவர். ஊதாரிக் குணமுள்ளவர். கணக்கு வைப்பதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவருக்கு நண்பர்கள் அநேகர் உண்டு. முதலில் அவ்விடுதியைச் சிறிய அளவில் ஆரம்பித்தார். பிறகு அதை விரிவுபடுத்திப் பெரிய அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினார். உதவி செய்யுமாறு என்னைக் கேட்டார். இவ்விதம் அவர் என் உதவியை நாடியபோது அவருடைய செல்வ நிலையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், அவருடைய திட்டம் அநேகமாகச் சரியாகவே இருக்கும் என்று நம்பினேன். அவருக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இருந்தேன். என்னுடைய கட்சிக்காரர்கள் பெருந்தொகைகளை என்னிடம் கொடுத்து வைப்பது வழக்கம். இதில் ஒரு கட்சிக்காரருடைய அனுமதியின் பேரில், என்னிடமிருந்த அவர் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் பவுனை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன். இந்தக் கட்சிக்காரர் பெருங்குணம் படைத்தவர்; நம்பக்கூடியவர். ஆரம்பத்தில் இவர் ஒப்பந்தத் தொழிலாளியாகத் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவர். “நீங்கள் விரும்பினால் பணத்தைக் கொடுங்கள். இவ்விஷயங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு உங்களைத்தான் தெரியும்” என்றார். இவர் பெயர் பத்ரி. பின்னால் இவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தீவிரப் பங்கு எடுத்துக் கொண்டதோடு சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். இந்தச் சம்மதமே போதுமானது என்று கருதி அவருடைய பணத்தை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன்.

     கொடுத்த பணம் வசூலாகாது என்று இரண்டு மூன்று மாதங்களில் எனக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய நஷ்டத்தை நான் பொறுக்க முடியாது. இத்தொகையை வேறு எத்தனையோ காரியங்களுக்கு நான் உபயோகித்திருக்கலாம். கடன் திரும்பி வரவே இல்லை. ஆனால், நம்பிய பத்ரி நஷ்டமடைய எப்படி அனுமதிக்க முடியும்? அவர் என்னை மாத்திரமே அறிவார். எனவே அவர் நஷ்டத்தை ஈடு செய்தேன்.

     இந்தக் கொடுக்கல் வாங்கலைக் குறித்து நண்பரான ஒரு கட்சிக்காரரிடம் நான் கூறியபோது, அவர் நயமாக என் அசட்டுத்தனத்தைக் கண்டித்தார். அதிர்ஷ்டவசமாக நான் அப்பொழுது ‘மகாத்மா’ ஆகிவிடவில்லை. ‘பாபு’ (தந்தை) ஆகி விடவுமில்லை. நண்பர்கள் அன்போடு என்னை ‘பாய்’ (சகோதரர்) என்றே அழைத்து வந்தார்கள். அந்த நண்பர் கூறியதாவது: “நீங்கள் இப்படிச் செய்திருக்கக் கூடாது. நாங்கள் எத்தனையோ காரியங்களுக்கு உங்களை நம்பியிருக்கிறோம். இத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உங்கள் கையிலிருந்து நீங்கள் அவருக்குக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால், உங்கள் சீர்திருத்தத் திட்டங்களுக்கெல்லாம் உங்கள் கட்சிக்காரர்களின் பணத்தைக் கொண்டு உதவி செய்துகொண்டே போவீர்களானால், அக் கட்சிக்காரர்கள் அழிந்து போவதோடு நீங்களும் சீக்கிரத்தில் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் எங்கள் தருமகர்த்தா. இதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிச்சைக்காரராகிவிட்டால், நமது பொது வேலைகளெல்லாம் நின்று போய்விடும்.”

     அந்த நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தென்னாப்பிரிக்காவிலோ, வேறு எங்குமோ, அவரைப் போலத் தூய்மையானவரை நான் இன்னும் கண்டதில்லை. தாம் யார் மீதாவது சந்தேகம் கொள்ள நேர்ந்து, தாம் சந்தேகித்தது சரியல்ல என்று பிறகு கண்டு கொண்டால், அவர் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுவார். இதை அவர் பன்முறை செய்து நான் பார்த்திருக்கிறேன்.

அவர் எனக்குச் சரியானபடி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்பதைக் கண்டேன். ஏனெனில், பத்ரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடு செய்துவிட்டேனாயினும், இதே போன்ற வேறு நஷ்டத்தை நான் சமாளிக்க முடியாமல் போயிருக்கும். அந்நிலைமையில் நான் கடன்பட நேர்ந்திருக்கும். கடன்படுவது என்பதை என் வாழ்க்கையில் நான் என்றுமே செய்ததில்லை. அத்துடன் கடன்படுவதை எப்பொழுதுமே நான் வெறுத்தும் வந்திருக்கிறேன். ஒருவருடைய சீர்திருத்த உற்சாகம்கூட, அவர் தம் எல்லையை மீறிப் போய்விடும்படி செய்துவிடக் கூடாது என்பதை நான் உணருகிறேன். பிறர் நம்பிக் கொடுத்திருந்த பணத்தை இன்னொருவருக்குக் கடன் கொடுத்ததன் மூலம், கீதையின் முக்கியமான உபதேசத்தை மீறி நடந்து விட்டேன் என்றும் கண்டேன். “பயனை எதிர்பாராது உன் கடமையைச் செய்” என்பதே கீதையின் உபதேசம். இத்தவறு என்னை எச்சரிக்கும் சுடரொளிபோல ஆயிற்று.

     சைவ உணவுக் கொள்கை என்ற பீடத்தில் இட்ட இந்தப் பலி மனமாரச் செய்ததும் அன்று; எதிர்பார்த்தும் அல்ல; வேறு வழியில்லாமல் நடந்துவிட்டதே அது.

$$$

7. மண், நீர் சிகிச்சை

     என் வாழ்க்கை முறையை நான் எளிதாக்கிக்கொண்டு வர வர, மருந்துகளின் மீது எனக்கு நாளாவட்டத்தில் வெறுப்பும் அதிகரித்துக்கொண்டு வந்தது. டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, பலவீனத்தினாலும் வாத சம்பந்தமான எரிச்சலினாலும் சிறிது காலம் பீடிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பார்க்க வந்திருந்த டாக்டர் பி.ஜே. மேத்தா எனக்குச் சிகிச்சை செய்தார். நானும் குணமடைந்தேன். அதன் பிறகு நான் இந்தியாவுக்குத் திரும்பிய காலம் வரையில், குறிப்பிடக்கூடிய வியாதி எதனாலும் நான் பீடிக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில் இருந்தபோது மலச்சிக்கலும், அடிக்கடி தலைவலி உபத்திரமும் இருந்து வந்தன. எப்பொழுதாவது பேதி மருந்து சாப்பிட்டும், சாப்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டும் என் தேக நிலை கெடாமல் பார்த்து வந்தேன். ஆனால், நான் நல்ல தேக சுகத்துடன் இருந்தேன் என்று சொல்ல முடியாது.

     இந்தப் பேதி மருந்துகளின் பிடியிலிருந்து எப்பொழுதுதான் விடுபடுவோமோ? என்று எப்பொழுதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டும் இருப்பேன்.

     அந்தச் சமயத்தில் மான்செஸ்டரில், ‘காலை ஆகார மறுப்புச் சங்கம்’ என ஒன்று ஆரம்பமாகியிருப்பதாகப் படித்தேன். இச்சங்கத்தை ஆரம்பித்தவர்களின் வாதம் இதுதான்: ஆங்கிலேயர்கள் அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள்; நடுநிசி வரையில் அவர்கள் சாப்பிடுகின்றனர். ஆகையால், வைத்தியச் செலவு அதிகமாகிறது; இந்த நிலைமை சீர்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், காலை ஆகாரத்தையாவது அவர்கள் கைவிட வேண்டும். இந்த விஷயங்களை யெல்லாம் என் விஷயத்திலும் சொல்லி விட முடியாதென்றாலும், ஓரளவுக்கு இந்த வாதம் என் அளவிலும் பொருந்துவதாகிறது என்று எண்ணினேன். மாலையில் தேநீர் குடிப்பதோடு தினம் மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டும் வந்தேன். நான் குறைவாகச் சாப்பிடுகிறவன் அல்ல. சைவ உணவாகவும் மசாலை சேராததாகவும் இருந்தால், எத்தனை வகைப் பதார்த்தங்கள் இருந்தாலும் நன்றாகச் சாப்பிடுவேன். காலையில் ஆறு, ஏழு மணிக்கு முன்னால் எழுந்திருப்பதில்லை. ஆகையால், நானும் காலை ஆகாரம் சாப்பிடாமல் இருந்துவிட்டால், எனக்குத் தலைவலி ஏற்படாமல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன். ஆகவே, இதை அனுசரித்துப் பார்த்தேன். சில தினங்களுக்கு இது கஷ்டமாகவே இருந்தது. ஆனால், தலைவலி அடியோடு மறைந்து போய்விட்டது. இதிலிருந்து, எனக்குத் தேவையானதற்கு அதிகமாக நான் சாப்பிட்டு வந்திருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

     ஆயினும், இந்த மாறுதலினால் எனக்கு இருந்த மலச் சிக்கல் உபத்திரவம் நீங்கியபாடில்லை. கூனேயின் ஆசனக் குளியல் முறையை அனுசரித்துப் பார்த்தேன். இதனால், கொஞ்சம் குணம் தெரிந்ததென்றாலும் முழுவதும் குணமாகவில்லை. இதற்கு மத்தியில் சைவ உணவுச்சாப்பாட்டு விடுதி வைத்திருந்த ஜெர்மானியரோ அல்லது வேறு ஒரு நண்பரோ – யார் என்பதை மறந்துவிட்டேன் – ஜஸ்ட் என்பவர் எழுதிய ‘இயற்கைக்குத் திரும்புக’ என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். மண் சிகிச்சையைக் குறித்து இப் புத்தகத்தில் படித்தேன். மனிதனுக்கு இயற்கையான உணவு பழங்களும் கொட்டைகளுமே என்று அதன் ஆசிரியர் கூறியிருந்தார். பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு நான் உடனே போய்விடவில்லை. ஆனால், மண் சிகிச்சை முறைகளை உடனே பரீட்சிக்க ஆரம்பித்தேன். அற்புதமான பலனைக் கண்டேன். சுத்தமான மண்ணைக் குளிர்ந்த நீரில் நனைத்துப் பிறகு அதை மெல்லிய துணியில் நன்றாகத் தடவி அதை எடுத்து அடி வயிற்றில் கட்டிக் கொள்ளுவது என்பது மண் சிகிச்சை முறைகளுள் ஒன்று. படுக்கப் போகும்போது இவ்வாறு அடிவயிற்றில் கட்டிக் கொள்ளுவேன். பிறகு இரவிலோ அல்லது காலையிலோ நான் விழித்துக் கொள்ளும்போது அதை நீக்கிவிடுவேன். இதனால் நல்ல குணம் ஏற்பட்டது. அது முதல் இந்தச் சிகிச்சையை என்னுடைய நண்பர்களுக்கும் செய்து வந்திருக்கிறேன். இதற்காக வருத்தப்படுவதற்கு எவ்விதக் காரணமும் ஏற்பட்டதே இல்லை. அதே நம்பிக்கையுடன் இந்தச் சிகிச்சை முறையை அனுசரித்துப் பார்க்க என்னால் முடியாது போயிற்று. இதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்தச் சோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு ஓர் இடத்தில் நான் தங்கி நிலைபெற்றிருக்க முடியாது போனதேயாகும். என்றாலும் நீர், மண் சிகிச்சையில் எனக்கு இருக்கும் நம்பிக்கை மாத்திரம் எப்பொழுதும்போல மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றுங்கூட ஓரளவுக்கு எனக்கு மண் சிகிச்சை செய்துகொண்டுதான் வருகிறேன். சமயம் நேரும் பொழுதெல்லாம் என் சக ஊழியர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை சிபாரிசு செய்துகொண்டும் வருகிறேன்.

என் வாழ்நாளில் இரு முறை கடுமையான நோய்க்கு நான் ஆளாகியிருக்கிறேன். என்றாலும், மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே மனிதனுக்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். நோயுறுவோரில் ஆயிரத்துக்கு 999 பேரை சரியான பத்தியச் சாப்பாடு, நீர், மண் சிகிச்சை, இதே போன்ற குடும்ப வைத்தியமுறை ஆகியவற்றினாலேயே குணப்படுத்திவிட முடியும். சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர், அல்லது ஹக்கிமிடம் ஓடி, எல்லா வகையான தாவர, உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல, உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள்.

     நோயுற்றிருக்கும் சமயத்தில் இதை நான் எழுதுவதால் நான் கூறியிருப்பவைகளை யாரும் அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம். என் நோய்களுக்குக் காரணம் என்ன என்பதை நான் அறிவேன். அவைகளுக்கு நானே பொறுப்பாளி என்பதையும் நன்றாக அறிந்தே இருக்கிறேன். அப்படி அறிந்திருப்பதனாலேயே நான் பொறுமையை இழந்துவிடவில்லை. உண்மையில் அவை எனக்குப் பாடங்கள் என்பதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். ஏராளமான மருந்துகளைச் சாப்பிடும் ஆசையை எதிர்த்தும் வெற்றி பெற்றிருக்கிறேன். என் பிடிவாதம் அடிக்கடி டாக்டர்களுக்குச் சங்கடமாக இருந்திருக்கிறது என்பதை அறிவேன். அவர்களும் அன்புடன் சகித்துக் கொள்ளுகிறார்கள்; என்னைக் கைவிட்டு விடுவதில்லை.

என்றாலும், விஷயத்தை விட்டு நான் நெடுந்தூரம் போய்விடக் கூடாது. மேற்கொண்டும் கதையைக் கூறுவதற்கு முன்னால் வாசகருக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு ஜஸ்ட் என்பவர் எழுதியிருக்கும் புத்தகத்தை வாங்குகிறவர்கள், அதில் கூறப்பட்டிருப்பது எல்லாமே வேத வாக்கு என்று எடுத்துக் கொண்டுவிடக் கூடாது. ஓர் ஆசிரியர் எப்பொழுதுமே ஒரு விஷயத்தில் ஓர் அம்சத்தை மாத்திரமே எடுத்துக்காட்டுவார். ஆனால், ஒரே விஷயத்தைக் குறைந்தது ஏழு வேவ்வேறு நிலைகளிலிருந்தும் காண முடியும். எல்லாமே அவையவைகளின் அளவில் சரியானவையாகவும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அதே சமயத்தில், அதே சந்தர்ப்பத்தில் சரியாக இல்லாமலும் இருக்கக் கூடும். அதோடு அநேக புத்தகங்கள் நிறைய விற்க வேண்டும் என்பதற்காகவும், பேரும் புகழும் சம்பாதித்துக் கொள்ளுவதற்காகவும் எழுதப்படுகின்றன. இத்தகைய புத்தகங்களைப் படிக்கிறவர்கள் பகுத்தறிவோடு படிப்பார்களாக. அவற்றில் கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு முறையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவமுள்ளவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்ள வேண்டும்; அல்லது புத்தகங்களைப் பொறுமையுடன் படித்துவிட்டு, அதில் கூறியிருக்கிறபடி செய்வதற்கு முன்னால் அதில் கூறியிருப்பது இன்னது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

$$$

8. ஓர் எச்சரிக்கை

     அடுத்த அத்தியாயத்திற்கு வரும் வரையில் நான் வேறு விஷயத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறேன். மண், நீர் சிகிச்சை முறைகளில் நான் சோதனை நடத்தியதோடு உணவு சம்பந்தமான சோதனைகளையும் சேர்த்துச் செய்துகொண்டிருந்தேன். அதைப் பற்றிப் பின்னால் குறிப்பிட எனக்குச் சமயம் இருக்குமென்றாலும், உணவுச் சோதனையைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது.

நான் நடத்திய உணவுச் சோதனைகளைக் குறித்து இப்பொழுதோ அல்லது இனிமேலோ நான் விவரமாகக் கூறிக்கொண்டிருக்க வேண்டியிராது. ஏனெனில், இதைக் குறித்துக் குஜராத்தியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவை பல ஆண்டுகளுக்கு முன்னால் ‘இந்தியன் ஒப்பீனியனி’ல் வெளிவந்தன. பின்னர் அவை ‘ஆரோக்கிய வழி’ என்ற பெயருடன் புத்தக ரூபமாகவும் வெளிவந்து இருக்கின்றன. என்னுடைய சிறிய நூல்களில் அதுவே கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் ஏராளமானவர்களால் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் ரகசியம் என்ன என்பதை இது வரையிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கட்டுரைகள் ‘இந்தியன் ஒப்பீனியன்’ வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. ஆனால், ‘இந்தியன் ஒப்பீனியனை’ப் பார்த்தேயிராத கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் உள்ள அநேகருடைய வாழ்க்கையில் அச்சிறு பிரசுரம் பிரமாதமான மாறுதலை உண்டாக்கியிருக்கிறது என்பதை அறிவேன். ஏனெனில், இவ்விஷயத்தைக் குறித்து அநேகர் என்னுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆகையால், அச்சிறு புத்தகத்தைப் பற்றிச் சில விஷயங்களை இங்கே கூற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், அதில் நான் கூறியிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் காணவில்லை யாயினும், என் நடைமுறைப் பழக்கத்தில் சில பெரிய மாறுதல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அப்புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருக்காது. அதை அவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

     நான் எழுதியிருக்கும் மற்றெல்லாவற்றையும் போலவே அச்சிறு புத்தகத்தையும் ஆத்மார்த்த நோக்கத்துடனேயே எழுதியிருக்கிறேன். அந்த நோக்கமே என் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆக்கம் அளித்திருக்கிறது. ஆகையால், அப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சில தத்துவங்களை இன்று நான் அனுசரிக்க முடியாமல் இருப்பது எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளித்துவருகிறது.

     குழந்தையாக இருக்கும்போது உண்ணும் தாய்ப்பாலைத் தவிர மனிதன் பால் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. சூரிய வெப்பத்தினால் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவுமே இருக்கக் கூடாது. திராட்சை போன்ற பழங்களிலிருந்தும், பாதாம் பருப்புப் போன்ற கொட்டைகளிலிருந்தும் மனிதன் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய போஷணையைப் போதுமான அளவு பெற முடியும். இத்தகைய உணவோடு இருக்கும் ஒருவருக்குச் சிற்றின்ப இச்சை போன்ற இச்சைகளை அடக்குவது எளிதாகிறது. “ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்” என்ற இந்தியப் பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இக் கருத்தே அப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் என்னுடைய கொள்கைகளில் சிலவற்றை, என் நடைமுறையில் எனக்கு நானே மறுத்துக்கொள்ள வேண்டியவனாகிறேன். போருக்காகப் படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரத்தில் கேடாவில் நான் ஈடுபட்டிருந்த சமயத்தில் உணவில் ஏற்பட்ட ஒரு தவறு, என்னைப் படுக்க வைத்துவிட்டது. இறக்க வேண்டிய நிலைமைக்கும் வந்துவிட்டேன். அதனால், சிதைந்து போன உடலைப் பால் சாப்பிடாமலேயே தேற்றிக் கொண்டு விட நான் வீணில் முயன்றேன். பாலுக்குப் பதிலாக வேறு ஒன்றை எனக்குக் கூறுமாறு எனக்குத் தெரிந்த டாக்டர்கள், வைத்தியர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களையெல்லாம் கேட்டேன். மூங்கு நீர், மௌரா எண்ணெய், பாதாம் பால் ஆகியவைகளைச் சாப்பிட்டுச் சோதனை செய்து என் உடல் நிலையை மேலும் கெடுத்துக் கொண்டேன். நோயிலிருந்து எழ எதுவும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆயுர்வேத வைத்தியர்கள், சரகர் வைத்திய சாத்திரத்திலிருந்து சில பாடல்களை எனக்குப் படித்துக் காட்டினர். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதில் மதக் கோட்பாடுகளைக் கவனிக்கக் கூடாது என்று அவை கூறின. ஆகவே பால் சாப்பிடாமலேயே வாழ்வதற்கு எனக்கு உதவி செய்ய அவர்களை எதிர்பார்த்துப் பயனில்லை. மாட்டு மாமிச சூப்பையும் பிராந்தியையும் சாப்பிடுமாறு தயக்கமின்றிச் சிபாரிசு செய்கிறவர்கள், பால் இல்லாத ஆகாரத்தைக் கொண்டு நான் உயிர்வாழ உதவி செய்வார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

     பசுவின் பாலையோ, எருமைப் பாலையோ நான் சாப்பிடுவதற்கில்லை. ஏனென்றால், அவற்றைச் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டுவிட்டேன். எந்தப் பாலையுமே சாப்பிடுவதில்லை என்பது தான் விரதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நான் இந்த விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் தாய்ப் பசுவும் தாய் எருமையுமே என் மனத்தில் இருந்ததாலும், உயிர்வாழ நான் விரும்பியதாலும், விரதத்தின் தன்மையை வற்புறுத்துவதில் எப்படியோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டு ஆட்டுப்பால் சாப்பிடத் தீர்மானித்தேன். ஆட்டுப் பாலை நான் சாப்பிட ஆரம்பித்தபோது என்னுடைய விரதத்தில் அடங்கியிருந்த உணர்ச்சி நாசமாக்கப்பட்டு விட்டது என்பதை நான் முற்றும் உணர்ந்தே இருந்தேன்.

     ரௌலட் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்த வேண்டும் என்ற எண்ணமே அப்பொழுது என்னை ஆட்கொண்டிருந்தது. அதோடு உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதன் விளைவாக என் வாழ்க்கையின் மிகப் பெரிய சோதனை ஒன்று அதோடு நின்று போயிற்று.

     ஆன்மா, எதையும் சாப்பிடுவதுமில்லை; குடிப்பதும் இல்லை. ஆகையால், ஒருவர் எதைச் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்பதற்கும் ஆன்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று விவாதிக்கப்படுகிறது என்பதை அறிவேன். நாம் எதை உள்ளே போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல; உள்ளிருந்து – பேச்சினாலும் நடவடிக்கையினாலும் – எதை வெளியே விடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த வாதத்தில் ஓரளவு அர்த்தம் இருக்கிறது, என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த வாதத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட என்னுடைய உறுதியான நம்பிக்கை இன்னது என்பதைத் தெரிவிப்பதோடு திருப்தியடைகிறேன். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து அதன்மூலம் கடவுளை நாடுபவருக்கும், கடவுளை நேருக்கு நேராகக் காண விரும்புகிறவருக்கும், எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுத்திட்டம் இருக்க வேண்டியது எப்படி அவசியமோ அதேபோல அவருடைய சாப்பாட்டின் அளவிலும் தன்மையிலுங் கூடக் கட்டுத்திட்டம் இருக்க வேண்டியது முக்கியம் என்பதே எனது திடமான நம்பிக்கை.

என்றாலும், என்னுடைய தத்துவத்தை நானே நடத்திக்காட்ட முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தில், அத் தகவலை நான் கூறி விடுவதோடு அதைக் கையாளுவதைக் குறித்துக் கடுமையான எச்சரிக்கையையும் நான் செய்ய வேண்டும். ஆகையால், நான் கூறிய தத்துவத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பால் சாப்பிடுவதை விட்டுவிட்டவர்கள், ஒவ்வொரு வகையிலும் அது அனுகூலமாக இருப்பதாக அவர்களே கண்டாலன்றி, அனுபவமுள்ள வைத்தியர்கள் அவர்களுக்கு ஆலோசனை கூறியிருந்தாலொழிய அந்தப் பரிசோதனையில் பிடிவாதமாக இருக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறேன். இதுவரையில் என்னுடைய அனுபவம் ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டது. ஜீரண சக்தி பலமாக இல்லாதவர்களுக்கும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது.

     இந்த அத்தியாயத்தைப் படிக்க நேரும் இத்துறையில் அனுபவமுள்ளவர்கள் யாராவது, தாம் படித்ததனால் அல்லாமல் அனுபவத்தின் மூலம் பாலைப் போலப் போஷிக்கக் கூடியதும், போஷாக்குள்ளதுமான ஒரு தாவரப் பொருளைப் பாலுக்குப் பதிலாகக் கூறுவாராயின் அப்படிப்பட்டவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனாவேன்.

$$$

9. அதிகாரத்துடன் சிறு போர்

     இப்பொழுது ஆசியாக்காரர்கள் இலாகாவுக்குத் திரும்புவோம். ஆசியாக்காரர்கள் இலாகாவின் அதிகாரிகளுக்கு ஜோகன்னஸ் பர்கே கோட்டை. இந்தியர், சீனர், மற்றவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்த அதிகாரிகள், அவர்களை நசுக்கிப் பிழிந்துகொண்டு வந்ததை நான் கவனித்துக்கொண்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற புகார்கள் எனக்கு வந்துகொண்டிருந்தன. ‘நியாயமாக வர வேண்டியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வருவதற்கு உரிமையே இல்லாதவர்கள் 100 பவுன் கொடுத்தால் அவர்கள் திருட்டுத்தனமாக உள்ளே கொண்டுவரப்படுகிறார்கள். இந்த அக்கிரமமான நிலைமைக்கு நீங்கள் பரிகாரம் தேடாவிட்டால் வேறு யார் தான் தேடப்போகிறார்கள்?’ – இதுவே புகார்.

எனக்கும் அதே உணர்ச்சி ஏற்பட்டது. இந்தத் தீமையை ஒழிப்பதில் நான் வெற்றிபெறாது போவேனாயின், டிரான்ஸ்வாலில் நான் வீணுக்கு வாழ்பவனே ஆவேன். ஆகவே, சாட்சியங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்குச் சாட்சியங்களைச் சேகரித்ததும் போலீஸ் கமிஷனரிடம் போனேன். அவர் நியாயமானவராகவே தோன்றினார். என்னை அலட்சியமாகப் புறக்கணித்து விடாமல் நான் கூறியவைகளை யெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். என் வசமிருந்த சாட்சியங்களை யெல்லாம் தனக்குக் காட்டும்படியும் கேட்டார். சாட்சியங்களைத் தாமே விசாரித்துத் திருப்தியும் அடைந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்கார ஜூரிகள், கறுப்பு மனிதருக்குச் சாதகமாக வெள்ளக்காரக் குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பது கஷ்டமானது என்பதை நான் அறிந்திருந்தது போலவே அவரும் அறிந்திருந்தார். ஆனால், “எப்படியும், முயன்று பார்ப்போம். ஜூரிகள் விடுதலை செய்துவிடுவார்களே என்று பயந்துகொண்டு குற்றவாளிகளைச் சும்மா விட்டு விடுவது என்பது சரியல்ல. அவர்களை நான் கைது செய்து விடுகிறேன். என்னாலான முயற்சி எதையும் நான் செய்யாது விட மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்றார், போலீஸ் கமிஷனர்.

வாக்குறுதி எனக்குத் தேவையில்லை. பல அதிகாரிகளின் மீது எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், அவர்கள் மீதெல்லாம் ஆட்சேபிக்க முடியாத சாட்சியங்கள் என்னிடம் சரிவர இல்லை. ஆகையால், குற்றம் செய்தவர்கள் என்பதில் யார் மீது எனக்குச் சிறிதளவேனும் சந்தேகமே கிடையாதோ அப்படிப்பட்ட இருவரை மாத்திரம் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

     என்னுடைய நடமாட்டத்தை எப்பொழுதும் ரகசியமாக வைத்திருப்பதற்கில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் நான் போலீஸ் கமிஷனரிடம் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது அநேகருக்குத் தெரியும். எந்த இரு அதிகாரிகளைக் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டனவோ அந்த இரு அதிகாரிகளுக்கும் ஓரளவுக்குத் திறமை வாய்ந்த ஒற்றர்கள் இருந்தனர். அவர்கள் என் அலுவலகத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்து என்னுடைய நடமாட்டத்தைக் குறித்து அந்த அதிகாரிகளுக்கு அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னுமொன்றையும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த இரு அதிகாரிகளும் மிகவும் கெட்டவர்களாகையால், அவர்களுக்குப் பல ஒற்றர்கள் இருந்திருக்க முடியாது. இந்தியரும் சீனரும் எனக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்கவே முடியாது.

     இவர்களில் ஒருவர் எங்கோ போய் மறைந்துவிட்டார். அவரை வெளி மாகாணத்திலும் கைது செய்துகொண்டு வருவதற்கான வாரண்டை போலீஸ் கமிஷனர் பெற்றார். அவரைக் கைது செய்து டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் மீது விசாரணை நடந்தது. அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் பலமாக இருந்தும், எதிரிகளில் ஒருவர் ஓடி ஒளிந்திருந்தார் என்ற சாட்சியம் ஜூரிகளுக்குக் கிடைத்திருந்தும், இருவரும் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுதலை செய்து விட்டார்கள்.

     நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். போலீஸ் கமிஷனரும் மிகவும் வருத்தப்பட்டார். வக்கீல் தொழிலிலேயே எனக்கு வெறுப்புத் தோன்றிவிட்டது. குற்றத்தை மறைத்து விடுவதற்கும் அறிவைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டேன். ஆகவே, அறிவின் பேரிலேயே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

     அவ்விரு அதிகாரிகளும் விடுதலையடைந்து விட்டனரெனினும், அவர்கள் செய்த குற்றம் அதிக வெளிப்படையானதாக இருந்ததால், அரசாங்கம் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட்டனர். ஆசியாக்காரர் இலாகாவும் ஓரளவுக்குத் தூய்மை பெற்றது; இந்திய சமூகத்திற்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

     இச் சம்பவம் என் மதிப்பை உயர்த்தியது; என் தொழிலும் விருத்தியடைந்தது. அக் கொள்ளையில் சமூகம் மாதந்தோறும் வீணாக்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பவுன்கள் – எல்லாமே என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும் பகுதி – காப்பாற்றப்பட்டன. யோக்கியப் பொறுப்பற்றவர்கள் தாங்கள் லஞ்சத்தொழிலை இன்னும் செய்து கொண்டுதான் இருந்தார்களாகையால் எல்லாவற்றையுமே காப்பாற்றிவிட முடியாது. ஆனால், யோக்கியர் யோக்கியமாகவே இருப்பது இப்பொழுது சாத்தியமாயிற்று.

அந்த அதிகாரிகள் மிகவும் கெட்டவர்களாக இருந்த போதிலும், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். இது அவர்களுக்கும் தெரியும். அவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்து என்னிடம் வந்த சமயங்களில் அவர்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன். அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கும் யோசனையை நான் எதிர்க்காமல் இருந்ததால் ஜோகன்னஸ்பர்க் முனிசிபாலிடியில் அவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்களின் நண்பர் ஒருவர், இது சம்பந்தமாக வந்து என்னைப் பார்த்தார். அவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கச் சம்மதித்தேன். அவர்களுக்கு உத்தியோகமும் கிடைத்தது.

     நான் கொண்டிருந்த இவ்வித மனோபாவத்தின் காரணமாக, நான் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் என்னோடு நன்றாகவே பழகி வந்தார்கள். அவர்களுடைய இலாகாவுடன் நான் அடிக்கடி போராட வேண்டியிருந்த போதிலும், அதிகாரிகள் மாத்திரம் என்னுடன் நட்புடனேயே பழகிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் நடந்துகொள்ளுவது என் சுபாவத்தில் சேர்ந்தது என்பதை அப்பொழுது நான் நன்றாக அறிந்து கொண்டிருக்கவில்லை. இது சத்தியாக்கிரகத்தின் அவசியமானதோர் பகுதி என்பதையும், அகிம்சையின் இயல்பே இதுதான் என்பதையும் நான் பின்னால் தெரிந்து கொண்டேன்.

மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’ என்பது உபதேசம். இது புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.

     இந்த அகிம்சையே சத்தியத்தை நாடுவதற்கு அடிப்படையானதாகும். இவ்விதம் நாடுவது அகிம்சையையே அடிப்படையாகக் கொண்டதாக இல்லாது போகுமாயின், அம் முயற்சியே வீண் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து வருகிறேன். ஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது என்பது தன்னையே எதிர்த்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், நாம் எல்லோரும் ஒரே மண்ணைக் கொண்டு செய்த பாண்டங்கள்; ஒரே கடவுளின் புத்திரர்கள். ஆகவே, நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்.

$$$

10. புனித ஞாபகமும் பிராயச்சித்தமும்

     எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பலவிதமான சம்பவங்கள், பல மதங்களையும் பல சமூகங்களையும் சேர்ந்தவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளும்படி செய்துவிட்டன. இவர்களுடனெல்லாம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து நான் ஒன்று கூற முடியும். உறவினர் என்றோ, வேற்று மனிதர் என்றோ, என் நாட்டினர் என்றோ, பிற நாட்டினர் என்றோ, வெள்ளையர் வெள்ளயரல்லாதார் என்றோ, ஹிந்துக்கள் – மற்ற மதத்தினரான இந்தியர் என்றோ, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள் என்றோ வேற்றுமை உணர்ச்சி எனக்கு இருந்ததே இல்லை. இவ்விதப் பாகுபாடு எதையும் கற்பித்துக்கொள்ள முடியாததாக என் உள்ளம் இருந்தது என்று சொல்லலாம். இது என் சுபாவத்தோடு ஒட்டியதாகவே இருந்ததால், இதை எனக்கு இருந்த விசேட குணம் என்று நான் கூறிக்கொள்ளுவதற்கில்லை. என்னளவில் எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே அது எனக்கு ஏற்பட்டதாகும். ஆனால், அகிம்சை, பிரம்மச்சரியம், அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), புலனடக்கம் ஆகிய நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுவதற்காக நான் இடைவிடாது முயன்று வந்தேன் என்பதையும் முற்றும் உணர்ந்திருக்கிறேன்.

டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, என் அலுவலகக் குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடனேயே தங்குவார்கள். அவர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர். மாகாணவாரியாகச் சொல்லுவதாயின், அவர்கள் குஜராத்திகளும் தமிழர்களும் ஆவார்கள். அவர்களும் என் உற்றார் உறவினர்களே என்பதைத் தவிர அவர்களை வேறுவிதமாக நான் எப்பொழுதாவது கருதியதாக எனக்கு ஞாபகம் இல்லை.  என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே அவர்களைப் பாவித்து நடத்தி வந்தேன்; இவ்விதம் நான் நடத்துவதற்கு என் மனைவி எப்பொழுதாவது குறுக்கே நின்றால், அப்பொழுது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும். குமாஸ்தாக்களில் ஒருவர் கிறிஸ்தவர்; தீண்டாத வகுப்பைச் சேர்ந்த பெற்றோருக்குப் புதல்வராகப் பிறந்தவர்.

     நான் குடியிருந்த வீடு மேற்கத்திய நாகரிகத்தையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. அறைகளிலிருந்து அழுக்கு நீர் வெளியே போவதற்கு அவற்றில் வழி வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீருக்கு எனத் தனித்தனிப் பானைகள் உண்டு. இப்பானைகளை வேலைக்காரரோ, தோட்டியோ சுத்தம் செய்வதற்குப் பதிலாக அந்த வேலையை என் மனைவியோ, நானோ செய்து வந்தோம். வீட்டில் இருந்து பழகி விட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் அறையிலிருக்கும் பானைகளை அவர்களே சுத்தம் செய்து கொள்ளுவார்கள். ஆனால், கிறிஸ்தவ குமாஸ்தாவோ புதிதாக வந்தவர். அவருடைய படுக்கை அறையைக் கவனித்துக் கொள்ள வேண்டியது, எங்கள் வேலையாயிற்று. மற்றவர்களுடைய பானைகளையெல்லாம் சுத்தம் செய்வதில் என் மனைவிக்கு ஆட்சேபமில்லை. ஆனால் பஞ்சமராக இருந்த ஒருவர் உபயோகித்த பானையைச் சுத்தம் செய்வதென்பது அவருடைய வரம்புக்கு மீறியதாக இருந்தது. ஆகவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பானைகளை நான் சுத்தம் செய்வது என்பதையும் அவளால் சகிக்க முடியவில்லை. பானையும் கையுமாக அவள் ஏணியின் வழியாக இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னைக் கடிந்து கொண்டாள். கோபத்தில் அவளுடைய கண்களெல்லாம் சிவந்திருந்தன. அவளுடைய கன்னங்களில் முத்துபோலக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சியை நான் இன்றும் அப்படியே நினைவுபடுத்திக் கொள்ள முடியும். நானோ, அன்போடு கொடூரமும் நிறைந்த கணவன். அவளுக்கு நானே உபாத்தியாயர் என்று கருதி வந்தேன். எனவே, அவளிடம் எனக்கு இருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளை மிகவும் துன்பப்படுத்தினேன்.

     அவள் பானையை எடுத்துச் சென்றதனால் மாத்திரம் நான் திருப்தியடைந்துவிடவில்லை. அவள் அவ்வேலையைச் சந்தோஷத்துடன் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, உரத்த சப்தத்துடன், “அம்மாதிரியான மடத்தனத்தையெல்லாம் என் வீட்டில் சகிக்க மாட்டேன்” என்றேன்.

இச் சொற்கள் கூறிய அம்புகளாக அவள் உள்ளத்தில் தைத்து விட்டன. “உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், என்னைத் தொலைத்துவிடுங்கள்” என்று அவள் திருப்பிக் கூச்சல் போட்டாள். நான் என்னையே மறந்துவிட்டேன். என் உள்ளத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போய்விட்டது. அவள் கைகளைப் பிடித்து அத்திக்கற்ற மாதை ஏணிக்கு எதிரிலிருந்து வாயிற்படிக்கு இழுத்துக்கொண்டு போனேன். அவளை வெளியே பிடித்துத் தள்ளி விடுவதற்காகக் கதவைத் திறக்கப் போனேன். அவளுடைய கன்னங்களின் வழியே கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அழுது கொண்டே அவள் கூறியதாவது: “உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா? இப்படியும் உங்களுக்குச் சுய உணர்வு அற்றுப் போய்விட வேண்டுமா? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? எனக்குப் புகலிடம் அளிப்பதற்கு இங்கே என் பெற்றோர்களாவது உறவினர்களாவது இருக்கிறார்களா? நான் உங்கள் மனைவி என்பதனால் அடித்தாலும் உதைத்தாலும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகிறது, நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். கதவை மூடுங்கள். நம்மைப் பார்த்து யாராவது சிரிக்கப் போகிறார்கள்!”

     இதைக் கேட்ட நான் என் முகத்தைக் கம்பீரமாக வைத்துக் கொண்டேன். ஆனால், உண்மையில் வெட்கமடைந்தேன். கதவையும் மூடினேன். என்ன விட்டு என் மனைவி போய்விட முடியாது என்றால், அவளை விட்டு நானும் பிரிந்துவிட முடியாது. எங்களுக்குள் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் முடிவில் எங்களுக்குள் சமாதானமே நிலவும். சகிப்புத் தன்மையின் இணையில்லாத சக்தியினால் எப்பொழுதும் வெற்றி பெறுகிறவள், மனைவியே.

     இச்சம்பவம், அதிர்ஷ்டவசமாக நான் கடந்து வெளிவந்து விட்ட ஒரு காலத்தைப் பற்றியது. ஆகையால், இச்சம்பவத்தை எந்தவிதமான பற்றுமில்லாமல் சொல்லக்கூடிய நிலையில் நான் இன்று இருக்கிறேன். குருடனான, வெறிகொண்ட கணவனாக நான் இப்பொழுது இல்லை; என் மனைவியின் உபாத்தியாயராகவும் இல்லை. கஸ்தூரிபாய் விரும்பினால், நான் முன்னால் அவளுக்கு எவ்வளவு தொல்லை அளித்து வந்தேனோ அவ்வளவு தொல்லையும் அவள் எனக்கு இன்று அளிக்க முடியும். சோதனைக்கு உட்பட்டுத் தேறிய நண்பர்கள் நாங்கள். இப்பொழுது நாங்கள் ஒருவரை ஒருவர் காம இச்சையின் இலக்காகக் கருதவில்லை. நான் நோயுற்றிருந்த போதெல்லாம் அவள் எனக்குப் பக்தியுள்ள தாதியாக இருந்து, எவ்விதக் கைம்மாறையும் எதிர்பாராமல் பணிவிடை செய்து வந்திருக்கிறாள்.

     மேலே நான் சொன்ன சம்பவம் 1898-இல் நடந்தது. பிரம்மச்சரிய எண்ணமே எனக்கு இல்லாமல் இருந்த காலம் அது. கணவனுக்கு மனைவி உதவியாகவுள்ள சிநேகிதி, தோழி, கணவனின் இன்ப துன்பங்களில் பங்காளி என்பதற்குப் பதிலாக அவள் கணவனின் காம இச்சைக்குரிய அடிமை, கணவன் இட்ட வேலையைச் செய்வதற்கென்றே பிறந்திருப்பவள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த காலம், அது.

     1900-ஆம் ஆண்டில்தான் இக் கருத்துக்கள் தீவிரமான மாறுதலை அடைந்தன. ஆனால், அதைப்பற்றி அதற்கேற்ற சந்தர்ப்பத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒன்று மாத்திரம் இப்பொழுது சொன்னால் போதும். காமப் பசி என்னிடமிருந்து நாளாவட்டத்தில் மறைய மறைய, என்னுடைய குடும்ப வாழ்க்கை மேலும் மேலும் அமைதியாகவும் இனிமையானதாகவும், சந்தோஷகரமானதாகவும் ஆயிற்று; ஆகிக்கொண்டிருக்கிறது.

புனிதமான இந்த நினைவைப் பற்றிய வரலாற்றைக் கொண்டு நானும் என் மனைவியும் பிறர் பின்பற்றுவதற்கான லட்சியத் தம்பதிகளாக இருந்தோம் என்றோ, எங்களுக்கு லட்சியத்தில் ஒரேவிதமான கருத்து இருந்தது என்றோ, யாரும் எண்ணிக்கொண்டு விடவேண்டாம். எனக்கு இருந்த லட்சியங்களைத் தவிர தனக்குத் தனியாக ஏதாவது லட்சியம் இருந்ததுண்டா என்பது ஒருவேளை கஸ்தூரிபாய்க்கே தெரியாமல் இருக்கலாம். நான் செய்யும் காரியங்கள் பல இன்றுகூட அவளுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவைகளைக் குறித்து நாங்கள் விவாதிப்பதே இல்லை. அவைகளை விவாதிப்பதில் எந்தவித நன்மை இருப்பதாகவும் நான் காணவில்லை. ஏனெனில், அவளைப் படிக்க வைத்திருக்க வேண்டிய சமயத்தில் அவளுடைய பெற்றோரும் படிக்க வைக்கவில்லை; நானும் அதைச் செய்யவில்லை. ஆனால், அவளிடம் ஒரு பெரிய அருங்குணம் மிகுந்த அளவில் இருக்கிறது. ஹிந்து மனைவிகள் பெரும்பாலாரிடம் ஓரளவுக்கு இருக்கும் குணமே அது. அதாவது, விரும்பியோ விரும்பாமலேயோ, அறிந்தோ அறியாமலேயோ என் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தான் நடப்பதே தனக்குப் பாக்கியம் என்று அவள் கருதி வந்திருக்கிறாள். புலனடக்க வாழ்க்கையை நடத்த நான் செய்த முயற்சிக்கு அவள் எப்பொழுதும் குறுக்கே நின்றதே இல்லை. ஆகையால் அறிவுத் துறையில் எங்களுக்கிடையே அதிகப் பேதம் இருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை திருப்தியும், சந்தோஷமும், முற்போக்கும் உள்ளதாக இருந்து வருகிறது என்றே நான் எப்பொழுதும் உணர்கிறேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s