பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை

-மகாகவி பாரதி

உலகின் பிற நாடுகள் எவ்வாறு அரசியலில் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை போகிற போக்கில் செய்தியாகச் சொல்லி, இந்தியர்களின் மனதில் தேச விடுதலை எண்ணத்தை வளர்க்க, இதழாளர் பாரதி பாடுபட்டதை இச்செய்தி காட்டுகிறது. பாரசீக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததை எவ்வளவு குதூகலமாக பாரதி கொண்டாடுகிறார், பாருங்கள்!

கீழ் திசையிலுள்ள தேசத்தாருக்குக் கொடுங்கோலரசு தான் பொருந்தி வருமென்றும், ஜனப் பிரதிநிதிகள் சேர்ந்து பொதுஜன விருப்பத்திற்கிணங்க அரசாகும் முறைமை பொருந்த மாட்டாதென்றும் நம்புவது ஐரோப்பியர்களின் மூட பக்திகளிலே ஒன்று. நமக்குள்ளே கிராம பஞ்சாயத்துக்கள் இருந்ததை வெள்ளைக்காரர்கள் மறந்து விடுகிறார்கள். பூர்வத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமை இருந்ததா? இல்லையா? என்பதுகூட நமக்கு இப்போது முக்கிய விவகாரமில்லை. இனி நமக்கு இஷ்டமுண்டானால் அவ்வித ஜன ஆட்சி முறைமை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா, முடியாதா என்பது இப்போது முக்கியமாக ஆலோசிக்க வேண்டிய விஷயம். முடியாதென்று ஐரோப்பியரின் எண்ணம். ஏனென்றால் கீழ்திசை ஜனங்கள் தம்மைத்தாம் கவனித்துக்கொள்ள முடியாமலிருக்கும் வரை தானே ஐரோப்பியர் கீழ் திசையாரை வந்து இம்சிக்கவும், கொள்ளையிடவும் சாத்தியமாகும். ஆதலால் கீழ்திசைக்காரரின் ஜன்மஸ்வபாவத்திற்கே பொதுஜன ஆட்சி பொருத்தமில்லாத விஷயமென்று ஐரோப்பியர்கள் தாம் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு பலவந்தம் செய்து வருகிறார்கள்.

இடையே ஜப்பான் தேசமென்று வந்து சேர்ந்தது. ஜப்பான் தேசவாஸிகள் பிரதிநிதி ஆட்சி முறைமை ஏற்பாடு செய்துகொண்டு வெகுநேர்த்தியாக நடத்திவரத் தொடங்கிவிட்டார்கள். இதைப் பார்த்தவுடனே ஐரோப்பியர்க்கு மூஞ்சி சுருங்க ஆரம்பித்தது. ஜப்பான் மட்டும் ஏதோ விதிவிலக்காக இவ்வாறு மேம்பாடு பெற்றதேயன்றி மற்ற நாடுகளுக்கெல்லாம் அவ்விதம் நடத்திவர இயலாதென்று நமது ஐரோப்பிய நண்பர்கள் சொல்லத் தொடங்கினார்கள். சமீபத்தில், பாரஸீக (பெர்ஷியா) தேசம் பிரதிநிதியாட்சி முறைமை ஸ்தாபனம் செய்துகொண்டது. நமது ஐரோப்பிய நண்பர்களுக்கு யோசனை ஜாஸ்தியாய் விட்டது. இதென்னடா! வெள்ளை நிறமற்ற ஜனங்களிடம்கூட மனுஷபாவம் இருக்கிறது போல் தோன்றுகிறதே, என்று அவர்கள் ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.

என்ன செய்யலாம். பாவம்! உலகம் முழுவதும் சதாகாலத்திலும் ஐரோப்பியர்களே உன்னத நிலையிலிருந்து தம்மிஷ்டப்படி இம்சை செய்துவர முடியாதென்றே காணப்படுகின்றது!

லண்டன் ‘டைம்ஸ்’ பத்திரிகை இவ்விஷயமாக சில தினங்களின் முன்பு பிரஸ்தாபம் செய்திருப்பதில் பெர்ஷியாவில் ஏற்பட்டிருக்கும் புது ஆட்சி முறைமை நிலைத்து நிற்குமா என்பதைப் பற்றி வெகு சந்தேகத்துடன் எழுதுகிறது. இப்படி இவர்கள் ஒருபுறம் விசாரமடைந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் கீழ்திசை நாடுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அபிவிருத்தியடைந்து கொண்டு வருகின்றன. இந்தியாகூட பிரதிநிதியாட்சி வேண்டுமென்று கேட்கிறது. சுய ஆட்சி வேண்டுமென்கிறது. சும்மா சொல்வதுமட்டுமா? சீக்கிரம் பெற்றுவிடவும் செய்யும் என்று தோன்றுகிறது. ஸ்ர்வலோக நாயகர்களாகிய வெள்ளை ஜனங்களுக்கு இவ்வாறு அடிக்கடி துக்கங்கள் நேர்ந்து வருவதுபற்றி நாம் மிகவும் அனுதாபம் தெரிவிக்கின்றோம்.

  • இந்தியா (16.03.1907)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s