-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம் 7
வந்தேமாதரம்- 2
இந்தியா விடுதலை பெறுவது தன்னுடைய முன்னேற்றத்திற்காக மட்டும் என்று அரவிந்தர் கருதவில்லை. உலக முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை அளிப்பதற்காகவே இந்தியா விடுதலை பெற வேண்டுமென அவர் கருதினார். ‘இந்திய எழுச்சியும் ஐரோப்பாவும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தலையங்கத்தில் கூறியிருந்ததாவது:
"ஐரோப்பாவின் அறிவார்ந்த பகுதியாக இந்தியா ஆகுமேயானால் அவள் (இந்தியா) தனது இயல்பான மேன்மையை, உயர்வை அடைய முடியாமல் போகும். ஒவ்வொரு தேசத்தின் இருப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதை விட்டு விடும்போது அதன் முன்னேற்றமும் தடைப்படும். இந்தியா இந்தியாவாக (இந்திய தன்மையுடன்) இருக்க வேண்டும். அவளுக்கென விதிக்கப்பட்டதை நிறைவேற்ற வேண்டும். ஐரோப்பா தன் நாகரிகத்தை இந்தியா மீது திணித்தால் அதனால் ஐரோப்பாவுக்கு லாபம் இல்லை. ஐரோப்பாவைப் பீடித்துள்ள நோய்க்கு இந்தியாவே குணப்படுத்தும் மருத்துவர். ஐரோப்பிய நாகரிகத்தை இந்தியா மீது திணித்தால் மருத்துவரும் நோய்வாய் படுவார். யாருக்கும் நோய் குணமாகாது. எனவே ஆன்மிகத்திலும் அரசியலிலும் இந்திய தேசிய இயக்கம் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கும் அவசியம். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா இந்தியாவாக இருக்கும். எனவே இந்தியா சுதந்திரம் பெறுவதை உலகமே விரும்புகிறது"
– என்று அந்தத் தலையங்கத்தில் எழுதியிருந்தார்.
வந்தே மாதரத்தின் வீச்சு மற்ற பத்திரிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. தினசரியாக இருந்த வந்தே மாதரம் 1907 ஜூன் மாதம் முதல் வார இதழையும் சேர்த்து வெளியிட்டது. அதில், அரசியலில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள், அரசின் தவறுகளும் குளறுபடிகளும், அரசியல் கட்சிகள் தலைவர்களின் செயல்பாடுகள், ஆங்கிலேயர்கள் நடத்தும் மற்ற பத்திரிகைகள் குறித்து, என பல்வேறு விஷயங்களை பற்றிய விவரங்களும் விமர்சனங்களும் இடம்பெற்றன. அவை மிக அறிவார்ந்த தளத்தில் இருந்தன. சில கேலியும் கிண்டலுமாக, சில குத்தலாக, சில கசப்புடன் என இந்திய இதழியலில் புதிய பரிமாணத்தை, புதிய அளவுகோலை ’வந்தே மாதரம்’ ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைப் பார்க்கலாம்.
லண்டனிலிருந்து வெளியாகும் டைம்ஸ் பத்திரிகை, ‘இந்த (இந்திய) தேசியவாதிகள் இன வெறுப்பைப் பரப்புகிறார்கள். ஆளும் இனத்திற்கு எதிராக இனக் காழ்ப்பை ஏற்படுத்துகிறார்கள்’ என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதி இருந்தது. அரவிந்தர் அதற்கு பதில் அளிக்கும் விதமாக எழுதி இருந்ததாவது:
"உங்கள் பத்திரிகை சில நாட்களுக்கு முன்பு மாஜினி, கரிபால்டியின் நூற்றாண்டைக் கொண்டாடியது. எங்கள் நோக்கங்களும் குறிக்கோள்களும் மாஜினியுடைய, கரிபாலிட்டியினுடைய நோக்கங்களை போலவே உயர்வானவையே. எங்கள் நாட்டை மற்ற உலக நாடுகளைப் போல சுதந்திரமானதாக, அவைகளுக்கு சமமானதாக, வலிமை மிக்கதாக, பழம் பெருமைகளை விடவும் மேலான பெருமை மிக்கதாக்க, மகத்துவம் மிக்கதாக்க நாங்கள் பணி செய்கிறோம். இந்தக் கடுமையான சவால் மிக்க பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நேரம், செல்வம், சுதந்திரம், வாழ்க்கையையே பணயம் வைத்துச் செயல்படுகிறோம். மற்ற நாடுகள் மீதான வெறுப்பினாலோ எதிர்ப்பினாலோ நாங்கள் செயல்படவில்லை. எங்கள் தேசத்தின் நலனையும் வளத்தையும் மட்டும் கருதி செயல்படவில்லை. இங்கிலாந்தின் நன்மைக்காகவும் ஒட்டுமொத்த மனித இனத்தின் மேன்மைக்காகவும் செயல்படுகிறோம் என்று உறுதியாகச் சொல்கிறோம். எங்கள் தேச நிர்மாணத்தை, வளத்தை கட்டமைக்கும் பணி இங்கிலாந்துக்கு எதிரானது என்று கருதினால் அதை தடுக்க நியாயமற்ற, வன்முறையான வழிகளைப் பயன்படுத்தினால், இங்கிலாந்து தான் இனதுவேஷத்தை இன வெறுப்பை பரப்பும் ஆக்கிரமிப்பாளர் என்று கூற வேண்டும்"
-என்று அரவிந்தர் எழுதியிருந்தார்.
வந்தே மாதரத்தில் வெளிவந்த கட்டுரைகள் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தின. அப்போது முன்னணி ஆங்கில பத்திரிகையான ஸ்டேட்ஸ்மேனில் ஆசிரியராக இருந்தவர் எஸ்.கே.ராட்கிளிப். அவர் வந்தே மாதரத்தைப் பற்றி, ‘பச்சை நிற முழு நீளத் தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த நாளேட்டில், ஆங்கிலத்தில், புத்திசாலித்தனத்துடன் கூடிய அருமையான கட்டுரைகள் வெளிவந்தன. அவை அதுவரையில் இந்திய பத்திரிகைகளில் இல்லாத உயர்ந்த தரத்தில் இருந்தன. தீவிரவாத தேசியத்தை மிகவும் வலிமையான குரலில் பேசியது’ என்று எழுதியுள்ளார்.

வந்தே மாதரம் பத்திரிகை, அரசியலிலும் இலக்கியத்திலும் புதிய வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்போதே புரிந்து கொண்டவர் சகோதரி நிவேதிதை. பின்வரும் தலைமுறையினருக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு அந்த இதழ்களைப் பாதுகாத்தார். அவருக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
அந்தக் காலகட்டத்தில் அரவிந்தருக்கு ஏராளமான வேலைப் பளு இருந்தது. வந்தே மாதரம் நாளேட்டின் பணி, கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் பணி, நேஷனலிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக அதன் கொள்கைகள் செயல்திட்டங்கள் குறித்து செய்ய வேண்டிய பணி, வங்காளத்துக்கு வெளியே மற்ற மாகாணங்களில் இருந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருத்தல் என்பதுடன், ரகசிய புரட்சிகர இயக்கத்துடன் எல்லா மட்டங்களிலும் தொடர்பு கொண்டிருத்தல், அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான யுகாந்தரில் தொடர்ந்து எழுதுவது, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என ஒரே நேரத்தில் பல வேலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவரது ரகசியப் பணி குறித்து பலருக்கும் தெரியாது. நெருங்கிய சகாக்களுக்கும்கூட முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த சிலரும் அதை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். அவர் அரசியல் களத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட பலருக்கு அவர்தான் ரகசிய இயக்கத்தின் தலைவர் என்று தெரியவில்லை.
இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான குறிப்பை, மருத்துவரும் சீடருமான நீரத் பரன் எழுதியுள்ளார். 1935இல் அவர் பாண்டிச்சேரி ஆசிரமத்தில் சேர்ந்தார். அதன் பிறகும் அரவிந்தருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அரவிந்தர் அவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மேற்கண்ட காலகட்டத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “அப்பொழுது நான் மிக அபாயகரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்” என்று எழுதியுள்ளார். அதற்கு சீடர் கேட்டார், “நீங்கள் இங்கிலாந்தில் இருந்தபோது பணநெருக்கடி இருந்தது. பாண்டிச்சேரிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலும் நிதிப் பற்றாக்குறை இருந்தது. ஆனால் பரோடாவில் கொழுத்த சம்பளம் வாங்கினீர்கள். கல்கத்தாவிலும் நல்ல சம்பளம் தான். அப்படியிருக்க அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்தேன் என்பது எப்படி சரியாகும்?”என்று கேட்டிருந்தார்.
அரவிந்தர், “என் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு துல்லியமாக, குறை சொல்ல முடியாத தெளிவுடன் நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். பதில் சொல்ல வேண்டுமென்று தான் நினைத்தேன். ஆனால் அந்த அபாயகரமான வாழ்க்கையை தேவையை மீறி (இப்போது விவரிப்பதன் மூலம் மீண்டும்) வாழ வேண்டாம் என்று விட்டு விடுகிறேன். இப்பொழுது என்னுடைய பதில் ஒன்றுதான், அது !!!!. (இந்த இடத்தில் அரவிந்தர் வியப்பு என்ற வார்த்தைக்கு பதிலாக வியப்புக்குறியை நான்கு முறை தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்) இந்த உலகில் மனிதனுக்குள்ள ஒரே அபாயம் பணமற்று இருப்பது என்பதை உங்கள் கேள்வி மூலம் தெரிந்து கொண்டேன். காரல் மார்க்ஸ் கூட இப்படிப்பட்ட பொருளாதார உலகைச் சித்தரித்திருக்க மாட்டார். ஒருவேளை நீட்சே அப்படி சொல்லி இருக்கலாம்” என்று பதில் எழுதி இருந்தார்.
சீடரும் விடுவதாக இல்லை. அவர், “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் என் அறியாமையைப் போக்குங்கள். அபாயகரமான வாழ்க்கை என்பதை உங்கள் வாழ்க்கை எடுத்துக்காட்டு மூலம் எங்களுக்கு எடுத்துச் சொன்னால் எங்களுக்கு சற்று அறிவும் தெளிவும் கிடைக்குமே?” என்று மீண்டும் அந்த கேள்வி வலியுறுத்தினார்.
அதற்கு அரவிந்தர், “நான் அதை சொல்லப் போவதில்லை. புரட்சிகரப் போராட்டத்திற்கு சற்றும் தயாரில்லாத ஒரு நாட்டில் அதற்காக இயக்கத்தை ஆரம்பித்து பத்தாண்டுகள் தொடர்ந்து நடத்துவது எவ்வளவு அபாயகரமானது என்று உங்களுக்குப் புரியவில்லை என்றால் அதுபற்றி எத்தனை வார்த்தைகளை உங்கள் மூளைக்குள் நான் திணித்தாலும் உங்களுக்கு விளங்காது” என்று பதில் எழுதினார்.
வங்காளத்தில் தேசியவாதிகளின் ஒப்பற்ற தலைவராக அரவிந்தர் இருந்தார். ஆனாலும் அவர் எப்பொழுதும் தன்னை முன்னிறுத்தாமல் பின்னணியிலேயே இருந்தார். 1907 ஜூன் மாதத்தில் தேசிய பள்ளியைத் தொடங்குவதற்காக குல்னா சென்றிருந்தார். அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபற்றி அவர் எழுதும்போது, “எனக்கு அங்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. அது நானொரு தேசத் தலைவன் என்பதற்காக அளிக்கப்பட்டது அல்ல. மாறாக டாக்டர் கிருஷ்ணதன கோஷின் மகன் என்பதற்காகக் கொடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணதன கோஷ் நல்ல மருத்துவர். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் ஏழைகளுக்கு உதவியவர் என்பதை அம்மக்கள் மறக்கவில்லை. ஆனால் அரவிந்தருக்கு அதனால்தான் வரவேற்பு என்பது, அவர் தன்னை தலைவராக முன்னிறுத்தாத பண்பையே வெளிப்படுத்துகிறது.
1907 ஏப்ரல் மாதத்தில் அரசு லஜபதி ராயை நாடு கடத்த முடிவெடுத்தது. அதற்கு வழக்கமான நீதிமன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், எப்போதோ போட்ட, அன்று வரை பயன்படுத்தாமல் இருந்த ஒரு சட்ட பிரிவை பயன்படுத்தி, அதன்மூலம் குற்றம் சாட்டப்படாமல் அதை நிரூபிக்காமல் நீதிமன்றம் செல்லாமல் வெகு தூரத்தில் உள்ள சிறையில் நீண்ட நாட்கள் அடைக்கும் வழியை மேற்கொண்டது. அந்தச் செய்தி கிடைத்தவுடன் ‘இக்கட்டு’ என்ற தலைப்பில் வந்தே மாதரத்தில் அரவிந்தர் தலையங்கம் எழுதினார். அதி அவர் கூறியிருந்ததாவது:
"இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கண்டு நம் தேச மக்கள் தங்கள் மன உறுதியை இழந்து விடக் கூடாது. உணர்ச்சி மரத்துப் போய் விடக் கூடாது. ஆன்மாவை தளர விடக் கூடாது. லாலா லஜபதி ராய் நம்மிடமிருந்து போய் இருக்கலாம். ஆனால் அவரை விட வல்லமை மிக்க மேன்மையான பலர் வருவார்கள்; அவருடைய இடத்தை நிரப்புவார்கள். எந்த ஓர் உயிரோட்டமுள்ள எழுச்சியையும் அடக்குமுறையாளர்கள் அடித்து நொறுக்கும்போது அதன் ஒவ்வொரு துகளில் இருந்தும், ஒவ்வொரு மரணத்திலிருந்தும் மேலும் இரு மடங்காக நான்கு மடங்காக அது வலிமை பெற்று எழும்"
– என்று எழுதியிருந்தார் அரவிந்தர்.
அதே கட்டுரையில் கேலியாக, “இந்தியாவை தீவிர தேசியவாதிகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் வெறிகொண்டு செயல்படும் பிரிட்டிஷ் அரசை நாம் பாராட்டுகிறோம். மக்களை தேசபக்தி உள்ளவர்களாக்க நாம் செய்யும் முயற்சிகள் நீண்ட காலம் பிடிக்குமென நினைத்திருந்தோம். ஆனால் நம் லட்சியம் நிறைவேற வேண்டும் என்றும், அதுவும் சீக்கிரமே நிறைவேற வேண்டும் என்றும் அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது……. லாலா லஜபதி ராயை நாடு கடத்துவதன் மூலம் பிரிட்டிஷ் நீதியின் மீதி இருந்த நம்பிக்கையை அவர்கள் அழித்துள்ளார்கள்” என்று அவர் எழுதியிருந்தார்.
வந்தே மாதரத்திற்குக் கிடைத்த வெகுஜன ஆதரவு மட்டுமன்றி அதன் கூர்மையான தாக்குதல்களால் அரசு கலங்கியது. மற்ற ஆங்கில – இந்திய பத்திரிகைகளும் வந்தே மாதரத்தில் வெளிவரும் கட்டுரைகள் அரசு விரோதமாக இருப்பதாகக் கூப்பாடு போட்டன. அதே வேளையில் அக்கட்டுரைகள் சாதுரியமான வார்த்தைகளால் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் இருப்பது போல எழுதப்பட்டுள்ளன என்பதையும் அந்தப் பத்திரிகைகள் எடுத்துக் கூறின. எனவே அரசு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தது.

1907 ஜூன் 7ஆம் யுகாந்தருக்கும் ஜூன் 8ஆம் தேதி வந்தே மாதரத்துக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியது. கலவரத்தைத் தூண்டும் விதமாக எழுதுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 3ஆம் தேதி யுகாந்தர் பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டு பூபேந்திரநாத தத்தரை (இவர் சுவாமி விவேகானந்தரின் தம்பி) கைது செய்தது. ஜூலை 30ஆம் தேதி வந்தே மாதரம் அலுவலகத்தைச் சோதனையிட்டு பல புத்தகங்களையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றது. அதனால் தளர்வடையாத வந்தே மாதரம், அடுத்த நாளே ‘கடைசியில் ஓநாய் வெளி வந்தது’ என்று தலையங்கம் தீட்டியது. (பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்பது பழமொழி)
ஜூலை 30ஆம் தேதியே அரவிந்தரைக் கைது செய்ய அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் காவல் துறை தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை சோதனை செய்ய சில நாட்கள் எடுத்துக் கொண்டனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி அரவிந்தரின் முப்பத்தி ஐந்தாவது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன் அவரைக் கைது செய்தனர். அவர் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. நீதிமன்றத்தில் வந்தே மாதரம் பத்திரிகையின் ஆசிரியர் நீங்களா? பதிப்பாளர் நீங்களா? என்ற இரண்டு கேள்விகளுக்கும் அவர் ‘இல்லை’ என்று பதில் அளித்தார். தேவையில்லாமல் நாம் ஏன் தியாகியாக வேண்டுமெனக் கருதி தாம் ஆசிரியர் என்பதை நிரூபிக்கும் பணியை அரசிடமே விட்டுவிட்டார். ஆகஸ்ட் 29ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். கல்கத்தா மாகாணத் தலைமை நீதிபதியான டி.ஹெச்.கிங்ஸ்போர்டு முன்னிலையில் வழக்கு வந்தது. வழக்கில் ஆசிரியர் என அரவிந்தரும், நிர்வாகி என ஹேமேந்திரநாத் பக்ஷியும், பதிப்பாளர் என அபூர்ப கிருஷ்ண போஸூம் குற்றம் சாட்டப்பட்டனர்.
வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அரசு முனைப்பாக இருந்தது. அரவிந்தர் தான் நாளேட்டின் ஆசிரியர் என்பதை நிரூபிக்க பிபின் சந்திர பாலரை சாட்சிக்கு அழைத்தது. பிபின் சந்திர பாலர் வந்தே மாதரம் பத்திரிகையுடன் தொடர்பு அற்றுப் போனதால் நீதிமன்றத்துக்கு வந்து, அரவிந்தர் தான் ஆசிரியர் என்று கூற முன் வருவார் என்று கருதியது. ஆனால் அந்தக் கணிப்பு தவறாய்ப் போனது. பிபின் சந்திர பாலர் சாட்சி கூற மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மறுநாள் வந்தே மாதரத்தில் ஒரு பாராட்டுக் கட்டுரை வெளிவந்தது. அதில், ‘தேசியத்தின் தீர்க்கதரிசியும் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான பிபின் சந்திரர் சிறைப்பட்டதால் தேசத்திற்கு எந்தக் கேடும் வராது. அவரும் எந்தவிதமான கஷ்டமும் பட மாட்டார். மாறாக மக்கள் மனதில் அவர் பத்து மடங்கு உயர்ந்துள்ளார். அவர் சிறையில் இருந்து வெளிவரும் போது அவரது செல்வாக்கும் மதிப்பும் இரு மடங்கு அதிகமாகும். அவர் சிறைப்பட்டதால் தேசபக்தி மேலும் வலுப் பெற்றுள்ளது. மனசாட்சிப்படி அவர் நடந்து கொண்டதை குற்றமெனக் கருதிய நீதிமன்றத்தின் செயலைப் பற்றி வருங்கால சந்ததியினர் தீர்ப்புக் கூறுவார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணை கல்கத்தாவில் மட்டுமல்ல, நாட்டின் இதர பகுதிகளிலும் பரபரப்புடன் கவனிக்கப்பட்டது. ஆனால் ‘நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அரவிந்தர் மிக அமைதியாக இருந்தார்’ என்று ஹேமேந்திர பிரசாத் கோஷின் நாட்குறிப்பு கூறுகிறது. வழக்கு நடந்த அந்த நேரத்தில்தான், 1907 செப்டம்பர் 8ஆம் தேதி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, நமஸ்கார் (வணக்கம்) என்ற தலைப்பில் ‘அரவிந்தா உன்னை வணங்குகிறேன்’ என்று தொடங்கும் புகழ் பெற்ற கவிதை வந்தே மாதரத்தில் பிரசுரமானது.
செப்டம்பர் 23 ஆம் தேதி கிங்ஸ்போர்டு தன் தீர்ப்பை வெளியிட்டார். அதில், வந்தே மாதரம் பத்திரிகையில் அரசு விரோதமாக கட்டுரைகள் வெளிவந்தது குற்றமே. குறிப்பாக யுகாந்தரில் வெளிவந்த சில கட்டுரைகளை அது மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதும் குற்றமே. ஆனாலும் வந்தே மாதரம் பத்திரிகை அரசு விரோதமாகச் செயல்படுவது வழக்கமான ஒன்றெனச் சொல்ல ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. நாளேட்டின் ஆசிரியர் அரவிந்தர் தான் என்பதற்கும் சான்று இல்லை. எனவே அவர் விடுவிக்கப்படுகிறார். நிர்வாகியான ஹேமேந்திர பக்க்ஷியும் விடுவிக்கப்படுகிறார். சட்டத்தின் ஷரத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதால், பதிப்பாளரான அபூர்பா போஸுக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று அந்தத் தீர்ப்பு கூறியது. அத்தீர்ப்பு அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அரவிந்தரை தண்டிக்கவோ வந்தே மாதரத்தை தடை செய்யவோ முடியாமல் போனதற்காக, அரசின் மதிப்பு அதன் ஆதரவாளர்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்தது. பதிப்பாளரின் சிறைவாசம் துரதிஷ்டவசமானது என்றாலும் பத்திரிகை சட்டத்தின்படி அது தவிர்க்க முடியாததானது.
அந்த வழக்கும் விசாரணையும், இறுதியில் விடுவிக்கப்பட்டதும் அரவிந்தரை மக்கள் முன் நிறுத்தியது. ஒரே நாளில் எல்லோரும் அவர் பெயரைச் சொல்ல ஆரம்பித்தனர். ஆசிரியர் அவரில்லை என்று நீதிமன்றம் கூறிய போதிலும் மக்கள் அவரை வந்தே மாதரம் பத்திரிகையின் ஆசிரியர் என்றும், தீவிர தேசியவாதிகளின் தலைவர் அவர் தான் எனவும் கூறத் தொடங்கினர். இருக்காதா பின்னே, அரசுத் தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ‘அரவிந்த கோஷ் அந்த பத்திரிகை ஆசிரியரா இல்லையா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. அவர் தான் அந்த பத்திரிகை. அவரும் அந்த பத்திரிகையும் ஒன்றுதான் என்று நான் கூறுகிறேன்’ என்று கர்ஜித்துள்ளாரே!
இந்த திடீர்ப் புகழும் கவனமும் அரவிந்தருக்கு ஏற்புடையதாக இல்லை. பின்னாளில் ஒரு சீடருக்கு எழுதிய கடிதத்தில், “என்னுடைய அரசியல் காலத்திலேயே நான் புகழை விரும்பியதில்லை. மக்களுக்குத் தெரியாமலே, திரை மறைவில் இருந்தபடி, அவர்களைக் கொண்டு செயலாற்றி வந்தேன். என் மீது வெறுப்புக் கொண்ட பிரிட்டிஷ் அரசு வழக்குத் தொடுத்ததன் மூலம் என் விளையாட்டைக் கெடுத்தது. பொதுமக்கள் முன்பு என்னை பிரபலமானவனாகவும் ‘தலைவனாக’வும் ஆக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ‘மான்செஸ்டர் கார்டியன் ஆஃப் லண்டன்’ என்ற பத்திரிகையின் செய்தியாளராக இருந்த, பின்னாளில் எழுத்தாளரான, ஹென்றி நிவின்சன் என்பவர் அரவிந்தரை பேட்டி கண்டார். அரவிந்தர் பற்றி அவர் எழுதிய ‘நியூ ஸ்பிரிட் ஆப் இந்தியா’ என்ற நூலில், ‘மென்மையான, கச்சிதமாக அமைக்கப்பட்ட அந்த முகத்தில் இருந்த கருத்த கண்கள் ஆழமும் அசையாத தன்மையும் கொண்டிருந்தன. தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்த, தலைவிதியைப் பற்றியோ மற்றவர்களின் கருத்தைப் பற்றியோ கவலைப்படாத, கண்கள். நான் பார்த்தவர்களிலே மிக அமைதியான மனிதர் அவர். கனவு காண்பவர் போல இருந்தாலும் அந்தக் கனவை நனைவாக்க எந்த வழிமுறையையும் பின்பற்றத் தயங்காதவர்’ என்று எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிறகு அரவிந்தர் கல்லூரி நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக, அதன் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பேராசிரியர் பணியில் மட்டும் தொடர்ந்தார். அவருக்கு இருந்த பல்வேறு பணிகள் இடையே கல்லூரிப் பணியில் கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டபடி தேசிய கல்வி முறையை நடைமுறைப்படுத்தவும் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. தேசிய இயக்கத்தின் மிக முக்கியமான, ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தது, அவர் கொண்டிருந்த தேசிய கல்விக் கொள்கை.

பரோடாவில் அவர் பணிபுரிந்த காலத்தில் தனக்குக் கிடைத்த அனுபவத்தில், “ஆங்கில கல்வி முறை மிகப் பெரும் கேட்டை விளைவிக்கக் கூடியது. அது பாடதிட்டங்களை மனப்பாடம் செய்வதையும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதையும் வலியுறுத்தியது. அது இந்தியர்களின் இயல்பான அறிவுக் கூர்மையை, பிரகாசத்தை மழுங்கடிக்கக் கூடியதாக இருந்தது” என அவர் எழுதியுள்ளார். 1909-10 இல் தேசிய கல்வி என்பதை பற்றி தொடர் கட்டுரை எழுதினார். அது பின்னாளில் ‘கர்மயோகின்’ பத்திரிகையில் மறு பிரசுரமாக வெளிவந்தது.
"ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் தெய்வீகம் உள்ளது. அது அவருக்கே உரியது. அதை வளர்க்கவும் முழுமைப்படுத்தவும் வாய்ப்பை இறைவன் அவருக்கு அருளுகிறான். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரிஷ்டம். அந்த இறைத்தன்மை எதுவெனக் கண்டுபிடிப்பதும் அதை வளர்ப்பதும் பயன்படுத்துவதும் சவாலான விஷயம். கல்வியின் முக்கிய நோக்கமே, வளர்ந்து வரும் அந்த ஆன்மாவுக்குள்ளிருக்கும் உயர்வான விஷயத்தை வெளிப்படுத்தவும் அதை முழுமையாக்கி திறம்பட பயன்படுத்த உதவி செய்வதுமேயாகும்." "ஆசிரியர் என்பவர் பாடம் போதிப்பவர் அல்ல. அதிக மதிப்பெண் வேண்டுமென கட்டாயப்படுத்துபவர் அல்ல. அவர் ஒரு வழிகாட்டி. உங்களுக்கு உதவி செய்பவர். குழந்தையை ஒரு வார்ப்புக்குள் கொண்டுவர பெற்றோரும் ஆசிரியரும் கட்டாயப்படுத்துவது காட்டுமிராண்டித்தனமானது. அறியாமையில் எழுந்த மூட நம்பிக்கை அது. குழந்தையை தனக்கே உரிய இயல்பான வகையில் பரிணமிக்க தூண்டுவதே சரியானது"
-என்பது கல்வி திட்டம் குறித்து அவர் எழுதியதன் சாரமாகும்.
பரோடாவில் இருந்ததைப் போல கல்கத்தாவிலும் மாணவர்களால் அரவிந்தர் மிகவும் மதிக்கப்பட்டார். தேசிய கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகிய போது மாணவர்கள் அவர் மீது தங்களுக்கு இருந்த மதிப்பையும் அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்டிருந்த சிக்கலான சூழ்நிலையில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆகஸ்ட் 1907 இல், சுருக்கமாக உரையாற்றினார்.
"தேசத்தின் முன்பு விதி ஒரு பணியை, ஒரு லட்சியத்தை முன்வைக்கும் போது, அந்த ஒரு பணியின், லட்சியத்தின் முன்பு மற்ற எல்லாவற்றையும், அவை எவ்வளவு தான் உயர்ந்ததாக மேன்மையானதாக இருந்தாலும் அவை அனைத்தும் தியாகம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது நம் தாய்நாட்டிற்கு அதுபோன்றதொரு தருணம் வந்துள்ளது. நாம் அவளுக்குப் பணி செய்ய வேண்டும். நமது எல்லாச் செயல்களும் தேச சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் கற்பதாக இருந்தால் அவளுக்காகவே கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மாவை அவளது சேவைக்காகத் தயார்படுத்துங்கள். அவளுக்காக வாழ்வது மட்டுமே உங்கள் ஊதியமாகட்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவளுக்கு சேவை செய்யவே அறிவைத் திரட்டி வாருங்கள். அவள் வளம் பெற பணிபுரியுங்கள். அவள் மகிழ்ச்சி அடைவதற்காக நீங்கள் கஷ்டப்படுங்கள். இந்த ஒரு அறிவுரையிலேயே எல்லாம் அடங்கி உள்ளது"
என்று அந்த உரையில் அரவிந்தர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
$$$