கொங்கேழ் தலங்கள்- நூல் அணிந்துரை

அர்ஜூன் சம்பத்

‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் புத்தாண்டன்று திருப்பூர், அலகுமலை திருக்கோயிலில் வெளியிடப்பட்டது. அதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜூன் சம்பத் எழுதியுள்ள அணிந்துரை இது…

தமிழையும் சநாதன சமயத்தையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்தவர்கள் கொங்குநாட்டு மக்கள். எனவேதான் இங்குள்ள ஒவ்வொரு ஊரிலும் சிவன் கோயில்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. அவற்றின் அருகிலேயே பெருமாள் கோயில்களும் அமைந்திருப்பது சைவ- வைணவ சமயங்களிடையிலான ஆக்கபூர்வமான உறவுக்கு சாட்சியாக விளங்குகிறது.

சமயக்குரவர்கள் நால்வரும், ஆச்சாரியர் ராமானுஜரும் காலடி பதித்த பெருமை மிகுந்த பகுதி கொங்குநாடு. இங்கு கரிகால் சோழன் முதல் அழகாத்திரி நாயக்கர் வரையிலான மன்னர்கள், சேர, சோழ, பாண்டிய, விஜயநகரப் பேரரசுகள், சிற்றரசர்கள், ஆன்றோர் பெருமக்கள் எனப் பலரும் திருப்பணி செய்த ஆலயங்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இந்த ஆலயங்கள் தான் நமது ஆன்மிக உணர்வை செம்மைப்படுத்தி, சமுதாயம் சிறப்பாக வாழத் துணை புரிந்து வருகின்றன.

இவற்றில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழும், தேவாரப் பாடல்களில் குறிக்கப்பட்ட 13 வைப்புத்தலங்களும் சிறப்பானவை. காலவெள்ளத்தில் காணாமல் போன பாடல்கள் பலவும் கிடைத்திருந்தால், பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்ற ஆய்வாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சமயக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் காலத்தால் பிற்பட்டவரான மாணிக்கவாசகர் (9ஆம் நூற்றாண்டு) தவிர்த்த மூவரும் பாடிய பாடல்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தேவாரப் பதிகம் (பத்து பாடல்கள் கொண்டது ஒரு பதிகம்) பெற்ற தலங்களே ‘தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்’ என்று வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன், திருத்தலம் மீதான தேவாரப் பாடல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

சிவனின் ஆருயிர்த் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாருடன் சிவன் புரிந்த திருவிளையாடல்கள் பல. அவற்றில் அவிநாசி, திருமுருகன் பூண்டி தலங்களில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. இதேபோல, கோவை மாவட்டம், துடியுலூரிலும் பேரூரிலும், சிவனும் பார்வதியும் திருவிளையாடல் நிகழ்த்தி உள்ளனர். இத்தலங்கள் குறித்து தேவாரப் பதிகம் இல்லாததால், இந்தத் திருவிளையாடல்கள் குறித்து இந்நூலில் குறிக்கப்படவில்லை போலும். எனினும் அவற்றை அறிவது நமது பக்திப் பெருக்கை மேலும் ஊக்குவிக்கும்.

அவிநாசி தலத்தில் முதலையுண்ட பாலகனை பைந்தமிழ்ப் பதிகம் பாடி மீட்ட பிறகு தீர்த்த யாத்திரையாக துடிசையம்பதி (துடியலூர்- கோவை மாவட்டத்தில் உள்ளது) வந்த சுந்தரர், மிகுந்த பசியால் களைப்புற்றார். அப்போது சிவனும் பார்வதியும் வேடுவன் – வேடுவச்சியாக அங்கு தோன்றி வனமுருங்கைக் கீரையுடன் சுந்தரருக்கு அமுது படைத்தனர்; பிறகு அருட்காட்சி கொடுத்தனர் என்கிறது துடிசை புராணம். இதன் காரணமாகவே, சுந்தரரின் பசி தீர்க்க விருந்து படைத்தமையால், இத்தல இறைவன் விஸ்வநாயகி சமேத விருந்தீஸ்வரராக  அருள் பாலிக்கிறார்.

அடுத்து பட்டீஸ்வரப் பெருமானைத் தரிசிக்க பேரூர் (கோவை மாவட்டம்) வந்த சுந்தரருடன் விளையாடக் கருதிய சிவனும் பார்வதியும் பள்ளர்- பள்ளச்சி தம்பதியாக உருமாறி வயலுக்கு நாற்று நடச் சென்றுவிட்டனர். இதனை நந்தியம்பெருமான் வாயிலாக அறிந்து அந்த வயலுக்கு சுந்தரர் சென்று அவர்களைத் தரிசித்தார் என்கிறது, பேரூர்த் தல புராணம். சுந்தரருக்கு தன்னைக் காட்டிக் கொடுத்த நந்தியம்பெருமானின் தாடையில் செல்லமாக மண்வெட்டியால் சிவன் தட்டினார் என்றும், அதனால்தான் நந்தியின் சிலையில் தாடை சப்பையாக இருக்கிறது என்றும் தல வரலாறு கூறுகிறது. இன்றும், ஆண்டுதோறும் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி பூராடம் வரை, பேரூர் திருக்கோயிலில் நாற்றுநடவுத் திருவிழா நடைபெறுவதும், அதில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பங்கேற்பதும் தொடர்ந்து நடந்துவரும் பண்பாட்டு நிகழ்வாகும்.

இதுபோன்ற தெய்வீகக் கதைகள் நம்மைப் பண்படுத்தி வருவதுடன், பாரதப் பண்பாட்டின் அடிநாதமாக மிளிர்கின்றன. கொங்குநாட்டில் தான் தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குதான் கொங்குநாட்டு கங்கையான, காஞ்சிமாநதி எனப்படும் நொய்யல் நதியும் பாய்கிறது. ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’ என்பது பழமொழி.

இத்தகைய கொங்குநாட்டின் பிரதான ஆலயங்கள் குறித்து சிறப்பான நூலை எழுதியுள்ள அன்பு சகோதரரும் பத்திரிகையாளருமான திரு. வ.மு.முரளி அவர்களை 40 ஆண்டுகாலமாக நான் அறிவேன். இவரது இந்த அரும்பணி போற்றுதலுக்குரியது. இந்நூலை வெளியிட்டுள்ள திருப்பூர், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவர் திரு. கொங்கு ராமகிருஷ்ணன் அவர்களின் பணியும் நன்றிக்குரியது. இப்பணியில் இணைந்துள்ள அனைவருக்கும், பேரூர் அருள்மிகு பச்சைநாயகி உடனுறை பட்டீஸ்வரப் பெருமானின் அருளாசிகள் என்றும் உண்டு.

-என,
அர்ஜூன் சம்பத்
கோவை,
02.04.2026

$$$

Leave a comment