-ஆசிரியர் குழு
‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் திருப்பூரில் உள்ள திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் பதிப்புரையும் வாழ்த்துரையும் இங்கே...

பதிப்புரை
நமது ஆலயங்களில் ஆன்மிகப் பணியாற்றுவதற்காக தன்னார்வலர்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அமைப்பே, திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாகும். திருப்பூரில் ஆன்மிகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் பலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவாக 2017இல் இணைந்து நடத்திய கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாக, ‘திருக்கோவில் ஆன்மிகப் பேரவை’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, கோவில்களில் சமய விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, 2023 மார்ச் மாதம், ‘திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை’ தனி அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
திருக்கோவில்களில் உழவாரப்பணி நடத்துவது; ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை நூல்களை வழங்குவது; திருக்குறள் மனனப் போட்டி, பாரதியார் கவிதைகள் ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றை நடத்துவது; இளம் வயதில் திருமுறைகள், பாசுரங்களை இசைப்பவர்களைக் கண்டறித்து கௌரவிப்பது; திருக்கோவில் பணியாளர்களுக்கு உதவி செய்வது; கோவில் விழாக்களில் சேவைப்பணி ஆற்றுவது; ஆன்மிக நூல்களை வெளியிடுவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இந்த அறக்கட்டளை இயங்கி வருகிறது.
நமது அமைப்பின் முதல் பிரசுர வெளியீடாக, திருக்கோவில் ஆன்மிகப் பேரவை சார்பில், ‘அலகுமலை திருக்கோவில் வரலாறும் சிறப்புகளும்’ நூல் அடியேனால் தொகுக்கப்பட்டு, 2022 ஜனவரியில், அலகுமலை முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் வெளியிடப்பட்டது. இரண்டாம் வெளியீடாக, எழுத்தாளர் திரு. வ.மு.முரளி எழுதிய ‘தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்’ நூல் ஸ்ரீ குரோதி தமிழ்ப் புத்தாண்டில் (2024 ஏப்ரல் 14) வெளியிடப்பட்டது.
தற்போது மூன்றாம் வெளியீடாக, ‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள்’ என்ற இந்நூலை ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டில் (2026 ஏப்ரல் 14) வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தின் சமய, பண்பாட்டு வளர்ச்சியில் ‘கொங்குநாடு’ பேரிடம் வகித்துள்ளது. முற்காலத்தில் கொங்குநாடு என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதியில் சைவமும் தமிழும் ஒருங்கே வளர்த்த திருக்கோயில்களைப் பற்றிய அற்புதமான நூல் இது.
இந்த நூலை எழுதி வழங்கிய தேசிய சிந்தனைப் பேரவையின் தமிழக அமைப்பாளரும், அன்பு நண்பருமான எழுத்தாளர் திரு. வ.மு.முரளி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. மேலும், இந்நூலை திறம்பட வடிவமைத்துள்ள சென்னை, கௌரி கிராஃபிக்ஸ் நிறுவனத்திற்கும், சிறப்பாக அச்சிட்டு வழங்கிய பதிப்பகத்தாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆன்மநேய ஒருமைப்பாடே நாட்டில் வளத்தையும் அமைதியையும் செழிக்கச் செய்யும். இந்த தெய்வீகப் பணியில் எங்களுடன் இணைந்து பணியாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கொங்கு இரா.ராமகிருஷ்ணன்
அமைப்பாளர்,
திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை, திருப்பூர்.
திருப்பூர்,
திருப்பூர்,
ஏப்ரல் 3, 2026.
$$$
வாழ்த்துரை
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்,
இந்து முன்னணி,
தமிழ்நாடு
மூவர் பாடிய தேவாரம் என்பது, நம் தாய்மொழியாம் அருந்தமிழ் இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஒரு தெய்வீக அனுபவம். இப்பாடல்கள் இயற்றப்பட்ட விதம் சரித்திரபூர்வமானது மட்டும் அல்ல, ஒவ்வொரு திருத்தலத்தின் பெருமையையும் நமக்கு உணர்த்துகிறது.
இப்பாடல்கள் பாடப்பெற்ற ஒவ்வொரு திருத்தலங்களும் நமக்கு மிகவும் புனிதமானவை. கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற தேவாரப் பாடல்களை இந்நூல் விவரிப்பது இப்பகுதி இந்துக்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாகும். அதுவும் நமது புது வருடப் பிறப்பில் இந்தப் புத்தகம் வெளிவருவது நல்லதொரு தொடக்கமாகும்.
கொங்கு மண்டலத்தின் ஆன்மிகப் பெருமையை இன்றைய இளைய சமுதாயம் உணரும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிடும் திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் திருப்பணிக்கு கயிலாயநாதன் பேரருள் கிடைக்க வாழ்த்துகிறோம்.
சிவனருளாலும் , குருவருளாலும் கொங்கு மண்டலத்தின் ஆன்மிக உணர்வுக்கு இது போன்ற புத்தகங்கள் மேலும் வலிமை சேர்க்கும். இந்தப் புத்தகத்தைத் தொகுத்து வழங்கி, தெய்வீகத் தமிழுக்கு சிறப்பு சேர்த்த திருமிகு வ.மு.முரளி அவர்களுக்குப் பாராட்டுகள். இந்த தெய்வீகப் பணியை செவ்வனே செய்தவர்களை வாழ்த்துகிறோம்.
கொங்கு மண்டலத்தில் ஆன்மிகம் மேலும் தழைத்தோங்க வழிகாட்டும் ஆதீனங்களுக்கும் சிவனடியார் திருக்கூட்டத்திற்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள், வந்தனங்கள்.
திருச்சிற்றம்பலம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
திருப்பூர்
01.04.2026
$$$