மகாவித்துவான் சரித்திரம்- 1(16)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

16. சில மாணவர்கள் வரலாறு

மாணவர் வகை

இவர் தம்பால் யார் வந்து கேட்பினும் அவர்களுக்குப் பாடஞ் சொல்வார். இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு: பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிறசாதியினரும், கிறிஸ்தவர்களும், மகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு.

நாகூரிற் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதர் நாவலரென்னும் மகம்மதியர் ஒருவர் இவர்பால் வந்து சீறாப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்.

சவராயலு நாயகர்

புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ.சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்று திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனைப்பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம். பிள்ளையவர்கள் தேகவியோகம் அடையும் வரையும் இவரிடத்தும் இவர் மாணாக்கர்களிடத்தும் அவர் காட்டி வந்த அன்பும் செய்த உதவிகளும் மிக உண்டு. இவரிடத்தில் தாம் பாடங் கேட்டதை மறவாமல் தம்முடைய கல்வி உயர்ச்சிக்குக் காரணம் இவரேயென்னும் எண்ணம் அவர்பால் என்றும் இருந்து வந்தது. இவர் விஷயமாக அவர் பல செய்யுட்கள் இயற்றியிருக்கின்றார்; அவற்றிற் சில வருமாறு:

“ஓதுதற் கருநூ லியாவையு முணர்ந்த வுணர்வினன் றிரிசிர கிரியாம்
மேதகு பதியி லொளிர்தரு ஞான விளக்கமா யடியவ ருளத்திற்
றீதுறு மவிச்சை யாமிருள் சீத்துத் திகழுமெந் தேசிக னாய
கோதின்மீ னாட்சி சுந்தர னருளாற் கூறுது மிஃதுளந் துணிந்தே.”

இச் செய்யுள் அவர் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்கு முன் சொல்லப்படுவது.

“விளங்குறுவெண் புகழ்வனைந்த மீனாட்சி சுந்தரப்பேர்க்
களங்கமில்தே சிகனென்பாற் கருணைநனி புரிந்ததனாற்
றுளங்குறுதேம் பாவணிக்குச் சொலத்துணிந்தே னுரைவிரித்து
வளங்கெழுமவ் வருளிலையேல் வகுத்தலரி தரிதரிதே.”

இச்செய்யுளால் அவர் தேம்பாவணிக்கு உரைசொல்லிப் பிரசங்கம் புரியும் வன்மையைப் பெற்றது பிள்ளையவர்களாலேயென்பது வெளியாகின்றது.

“முத்திக்கு வித்தா முரிமனத்துக் காறுதலாம்
எத்திக் கினும்பொருளை யீவதுவாம் - சுத்தகலை
ஓது கருணைமிகு முத்தமவென் சற்குருநிற்
கேதுசெய்கு வன்கைம்மா றின்று.”

“கற்றற் கெளியனவாக் காட்டியரும் பாடலெல்லாம்
பற்றச்செய் நற்குணவென் பண்ணவனாம் - உத்தமநீ
ஞானப் பொருள்வழங்கி நற்றருமஞ் செய்வதுபோற்
றானமுண்டோ விவ்வுலகிற் றான்.”

என வரும் செய்யுட்களால் அவருடைய குருபக்தி விளங்குகின்றது.
தண்டு, அ.சந்திரப் பிள்ளை யென்பவர் மீது அவர் பாடிய செய்யுட்களுள்,

“வண்டுதொட ரலரணியுங் குழலன்ன மெனுமனைவி வாழ்த்த வோங்கும்
தண்டுசந்தி ரப்பிள்ளை யாங்குலோத் துங்கனையிச் சபையி லேவெண்
பெண்டுறையும் நாவினனம் மீனாட்சி சுந்தரநற் பெருமா னுக்கே
தொண்டுபுரி மாணாக்க ரிற்சிறியேன் கவிகளினாற் றுதிக்கின் றேனே”

என்னும் செய்யுளால் இவரிடம் அவர் பாடங்கேட்டமை வெளியாகின்றது.

பிற்காலத்தில் பிள்ளையவர்கள் பாடிய திருமயிலைச் சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலைக்கு அவர் கொடுத்த சிறப்புப் பாயிரங்களுள்ளும் இவரைத் தம் ஆசானென்று குறிப்பிட்டுள்ளார் :

“பார்புகழும் விநாயகவே டிருமயிலைச் சத்திரமாம் பாத்தி ரத்தில்
ஏர்குடிகொண் டோங்கிவளர் மீனாட்சி சுந்தரப்பே ரெங்க ளாசான்
நார்நனிகொண் டமைத்துவைத்த நற்பாவாஞ் செவியுணவை நயந்தே விண்ணோர்
சீர்தருதெய் வதவுணவை யவியவியென் றேவெறுத்துச் செப்பு வாரால்.”

“இலக்கண விலக்கிய மினிதுற வெவர்க்கும்
கலக்க மறப்புகல் கரிசில் குணாளன்
தன்னிடைக் கற்பவர் மன்னவைக் களத்துள்
என்னையு மொருவனாத் துன்னுவித் தருளி
மெய்யருள் சுரந்த மீனாட்சி சுந்தர
நல்லா சிரியன்.”

சவராயலு நாயகரைப் பாடிய பலர் அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கரென்பதைத் தம் செய்யுட்களிற் புலப்படுத்தியிருக்கின்றனர்:

வேதநாயகம் பிள்ளை

“சாதிநா யகனான சவராய லுத்தமனே சவரி யாரென்
சோதிநா யகனாம நீதரித்தாய் மீனாட்சி சுந்த ரப்பேர்
நீதிநா யகனன்றோ நினக்காசா னுலகமெலா நியமித் தாளும்
ஆதிநா யகனனைமே னீபாடி னுன்கவியை யார்மெச் சாரே.”

சித்திலிங்கமடம், தி.அ.சிவாநந்த ஸ்வாமிகள்

“தேமேவு செவ்வந்தி யலர்சிர கிரிக்கண்வரு
சிவனடிய ரிற் சிறந்து
திகழுமீ னாட்சிசுந் தரதேசி கன்வயிற்
செந்தமிழெ லாமுணர்ந்து”

பொம்மையபாளையம் பால சித்தானந்தர்

“மீனாட்சி சுந்தரப்பேர் மேவு தமிழ்க்கடலிற்
றானாட்சி யாமமிர்தந் தானுண்டு - வானாள்
புரந்தரனை மீறுசவ ராயலுபொற் பார்மால்
புரந்தருளு மென்னுரையும் பூண்டு.”

சவராயலு நாயகர் பிள்ளையவர்களிடம் தாம் சென்று படித்தற்குரிய உதவியைச் செய்யவேண்டுமென்று தம்மை ஆதரித்த தாசில்தார் அ.சஞ்சீவி நாயகருக்கெழுதிய செய்யுளில் ஒருபகுதி வருமாறு :

*1  “ஆர்கொள்புகழ் சேர்சிராப் பள்ளியின் மகத்துவ
அகத்திய னெனத்தோன்றிவந்
தவதரித் திட்டமீ னாட்சிசுந் தரகுருவை
அண்டிநற் றமிழையோர்தற்
காயவழி காட்டவுனை யன்றிவே றிலையென்
றடுத்துள மிரங்குமென்றன்
அனுபவ மறிந்தெனக் காதரணை செய்யநின
தகங்களித் திடல்வேண்டுமே.”

சவராயலு நாயகருக்கு இவர் தாம் முன்பு படித்து வைத்திருந்த பழக்கத்தால் தேம்பாவணி முதலிய நூல்களைத் தெளிவாகச் சொல்லிவந்தனர். இவர்பால் அழுக்காறுற்ற சில சைவர்கள், “இவர் சைவராக இருந்தும் புறச்சமய நூல்களைப் படித்தலும் பாடஞ்சொல்லுதலும் புறச்சமயத்தாருடன் அளவளாவி மாணாக்கராகக் கொள்ளுதலும் தகுதியல்ல” என்று குறை கூறத் தலைப்பட்டனர். அதனை அறிந்த இவர், அங்ஙனம் குறை கூறி வந்த சிலரும் தம் நண்பர்கள் சிலரும் ஒருங்கிருக்கும்பொழுது, தம் நண்பர்களைப் பார்த்துக் கூறுவாராய், “நான் தேம்பாவணியைப் பாடஞ் சொல்லுதலும் கிறிஸ்தவர் முதலிய பிறமத மாணாக்கர்கள் என்பாற் பாடங்கேட்டலும் கூடாத செயல்களென்று சிலர் சொல்லி வருவதாகத் தெரிகிறது. மாணாக்கராக யார் வந்தாலும் அன்போடு பாடஞ் சொல்லுதலையே எனது முதற்கடமையாக எண்ணியிருக்கிறேன். எல்லாத் தானத்திலும் வித்தியா தானமே சிறந்தது. அன்னமிடுதற்குப் பசியுள்ளவரே பாத்திரர்; அதுபோலப் பாடஞ்சொல்லுதற்கு, படிப்பில் ஆர்வமுடைய யாவரும் பாத்திரர்களே. அன்றியும் தமிழ் நூல் யாதாயிருப்பினும் அதிலுள்ள சொற்பொருள் நயங்களை உணர்தல் பிழையாகாதே! கிறிஸ்தவ மதத்தைப் பிரசாரஞ்செய்ய வேண்டுமென்பது என்னுடைய கருத்தன்று. தமிழ் நூல் என்னும் முறையில் யாதும் விலக்கப்படுவது அன்று” என்று தம் கருத்தைப் புலப்படுத்தினார். குறை கூறியவர்கள் இவருடைய உண்மைக்கருத்தை அறிந்து அடங்கிவிட்டனர்.

வேதநாயகம் பிள்ளை பாடங்கேட்டது

முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையின் பெருமையைத் தமிழ்நாட்டார் யாவரும் அறிவார். அவர் இங்கிலீஷ்ப் பாஷையிலும் தமிழ்ப்பாஷையிலும் நல்ல தேர்ச்சிபெற்றுத் திருச்சிராப்பள்ளி ஜில்லாக் கோர்ட்டில் டிரான்ஸ்லேடர் வேலை பார்த்துவந்தார். ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் படித்து இன்புறுவதும் படித்தோர்களைக் கண்டால் நல்ல செய்யுட்களைக் கூறி அவற்றிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டுவதும் அவர்கள் கூறுவனவற்றைத் தாம் கேட்டு மகிழ்வதும் அவருக்கு இயல்பாக இருந்தன.

தம்முடைய இளமைப் பிராயத்தொடங்கி பிள்ளையவர்களையும் இவருடைய தமிழ்க் கல்வியின் வளர்ச்சியையும் செய்யுள் செய்யும் வன்மையையும் அறிந்தும் பிறர் மூலமாகக் கேட்டும் இவருடைய பழக்கத்தைச் செய்துகொள்ளுதல் தமக்கு இன்றியமையாத தென்றெண்ணி வலிந்துவந்து மிகப் பழகுவாராயினர்; பல நாளாகத் தாம் படித்த நூல்களிலிருந்த ஐயங்களை நீக்கிக் கொண்டு புதியனவாகச் சில நூல்களைப் பாடங்கேட்டனர். கேட்கும் பொழுது இவரிடத்தில் மிக்க அன்பு அவருக்கு உண்டாயிற்று. எத்தனை விதமாகத் தம்முடைய அன்பை இவர்பாற் புலப்படுத்த வேண்டுமோ அத்தனை வகையாலும் புலப்படுத்தி நடப்பாராயினர். இப்புலவர் பிரானுக்கும் அவர்பால் மிக்க பிரியமும் மதிப்பும் உண்டாயின. அவருக்குச் செய்யுள் செய்யும் பழக்கமும் நன்றாக அமைந்திருந்தது. ஆதலால் அவர் தாம் செய்யும் செய்யுட்களை இவரிடம் நேரிற் சொல்லியும் பிறரைக்கொண்டு சொல்வித்தும் வருவதுண்டு. கேட்ட இவர் அவற்றின் விஷயமாகத் தமக்குத் தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்து வருவார். ஒருநாள் அவர், தாம் இயற்றிய கீர்த்தனங்களைச் சொல்லிக்காட்டும்படி ஒருவரை அனுப்பியபொழுது அக்கீர்த்தனங்களைக் கேட்டு இவர் மகிழ்ந்து,

“கலைபுகலும் பதமில்லாக் கடவுள்கொளத் தமையடைந்தோர் களிப்ப நாளும்
தொலைவில்சுவைப் பதமுதவு வேதநா யகவள்ளல் சூட்டுந் தூய
விலையில்பல பதத்துளொரு பதத்துளொரு பதமுணர்ந்த மெய்ம்மை யோரத்
தலைமையவ னிருபதமே பெறுவரவ ரெப்பதமுந் தரவல் லாரே”

என்னும் பாடலைச் சொன்னார்.

வேதநாயகம் பிள்ளை செய்த உதவி

அப்பொழுது கால விசேஷத்தால் மலைக்கோட்டைத் தாயுமானவர் கோயில் விசாரணைக்காக தருமபுர ஆதீனகர்த்தரால் நியமிக்கப்பட்டிருந்த கட்டளைத் தம்பிரானொருவர் வியவகாரத்திலும் வருவாயிலும் விருப்பமுடைய சிலருடைய தூண்டுதலினால் அக் கோயில் நிருவாகங்களில் தருமபுர ஆதீனத் தலைவருக்கு அடங்காமல் விரோதமாக நடக்க ஆரம்பித்தார். அதனையறிந்த ஆதீனத் தலைவர் அவர்மேல் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கிற் கட்டளைத் தம்பிரானுக்கு மேற்கூறிய சிலர் உதவிபுரிய முன்வந்தார்கள். இந்நிலையில் ஆதீனத் தலைவர் தம்முடைய உரிமையை இங்கிலீஷில் எடுத்து விளக்கி ஒரு விண்ணப்பத்தை விரைவில் கோர்ட்டாரிடம் கொடுக்க வேண்டியிருந்தமையால் அவ்விஷயத்தைக் கவனித்து முடிக்கும்படி அவர் பிள்ளையவர்களுக்குத் தக்கவர்களையனுப்பித் தெரிவித்தார். இவர் அதனை நன்கு எழுதித் தருபவர் வேதநாயகம் பிள்ளையேயன்றி வேறு யாரும் இல்லையென நினைந்து அவரிடமே இதனைத் தெரிவிக்க எண்ணினார்.

இவ்வாறிருக்க, எதிர்க்கட்சியாரும் தமக்குரிய ஆதாரங்களைக் காட்டி ஒரு விண்ணப்பம் வேதநாயகம் பிள்ளையைக் கொண்டு எழுதுவிக்க நினைந்து அவருக்கு மிகுந்த பொருளும் கொடுப்பதென்று நிச்சயித்துக் கொண்டு சென்றார்கள். அச் சமயத்திலே பிள்ளையவர்களும் சென்றனர். சென்று எதிர்க்கட்சியார்கள் கூடியிருப்பதையறிந்து வேறிடத்தில் வந்து இருந்து,

“மையேறுங் கண்ணி யொருபாகன் காரிய மற்றிதுதான்
பொய்யே யலமுகிற் கேதுகைம் மாறு பொறையினொடு
மெய்யே யுருக்கொள் புகழ்வேத நாயக வித்தகன்றன்
கையே யுனைப்புகழ் வேன்புகல் வேறிலை கண்டுகொள்ளே”

என்னும் செய்யுளை எழுதியனுப்பிக் குறிப்பாகத் தம்முடைய கருத்தை ஓரன்பர் மூலமாகத் தெரிவித்தனர். அவர் அந்தச் செய்யுளைப் பார்த்து மனமுருகி உடனே எதிர்க்கட்சிக்காரருடைய வேண்டுகோளை மறுத்து அவர்களை அனுப்பிவிட்டு இவரைப் பார்த்து, “தாங்கள் இவ்வளவு தூரம் சிரமப்படலாமா? செய்யுள் எழுதித் தெரிவிக்கவேண்டுமா? ஒரு வார்த்தை சொல்லியனுப்பினால் நான் கவனிக்க மாட்டேனா?” என்று சொல்லித் தம்முடைய ஓய்வு நேரங்களில் முழுக்கருத்தையும் அதிலேயே செலுத்தி மிகத் தெளிவாக விண்ணப்பத்தை இங்கிலீஷில் எழுதிக் கொடுத்தனர். அது கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. அதனைப் பார்த்த கோர்ட்டார் உண்மையை அறிந்து வழக்கை நியாயப்படி ஆதீனத் தலைவர் சார்பாக முடிவுசெய்தார்கள்.

பல தக்க கனவான்கள் கூடி மிக்க பொருள் கொடுப்பதாக முன்வந்தும் அவர்களுக்கிணங்காமல் இவருடைய விருப்பத்தின்படி செய்தது இவர்பால் அவருக்கிருந்த இணையிலா அன்பைப் புலப்படுத்துகின்றதன்றோ? இச்செயலால் வேதநாயகம் பிள்ளையிடத்து அதிக நன்மதிப்பும் நன்றியறிவும் இவருக்கு உண்டாயின.

*2  குளத்தூர்க் கோவை

அப்பால் வேதநாயகம் பிள்ளையினுடைய அருமை பெருமைகளையும் அவர் செய்யுட்சுவையை நன்றாக அனுபவித்தலையும் பாராட்டி அவர்மீது ஐந்திணைக்கோவை யொன்றை இவர் இயற்றினர். அக்கோவை இயற்றப்பட்ட காலம் பரிதாபி வருடம் (1853). இலக்கண விளக்கம் பாடங்கேட்டதற்குச் சமீபகாலமானதால் அது சிறந்த சுவையுடையதாயமைந்திருக்கின்றது. அதன் செய்யுட்டொகை, 438.

அக்கோவைச் செய்யுட்களிற் சில வருமாறு:-

தெய்வத்திறம் பேசல்
“எறியுங் கலிதன் றலைசாய்த் திடத்தமி ழின்னருமை
அறியும் புருட மணிவேத நாயக வண்ணல்வெற்பிற்
செறியும் படிநம் மிருபே ரையுமின்று சேர்த்ததெய்வம்
முறியும் படியிடை யேசெய்யு மோசற்று முன்னலையே.” (24)

கற்றறிபாங்கன் கழறல்
“சொற்றது நாட்டுந் துரைவேத நாயக துங்கன்வெற்பில்
உற்றது சொற்றதென் காதூ டழல்புக் குலாவலொத்த
திற்றது வென்னிடைக் கிவ்வாறு வாடுவை யேற்கலைகள்
கற்றதுங் கேட்டது நன்றுநன் றாலெங்கள் காவலனே.” (44)

தெய்வநாயகம் பிள்ளை

பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் இருக்கையில் வந்து படித்தவர்களுள் தெய்வநாயகம் பிள்ளை யென்பவரும் ஒருவர். அவர் பிள்ளையவர்களிடம் படித்து மிக்க புகழ்பெற்றவர். அவர்பால் தியாகராச செட்டியாருக்கு அடுத்தபடியான மதிப்பு யாவருக்கும் இருந்துவந்தது. ஆறுமுக நாவலர் பதிப்பித்த திருக்குறள் முதலியவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் கொடுத்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் தாம் பிள்ளையவர்களிடம் கல்விகற்றமையைக் குறித்து ஓரிடத்திற் பின் வருமாறு கூறியுள்ளார் :

*3 “துரிசிரா திலங்குந் திரிசிராப் பள்ளியிற்
கடன்மருங் குடுத்த தடநெடும் புடவியில்
உற்றநூல் யாவுங் கற்றவ னென்றும்
தோலா நாவின் மேலோர் வகுத்துத்
தந்தருள் பலபிர பந்த மென்பன
எல்லாஞ் சொல்ல வல்லோ னென்றும்
உமிழ்சுவை யாரியத் துற்றபல் புராணமும்
தமிழின் மொழி பெயர்க்கத் தக்கோ னென்றும்
தனையடைந் தவரை நினைதரு தனைப்போல்
வல்லவ ராக்க நல்லதன் னியற்கையாம்
மெலியா வன்பிற் சலியா னென்றும்
மற்றவர் பிறரைச் சொற்றன போலா
துற்ற குணங்கண் முற்ற வுணர்ந்து
செப்பமுள் ளோர்பலர்க் கொப்பயா னுள்ளன
நினைந்துரை செய்வது புனைந்துரை யன்றெனக்
காட்சியின் விளக்கி மாட்சியி னமர்வோன்
கற்றவர் குழுமி யுற்றபே ரவையிற்
கனக்குநுண் ணறிவிலா வெனக்குமோ ரொதுக்கிடம்
தந்தமீ னாட்சி சுந்தரப் பெரியோன்.”

ஆரியங்காவற் பிள்ளை

பின்னொரு காலத்தில் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து ஆரியங்காவற் பிள்ளை யென்ற சைவ மாணவரொருவர் இவரிடத்துப் பாடங்கேட்க வந்தனர். வந்தவர்களைப் பரீட்சித்து அவர்களுடைய தகுதிக்கேற்பக் கற்பிப்பது இவருக்கு வழக்கமாதலின் அவரை அவ்வாறு பரீட்சிக்கத் தொடங்கி ஒரு பாடல் சொல்லும்படி வினாவினார். அவர்,

“நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்”

என்ற தொடக்கத்தையுடைய திருக்குற்றாலப் புராணத்துள்ள மந்த மாருதச் சருக்கச் செய்யுளொன்றைக் கூறினர். அதனைக் கேட்கும். பொழுதே இவருடைய செவியும் உள்ளமும் குளிர்ந்தன. அதனை மறுமுறை சொல்லும்படி செய்து கேட்டபின்பு, “இச் செய்யுள் எந்த நூலிலுள்ளது?” என்று கேட்டார். அவர், “திருக்குற்றாலப் புராணத்திலுள்ளது” என்றார். பின்பு அச்செய்யுளின் சந்தர்ப்பத்தையும் வரலாற்றையும் அவராலறிந்து கொண்டு அச் செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்தார். அந் நூலிலிருந்து வேறு சில செய்யுட்களையும் சொல்லச் சொல்லிக் கேட்டு அவற்றின் சொல்லினிமை, பொருளினிமைகளில் ஈடுபட்டு இன்புற்றார். பின்பு, “அந்நூலாசிரியர் யார்?” என்றபொழுது அவர், “மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்” என்றனர். அது தொடங்கி அப்புராணத்தைப் பெற்றுப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் இவருக்கு உண்டாயிற்று.

ஆரியங்காவற்பிள்ளை தினந்தோறும் இவரிடம் பாடங்கேட்டு வந்தார். ஒவ்வொன்றையும் அழுந்திக் கேட்பதும் செய்யுள் செய்யும் பயிற்சியும் அவர்பால் இருத்தலையறிந்து இவர் அவரிடத்து மிக்க அன்பு பாராட்டி வருவாராயினார். மற்ற மாணாக்கர்களும் அவர்பாற் பிரியமுடையவர்களாகவே இருந்தார்கள். அயலூரிலிருந்து வந்தவராதலின் அவர் இவருடன் இடைவிடாமல் இருந்து வந்தார்.

ஒருநாள் இரவில் அவருக்குப் பாடஞ்சொன்ன பின்பு வழக்கம் போலவே தெருத் திண்ணையில் அவரைப் படுக்கச் சொல்லிவிட்டு இடைகழி(ரேழி)யில் இவர் சயனித்துக்கொண்டார். அப்பொழுது நிலவு நன்றாக எறித்தது. சிலநேரமான பின் வழக்கம் போலவே இவர் விழித்துக்கொண்டார். அப்பொழுது அம் மாணாக்கர் படுத்துக்கொள்ளாமல் தூணிலே சாய்ந்துகொண்டு இருத்தலை சன்னல் வழியாகக் கண்டனர். பிறகு சில நேரம் தூங்கிவிட்டுத் திரும்ப விழித்துக்கொண்ட காலத்தும் அவர் நித்திரை பண்ணாமல் அவ்வாறே இருந்தமையையறிந்து, “ஏன் இவர் இப்படி இருக்கிறார்?” என்று நினைந்து அவர் நோக்கத்தை அறிவதற்குப் படுத்தபடியே விழித்தவராய்க் கவனித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது அந்த மாணாக்கர் வாக்கிலிருந்து,

*4 “விடவாளை வென்ற விழியாளைப் பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக மாமொரு 5நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளை யின்ப வடிவையென்சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று போயினிக் காண்பதுவே”

என்னும் செய்யுள் எழுந்தது. அவர் அதனை மீட்டும் மெல்லச் சொல்லி மனம் உருகிக்கொண்டிருந்தார். அதனைக்கேட்ட இவர் அவருக்கு உள்ள கவலை இன்னதென்பதை யறிந்து தாம் அன்று தெரிந்து கொண்டவற்றை வெளியிடாமலே இருந்துவிட்டுச் சில நாளைக்குப் பின்பு அவரிடத்து இயல்பாகப் பேசுங்காலங்களில் அவருடைய ஊரை ஒருதினத்தும், தாய் தந்தையர் வரலாற்றை ஒருதினத்தும், விவாகம் நடைபெற்றதா இல்லையாவென்பதை ஒருதினத்தும் மெல்ல மெல்ல விசாரித்து அறிந்து கொண்டனர். அவ்வாறு விசாரித்ததனால் அவருடைய தந்தையார் இருப்பிடமும், அவருக்கு விவாகமாகிச் சில மாதங்களேயாயின வென்பதும் தெரியவந்தன. பின்பு அவருடைய தந்தையாருக்கு, “உங்களுடைய குமாரர் இங்கே சௌக்கியமாகப் படித்துக்கொண்டு வருகிறார். சிறந்த புத்திமானாகவும் காணப்படுகிறார். அவருடைய நற்குண நற்செய்கைகள் மிகவும் திருப்தியை உண்டுபண்ணுகின்றன. ஆனாலும் ஆகாரம் செய்து கொள்வதற்கு வசதியான இடம் இல்லாமையினால் அவருடைய தேகம் வரவர மெலிந்து வருகிறது. ஆதலால் அவருடைய தாயாரையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு நீங்கள் இங்கு வந்து சில மாதங்கள் இருந்து அவருக்கு ஆகாராதி சௌகரியங்களைச் செய்வித்துவந்தால் அவர் செளக்கியமாகவிருப்பதன்றி நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெறுவார். இங்கே வந்து காலங்கழிக்க வேண்டியதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலையுற வேண்டாம். இங்கே எல்லா வசதிகளும் அமைக்கப்படும். உங்களுடைய வரவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் வருவதைப் பற்றி முன்னதாக எனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அம்மாணாக்கரறியாமலே ஒரு கடிதம் எழுதியனுப்பிவிட்டு இவர் வழக்கம்போல் அவருக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.

சில தினங்களுக்குப் பின்பு ஒருநாள் பகலில் 15   நாழிகைக்கு மேல் அவருக்கும் வேறு சிலருக்கும் பாடஞ் சொல்லிக்கொண்டு தம்முடைய வீட்டுத் திண்ணையில் இவர் இருக்கையில் மேலே குறிப்பிட்ட அவருடைய தந்தையார் தாயார் மனைவியாகிய மூவரும் இவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்தனர். அவர்கள் இரண்டு மூன்று வீட்டிற்கு அப்பால் வரும்போதே ஆரியங்காவற் பிள்ளை கண்டு திடீரென்று கீழே குதித்துச் சென்று அவர்களைக் கண்டு, “எப்பொழுது இங்கே வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? நான் எழுதாமலிருக்கையில் நீங்கள் எப்படி வரலாம்?” என்று கோபமுற்றுக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது, இவர் அவர்கள் இன்னாராக இருக்கலாமென்று ஊகித்தறிந்து கொண்டு எழுந்து சென்று அம் மாணவரைக் கையமர்த்தி, “தம்பி! ஏன் கோபித்துக்கொள்ள வேண்டும்? உம்முடைய போஷணைக்காகத்தான் நான் எழுதி இவர்களை வரச் செய்தேன். சும்மா இரும்” என்று சொன்னார். அவர்கள் வரக்கூடுமென்று எதிர்பார்த்து முன்னரே அமைத்திருந்த ஒரு விடுதிக்கு அவர்களை அனுப்பி ஆகாரம் முதலியன செய்விக்குமாறு சொல்லியனுப்பினார். அப்பால் தாம் சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைக் குறைவின்றி அமைத்துக் கொடுத்துத் தந்தையாரைத் தனியேயழைத்து, “உங்களுடைய குமாரர் உங்களைக் கோபித்துக் கொண்டாலும் நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமற் பக்குவமாகச் சமாதானம் சொல்லி விடுங்கள். அவர் மிக்க புத்திசாலி; விருத்திக்கு வரக்கூடியவர். அவர் இந் நகரத்தில் தனியாக இருத்தலை விடக் குடும்பத்தோடு இருந்தால் நன்மை உண்டாகுமென்று எனக்குத் தெரிந்ததனால் தான் உங்களை வருவித்தேன்” என்று மட்டும் சொன்னார். அவரும் இவருடைய பேரன்பைப் பாராட்டினர். தம் குமாரர் படிக்கும்வரையில் தாய் தந்தையர் முதலியோர் உடனிருந்து வந்தார்கள். அவசியமான காலத்தில் அம்மாணவருடைய தந்தையார் மட்டும் தம்மூருக்குச் சென்று வருவார். இவ்வாறு சில மாதங்கள் அங்கிருந்து கேட்க வேண்டிய பாடங்களைக் கேட்டுக்கொண்டு தமிழில் தக்க பயிற்சி பெற்று ஆரியங்காவற்பிள்ளை தம் குடும்பத்துடன் ஊர் போய்ச் சேர்ந்தனர். பின்பு அடிக்கடி வந்து இவரிடம் வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு செல்வார்.

இவ்வாறு, தம்முடைய மாணவர்களுக்கு எந்த எந்த வகையிற் குறைகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தாமே அறிந்து ஆராய்ந்து தீர்க்கும் அரிய தன்மை இக்கவிஞர் கோமான்பால் இருந்து வந்தது.

அழகிரி ராஜு

இவரிடம் சில வருடங்கள் இருந்து பாடங் கேட்டுச்சென்றவர்களுள் இராமநாதபுரம் அழகிரி ராஜு என்பவரும் ஒருவர். அவர் தமிழ் வித்துவான்கள் நிரம்பியுள்ள இராமநாதபுரத்தவராதலால், இயன்ற வரையில் நல்ல தமிழ்ப்பயிற்சியுள்ளவராக இருந்தார். ஒருநாள் அவர், பயிர்களுக்கு ஜலம் பாய்ச்சுவதற்கு ஒரு கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்துக்கொண்டிருக்கையில் சரியாக அவர் அவ்வேலையைச் செய்யாதது கண்டு உடன் இருந்த அவருடைய உறவினர் ஒருவர் மிகவும் கோபங்கொண்டு, “நீ என்ன சுத்த முட்டாளாக இருக்கிறாயே!” என்றார். அதனைக் கேட்டு அவர், “இவ்வாறு உங்களோடு இருந்ததனாலேயே நான் முட்டாளாக ஆனேன். தமிழ்க் கல்வியை இனி நன்கு பயின்று தேர்ச்சியுற்று இங்கு வருவேனேயன்றி அதற்கு முன்பு வருவதில்லை” என்று சத்தியஞ் செய்துவிட்டு அவ்வூரிலிருந்த வேலாயுதக் கவிராயர் வாயிலாகப் பிள்ளையவர்கள் பெருமைகளையும் மாணவர்களுக்கு அன்புடன் தடையின்றி இவர் பாடஞ்சொல்லிவருதலையும் அதற்கு முன்பே அறிந்தவராதலால் உடனே புறப்பட்டுத் திரிசிரபுரம் வந்து இவரிடம் பாடங்கேட்டு வந்தனர். படிக்க வேண்டுமென்ற ஊக்கமுள்ளவராக இருந்ததனாற் பல நூல்களைக் கற்று விரைவில் நல்ல பயிற்சியையும் பாடஞ்சொல்லும் திறமையையும் அடைந்தார். சில காலத்திற்குப் பின் தம்மூருக்குச் சென்று, “இனிமேற் கல்வியினாலேயே பிழைக்க வேண்டும்” என்ற விரதம் பூண்டு சிலருக்குப் பாடஞ் சொல்லி வருவாராயினர். அங்ஙனம் சொல்லி வருகையில் அவருடைய திறமையால் பாலவனத்தம் ஜமீந்தாராகிய ஸ்ரீமான் பாண்டித்துரைஸாமித் தேவரவர்களுக்கு இளைமையில் தமிழ் ஆசிரியராக அமர்த்தப்பெற்றார். இப்போதுள்ள மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஸ்தாபகரும், அருங்கலை விநோதருமாகிய ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்கள், “இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப் பண்டிதர்களிற் பெரும்பாலோர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர்களும் மாணாக்கர் பரம்பரையைச் சார்ந்தவர்களுமே. எனக்குத் தமிழாசிரியர்களாக இருந்த நால்வர்களில், பிள்ளையவர்களுடைய மாணாக்கர்கள் மூவர்; அம்மூவர் அழகிரி ராஜுவும் மதுரை இராமசாமிப் பிள்ளை (திருஞான சம்பந்த பிள்ளை)யும் திருவாவடுதுறையாதீன வித்துவானாகிய பழனிக்குமாரத் தம்பிரானவர்களும் ஆவர். அவர்களுள் அழகிரி ராஜு என்பவர் பாடங் கற்பிக்கும் அழகும் தமிழ்நயத்தைச் சுவைபடப் புலப்படுத்தும் விதமும் அன்புடைமையும் சொல்லியடங்குவன அல்ல; எனக்குத் தமிழிற் பிரீதியுண்டானது அவராலேயே. பிள்ளையவர்களுடைய குண விசேடங்களையும் பாடல் நயங்களையும் அடிக்கடி சொல்லிக்கொண்டே யிருப்பார்” என்று என்னிடத்திலும் வேறு பலரிடத்திலும் பிற்காலத்திற் பாராட்டிக் கூறியிருக்கிறார்கள்.

இங்ஙனம் அவ்வப்போது வந்துவந்து சிலநாள் இருந்து பாடங்கேட்டுப் பயன்பெற்றுச் சென்றவர் பலர்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இச் செய்யுட் பகுதியும் இதற்குமுன் காட்டிய செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் ‘புதுவை மகாவித்துவான் செ. சவாராயலு நாயகருக்குச் சம்பந்தமான பாடற்றிரட்டு’ (1905ஆம் வருடம்) என்னும் புத்தகத்திலிருந்து அறியப்பட்டன.
2.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 4611 – 5048.
3.  மீ. பிரபந்தத்திரட்டு, 2809.
4.  இதனைப் போன்ற வேறு 2-பாடல்கள் உண்டு; அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
5.  நாயகமென்பது அவர் மனைவியின் பெயர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s