அக்காரக்கனியும் அமரகவியும்

-திருநின்றவூர் ரவிகுமார்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. தான் இதை இயற்றுவதற்கு முன்னால் - மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற - மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை இங்கே காண்போம்.

மகாகவி பாரதியார் பன்மொழி வித்தகர். அவர்

‘யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்’

-என்றார்.

பன்மொழி வித்தகராயினும், தமிழ் அவரது தாய்மொழி என்பதால் அவருக்கு இந்தச் சாய்வு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு காரணத்தைச் சொல்கிறார்:

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
  வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணும் கண்டதில்லை’

முதலில் கம்பரைச் சொல்லுமளவுக்கு அவரிடம் என்ன கண்டுவிட்டார் என்று கேட்பவர்களுக்கு…..

‘எல்லையொன் றின்மை யெனும் பொரு ளதனை
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழ்ச்
சாதியை யமரத் தன்மை வாய்ந்ததுவென்று

உறுதி கொண்டிருந்தேன்!’

என்றுரைக்கிறார்.

இதுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத கடவுளை ஒரு கோட்டோவியமாக தன் தமிழால் வரைந்து காட்ட முயல்கிறார் கம்பர். ஆகவே தமிழ் அமரத் தன்மை வாய்ந்தது என்கிறார்.

கம்பர் – யார்?

கம்பம் என்றால் தூண் என்று பொருள் தூணிலிருந்து பிறந்தவன் கம்பன். தூணிலிருந்து பிறந்த சிங்கவேள்; நரசிம்மமூர்த்தியே கம்பன்.

‘உம்பர்க்கும் உனக்கும் ஒத்து,
இவ் உலகு எங்கும் பரந்துளாளை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி’

என்று இரணியன்  ‘பக்த ராஜா’ பிரகலாதனிடம் கேட்கிறான். கம்பம் என்றால் தூண்.

‘பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது,
சீயம்...’ 

தூணிலிருந்து பிறந்தவன் நரசிம்மன். அவனே கம்பன்.

கலைமாமணி (புதுவை) சித்தன், ‘கம்பர் வைணவரே’ என்ற கட்டுரையில்  “கம்பர் இராமாயணம் பாடக் காரணம் தன்னுடைய வைணவப்பற்றை மட்டுமன்றி தன் பெயர் காரணத்தையும் உணர்த்தற்கேயாம்” என்கிறார்.

திருவெழுந்தூரில் உள்ள காளி கோயில் கம்பத்தின் அடியில் கண்டெடுக்கப் பட்டதால் கம்பன் என்றும், அவர் பிறந்த உவச்சர் குலம் (நாயனம் வாசிப்பவர்கள். நாயனத்திற்கு கம்பம் என்று பெயர் உண்டு) என்பதாலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரரின் (ஏ+கம்பம்) பெயரினால் கம்பர் சைவ சமயத்தினர் என்றும் பல்வேறு விதமாகச் சொல்வார் உண்டு.

ஆனால் வைணவர்களுக்கு கம்பரின் சமயம் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. குழப்பம் ஏற்படாமல் இருக்க தேரழுந்தூரில் பிறந்து தமிழில் இராமாவதாரம் இயற்றியவரை கம்ப நாட்டாழ்வார் என்று ஆழ்வார்களுக்கு இணையாக புகழரையுடன் குறிப்பிடுகின்றனர்.

வைணவ இந்துக்கள்  ‘மேல் ஒரு பொருளும் இல்லாத மெய்ப்பொருள்’ என்று ராமபிரானை வணங்குகின்றனர். பாரத தேசம் முழுக்கவும் புருஷோத்தமனாக  ஸ்ரீ ராமபிரான் கொண்டாடப்படுகிறார்.  ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதை உலகம் எங்கும் உள்ள இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். அதை வலியுறுத்துவதே ராமாவதாரத்தின் நோக்கம். எனவே கம்பநாட்டாழ்வார் ‘இராமாவதாரம்’ இயற்றியது இயல்பே.

தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. ஏற்கனவே வடமொழியில் உள்ள நூல்களை தமிழர்கள் கற்றறிந்திருக்கிறார்கள். காலப்போக்கில் மாமன்னரான ராமபிரானை இறை என வணங்கும் காலத்தில்தான், அறத்தின் நாயகனிடம் ஒழிவில் காலமெல்லாம்….. அடிமை செய்ய வேண்டும் என்று ஆழ்வார்கள் நமக்கு ஆணையிட்டுச் சென்ற காலத்தில்தான், இராமாவதாரத்தை தமிழில் இயற்றினார்.

தான் இதை இயற்றுவதற்கு முன்னால் – மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற – மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.

“தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ”

மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை அடுத்துக் காண்போம்.

தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில்

கம்ப நாட்டாழ்வார்

கம்ப நாட்டாழ்வார் பிறந்தது, இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேரழுந்தூர். இது மங்களாசாசனம் பெற்ற திருத்தலம். பெருமாள் ஆமருவியப்பன்; தாயார் பெயர் செங்கமலவல்லி. திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களில் இந்தத் தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் (1588-1627, 1854, 2066, 2077, 3775, 3815).

வேறு பெருமாள் கோயில்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று இங்குண்டு. கோயில் கருவறையில் மூலவ மூர்த்திக்கு வலப்பக்கம் பக்த ராஜா பிரகலாதன் கூப்பிய கரங்களுடன் நிற்கும் சிலை உள்ளது. மறுபுறத்தில் மார்க்கண்டேய மகரிஷி உள்ளார். கவிச்சக்கரவர்த்தி பிறப்பதற்கு முன்னமே தொன்மையான அக்கோயில் அங்கிருந்தது. அவர் அங்கு ஆண்டவனை அர்ச்சித்துள்ளார்.

இரணியகசிபு என்றொரு அரக்கர் கோமான். தவ வலிமையும் வர வலிமையும் கொண்டவன். பூவுலகை மட்டுமன்றி தேவர்களின் உலகையும் வென்றவன். தேவர்களை ஏவலாளியாகக் கொண்டான். தன்னையே இறையென யாவரும் துதிக்க வேண்டும் என்றான்.

ஆனால் அவனது மகனோ வணக்கத்துக்குரியவர் விஷ்ணுவே என்று கூற, பக்த ராஜாவான பிரகலாதனை அனுகரிக்கவும் தேவர்களின் துன்பம் தீரவும் கோளரி கம்பத்தில் பிறந்து அரக்கர் கோவை கிழித்தெறிந்தார். புராணங்கள் கூறும் இச்செய்தி தேரெழுந்தூர் கோயிலில் சிறப்பாக உள்ளது.

மாறியது ஏன்?

'மூவர் ஆனவர் தம்முள் முந்திய
நாவின் உரையின்படி'

என்று மகரிஷி வான்மீகியின் அடியொட்டி தமிழில் இராமாவதாரம் இயற்றியதாக கவிச்சக்கரவர்த்தி சொன்னாலும் அதில் இல்லாத இரணியன் குறித்த விவரத்தை நுழைத்தது ஏன்?

இந்தக் கேள்வி, கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அறிஞர்கள் முன்பு அரங்கேற்றம் செய்தபோது அவரிடம் கேட்கப்பட்டதுடன், ஏதேனும் தெய்வீக சமிக்கை வெளிப்பட்டால் அன்றி இதனை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டனர்.

எனவே அவர் இரணியன் வதைப் படலத்தை அக்கோயிலில் உள்ள மேட்டழகிய சிங்கர் (நரசிம்மர்) சன்னிதியில் பாட, சிங்கவேளும் ‘ஆஹா….’ என்று தலையசைத்து கரம் தூக்கி ஆசீர்வதித்தார். அது கண்டு அறிஞர்கள் அதிசயித்து, படலத்தை அங்கீகரித்தனர்.

அந்த அறிஞர்கள் குழுவில் வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இவை செவிவழிக் கதைகள்;  சீரிய சான்றுகள் ஏதுமில்லை.

வேதங்களில் விஷ்ணு பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் நரசிம்மர் பற்றி பேசப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சதபதப் பிரமாணத்தில் வரும் நமூசி கதையே இதற்கு முன்னோடி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ரிக் வேதத்தில் விஷ்ணு,  ‘பயங்கரமான, மலையில் ஒளிந்து, திரியும் வன விலங்கு’ என்று ஓரிடத்தில் அழைக்கப்படுகிறார். மகாபாரதத்தில் நரசிம்மர் (பாதி ஸ்லோகத்தில்) சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறார். ஆனால் கோளரியாக அவர் தெளிவாக உருப்பெறுவது புராணங்களில் தான்.

அக்னி புராணம், வாயு புராணம், பிரம்மாண்ட புராணங்களில் இரணியகசிபு வதைக்கப்படுவது உள்ளது; ஆனால் பிரகலாதன் இல்லை. ஸ்கந்த புராணம், பாகவத புராணம், விஷ்ணு புராணங்களில் பிரகலாதன் வருகிறான்.

புராணங்களில் பிரகலாதன் தோற்றம்

டெபரா ஸாய்ஃபர் எழுதியுள்ள நரசிம்மர் –  வாமனர் பற்றிய புனைவுகள் (Myths of Narasimha and Vamana) என்ற நூலில் விஷ்ணு புராணத்தில் தான் பிரகலாத சரித்திரம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பரீக்ஷித்து மகாராஜா ஏழு நாளில் பாம்பு தீண்டி சாவான் என்று சாபம் பெற, என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறான். அவனுக்கு சுக மகரிஷி விஷ்ணு பக்தியைப் போதிக்கிறார். ஆனால் மகாராஜாவோ அதில் நம்பிக்கை கொள்ள முடியாமல் உள்ளம் தடுமாறுகிறார். ‘தடுமாறியவன்’ பக்தியில் நிலைபெற பிரகலாதன் பற்றிச் சொல்கிறார் மகரிஷி என்கிறது பாகவத புராணம்.

மேற்கண்ட குறிப்புகள் தமிழ் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் 2015-இல் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களிடையே நிகழ்த்திய உரையில் தரப்பட்டுள்ளது.

ஆழ்வார்களின் அருந்தமிழ் பிரபந்தங்களிலும் புராணங்களிலும் உள்ள பக்த ராஜாவின் சரித்திரத்தை இன்னொரு பக்தரான வீடணன் வாயிலாக கம்ப நாட்டாழ்வார் வெளிப்படுகிறார்.

கம்ப ராமாயண அமைப்பு

கம்ப ராமாயணத்தில் 123 படலங்கள் உள்ளன அதில் 16 படலங்கள் வதைப்படலங்கள். அதில் இராமாயண நிகழ்வுகளில் சேராத ஒன்று இரணியன் வதைப் படலம்.

இராமாயணத்தில் எங்கெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி பற்றிய ஆலோசனை நடக்கிறதோ அதற்கு மந்திரப் படலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காட்டாக, ராமபிரானுக்கு முடிசூட்டுவது பற்றி தயரத மகாராஜா ஆலோசனை செய்ய சபையைக் கூட்டுகிறார். அதற்கு மந்திரப் படலம் என்று பெயர்.

சுவாமி இலங்கையை எரியூட்டிச் சென்ற பிறகு என்ன செய்யலாமென ஆலோசனை சபையைக் கூட்ட, அது இராவணன் மந்திரப் படலம். அந்த ஆலோசனை சபையில் தான் வீடணன் முன்னொரு காலத்தில் நடந்த இரணியன் வீழ்ச்சியைக் கூறி இலங்கேஸ்வரனை எச்சரிக்கிறார்.

முன்னொரு காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கும் -பிளாஷ்பேக்- நினைவலைக் காட்சிகள் ஏற்கனவே கம்ப ராமாயணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

திருஅவதாரம் படலத்தில் குரு வசிஷ்டர், முன்னொரு காலத்தில் அயனும் அரனும் அமரர் புடைசூழ சேஷசாயிடம் முறையிட, தானே தயரதன் தனயனாக அவதரிப்பேன் என்று கூறியதை, நினைத்துப் பார்க்கிறார்.

நகர் நீங்கு படலத்தில் ராமபிரான் பிரிவுக்குக் காரணம் தான் ரிஷிகுமாரனை அறியாமல் கொன்றதால் கிடைத்த சாபத்தை நினைத்து வாய்விட்டுப் புலம்பும் காட்சி வருகிறது. அதுபோல வீடணன் கூறுவதை அமைக்காமல் தனிப் படலமாக இரணியன் வதைப் படலம் அமைந்துள்ளது.

இராவணன் மந்திரப் படலம் 118 பாடல்களைக் கொண்டது. இரணியன் வதைப் படலம் 176 பாடல்களைக் கொண்டது. இரண்டும் ஒரே படலமாக இருந்தால் மொத்தம் 294 பாடல்கள் கொண்ட நீண்ட படலமாக இருந்திருக்கும். இவ்வாறு நீண்டதாக இருக்க வேண்டாம் என நினைத்து பிரித்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அதுவும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. காரணம், நாகபாசப் படலம் 300 பாடல்கள் கொண்டது. மீட்சிப் படலத்தில் 338 பாடல்கள் உள்ளன. கும்பகருணன் வதைப் படலம் 360 பாடல்கள் கொண்டது. எனவே நீளம் எனக் கருதி அதை நறுக்கி இருக்க வாய்ப்பில்லை.

பேலூர் / ஹளேபீடு நரசிம்மர்

வீடணன் யார்?

வீடணன் ஏதோ நான்கைந்து நல்ல நூல்களைப் படித்துவிட்டு உபதேசம் செய்யக் கிளம்பிய கோழை என்று கருதுகின்றனர் சிலர். அவன் ஒரு துரோகி என்று நிறுவுவதில் ஏறத்தாழ வெற்றி கண்டு விட்டனர் திராவிட மேடைப் பேச்சாளர்கள். (அவர்களைப் பொருத்த வரை பிராமணரான இராவணன், திராவிட அரசன்!) ஆனால்…

தன் சகோதரர்களான இராவணன், கும்பகருணனைப் போல தவ வலிமையும் வர வலிமையும் பெற்றவர் அவர். ராமபிரான் வீடணனை ‘நீதியோன்’ என்று கூறுவதை நீங்கள் ஏற்காவிட்டாலும் கும்பகருணன் கூறுவதைப் பாருங்கள்.

‘நீதியும் தருமமும்நின்ற நிலைமையும்
புலமை தானும்
ஆதிஅம் கடவுளாலே அருந்தவம்
ஆற்றிப் பெற்றாய்
வேதியர் தேவன் சொல்லால் வினைவு
இலா ஆயுப் பெற்றாய்
....... தக்கோய்’

என்கிறான்.

வீடணன் அருந்தவம் புரிந்து பிரம்ம தேவனிடமிருந்தே கற்றவன். நீதி, தர்மத்தின்பால் நிற்கும் அறிவுடையவன். அதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டவன் என்கிறான்.

இந்திரஜித் என புகழப்பட்ட மேகநாதன் தன் சித்தப்பன் வீடணனை இழிவுபடுத்தியபோது தன்னைப் பற்றி அவரே கூறுவது…

‘அறம் துணை ஆவது அல்லால்
  அருநரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப்
  பழியோடு வாழ மாட்டேன்.
துறந்திலேன் மெய்மை, எய்தும்
  பொய்மையே துறப்பது அல்லால்’

‘உண்டிலன் நரவம்; பொய்மை
  உரைத்திலேன்; வலியால் என்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம்
  குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால், உண்டோ?
  நீயிரும் காண்டிர் அன்றோ’

அறத்தின் பக்கம்தான் நான் இருப்பேன். நரகத்திற்கு வழிவகுக்கும் பாவத்திற்கு நான் துணையாக மாட்டேன்; பாவம் செய்து வரும் பழியுடன் நான் வாழ மாட்டேன்; உண்மையின் வழியிலிருந்து விலக மாட்டேன்; பொய்யிலிருந்து விலகியே இருப்பேன்.

அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் நான் மது அருந்தியது இல்லை; பொய் பேசியது இல்லை; வலிமையால் மற்றவர்களிடம் இருந்து எதையும் பறித்துக் கொண்டவன் இல்லை; வஞ்சக எண்ணம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. என் நடத்தையில் யாரும் குற்றம் கூறியதில்லை – என்று கூறுகிறார்.

அப்படிப்பட்ட வீடணன் மிகவும் தவ வலிமையும் வர வல்லமையும் பெற்ற இராவணனுக்கு ஏதோ சாதாரணமானவரை உதாரணமாகச் சொல்வாரா?

இரணியன் பெருமை

இரணியன் பற்றி இராவணனுக்கு வீடணன் சொல்லும் முதல் வார்த்தையே  ‘அவன் உன்னைப் போன்றவன் அல்லன்’ என்பதே. அதாவது உன்னை விட பல மடங்கு உயர்ந்தவன்.

உன்னைப்போல மனிதர்கள், விலங்குகளைத் தவிர்த்த, குறைவுபட்ட வரம் பெற்றவன் அல்லன். தவ வலிமையும் முழுமையான வர வலிமையும் பெற்றவன். அதுமட்டுமன்றி புலன்களை வென்றவன். உன்னைப் போல காமவயப்பட்டவன் இல்லை.

உன்னைப் பார்த்து தேவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் அவனோ தேவர்களை வென்றவன் மட்டுமல்ல, அவர்கள் பணியையும் தன்வசப்படுத்திக் கொண்டவன். அதாவது யாகங்களில் அளிக்கும் அவிர் பாகத்தை ஏற்பது அந்தந்த தேவர்கள் அல்லர். இவனே அதை ஏற்பவன்.

‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற வேத வார்த்தைக்கு இணங்க, தானே இறைவன் என்பதை உணர்ந்தவன். எனவே அனைவரும் தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என ஆணையிட்டு நடைமுறைப்படுத்தினான். அனைவரும் அதை ஏற்றனர், அவன் மகன் பிரகலாதனைத் தவிர.

வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் உரியவன் நாராயணமூர்த்தி ஒருவனே என்பதில் உறுதியாக இருந்தார் பக்த ராஜாவான பிரகலாதன். இரணியன் தன் மகனை ‘இரண்யாய நமஹ’ என்று கூற ஆசை காட்டினான், அச்சுறுத்தினான், ஒரு கட்டத்தில் கொல்லவே துணிந்தான். அனைத்தையும் அவன் மகன் தன் பக்தியால் வென்று நின்றான்.

தன்னைவிட உயர்ந்தவர் யார்? என இரணியன் கேட்க ‘அரி’ என்றான் மைந்தன். எங்கே இருக்கிறான் அவன்? எனக் கேட்க

‘சாணிலும் உளன் ஒரு தன்மை
  அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக்
  குன்றினும் உளன்; நீ சொன்ன
சொல்லினும் உளன்; இத்தன்மை
  காணுதி விரைவின்’ என்றான்  

மிகச்சிறிய அணுவை நூறு பிரிவாகப் பிரித்தால் அதில் ஒன்றான கோணிலிலும் இருக்கிறான். இமயமலை என பெரிதிலும் இருக்கிறான். நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை என்றான் மைந்தன்.

அப்படியானால் இங்குள்ள ‘கம்பத்தின் வழியே காணக் காட்டுதி!’ என்று ஏளனச் சிரிப்போடு இடி விழுந்ததைப் போல அங்கிருந்த தூணை ஓங்கி அறைந்தான். அறைந்த அக்கணமே “திசை திறந்து, அண்டம் சீறச் சிரித்தது செங்கண் சீயம்” அண்டங்கள் எல்லாம் அதிரும்படி தூணிலிருந்து பிறந்தான் கோளரி.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பம்

வதையும் வரமும்

இரணியன் வாளை உருவி கோளரி மேல் பாய மூண்டது போர். முடிவில் அவன் வாங்கிய வரங்களுக்கு இணங்க வதைத்தான் சிங்கவேள். பிறகு அரக்கர் குலத்தில் பிறந்த தன் பக்தனை பார்த்து,

‘கொல்லோம் இனி உன் குலத்தாரை குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்,
நல்லேம், உனக்கு எம்மை: நாணாமல், நாம் செய்வது
ஒல்லை உளதேல், இயம்புதிபால்’

என்றுரைத்தான்.

எல்லையில்லாத குற்றங்களை உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் செய்தாலும் உன் பொருட்டு அவர்களை மன்னிப்போம்; தண்டிக்க மாட்டோம். என்னை வணங்கினால் கிடைக்கும் பலன்கள், உன்னை வணங்கினாலே கிடைக்கும் என்று அருளினார்.

( ‘அகம் பிரம்மாஸ்மி’ என்று தன்னுள் உணர்ந்தால் தவறில்லை. ஆனால் அதை ஊர் முழுவதும் சொல்லி தன்னை வணங்க வேண்டுமென நினைத்தால் இந்த கதிதான் (அழிவுதான்) ஏற்படும். இரணியன் வதைப் படலம் அத்வைதிகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று தன்னுடைய தந்தை பக்ஷிராஜன் ஐயங்கார் கூறியுள்ளதாக, தமிழ் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் 2015-இல் சொல்வனத்தில் எழுதியுள்ளார்)

பிறகு உனக்கு வேண்டிய வரம் கேள் தருகிறேன் எனக் கூற, பிரகலாதனோ,

‘முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுகுவெனல்,
என்பு பெறாத இழிபிறவி எய்தினும், நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்’

என்று வேண்டினான்.

‘முன்பு யான்பெற்ற பேறுகளே எல்லையற்றதாக உள்ளது. இன்னும் வரம் கேள் என்றால் எதைக் கேட்பது? அப்படிப் பெற வேண்டிய ஒன்று இருக்கிறது என்றால், அது எலும்புகளே இல்லாத புழுவாக நான் இழிவான பிறவி பெற்றாலும், அப்போதும் உன்மீது மாறாத அன்பு இருக்கும்படியான வரத்தை தருவாய்’ என்று பணிவுடன் பிரகலாதன் வேண்டினார்.

இதை ராவணனுக்கு எடுத்துக் கூறிய வீடணன், சீதையை விடுதலை செய்து ராமனைப் பணிக என்றார். பக்த பிரகலாதன் சரித்திரம், இன்னொரு பக்தனான வீடணன் வாயிலாக வெளிப்படுகிறது. தசமுகனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அவன் புரிந்து கொள்ளவில்லை; ‘பிறன்மனை விழைவோன் குடியோடு கெடும்’ என்பதற்குச்  சான்றானான்.

அழகர்கோயில் சிற்பம்

இப்படித் தொகுக்கலாம்…  

கலைமாமணி புதுவை சித்தன் கூறியபடி கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் வைணவப் பற்றையும் தன் பெயரையும் உணர்துவதற்காக இரணியன் வதைப் படலத்தை எழுதியிருக்கலாம்.

நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் கருத்துப்படி, பிரகலாதனுடன் உள்ள ஆமருவியப்பனை வணங்கிய பழக்கத்தால் தன் மனதில் இடம் பிடித்த பிரகலாதனை தன் காப்பியத்தில் இடம்பெற செய்திருக்கலாம்.

எழுத்தாளர் கிருஷ்ணனின் தந்தை பக்ஷிராஜ ஐயங்கார் சொன்னதைப் போல, அத்வைதிகளுக்கு எச்சரிக்கையையும் விஷிட்டாத்துவத்தின் உயர்வையும் காட்ட வந்த படலமாகக் கொள்ளலாம்.

இறை நம்பிக்கை கொள்வதில் தடுமாறிய பரீக்ஷித்துக்கு தடுமாற்றத்தைப் போக்கியதைப் போல சாதாரண மனிதர்களான நமக்கு இறை பக்தியை ஊட்ட வந்த படலமாக இதைக் காணலாம்.

இராவணனைப் பார்த்து ராமபிரானிடம் சரணடைவாய் என்று வீடணன் கூறினார். நீ சரணடையாவிட்டாலும் நான் சரண் அடைவது உறுதி என்று தான் செய்யப் போவதை முன்னதாகவே மறைமுகமாக உணர்த்தியதாகவும் கருதலாம்.

வைணவக் கொள்கையான இறைவனிடம் சரணாகதி செய்தல் என்பதன் உயர்வைக் காட்டும் – சரணாகதி ஏற்றம் கூறும் – கம்ப ராமாயணத்தில் இரணியன் வதைப் படலம் பொருத்தமானதே.

சிங்கமதாயுவணன் திறலாக முன்கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானை
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே. (1598)


மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைப் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (1731)


    -திருமங்கை ஆழ்வார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s