நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்

-சேக்கிழான்

மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன….

தமிழின் மொழி வளர்ச்சியில் இன்றியமையாத இடம் பிடித்தவை, நிகண்டுகள். சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையே நிகண்டுகள் ஆகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் முற்காலத்தில் ‘உரிச்சொற்பனுவல்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டன

இக்காலத்தில் சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானவை நிகண்டுகள்.

நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடியாக அமைந்தது தொல்காப்பியமே. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில், சில அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார்.

உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார் அவர்.

“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா,
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன

-என்கிறார் தொல்காப்பியர். இதன் பொருள்: அர்த்தம் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம் – என்பதாகும்.

மரபியலில், இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போலத் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

முற்கால நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன. பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கையும் இணைத்துக் கொண்டுள்ளன.

நிகண்டுகளில் பழமையானது ‘திவாகர நிகண்டு’. திவாகர முனிவர் இயற்றிய இந்நூல் ‘சேந்தன் திவாகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதன் காலம், பொ.யு.பி. எட்டாம் நூற்றாண்டு. இதில் 12 தொகுதிகளும் 9,500 சொற்களும் உள்ளன.

அடுத்து பிங்கல முனிவரால் பொ.யு.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, 15,800 சொற்கள் கொண்ட பிங்கல நிகண்டு குறிப்பிடத் தக்கது. இந்த நிகண்டு ஒன்றுவிட்ட அடுத்த எழுத்தான எதுகை அடிப்படையில் சொற்களை அடுக்கிக்கொண்டு சொல்லின் பொருளை விளக்குகிறது.

பொ.யு.பி. 14ஆம் நூற்றாண்டில் காங்கேயர் என்பவரால் தொகுக்கப்பட்ட உரிச்சொல் நிகண்டு, 12 பிரிவுகளைக் கொண்டது; 287 சூத்திரங்களால் 3200 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.

பொ.யு.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதர முனிவர் என்னும் சைவ சமயத்தவரால் இயற்றப்பட்டது கயாதர நிகண்டு. கட்டளைக் கலித்துறையால் இயற்றப் பட்ட இந் நிகண்டு 11 பிரிவுகளைக் கொண்டது. இது 566 சூத்திரங்களால் 10,500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.

அடுத்து வருவது சூடாமணி நிகண்டு. இந்நூல் பொ.யு.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இது 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

அகராதி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல், பொ.யு.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரேவண சித்தர் என்ற வீர சைவரால் இயற்றப்பட்டது. இந்நூல் 10 பிரிவுகளாக, நூற்பாவால் இயற்றப்பட்ட 3,334 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது. இதில் சொற்கள் அகரவரிசையில் அமைந்திருப்பது சிறப்பு. இதுவே அகரவரிசையில் அமைந்த முதல் அகராதி ஆகும்.

அடுத்ததாக, வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டண்டைன் ஜோசப் (1680- 1747) என்ற கிறிஸ்தவப் பாதிரியாரால் இயற்றப்பட்ட சதுரகராதி, அகராதி உருவாக்கத்தின் அடுத்த வளர்ச்சியாகும். இந்நூல், பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்லும், தொகை அகராதியில் இணைந்துவரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன.

திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் உள்ள பொருளடக்கத்தை வீரமாமுனிவர் சதுரகராதியில் அகர வரிசைப்படுத்தியுள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளிலிருந்து முன்னேறி, அகர வரிசையில் எளிதாகப் பொருள் காண வீரமாமுனிவர் வழிசெய்தார். சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12,000 சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது சதுரகராதி. 1732-இல் முதல்முறை வெளியானதிலிருந்து சதுரகராதி பல முறை பதிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் அருமருந்தைய தேசிகர் தொகுத்த அரும்பொருள் விளக்க நிகண்டு (1763) வெளியானது.

அடுத்து, சாமிநாத கவிராயர் தொகுத்த பொதிகை நிகண்டு, சிதம்பரக் கவிராயர் தொகுத்த உசிதசூடாமணி, சுப்பிரமணிய பாரதி (இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழத்தவர்) தொகுத்த பொருள்தொகை நிகண்டு, ஈஸ்வர பாரதி தொகுத்த பல்பொருட் சூடாமணி, வேதகிரி முதலியார் தொகுத்த தொகைப்பெயர் விளக்கம் (1849), சிவசுப்பிரமணிய கவிராயர் தொகுத்த நாமதீப நிகண்டு, அரசஞ்சண்முகனார் தொகுத்த நவமணிக் காரிகை நிகண்டு (19ஆம் நூற்றாண்டு) உள்ளிட்ட பல நூல்கள் வரிசையாக வெளியாகின.

உரைநடை மேம்பாடும், அச்சு இயந்திரங்களின் அவருகையும் 20ஆம் நூற்றாண்டில் புதிய வடிவிலான ‘அகரமுதலி’ எனப்படும் அகராதிகளுக்கு வழியமைத்தன. 

இதுவரை, நா.கதிரவேற் பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி (1901), ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910), கு.கதிரவேற் பிள்ளையின் தமிழ்ச் சொல் அகராதி (1910), சு.சுப்பிரமணிய சாஸ்திரியின் சொற்பொருள் விளக்கம் (1924), சி.கிருஷ்ணசாமி பிள்ளையின் நவீன தமிழ் அகராதி (1935), ஐயம்பெருமாள் கோணாரின் கோணார் தமிழ் அகராதி (1954), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கழகத் தமிழ் அகராதி (1964), லிப்கோ தமிழ் அகராதி (1966) உள்பட நூற்றுக்கு மேற்பட்ட அகராதிகள் பலரால் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 4,000 பக்கங்களையும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சொற்களையும் கொண்டு, 1912 முதல் 1936 வரை பகுதி பகுதியாக வெளியான சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிடத்தக்கது.

மிக அண்மையில் வெளியான அகராதியாக க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (1992) திகழ்கிறது. இந்தஅகராதிக் குழுத் தலைவராக முனைவர் இ.அண்ணாமலையும், முதன்மை ஆசிரியராக முனைவர் பா.ரா.சுப்பிரமணியனும், நிர்வாக ஆசிரியராக க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனும் முக்கிய பணியாற்றினர்.

மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன. அந்த வகையில், இவற்றைப் படைத்தவர்களை தமிழன்னையின் காவலர்கள் எனலாம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s