இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்

-சேக்கிழான்

நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.
அகத்தியர்

ஒரு மொழியின் கட்டுக்கோப்புக்கும், நெடிய வரலாற்றுக்கும் சான்றாக விளங்குவது அதன் இலக்கணமே. மொழியில் தோன்றும் இலக்கியங்களில் இருந்து சாறாக எடுத்துப் பிழியப்பட்ட மொழியின் கட்டமைப்பே இலக்கணம் என்கிறது நன்னூல். அந்த வகையில் உலகின் மூத்த மொழியான தமிழின் இலக்கண வரலாறும் மிகத் தொன்மையுடைத்ததாகவே இருக்கிறது.

இன்று நமக்குக் கிடைக்கும் மூத்த தமிழ் இலக்கியங்களின் வயது சுமார் 2,500 ஆண்டுகள். அது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலமாகும். 3,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து 2,000 ஆண்டுகளுக்கு முன் வரையிலான காலகட்டமே சங்க காலம் என்று வரையறுக்கப்படுகிறது. இதன் காலத்தை இன்னும் முந்தைய காலமாகக் கொள்வாரும் உளர்.

எப்படி வேண்டுமானாலும் மொழியைப் பயன்படுத்த நமக்கு அனுமதி கிடையாது. அதற்கென ஒரு ராஜபாட்டையை நமது முன்னோர் அமைத்துச் சென்றிருக்கிறார்கள். அதில்தான் நாம் நடைபயில வேண்டும். அவையே இலக்கண நூல்கள்.

நமக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். ஆனால், அதற்கு முன்னரே பேரகத்தியம் என்ற இலக்கண நூல் தமிழ்கூறு நல்லுலகில் சிறந்து விளங்கி இருக்கிறது. அதன் காலம் பொ.யு.மு. 500 காலகட்டமாக இருக்கலாம் என்று வரையறுக்கப்படுகிறது.

அகத்தியர்:

சப்தரிஷிகளுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் முதலாமவருமான குறுமுனி அகத்தியரே, தமிழ் இலக்கணத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

அவர் இயற்றிய பல நூல்களுள் ‘பேரகத்தியம்’ 12,000 நூற்பாக்கள் கொண்டதாக இருந்துள்ளது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல், பார்ப்பணவியல், சோதிடவியல் என 8 இயல்களில் இந்த இலக்கண நூல் எழுதப்பட்டதாக, பிற்கால நூல்களின் மேற்கோள்களில் இருந்து தெரிய வருகிறது. இந்நூலின் பகுதிகள் இப்போது கிடைக்கவில்லை.

அதங்கோட்டாசான், தொல்காப்பியன், காக்கைப்பாடினியன், பனம்பாரனன் உள்பட பன்னிரு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்த குருநாதராக அகத்தியர் வணங்கப்படுகிறார். இவரது மனைவி லோபமுத்திரை. கடல் கொண்ட கபாடபுரம் தமிழ்ச்சங்கத்தில் தலைமை ஆசானாக வீற்றிருந்து தமிழ் வளர்த்த குறுமுனி இவர்.

தொல்காப்பியர்:

அகத்தியரின் முதன்மை மாணவரான தொல்காப்பியர் அளித்ததே ‘தொல்காப்பியம்’. குமரி நிலத்தைச் சேர்ந்த இவரது காலம் பொ.யு.மு. 711 என்று செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வரையறுத்துள்ளது.

சமஸ்கிருத இலக்கண நூலான ஐந்திறம் அறிந்த தொல்காப்பியன் என்று உரையாசிரியர்களால் இவர் போற்றப்படுகிறார். எழுத்து, சொல், பொருள் என்ற 3 அதிகாரங்களில் தலா 9 இயல்களுடன் (மொத்தம் 27 இயல்கள்), 1,602 பாக்களுடன் தொல்காப்பியத்தை இவர் படைத்துள்ளார்.

இவரது நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோர் உரைவிளக்கம் அளித்துள்ளனர். எழுத்து, சொல் ஆகியவை பிறப்பதன் இலக்கணத்தையும், அவை புணரும் வகைகளையும் மிகவும் அறிவியல்பூர்வமாக உரைத்துள்ளார் தொல்காப்பியர். அக்கால வாழ்க்கை முறையை அறிய இவரது பொருளதிகாரம் அடிப்படையாக உள்ளது.

பொருள் இலக்கண ஆசிரியர்கள்:

தொல்காப்பியரின் பொருள் இலக்கணத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய அகத்திணை இயல்களின் விரிவாக்கமாக ‘இறையனார் அகப்பொருள்’ விளங்குகிறது. இதனை சிவனே ‘இறையனார்’ என்ற பெயரில் எழுதியதாக நம்பிக்கை உண்டு. இதற்கு உரை எழுதிய நக்கீரர், இறையனார் இறைவன் சிவனே என்கிறார். திருவிளையாடல் புராணத்தில் வரும் சிவனின் திருவிளையாடலில் (தருமி கதை) தொடர்புடைய பெயர் இது. இந்நூல் 60 நூற்பாக்கள் கொண்டது. ஆய்வாளர்கள் இதனை பொ.யு.பி. ஏழாம் நூற்றாண்டு நூலாக வகைப்படுத்துகின்றனர்.

பொ.யு.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாற்கவிராச நம்பி எழுதிய ‘நம்பி அகப்பொருள்’ நூலும் குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியர் கூறும் பொருளதிகாரத்தில் புறத்திணையியல் குறித்து மட்டுமே தனிநூலாக விளக்கி எழுதப்பட்டது ‘புறப்பொருள் வெண்பாமாலை’. இதனை சேர அரசு வம்சத்தைச் சேர்ந்த ஐயாரிதனார் எழுதி உள்ளார். இவரது காலம் பொ.யு.பி. ஏழாம் நூற்றாண்டு. புறத்திணைகள் 12 குறித்து 12 படலங்களில் தனது புறப்பொருள் இலக்கணத்தை அளித்திருக்கிறார் இவர்.

யாப்பிலக்கண நூல்கள்:

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் கூறும் செய்யுளியலின் விரிவாக பல இலக்கண நூல்கள் எழுந்தன. அவற்றுள் ‘யாப்பெருங்கலக் காரிகை’ முதன்மையானது. பாண்டிய நாட்டில் பொ.யு.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமுதசாகரர் என்ற சமணர் இந்நூலை எழுதி உள்ளார். உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்ற 3 அதிகாரங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இதே காலத்தில் புத்தமித்திரர் என்ற பௌத்தப் புலவரால் எழுதப்பட்ட ‘வீர சோழியம்’ நூலும் மொழி வரலாற்றில் முக்கியமானது. சமஸ்கிருத மொழியின் கலப்பால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களுக்குத் தக்கவாறு புதிய இலக்கண விதிகளை அளித்தவர் இவர்.

கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை அரங்கேற்றியபோது, அதன் கடவுள் வாழ்த்தில் வந்த ‘திகட சக்கர செம்முக மைந்துளான்’ என்ற வரிக்கு புலவர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ‘திகழ் + சக்கரம்= திகடசக்கரம்’ என்று வரும் என்று வீரசோழியத்தை இறைவனே சான்றாதாரம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

அணி இலக்கண நூல்கள்:

மொழிக்கு அழகு அணிகளே. இதனை பொருளதிகாரத்தில் உவமயியலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இதனை விரிவுபடுத்தி ‘தண்டி அலங்காரம்’ என்ற நூல் எழுந்தது. பொ.யு.பி. 946- 1070 காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்ற புலவரால் எழுதப்பட்ட நூல் இது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட காவியதர்ஷம் என்ற நூலை முதல்நூலாகக் கொண்டு படைக்கப்பட்ட இந்த நூலில், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய உட்பிரிவுகள் உண்டு. சித்திரக்கவி குறித்தும் கூறி இருக்கிறார் இவர்.

மேலும் அவிநயம், சங்க யாப்பு, இந்திரகாளியம், தமிழ்நெறிவிளக்கம், கல்லாடம் உள்ளிட்ட பல இலக்கண நூல்கள் தொடர்ந்து தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்துள்ள கணக்கின்படி 80-க்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன.

சொல் இலக்கண நூல்கள்

தொல்காப்பியர் கூறும் சொல், எழுத்து அதிகாரங்களை முதன்மைப் பொருளாகக் கொண்டு, தொல்காப்பியம் இளம்பூரணர் உரையை முதல்நூலாகக் கொண்டு இயற்றப்பட்டது ‘நன்னூல்’. இன்று நாம் பயன்படுத்தும் மொழியழகின் அண்மைக்கால அடிப்படை நூல் இதுவே.

பொ.யு.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கொங்கு மண்டலத்தில் (ஈரோடு அருகில் உள்ள சீனாபுரம்) வாழ்ந்த பவணந்தி முனிவர் என்ற சமணரால் எழுதப்பட்ட நூல் இது. எழுத்து, சொல் என்ற இரு அதிகாரங்களில் தலா 5 இயல்களில் 462 நூற்பாக்களால் ஆனது நன்னூல். பள்ளிப் பாடங்களில் கற்பிக்கப்படும் அடிப்படை இலக்கண விதிகள் நன்னூல் நூற்பாக்களே.

பொ.யு.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘நேமிதாதம்’ குணவீர பண்டிதர் என்ற சமணப்புலவரால் எழுதப்பட்ட சொல்லிலக்கண நூல்.

இவ்வாறாக, காலந்தோறும் தமிழ் மொழி தன்னை ஒப்பனை செய்துகொள்ளும் வகையில் புதிய இலக்கண நூல்களின் பெரும் படையை உருவாக்கி உள்ளது. பொ.யு.பி. 19ஆம் நூற்றாண்டிலும்கூட ‘முத்துவீரியம், சாமிநாதம்’ போன்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இவை தமிழின் அமரத்துவ நிலையைக் காட்டுகின்றன.

நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.

சுமார் 3,000 ஆண்டுகால இலக்கணப் பாரம்பரியத்தை உலகில் கொண்ட மொழிகள் இரண்டு மட்டுமே. ஒன்று வடமொழியான சமஸ்கிருதம். மற்றொன்று நமது தாய்மொழியான தமிழ். எனவே இலக்கண நெறி உணர்ந்து தமிழை மேலும் நேசிப்போம்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s