பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!

-சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…

ஆங்கிலத்தில் Time tested என்பார்கள். அதாவது எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வகையில் செயல்பட்டது; காலத்தின் ஓட்டத்தில் காலமாகிப் போகாமல் இருப்பது; காலத்தையும் கடந்து நிற்கும் நிலையை அவ்வாறு கூறுவார்கள்.

காலத்தைக் கடந்து நிற்பது இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும். அந்த விதத்தில் ஆன்மிக, சமய, கல்வி, ஆரோக்கிய, சமுதாய, பண்பாடு மற்றும் தேசியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ராமகிருஷ்ண மிஷன் செம்மையாக 125 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை.

சுவாமி விவேகானந்தரின் குருவான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக அனுபவங்கள் மற்றும் அவரது பரந்துபட்ட சிந்தனைகளை அணுவணுவாக உணர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். அந்த அனுபவச் சிந்தனைகளோடு மக்களின் நலனுக்காக, தொண்டையும் துறவையும் அவற்றுடன் இணைத்து சுவாமி விவேகானந்தர் 1897, மே முதல் தேதி ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கினார். இறைவன் விரும்பி, அதன்படி ஒரு துறவி நிறுவி, மக்களுக்கு அருவியாக இறையருளைப் பொழிவது ராமகிருஷ்ண மிஷன் ஆகும்.

பிறரது நன்மைக்காகப் பாடுபடும் உழைப்பாளர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக ராமகிருஷ்ண மிஷன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே, ராமகிருஷ்ண மிஷனை சுவாமிஜி தோற்றுவித்தார் போலும்!

நமது நாட்டில், சமுதாயத்தில், இல்லங்களில், உள்ளங்களில் நாம் எவ்வாறு உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்

சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவை பற்றி 1892 -ஆம் வருட ஆரம்பத்தில் ‘தி இந்து’ நாளிதழில் விளம்பரம் வெளிவந்தது. அதனுடனே

“இந்து மதத்தைப் புனரமைப்பது சாத்தியமே இல்லை. அது உயிர் இல்லாமல் கிடக்கிறது. அதன் காலம் முடிந்துவிட்டது” என்றெல்லாம்  பத்திரிகையில் வாதப் பிரதிவாதங்கள் வந்து கொண்டிருந்தன.

சுவாமிஜி ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பிப்பதற்கு முன்பு உலக அரங்கில் 1893- இல் சனாதன இந்து தர்மத்தின் மேன்மையைப் பறைசாற்றினார்.  “அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே” என விளித்து, உலக மக்களை ஆன்மிகத்தால் ஒருங்கிணைத்தார். அதன்பின் வேற்று நாட்டினர் மட்டுமல்ல, வேற்று மதத்தினர்கூட இந்தியாவை கௌரவமாகக் காண ஆரம்பித்தனர். நம் நாட்டு மக்கள் அப்போதுதான் சுயமதிப்பு பெற்றனர்.

பின்னர் 1897 -இல் விவேகானந்தர் தாய்நாட்டிற்குத் திரும்பினார். நாடு இழந்து விட்டிருந்த மகோன்னதத்தை மீட்பதற்காகப் பாடுபட்டார். இந்தியாவின் பிரச்னைகளைத் தமதாகவே புரிந்து கொண்டார். அதோடு பாரதத்தின் ஒவ்வொரு மகிமையையும் தமதாகவே கண்டு சுவாமிஜி உணர்ந்தார்.

சுவாமிஜி அன்றைய இந்திய மக்களின் சிந்தனைகளின் அவலத்தைக் கண்டார். புதையலுக்கு மேல் நின்ற பிச்சைக்காரனின் நிலையில் நம் மக்கள் இருந்ததைக் கண்டு வாடினார்; சாடினார்;  வெகுண்டெழுந்தார்; முடிவில் நாட்டை நிமிர்த்தினார்.

அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் மத்தாயிடம் கூறினார்: “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரிலிருந்து நவஇந்தியா ஆரம்பிக்கிறது”.

சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியாவை அதாவது விழிப்புற்ற – பிரபுத்த பாரதம் குறைகள் இல்லாமல் நிறைகளோடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கொழும்பு முதல் அல்மோரா வரை தமது சிந்தனைகளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஆங்காங்கே தூவினார். சுவாமிஜி  தரை மார்க்கமாகப் பயணித்த ஊர்களிலிருந்து அவர் உரைத்த சில உண்மைகளை உணர்வோம், வாருங்கள்.

ராமேஸ்வரம்:

“விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரே ஓர் ஏழைக்காயினும் அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவி செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்.”

விவேகானந்தரின் இந்த ஆழமான சமய சிந்தனையை உள்வாங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பின்னாளில்,  “மதம் என்பது வாழப்பட வேண்டும்” என்று  முழங்கினார்.

நமது பூமி யாருடையது என்று அரசியல் அரட்டை அரங்கில் சிலர் இன்று கொக்கரிக்கிறார்கள். ஆனால் சுவாமிஜி அறுதி உண்மையை ஜனவரி 25-ஆம் நாளன்று ராமநாதபுரத்தில் இவ்வாறு கூறினார்:

“இந்தியாவின் முதுகெலும்பு சமயமே. எல்லாவற்றிலும் இந்தியாவின் உயிர்த்துடிப்பு சமயம், சமயம் மட்டுமே என்பதை என்னால் புரிய வைக்க முடிந்ததென்றால், அந்த உணர்வு இல்லாது போனால் எத்தனை அரசியல்கள் இருந்தாலும், எத்தனை சமூகச் சீர்திருத்தங்கள் இருந்தாலும் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் குபேரனின் செல்வத்தைக் கொட்டிக் குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும்.”

இன்று அவசரமான நம் இளைஞர்கள் மேலைநாட்டின் கொச்சை மொழிகளையும் அவர்கள் துப்பிய பழக்கங்களையும்  ‘காப்பி’ அடிக்கிறார்கள். ஆனால் மேலைநாட்டிலிருந்து நாம் கற்க வேண்டியவை பற்றி சுவாமிஜி தெளிவாக்கினார்:

“உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கையாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகிற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் திறமை - இவற்றையெல்லாம் நாம் கற்க வேண்டும்.”

இந்தத் திறமைகளை எல்லாம் நம் இளைஞர்கள் பெற வேண்டும் என்று 125 வருடங்களுக்கு முன்பே சுவாமி விவேகானந்தர் ஒரு நிர்வாக மேலாண்மை நிபுணராகச் சிந்தித்தார். அவர் எதிர்பார்த்த இந்தப் பண்புகளை எல்லாம் ராமகிருஷ்ண மிஷன் தமது பள்ளிகள், கல்லூரிகள் மூலம் இளைஞர்களுக்குக் கற்பித்து வருகிறது.

ராமகிருஷ்ண மிஷனில் தனது நிர்வாகத் திறமையால், மக்கள் வெளியே வருவதற்கு அஞ்சிய கொரோனா தொற்றுக் காலத்தில் மட்டும் எட்டு லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 47 கோடி செலவில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்தது.

பரமக்குடி மக்கள் மத்தியில் சுவாமிஜி  “அச்சமின்மை என்பது இப்போது உலகிற்கு இந்தியா போதிக்க வேண்டிய ஒரே மதம்” என்று முழங்கினார்.

மதத்தின் அந்தச் சாராம்சத்தை இன்று நாம் உணர்ந்துள்ளதால் சீனா போன்ற நாடுகள் நம்மைச் சீண்ட பயப்படுகின்றன.

மானாமதுரை:

“நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக, முழுக்க முழுக்க உண்மையானவர்களாக இருந்து சக்கரம் சுழல தோள் கொடுத்தால், 25 ஆண்டுகளில் நமது எல்லாப் பிரச்னைகளும் தீரும்” என்றார். இவ்வாறு ஒரு தனி மனிதருக்கல்ல, தாய்நாட்டிற்கே தன்னம்பிக்கையை வாரி வாரி வழங்கினார் விவேகானந்தர்.

அதனால்தான் இன்று நாடு தன்னம்பிக்கை இந்தியாவாக-  ‘ஆத்ம நிர்பர் பாரத்’  (சுய சார்பு பாரதம்) ஆக மிளிர்கிறது.

மதுரை: பிப்ரவரி 2

மதுரையில் சுவாமிஜி பாண்டியர்களின் வீரத்துடன் வருங்கால இந்தியனின் நிலைப்பாட்டை சுவாமிஜி வகுத்தார்:

“உலகில் உள்ள வேறு எந்த நாட்டினரை விடவும் நாம் முற்போக்குடன் இருப்போம். அதே வேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம்.”

கும்பகோணம்: பிப்ரவரி 3, 4, 5

சோழமண்டலமான கும்பகோணத்தில்‌ புலியாக அறைகூவலிட்டார்:

“எழுந்திருங்கள்,விழித்திருங்கள், லட்சியத்தை அடையும் வரை ஓயாது நில்லாமல் செல்லுங்கள்.”

“அளவுக்கு அதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனோவசியம் - இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளன. மன வசியத்திலிருந்து  உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன் உணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும் எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.”

இன்று நம்மிடையே சீர்திருத்தவாதிகள் என்ற போலிப் போர்வையில் பல அமைப்புகள் செய்து வரும் குற்றத்தினை சுவாமிஜி சாடுகிறார்:

“பெரும்பாலான நமது நவீன சீர்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலைநாடுகளின் வேலை முறைகளை காப்பி அடிக்கின்றன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல.”

“நமது நாடாகிய இந்தக் கப்பல் காலம் காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்து இருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலை”

-என்று அனைவருக்கும் சுவாமிஜி தேசபக்தியை ஊட்டினார்.

சென்னை: பிப்ரவரி 9

எப்போதும் இளைஞர்களை நம்புபவர்கள் மிகக் குறைவு. ஆனால் விவேகானந்தர் இளைஞர்களை ஆழமாக நம்பி கூறினார்:

”முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெறட்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும். நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால் பந்தாட்டம் ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்.”

“நமது ஜீவரத்தம் ஆன்மிகம். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், மற்ற பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டு விடும். ஏன் நாட்டின் வறுமைகூட தீர்க்கப்பட்டு விடும்.”

நண்பர்களே, நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்பதை ஒரு திட்டமாக சுவாமிஜி 1897- ஆம் ஆண்டில் அறிவித்தார்

“இனி வரும் 50 ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே. ஈடு இணையற்ற நமது இந்தியத் தாய். அதுவரை மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து சிறிது நேரம் மறைந்து விடட்டும்.”

1897 உடன் 50 வருடங்களைச் சேர்த்து பாருங்கள். வருவது இந்தியச் சுதந்திரம் மட்டுமல்ல, சுவாமிஜியின் தீர்க்கதரிசனத்தின் மீது நம்பிக்கையே நமக்கு வரும்.

இவ்வாறு விவேகானந்தர் நாட்டை நிர்மாணிக்கும், பண்புள்ள தனிமனிதனை உருவாக்கும் கருத்துகளை நாடெங்கும் விதைத்துக் கொண்டே வந்தார். அதன் முத்தாய்ப்பாக, கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் ராமகிருஷ்ண மிஷன் என்ற விருட்சத்திற்கான விதையை விதைத்தார்.

இன்று அந்த ஆன்மிக மரம் தானும் வளர்ந்து கொண்டே நூற்றுக் கணக்கான  கன்றுகளையும் ஆயிரக்கணக்கான விதைகளையும் உலகெங்கும் வளர்த்துக் கொண்டு வருகிறது.

சுவாமிஜி நமது மக்களின் பலம் மற்றும் பலவீனங்களை எடுத்துரைத்தார். பலவீனங்களை நீக்கி நமது ஆன்மிகத்தின், பாரம்பரியத்தின், பண்பாட்டின், தேசத்தின் பலங்களை, வளங்களைத் தொடர்ச்சியாக மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஓர் ஆன்மிக ஸ்தாபனமாக ராமகிருஷ்ண மிஷனை உருவாக்கினார்.

அந்த மிஷனின் லட்சியமாக  ‘ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச’ –  அதாவது நாமும் முன்னேறி, பிறரையும் முன்னேற்றுவது என்று சுவாமிஜி முன்வைத்தார்.

125 ஆண்டுகளாக ராமகிருஷ்ண மிஷன் தனிமனித மற்றும் தேச சேவையில், கல்வி, ஆரோக்கியம், சமயம், பண்பாடு, ஆன்மிகப் பிரசாரம், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் சேவை போன்றவற்றைத் தொடர்ந்து தொய்வில்லாமல் சீராகத் தொண்டாற்றி வருகிறது. 2021-22 -ஆம் ஆண்டில் மட்டும் மக்களின் தொண்டிற்காக ரூ. 943 கோடி ரூபாயை ராமகிருஷ்ண மிஷன் செலவிட்டுள்ளது. இதனால் பல லட்சங்கள் மக்கள் பயனடைந்தனர்.

சுவாமி விமூர்த்தானந்தர்

பணமும் சமுதாயத்தின் கவனமும் இல்லாத ஒரு சில துறவிகளால் ராமகிருஷ்ண மடமும் மிஷனும் ஆரம்பிக்கப்பட்டன. அது இன்று பாரதத்தின் பெருமையாகப் பாருக்கே ஒரு பூஷணமாக விளங்கி வருகிறது.

ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடத்துடன் இணைந்து 23 வெளிநாடுகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது 310 கிளை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 213 மையங்கள் இந்தியாவிலும் 97 மையங்கள் பிற நாடுகளிலும் உள்ளன.

சுமார் 1,782 துறவிகளும் பிரம்மசாரிகளும் தங்களது வாழ்க்கையை ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனுக்காக அர்ப்பணித்துச் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களோடு இணைந்து இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளும் பக்தர்களும் பங்கேற்று நாட்டு நலனில் தங்களது பங்கை வழங்கி வருகிறார்கள்.

அதனால்தான்  “ஒரு குறையும் இல்லாத ஒரு ஸ்தாபனம் என்றும், நான் மிகவும் போற்றும் ஒரு நிறுவனம்” என்றும் ராமகிருஷ்ண மிஷனைப் பற்றி பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் கூறினார் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள், இல்லையா?

  • நன்றி: தினமணி (03.05.2023)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s