உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்  

-பேரா. இளங்கோ ராமானுஜம்

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமானின் பிரமோற்சவம். கருட சேவையில் எழுந்தருளி  பக்தகோடிகளுக்குக் காட்சி கொடுக்கும் அரங்கன்.  தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தைப் பிழையின்றி உச்சரித்து இசைக்கு ஏற்றவாறு பாடி பல்லக்கிற்கு முன்னால் பகவானை மகிழ்விக்கும் பக்தர்கள். பெருமானுக்குப் பின்னால் வடமொழி வேத மந்திரங்களை உச்சரித்து அழகுநடை போடும் அந்தணர்கள்.  எங்கும் பக்திப் பரவசம். அனைவரின் கண்களும் அரங்கனையே நோக்க ஆங்கே சிற்றின்ப மோகத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த இருவர் –  உறங்காவில்லிதாசனும், கணிகை பொன்னாச்சியும் அனைவர் மனதிலும் அருவருப்பை உண்டாக்கினர்.

ஆம்! உண்மைதான்! திண்ணிய தோள் படைத்த மற்போர் வீரன், சோழ மன்னனின் மெய்க்காப்பாளனான  உறையூரைச் சேர்ந்த உறங்காவில்லியும், பேரழகு படைத்த கணிகை குலத்தில் பிறந்தாலும் உறங்காவில்லியையே கண்கண்ட கணவனாக வரித்து அவன் ஒருவனுடன் மட்டுமே இல்லறம் நடாத்தும் பொன்னாச்சியும் நெருக்கமாக நின்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்தனர்.

உறங்காவில்லி இடது கையில் அந்த இளம் மங்கையை அரவணைத்து,  குடை பிடித்து, வலது கையால் விசிறி கொண்டு வீசி, கொளுத்தும் வெயிலில் நின்று அவளைக் காத்து,  கண் கொட்டாமல் அவள் கண்களின் அழகைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதை    ராமானுஜாச்சாரியாரின் கண்கள் பார்த்து விட்டன. பார்ப்போரின் ஏச்சும்,  பேச்சும் அவன் காதுகளில் படவில்லை. புலன்கள் ஐந்தும் இப்பாவையே சிந்தித்திருக்கின்றன.

பாவிகளை இரட்சித்தருளும் கருணை உள்ளம் கொண்ட ராமானுஜர் அவனது காம உணர்வுகளை மடைமாற்றம் செய்து, அவற்றை உன்னதமாக்கி அவனையும் உத்தமன் ஆக்கி,  தெய்வத்தின் பால் திருப்ப இயலும் என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் நம்புகிறார்.  ராமானுஜர் அவனை நோக்கி பரிவோடு அழைக்க, அந்தக் காமுகனின் கண்கள் ஒரு நொடி சற்றே திரும்பி எத்திராஜரின் (ராமானுஜர்) திவ்ய திருமேனியைத் தரிசித்தன.

இரும்பை காந்தம் கவர்ந்தாற் போன்று உறங்கவில்லியை ராமானுஜர் தன்பால் ஈர்த்துவிட்டார்.  கைகட்டி, வாய் பொத்தி, பவ்யமாக நிற்கும் உறங்கவில்லி.  “பிள்ளாய்!  உன்னைப் பரிகசிக்கும் கூட்டத்திற்கு இடையே அப்படி அப்பெண்ணிடம்  என்ன இன்பத்தை கண்டாய்?”  என்று பரிவோடு கேட்கும் ராமானுஜர்.  “சுவாமிஜி! என் இல்லாள் பொன்னாச்சியின் மயக்கும் கண்கள் என்னை வசீகரிக்கின்றன. இந்த அழகை வேறு எங்கு நான் காண்பேன்!  அவளைப் பாதுகாப்பது மற்போர் வீரனான இந்தக் கணவனின் கடமை அல்லவா?” என்று கூறுகிறான் உறங்கவில்லி.

புன்னகைத்து அவனைப் பார்த்து,  “இருக்கட்டும் உறங்கவில்லி! ஒருக்கால் நான் இதைவிட அழகான கண்களைக் காட்டினால் இவள் மீது உனக்குள்ள மையலை விட்டு விடுவாயா?” என்கிறார் ராமானுஜர்.

“நிச்சயமாக சுவாமிஜி! இதைவிட அழகான கண்களை உங்களால் காட்ட இயலாது என்று உறுதியாக நம்புகிறேன். அப்படி தாங்கள் காண்பித்து விட்டால் இத்தையல் மீது உள்ள மையலை மாய்த்து விடுகிறேன்” – உறுதி அளித்தான் உறங்கவில்லி.

“அப்படி என்றால் இன்று மாலை கோயிலுக்கு வா! அரங்கன் சன்னிதியில் சந்திக்கலாம்”.

“உத்தரவு சுவாமிஜி” என்ற உறங்காவில்லி மீண்டும் அந்த அழகிக்கு குடை பிடிக்கச் சென்றுவிட்டான்.

மாலை வந்தது. அரங்கனின் சன்னிதானத்தில் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்தார் அர்ச்சகர்.  பகவான் ஆனந்த சயனத்தில் படுத்திருப்பதை உறங்காவில்லிக்குக் காண்பித்தார் ராமானுஜர். கற்பூர ஒளியில்  அரங்கனின் இரண்டு கண்களும் உறங்காவில்லியின் உள்ளத்தில் பேரின்பத்தை விளைவித்தன.  ஆனாலும் காமப் பேயின் கொடூரம் அவன் உள்ளத்தில் தாண்டவம் ஆடியது.

ஆனால் அரங்கனின் ஞானஒளி மெல்ல மெல்ல அவன் உள்ளத்தில் பரவ அவன் காமத்தை ஜெயித்தான்.  “என் மனதினின்று பொன்னாச்சியின் கண்கள் மங்கி மறைந்தன சுவாமிஜி!  விலங்கு மனம் படைத்த எனக்கு பேரின்பத்தை விளக்கி விட்டீர்கள் பிரபு! இதுகாறும் அறியாமையில் மூழ்கியிருந்த என் கண்களைத் திறந்து அருளி எனக்கு நல்வழி காட்டினீர்கள் ஐயனே!” என்று கதறினான் உறங்கவில்லி.

உறங்காவில்லியும்,  பொன்னாட்சியும் மோகத்தைக் கொன்று துறவு மனப்பான்மையைத் தழுவினர். வானப்பிரஸ்தம் அவர்களுக்கு வழி விட்டது. ராமானுஜருக்கு பிரிய சிஷ்யர்கள் ஆனார்கள். காவிரியில் நீராடித்  திரும்பும்போது ராமானுஜர் உறங்காவில்லியின் தோள்களைப் பற்றி நடப்பார். உறங்கவில்லியின் உணர்வுகளை உன்னதமாக்கினார்.

மனிதன் தன் உணர்வுகளை நெறிப்படுத்த எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது! கள்ள மனம்  துள்ளுகிறது பேய்க் குரங்கு போல! அதன் குதியாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது குமுறும் மனம்! வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரைப் போல! 

அத்தோடு கன்னங்கரேல் என்ற காமாதி ராட்சசப் பேய்களான காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம்  ஆகியவை, மனிதனைப்  படாத பாடுபடுத்துகின்றன. உறங்காவில்லியை ஆட்டிப் படைத்தது  காமப் பேய் தானே! 

மனக் குழப்பங்கள் யாரைத்தான்  விட்டன! ஆன்மிகப் பாதையில் நடைபோட முயற்சிக்கும் போது ஓரிரண்டு மாயா சக்திகள் அல்ல. ஆறு கோடி மாயா சக்திகள் மனதை  அலைக்கழிக்கின்றன  என்கிறார் மாணிக்கவாசகர்.

“தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின”

   -கீர்த்தித் திருவகவல்- 41-45  (திருவாசகம்)

மாணிக்கவாசகருக்கே இந்தப் பாடு என்றால், ஆசாபாசங்களுக்கு ஆட்பட்ட உறங்காவில்லிதான் என்ன பாடுபட்டு இருப்பான்!  ராமர் பாதம் பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைத்தது போல,  ராமானுஜரின் கனிந்த பார்வை உறங்காவில்லிக்கு மறுவாழ்வு கொடுத்தது.  பண்பட்ட மனிதனானான்.  அவனது உணர்வுகளை மடைமாற்றம் செய்தவர் பகவான் ராமானுஜர். காமம் மறைந்து பரமன் வந்தான் அவன் மனதில்!

தாயுமானவர், 18 ஆம் நூற்றாண்டு கண்ட தலைசிறந்த துறவி!  நொடிப் பொழுதில் அமைச்சர் பதவியைத் துறந்து முழு நேரத் துறவியானவர்!  எந்தத் திருச்சி மாநகரில் அமைச்சராக  பல்லக்கில் பவனி வந்தாரோ,  அதே மாநகரில் முற்றும் துறந்த முனிவராக  கெளபீனம் மட்டுமே அணிந்து, கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி இறை சிந்தனையில் மூழ்கி வலம் வந்தவர்.  அவர் மனது அவரது ஆளுமைக்குள் வந்தது. ஏற்கனவே உன்னதமான அவர் உணர்வுகள் மீண்டும் மடைமாற்றம் செய்யப்பட்டு உன்னதத்தின் உச்சத்திற்குச் சென்றன. அவர் சிந்தையில் உலகியல் உணர்வுகள் சிதைந்து,  சிதையாத பேரானந்தம் நிறைந்தது.  மாயை மறைய,  அனைத்து உயிரினங்களும் இறைமயமாகக் காட்சி அளித்தன.

தாயுமானவர்:

தாயுமானவரின் வாழ்வில் ஒரு சம்பவம்! கௌபீனதாரியாக அவர் திருச்சி நகர வீதிகளில்  வலம் வந்தபோது ஒரு மார்கழி மாதக் காலையில் குளிரில் அவர் வெற்றுடல் நடுங்க, அதைக் கவனித்த துறவியின் பழைய நண்பர் அவரை குளிரிலிருந்து காக்க விலை உயர்ந்த காஷ்மீரத்து  சால்வையை அவர் மீது போர்த்தினார்.  ஆனால் இரண்டொரு நாளில் அதே சால்வை கட்டழகு வாய்ந்த ஒரு வேலைக்காரியின் உடலை அலங்கரிப்பதைக் கண்ட சிலர் விசாரணையைத் தொடங்கி விட்டனர்.  அந்த அழகிய  இளமங்கையோ தான் அதிகாலை பணிக்கு வருங்கால் போதிய துணி இன்றி குளிரில் நடுங்கியதைக் கண்ட பரதேசி பரிசாக கொடுத்ததாகப் பகர்ந்தாள்.

சந்தேகக் கண்கள் துறவியைப் பார்த்தன. விஷயம் விபரீதமானது!  சபை கூடி துறவியை வினவ அவரோ, “அன்றொரு நாள் அதிகாலை அன்னை பராசக்தி அகிலாண்டேஸ்வரி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, நான் வணங்கும் தெய்வமாகிய அந்த அம்பிகைக்குத் தான் அதைச் சாத்தினேன்” என்றார்.

என்ன ஒரு தெய்வீகப் பார்வை, தாயுமான சுவாமிகளிடம் குடிகொண்டிருந்தது!   அவரின் உணர்வுகள் தான் எவ்வளவு உன்னதமானவை! அனைவரும் இறை சொரூபங்களாக அவருக்குத் தெரிந்தனர். 

பெண்கள் அனைவரும் அவர் வணங்கும் அகிலாண்டேஸ்வரியின் வடிவமாகத் தெரிந்தனரே!  நித்திரையில் இந்த உடம்பு ஒரு செத்த பிணம் என்பதை உணர்ந்தவர்!  அதற்கு இச்சை வையா நல்ல சுத்தர் இந்தத் துறவி. இவர் ஏற்கனவே இல்லறத்தில் இருந்து கிருகஸ்தராக மாறினாலும் பெண்ணாசை இவர்தம்  உள்ளத்தில் வறுத்த  விதையாகி விட்டது.

பகவான் ராமகிருஷ்ணர்:

வேதாந்த வானில் சுதந்திரமாகப் பறந்தவர் குரு மகராஜ் ராமகிருஷ்ணர்.   வேதங்களை அவர் கற்கவில்லை. ஆனால் அவர் எதார்த்த நிலையே வேதாந்தமானது!  கோட்பாடுகள் அவரைச் சிறை எடுக்கவில்லை.  ஆனால் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே கோட்பாடுகள் ஆயின! 

புலன்களை இவர் ஒருபோதும் அடக்கி ஆளவில்லை. இந்திரிய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி,  அவற்றைக் கிள்ளி எறிவதே துறவியின் கடமை என்பதை இவர் மனது ஒருபோதும் ஏற்கவில்லை. மாறாக இந்திரிய உணர்வுகளை உன்னதமாக்கி,  இறைவன் பால் மடைமாற்றம் செய்து,  புலன்களினின்று பீறிட்டு வந்த உணர்ச்சிப் பெருக்கிற்கு தெய்வீக வடிவம் கொடுத்தார்.

ஒரு நாள் அவருக்கு ஓர் அற்புதமான அனுபவம்! பச்சைப்பட்டு விரித்தது போன்று பசுமையான வயல்வெளி!  மழையைப் பிரசவிக்கத் துடிக்கும் கருமேகங்கள்! அந்த கரிய மேகக் கூட்டங்களுக்கு இடையில் புகுந்து பறக்கும் பால் போன்ற வெண்மை நிறக் கொக்குகள்! 

எந்தக் கவிஞனும் கவிதை மழை பொழிவான், இதைப் பார்த்து! எந்தப் பாடகனும் இனிய பாடலை முணுமுணுப்பான் இதைப் பார்த்து! எந்தத் திரைப்பட இயக்குநரும் இந்த இடத்தில் ரம்யமான காட்சியை படம் எடுக்க இயங்குவார்!  ஆனால் அழிந்துபட்டுப் போகக் கூடிய இந்த உணர்வுகள் அவர் உள்ளத்தில் உதிக்கவில்லை. மாறாக இக்காட்சியை கண்ட குருதேவருக்கு மனது அதீத நிலையை அடைந்து, தெய்வீகப் பரவசம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதை உணர்ந்தார். ஒருபோதும் இந்திரியங்கள் இவரை மயக்கவில்லை. அவை அவரை தெய்வ சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றன.

உணர்வுகளை மடைமாற்றம் செய்து தெய்வத்தின்பால்  திருப்புவது நம் ஆன்மிகக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். மனித குலத்தின் உள்ளத்தில் உதிக்கும் உன்னதமான உணர்வுகளும், எழுச்சிமிகு எண்ணங்களும், பண்பாடும் பக்குவமும் அடைந்து  பரிணாம வளர்ச்சி அடையும் போது கலாச்சாரம் பிறக்கிறது. அது தேசத்தின் மனப்பான்மையைப் பொருத்து மாறுபடுகிறது.

புலனின்பக் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் ஜொலிக்கிறது. நம் தேசம் வித்தியாசமானது. காலத்தால் மிகவும் பழமையான பாரதம் எப்போதுமே அநித்தியங்களுக்கு மத்தியில் நித்தியத்தையும்,  அறியாமைக்கு மத்தியில் ஒளி வீசும் ஞானத்தையும்,  அழிவுக்கு மத்தியில் அழியாத பேருண்மையையும் தேடியது. இந்தத் தேடல் காலம் காலமாக இருந்து வருகிறது. சில காலத்தில் இந்தத் தேடல் உக்கிரமமாக இருந்தது.  சில காலத்தில் இதன் வேகம் குறைந்தது.  ஆனால் ஆன்மிகத் தேடல் இருந்துகொண்டே தான் இருக்கிறது. இது இனி என்றும் அது அழியாது. அதுதான்  பாரத தேசம்! 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s