-டி.எஸ்.தியாகராசன்
பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

தரம்பால்
(1922 பிப். 19 – 2006 அக். 24)
பூவுலகில் பிறந்த எல்லோரும் செயற்கரிய செயல்களைச் செய்வதில்லை. எல்லோரும் தான் பிறந்த மண்ணின் அருமை பெருமைகளைப் பறைசாற்ற உழைப்பதில்லை. உண்ணுவதிலும், உறங்கி விழிப்பதிலும் காலம் கழிந்து விடுகிறது. படிப்பதும், பணியாற்றுவதும் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்கட்குமாக பணம் சேகரிப்பதும் நாள் முழுமையும் செலவாகிப்போன காலை, கதிரவன் காலை உதித்தால் என்ன? மாலையில் மறைந்தால் என்ன? என்று எண்ணுவது கோடானு கோடி மக்களின் மனநிலையில், தனது வாழ்நாளை இமைப் பொழுதும் தன் உயிரணைய நாட்டிற்கும், ஏனைய மானுடர்க்குமாக உழைக்கும் உத்தமர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இவர்களை மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தகுந்த ‘அபூர்வ மனிதர்கள்’ என்றால் சற்றும் மிகையல்ல.
இவ்வகையில் கடந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்த ஒருவரை நாம் அறிதல் பொருத்தமானதே! பிளவு படாத பாரதத்தில் 1922-இல் லாகூரில் பிறந்தவர் தாம் பாரதத்தவர் அனைவரும் விரும்பும் தரம்பால்! தனது எட்டாவது வயதில் தந்தையோடு 1929-இல் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றபோதுதான் பொக்கைவாய்க் கிழவரான மகாத்மா காந்தியை முதன்முதலாகப் பார்த்தார். அதற்கு அடுத்த வருடத்தில் சர்தார் பகத் சிங்கும் அவருடைய சக பேராளிகளும் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேய அரசின் அந்தக் கொடிய அராஜகச் செயலுக்கு எதிராக லாகூரில் தரம்பாலின் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்த போராட்டங்கள் பிஞ்சு மனத்தில் ஆழமாக பதிந்தன. ஆங்கிலேயர் பாரதத்தை தொடர்ந்து ஆட்சி புரியலாமா, வெளியேறிவிட வேண்டுமா என்பது தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் பரபரப்பான விவாதங்கள் அந்தக் காலகட்டத்தில் நடந்த வண்ணம் இருந்தன.
அக்காலத்திலும் சிலர் பாரதத்தின் சுதந்திரத்திற்கு எதிராகவும் இருந்தனர். ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போய்விட்டால் ஆப்கானியப் பழங்குடியினர் மற்றும் பலர் படையெடுத்து வந்து பாரதத்தை ஆக்கிரமித்து விடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். ஆனால், தரம்பால் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவே நகர ஆரம்பித்தார். பள்ளி, கல்லூரியில் மேற்கத்தியக் கல்வி பெற்ற நிலையிலும் ஆங்கிலேய ஆட்சி மீதான வெறுப்பு நாளுக்கு நாள் தரம் பாலின் மனதில் அதிகரிக்கவேச் செய்தது.
1940 ஆண்டுவாக்கில் கதர்உடை அணியத் தொடங்கியவர் தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையிலே நின்றார். ராட்டை இயந்திரத்திலும் தனது கைகளால் சில காலம் நூற்பு பணியிலும் கவனம் செலுத்தினார். 1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனையும் பெற்றார். ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
ஆங்கிலேயர் வெளியேற்றபட்டால், நாட்டின் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்படும்; வறுமை ஒழியும்; வளம் பெருகும்; மக்களிடையே ஒற்றுமை உண்டாகும் என்றெல்லாம் நம்பிய ஏராளமான மக்களில் தரம்பாலும் ஒருவராக இருந்தார். 1944-இல் மீரா பெஹனுடனான அறிமும் நண்பர்கள் மூலம் கிடைக்கப் பெற்றார். இதன் காரணமாக ரூர்க்கிக்கும் ஹரித்துவாருக்கும் இடையில் அமைந்திருக்கும் கிஸான் ஆசிரமத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினார். தரம்பால் 1947-48-இல் டில்லிக்குச் சென்ற காலம், 1948-49 இங்கிலாந்துக்குச் சென்ற காலம் நீங்கலாக 1953-இல் மீராபெஹன் அந்த ஆஸ்ரமத்தில் இருந்த வரை தரம்பால் அவருடன் இருந்தார். மீரா பெஹன் அதன்பிறகு இமயமலைக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் இடம் பெயர்ந்தார். ஜூலை 1982-இல் வியன்னாவில் மறைந்தார், காந்தியடிகளுக்குப் பிடித்த அந்த மாது.
அவர் காலமாவதற்கு இரண்டு வாரம் முன்பாக தரம்பால் அவரைச் சந்தித்து வியன்னா காடுகளின் ஊடே அமைதியான சூழலில் பல மணி நேரங்கள் உரையாடி மகிழ்ந்தார். கமலாதேவி சட்டடோபாத்யாய, டாக்டர் ராம் மனோகர் லோகியா போன்ற இளைய தலைமுறையினருடன் 1947-48 காலகட்டத்தில் இருந்தே தரம்பால் நெருங்கிய நண்பராக இருந்தார். பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் புண்ணியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கமலா தேவியைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கோ-ஆபரேட்டிவ் யூனியனில் உறுப்பினராக இருந்தார். 1949-இல் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கில மாதுவான ’பிலிஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பாரதத்தில் வசிக்க முடிவெடுத்தார்கள்.
ரிஷிகேஷில் பசுலோக் என்ற பசுமை பகுதியில் ‘பாபு கிராம்’ 1950-இல் நிர்மானிக்கப்பட்டது. தரம்பாலும் அவரது மனைவி பிலிஸும் 1953 வரை அங்கு வாழ்ந்தனர். 1954-இல் இருவரும் இங்கிலாந்தில் வசிக்க முடிவு செய்து அங்கு சென்று வசிக்கத் தொடங்கினார்கள்.
லண்டன் செல்வதற்கு முன் இருவரும் இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றனர். குடும்பம் பெரிதாக வளர்ந்தது. மகன், மகள்களோடு மீண்டும் பாரதம் திரும்பினார்கள். 1958 முதல் 1964 –வரை டில்லியில் வசித்தார். அசோஷியேன் ஆஃப் வாலண்டரி ஏஜன்சீஸ் ஃ பார் ரூரல் டெவலப்மென்ட் (AVARD) அமைப்பின் ஜெனரல் செகரட்டரியாகப் பணி புரிந்தார். அதன்பிறகு ஜெயபிரகாஷ் நாராயணன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1964-1965-இல் அனைத்து இந்திய பஞ்சாயத்து பரிஷத்தின் ஆய்வுத்துறை இயக்குநராக தரம்பால் பணிபுரிந்தார். தமிழ்நாட்டில் தங்கியிருந்து கிராமப் பஞ்சாயத்துகள் பற்றி ஏரளமான தகவல்களைச் சேகரித்தார். அவற்றை ‘மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார்.
‘இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அலகாக பஞ்சாயத்து அமைப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய நூல் ஒன்றை அதற்கு முன்பே 1962-இல் இவர் வெளியிட்டிருக்கிறார்.
1966-களின் ஆரம்பக் கட்டத்தில் அவருடைய மகன் விபத்தொன்றில் சிக்கியதால் உடனே லண்டனுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இதனிடையில் 18-19 –ஆம் நூற்றாண்டுகளில் இந்திய ஆங்கிலேயர்களின் தொடர்புகள் பற்றித் தீவிர ஈடுபாடு கொள்ளத் தொடங்கி இருந்தார். 1982 வரை லண்டன் மாநகரில் தங்கியிருந்தார். ஆனாலும் இடையிடையே இந்தியா வந்து போய்க் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் அவருக்கு என்று நிலையானதொரு வருமானம் இல்லை. குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பிலும் இருந்தார்.
எனினும் இவ்வகையான சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு மனம் தளராமல் இந்தியா ஆபீஸ், பிரிட்டிஷ் மியூசியங்களுக்குத் தொடர்ந்து சென்று தனக்குப் பிடித்தமான வரலாற்று ஆய்வினை மேற்கொண்டார். ஆவணங்களை ஒளிநகல் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிகுதியான பணம் தேவைப்பட்டது. அதோடு பல அரிய ஆவணங்களை ஒளிநகல் எடுக்க அனுமதியும் இருந்திருக்கவில்லை. எனவே, ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒவ்வொரு நாளும் கைப்பட எழுதி நகல் எடுத்தார். அதன் பிறகு அவற்றைத் தட்டச்சு செய்தார். அப்படியாக பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்து அரிய பல ஆவணங்களைத் தனி ஒருவராக எந்த நிறுவனப் பின்புலமும் இன்றிச் சேகரித்தார்.
இந்தியா திரும்பும் போது ஏராளமான டிரக் பெட்டிகளில் இருந்த இந்த ஆவணங்களே அவருடைய ஒரே சொத்தாக இருந்தன. 1958-லிருந்தே சேவாகிராம் அமைப்புடன் தரம்பாலுக்குத் தொடர்பு இருந்தது. குறிப்பாக அன்னாசாஹிப் சஹஸ்ரபுத்தேவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
1967-இல் தரம்பால் ஒரு மாத காலம் சேவாகிராமில் தங்கினார். 18-19 ஆம் நூற்றாண்டு இந்தியா பற்றி அவர் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்து சேமித்த தகவல்களை சேவாகிராமில் இருந்தபோது, தொகுத்து எழுதிக் கொண்டார்.
1980 டிசம்பரில் இருந்து 1981 மார்ச் வரை சேவாகிராமில் தங்கியிருந்த காலகட்டத்தில் தான் ‘அழகிய மரம்’ (18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த பாரம்பரியக் கல்வி) என்ற நூலை எழுதி முடித்தார்.
1982-இல் இருந்து 1987 வரை சேவாகிராமிலேயே தங்கியிருந்தார். அவ்வப்போது சென்னைக்கும் விஜயம் செய்தார். இங்குள்ள பல ஆவணக் காப்பகங்களில் தேடித் தேடி பல தரவுகளை சேகரித்துக் கொண்டார். ‘பேட்ரியாட்டிக் அண்ட் ப்யூபிள் ஒரியண்டட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ என்ற அமைப்பின் தலைவராகவும் பணி புரிந்தார். சென்னையில் இருந்த ‘செண்டர்ஃபார் பாலிஸி ஸ்டடீஸ்’ என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
அவருடைய மனைவி பிலிஸ் 1986-இல் லண்டனில் காலமானார். இதனால் லண்டன் சென்றார். பின்னர் இந்தியாவுக்கு வந்த இவர் 1983 வரை சேவாகிராமின் ஆஸ்ரம் பிரிஸ்தானில் வசித்தார். இறுதியாக வரலாற்றின் அபூர்வ அறிஞர் தரம்பால் 2006-ல் காற்றில் கரைந்தார்.
இவரது அளப்பரிய அறிவாற்றலை, ஆய்வுத் திறனை நாம் துல்லியமாக அறிந்துகொள்ள வரலாற்று அறிஞர் கிளாட் ஆல்வரெஸ் வாக்கினால் அறிதல் மிக்க நலன் பயக்கும்:
“தரம்பாலின் மகத்தான வரலாற்றுப் படைப்புகளைச் சற்றும் எதிர்பாராத வகையில்தான் நான் பார்க்க நேர்ந்தது. 1976-இல் ஹாலந்தில் இருந்த ஒரு நூலகத்தில் முதன்முதலில் அவருடைய படைப்புகளைப் பார்த்தேன்! அப்போது நான் எனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அதன் ஓர் அங்கமாக, இந்தியா மற்றும் சீனாவின் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி மேற் கொண்டிருந்தேன். “சீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய வரலாற்று நூல்களுக்கும் அறிவார்ந்த ஆய்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு வகையில் அதற்கு முக்கிய காரணமாக டாக்டர் ஜோசஃப் நீதமையும் அவருடைய பல தொகுதிகள் கொண்ட சயின்ஸ் அண்ட் சிவிலைசேஷன் இன் சீனா (சீனாவில் அறிவியலும் நாகரிகமும்) என்ற படைப்பையும் சொல்லாம். நேர்மாறாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஒற்றை அறிவார்ந்த நூல் கூட இருந்திருக்கவில்லை. இருந்தவை எல்லாம் மிகவும் மோசமான, மிக அடிப்படையான நூல்களாகவே இருந்தன. அவற்றில் படைப்பூக்கமோ, உயிர்த்துடிப்போ இருந்திருக்கவில்லை; உண்மையைவிடப் பெரிதும் புனைவுகளே மிகுந்திருந்தன. “மிகவும் மனம் சோர்ந்து போன நான் ஹாலந்தில் எனக்கு அனுமதி கிடைத்த நூல் நிலையங்கள் அனைத்திலும் நுழைந்து கைக்குக் கிடைத்த நூல் புத்தகத்தையெல்லாம் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஹாலந்து நூலகத்தில் தேடிய நகைமுரணை கவனத்தில் கொள்ள மறந்து விடாதீர்கள். விஷயம் என்னவென்றால், எனது முனைவர் பட்ட ஆய்வை அங்குதான் செய்தேன். எனவே வேறு வழி இருந்திருக்கவில்லை. “ஒரு இனிய காலைப் பொழுதில் ஆம்ஸ்டர்டாம் தெருவில் இருந்த தென்கிழக்கு ஆசிய மையத்தினுள் நுழைந்தேன் அங்கு ‘பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்றொரு புத்தகத்தைப் பார்த்தேன். ஆர்வத்துடன் கையில் எடுத்தேன். யாரோ தரம்பால் என்பவர் எழுதியிருந்தார். அந்த ஆய்வுப்புலத்தில் அப்படியான ஒரு நபரைப் பற்றி நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. புத்தகத்தை எடுத்துச் சென்ற அன்றே படித்து முடித்தேன். அது இந்தியா பற்றிய என் பார்வையே என்றென்றைக்குமாக மாற்றி அமைத்தது. “இப்போது அந்தப் புத்தகத்தைப் படித்து 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. (தற்போது மேலும் 26 ஆண்டுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்) இன்னும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும் அத்தனை பேர் உள்ளத்திலும் அதே விதமான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே அந்தப்புத்தகம் இருந்து வருகிறது. “நமது பள்ளிகளில், குறிப்பாக ஆங்கில வழிப் பள்ளிகளில், இந்தியா பற்றி உருவாக்கப்படும் சித்திரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை அந்தப் புத்தகம் ஒரு தலைமுறைக்கும் மேலானவர்களுக்கு அழுத்தமாக உருவாக்கித் தந்து வருகிறது. இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும் பற்றிய எனது முனைவர் பட்ட ஆய்வுக்கும் அது மிக வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. எனது முனைவர் பட்ட ஆய்வேடு 1979-இல், ‘ஹோமோஃபேபர் இன்றிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும், நாகரிகமும்’ என்ற தலைப்பில் வெளியானது. (வரலாற்றை காலனியப் பிடியில் இருந்து விடுவித்தல்) 1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும் நாகரிகமும் என்ற தலைப்பில் 1997-இல் மறு வெளியீடு செய்யப்பட்டது). “இந்திய சமூகம் சார்ந்து பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கட்டுமானத்தின் அஸ்திவாரக் கற்களை தரம்பால் வெகு நிதானமாக உடைத்துத் தள்ளியிருக்கிறார். இந்திய சமூகம் பற்றி பாரபட்சமும், முன்முடிவுகளும் கொண்ட ஆங்கிலேய அல்லது காலனிய ஆய்வுகளின் நம்பகத் தன்மை இன்று வெகுவாகக் குறைந்துபோய் விட்டிருக்கிறது”
-என்று மேலும் தகவல்களைத் தெரிவித்து தரம்பாலின் உழைப்பை, உண்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பண்டைய பாரதத்தில் ஆயகலைகள் அறுபத்தி நான்கும் செழிப்புற்று விளங்கி இருந்ததை அவரது படைப்புகள் மூலம் உணர முடிகிறது.
பிரிட்டனின் தற்போதைய பிரதமர் இந்திய வம்சா வளியினரான ரிஷப் சுனக் அவர்களின் உதவியோடு இந்திய அரசு இங்கிலாந்தில் உள்ள பல ஆவணக் காப்பகங்களில் இருக்கும் ஏடுகளை பிரதி எடுக்க முயல வேண்டும். மேலும் இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்குப் முன்பாக போர்ச்சுக்கல், டச்சு ஆட்சி நடைபெற்றிருக்கிறது. உதாரணமாக சோழ மாமன்னன் ராஜராஜன் நாகப்பட்டினம் பௌத்த விகாரத்திற்கு நிலம் தானம் அளித்த செப்பேடுகள் (ஆணைமங்கலம்) இன்றைக்கும் ஹாலந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் உள்ள அருங்காட்சியத்தில் இருக்கின்றன. அவற்றை இங்கு எடுத்துவர வேண்டாம். அவர்களைப் போல ஆயிரம் ஆண்டு பழமையான செப்புத் தகடுகளை பாதுகாக்கின்ற அறிவோ, ஆற்றலோ நம்மிடம் இல்லை என்பதே உண்மை.
உதாரணமாக நம் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள தெய்வத் திருமேனிகளைப் பாதுகாப்பதில் எப்போதும் தவறி வந்துள்ளோம். எனவே வெளிநாடுகளில் உள்ள அரிய பொருட்கள், ஆவணங்கள் இவற்றைப் படியெடுத்து நமது முன்னோர்களின், ஆற்றலை, நமது மண்ணின் பண்பாட்டினை அபூர்வ மனிதர் தரம்பால் போல மீட்டெடுக்க வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம். இது அபூர்வ மனிதர் தரம்பாலுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
$$$