முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

-அரவிந்தன் நீலகண்டன்

தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரத்த்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ல அரிய கட்டுரை இது...
கஸலு லட்சுமிநரசு செட்டி (1806–1868)


மேன்மை தங்கிய கவர்னர் துரையாரின் சிவந்த முன்வழுக்கை மண்டையில் வியர்வைத் துளிகள் அளவுக்கு அதிகமாகவே உருவாகியிருந்தன என்பதற்கு மெட்ராஸின் வெப்பநிலை மட்டுமே காரணம் அல்ல. கனம்பொருந்திய கவர்னர் துரையாரின் பெயர் வெகு நீளமாக ‘ஜியார்ஜ் ஹே ட்வீட்டேலின் எட்டாம் மார்க்யுஸ்’ என்று இருந்தாலும் அதை ட்வீட்டேல் என்றே அழைப்பது வழக்கம்.

கவர்னரின் மனது அன்று அடைந்த விரக்தியான கோபம் சொல்லத் தரமானதன்று. ‘கறுப்புத் தோல் இந்திய முட்டாள்களா இதைச் செய்தார்கள்?’ என்று எண்ணும்போதெல்லாம் அவர் கொதிநிலை உச்சத்தை அடைந்தது. ஆட்சி செய்வது பெயருக்குத்தான் கும்பெனி என்பது அவருக்குத் தெரியும். உண்மையான ஆட்சி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்டது. எனவே நடந்திருப்பது பிரிட்டிஷ் அரசுக்கே விடப்பட்ட சவால். இந்த சவாலுக்கு பின்னால் இருப்பவர் யாரென்பதும் கவர்னர் பெருமகனாருக்குத் தெரிந்திருந்தது.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் அன்றைக்கு ஆங்கிலமும், குமாஸ்தா வேலைக்கான தயார்படுத்தலும் அளிக்கும் ஒரு கல்விச் சாலை. கும்பனி உருவாக்கிய அரசு இயந்திரத்துக்கு சேவகம் செய்ய மதராஸ்வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய நிறுவனம். அங்கே ‘பண்பாடற்ற’ இந்த இந்தியர்களின் பண்பாட்டை உயர்த்த, என்றென்றைக்குமான சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழைய, விக்கிர ஆராதனையை அடியோடு ஒழிக்க, எல்லாவற்றுக்கும் மேலாக ராஜ விசுவாசமுள்ள பிரஜைகளாக்க விவிலியத்தைக் கட்டாய பாடமாக்க முடிவு செய்த கவர்னரின் ஆலோசனைக் கூட்ட தாஸ்தாவேஜு ஒரு பத்திரிகையில் பிரசுரமாகித் தன்னை பிரச்சினைக்குள் ஆளாக்கும் என நினைத்திருப்பாரா துரைமகனார்?

பத்திரிகையின் பெயர் ‘மதியம்’. ஆங்கிலத்தில் ‘கிரெஸண்ட்’. பத்திரிகையின் ஆதார சக்தி செட்டி – கஸலு லட்சுமிநரசு செட்டி.

சட்டம் தெரிந்த ஆசாமி. எங்கெங்கே அவருக்குத் தொடர்புகள் உண்டு என்பது எவருக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை உண்டாக்க வேண்டுமென்றே செலவளித்துக் கொண்டிருக்கும் இந்து. அந்த ஆளை மட்டும் கவிழ்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால்…

கவர்னருக்கு மட்டுமல்ல, அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிட்டிஷ் காலனியவாதியின் முதுகுத் தடத்திலும் ஒரு ‘சுரீரை’ ஏற்படுத்த வல்லது அந்தப் பெயர். யார் இந்த செட்டி?

இன்றைக்கு நாம் மறந்துவிட்டாலும் தேச விடுதலை தர்ம பாதுகாப்பு வீரர்களில் கஸலு லட்சுமிநரசு செட்டி மிகவும் முக்கியமானவர். முதன்மையானவர். தமிழகத்தின் முன்னோடி இந்துத்துவர் செட்டி என்று சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும்.

செட்டி 1806ல் பிறந்தார். பிறந்த தேதி தெரியவில்லை. அவர் கோமதி செட்டி சமுதாயத்தினர். அவர் ஆங்கிலக் கல்விக்கூடங்களில் பயிலவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களிலிருந்து உருவானவர். ஆங்கிலம் சுயகல்வி மூலமாக அவருக்குக் கிட்டியது. அந்தக் காலகட்டத்தில் ஆங்கில ஆட்சி தன்னை வலிமையாக நிலைநாட்டி தமிழகமெங்கும் பரவ ஆரம்பித்துவிட்டிருந்தது. அதே காலகட்டத்தில் அமெரிக்க காலனிகளுக்கும் தாய் பிரிட்டிஷாருக்கும் மோதல் ஏற்பட்டு, பிளவுகளால் அட்லாண்டிக் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது – குறிப்பாக பருத்தி வியாபாரம். இதைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் கடும் உழைப்பாலும் புத்திக் கூர்மையாலும் செல்வந்தராக உயர்ந்தார் செட்டி. ஆனால் குலதர்மமான வைசியத் தொழிலில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரது ஸ்வபாவம், பாரதத்தின் சமயாச்சாரங்களையும், சமுதாய நலனையும், இயற்கை வளங்களையும் காப்பாற்றும் போராட்டத்தையே அவரது ஸ்வதர்ம குருக்ஷேத்திரமாகக் காட்டியது.

எளிமையான தோற்றம். கம்பீரமான தலைப்பாகை. நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம். இந்த அமைதியின் வடிவமான மனிதர், பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான போராட்டத்தில் – அனைத்துத் தளங்களிலுமான போராட்டத்தில் – அழுத்தமாகக் குதித்தார். ஒரே நோக்கம் – நம் மக்களின் சுபிட்சமும் சுதந்திரமும்.

அன்றைய மெட்ராஸின் அதிகாரவர்க்கத்தில் யார் யாரெல்லாம் பெரும் பதவிகளில் அதிகார பீடங்களில் இருந்தார்களோ அவர்களை எதிர்த்தது இம்மனிதரின் ஒற்றைக் குரல். அன்றைய மெட்ராஸ் நீதிமன்றங்கள் மதமாற்ற கேந்திரங்களாகச் செயல்பட்டன. சர் வில்லியம் பர்ட்டன் தான் ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி தாம் கிறிஸ்தவ மதப் பிரசார ஊழியரும்கூட என்பதை ஐயம் திரிபறக் கூறினார். நீதிபதி தன் இருக்கையில் இருந்தபடி குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்துக்களுக்கு அவர் கொடுக்கும் கிறிஸ்தவப் பிரசாரப் பேருரைகள் வெகு பிரசித்தம்.

மெட்ராஸில் இயங்கிய கும்பனியார் அரசின் முதன்மைச் செயலாளர் ஜே.எஃப்.தாமஸ், மதம் மாறினால் மட்டுமே அரசு அலுவலகங்களில் வேலை கிடைக்கும் என்பதை ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றியிருந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் E.B.தாமஸ் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர். இவர் திருநெல்வேலியில் மதமாற்றத்தை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றத் துணை புரிந்தார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி மூர்ஹெட் என்பவர் நீதிமன்றச் செயல்பாடுகளில் ஒன்றாக விவிலியப் பிரசங்கத்தை இணைத்திருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஏற்கெனவே பார்த்தது போல கவர்னரும் தீவிர கிறிஸ்தவ மதமாற்றச் செயல்பாடுகளுக்கான பெரும் ஆதரவுத் தூணாகவே இருந்தார்.

அக்டோபர் இரண்டாம் தேதி 1844, பாரதத்தின் தேசபக்த இதழியல் தென் பாரதத்தில் பிறந்த நாள் என கூறலாம் 1857 எழுச்சிக்கு இன்னும் 13 ஆண்டுகள் இருந்தன. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகவோ இன்னும் 41ஆண்டுகள். லட்சுமிநரசு ‘மதியம்’ எனும் இதழை உருவாக்கினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில், மாதம் மும்முறை வந்த இந்த இதழின் நோக்கம் ‘ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.’ இந்த இதழின் அசிரியராக செட்டி இந்துக்கள் மீதும் பாரதத்தின் மீதும் அபிமானம் கொண்ட எட்வர்ட் ஹார்லே என்பவரை நியமித்தார். இந்தப் பத்திரிகையின் புலனாய்வு நிருபர்கள் பெரும் வலையென அரசு இயந்திரமெங்கும் உள்ளிருந்தார்கள். இவர்களில் கொஞ்சம் தார்மிக உணர்வு கொண்ட சில பிரிட்டிஷாரும்கூட அடக்கம். இவர்கள் மூலம் அரசின் திட்டங்களை முன்னரே அறிந்து வெளிப்படுத்தும்போது ‘விண்டெக்ஸ்’, ‘வெளிப்படையாகப் பேசுவோன்’ என்பது போன்ற புனைபெயர்கள் பயன்படுத்தப்பட்டன.

இப்படி ‘மதியம்’ அன்றைக்கு வெளிப்படுத்திய விஷயங்களில் சில: இந்துக் கோவில்களிலிருந்து வரும் பணத்தை, கோவில் நிர்வாகத்துக்கு மட்டும் கொஞ்சம் கொடுத்துவிட்டு, அரசே எடுத்துக் கொள்வது; மெட்ராஸ் பல்கலையில் கிறிஸ்தவ பைபிளை மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்க கவர்னர் தன் ரகசியக் கூட்டத்தில் பேசிய விஷயங்களின் பதிவு; மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக இந்துக்களின் சொத்துச் சட்டத்தை மாற்றும் முயற்சி; இத்யாதி.

மெட்ராஸ் பல்கலையில் பைபிளைப் புகுத்தும் முயற்சி பிரிட்டிஷாரின் வரையறுக்கப்பட்ட தந்திர இலக்கணங்களுடன் செய்யப்பட்டது. முதலில் ஆங்கிலம் சொல்லித்தரப்படாத சுதேசி கல்வி அமைப்புகளில் – திண்ணைப்பள்ளி போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகள் மறுக்கப்பட்டன. இது ஆங்கிலக் கல்வி படிக்கும் தேவையை ஏற்படுத்தியது. இதற்கு மெட்ராஸ் பல்கலையை சென்னையிலும் இதர நகரங்களிலும் வாழும் மிகப் பெரும்பாலானோர் அணுகினர். ஆனால் இதில் படித்து தேர்ச்சி கிடைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை. இந்த வேலையின்மைக்குக் காரணம் மாணவர்களின் கல்வித் தரத்தில் உள்ள ஏதோ ஒரு குறைபாடு. உண்மையில் அந்தக் குறைபாடு என்னவென்றால் கிறிஸ்தவ மதத் தொடர்பான கேள்விகள் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும். அதில் பதிலளிக்க இயலாதவர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய, பிரிட்டிஷ் அரசு வேலைக்குத் தயார்படுத்த ஒருவருக்கு பைபிள் அறிவு அவசியம் என சொல்லி பைபிளை ஒரு கட்டாயப் பாடமாக்க கவர்னர் பெருந்தகை திட்டமிட்டிருந்தார்.

அத்துடன் விஷயத்தை விட்டுவிடவில்லை லட்சுமிநரசு செட்டி. பச்சையப்பா கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தைத் திரட்டினார். அக்டோபர் 7 1846ல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டு கவர்னருக்கு எதிரான மனு பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் சமயச் சார்பின்மை கொண்டவராக இல்லாமல் கிறிஸ்தவ மதத்துக்கு பாரபட்சம் காட்டுகிறார், மதம் மாறாத பட்சத்தில், இந்து மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதைக்கூட மிஷினரிகளால் தடுக்க முடிகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அரசு இயந்திரமும் கிறிஸ்தவ மிஷினரிகளும் இணைந்து செய்யும் இந்த நடவடிக்கைகளை அந்த மனு கண்டித்தது. இது அரசு இயந்திரத்துக்குள் சர்ச்சையை உருவாக்கியது. கவர்னரின் கவுன்ஸிலில் உறுப்பினரான சாமெயர் என்பார் இதைக் குறித்து ‘மத ரீதியில் மக்களுக்கு எதிரான நடவடிக்கையால், மக்கள் அரசுக்கு மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பலத்த அடி’ விழுந்திருப்பதாகக் கூறினார். எப்படி ஆவணங்கள் கசிந்தன என ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் ‘மதியம்’ அதே வீரியத்துடன் செயல்பட்டது. அதன் அலுவலகம் தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு உள்ளானது.

அரசு ‘கிரெஸெண்ட்’ என்கிற ‘மதியம்’ பத்திரிகைக்கு எந்த விதத்திலெல்லாம் கஷ்டங்கள் உண்டாக்க முடியுமோ அப்படியெல்லாம் கஷ்டங்களை உருவாக்கியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கெஸட்டில் பத்திரிகையின் விளம்பரத்தை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது அரசு. குறிப்பாக பச்சையப்பா கல்வி நிறுவன மாநாட்டில் செட்டி அவர்களின் உரை குறித்த உளவுத்துறை அறிக்கை ‘கேட்போரிடம் கலக உணர்வைத் தூண்டுவதாகவும் ஹிந்துக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் திருப்புவதாகவும்’ அமைந்தது எனக் கூறியது.

அதே 1840களில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆதரவுடன் ஜரூராக மதமாற்றத்தை மிஷினரிகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். சாதாரண ஹிந்துக்கள், பெரும்பாலும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்த உழைக்கும் பெருங்குடி மக்கள், இதற்கு எதிர்ப்பு காட்டினர். இது ‘விபூதி இயக்கம்’ என பெயர் பெற்றது. மதம் மாற்ற வருவோர் மீதும் மதம் மாறிட சொல்வோர் மீதும் விபூதியை வலுக்கட்டாயமாக பூசி அவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். விரைவில் திருநெல்வேலி இந்துக்கள் ‘விபூதி சங்கம்’ என்றே ஒரு அமைப்பைக் கூட ஏற்படுத்தினர். ஆனால் மிஷினரிகளுக்கு இருந்த காவல்துறை செல்வாக்கோ அரசு அதிகாரமோ அவர்களுக்கு இல்லை. இம்மக்களுக்குக் கைகொடுக்க சென்னையில் இருந்த இந்துப் பெருமக்கள் முடிவு செய்தனர். சென்னையில் ‘சதுர்வேத சித்தாந்த சபை’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் ‘கல்விக் களஞ்சியம் பிரஸ்’ என்கிற பெயரில் ஒரு அச்சகம் உருவாக்கப்பட்டது. (14 சாலைத் தெரு பிள்ளையார் கோவில் அருகில்.) இது உமாபதி முதலியார் என்பவராலும் அவர் சகோதரராலும் தொடங்கப்பட்டது. விபூதி கலகத்தில் கைது செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஏற்படுத்தி வாதாட, அவர்களுக்கு நிதி உதவி செய்ய, சதுர்வேத சித்தாந்த சபை களம் இறங்கியது. மெட்ராஸ் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த லெவின் என்பவர், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பு வழங்கினார். கவர்னர் இதனால் ஆத்திரமடைந்தார். தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்தத் தீர்ப்பை ரத்து செய்தார். மிஷினரிகளுக்கு ஆதரவாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தார். மீண்டும் களமிறங்கினார் லட்சுமிநரசு செட்டி. முதலியாருடனும் ஸ்ரீனிவாசப் பிள்ளை எனும் தன் தோழருடனும் கூட்டங்கள் நடத்தி இதனைக் கண்டித்தார். ஆயிரக்கணக்காக மக்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு அரசுக்குக் கண்டனத் தீர்மானம் அனுப்பப்பட்டது.

தன் இதழ் செய்யும் பணிகளை மேலும் ஒரு இயக்கமாக மாற்ற 1849ல் செட்டி அவர்கள் தொடங்கிய அமைப்பு ‘மெட்ராஸ் மகாஜன சங்கம்’. அவரும் அவரது தோழர் ஸ்ரீனிவாச பிள்ளையும் இணைந்து ‘மெட்ராஸ் ஹிந்து லிட்ரரி சொஸைட்டி’ என்கிற அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்து, அது தோற்ற பின்னரே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த சொசைட்டியின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் முக்கியமானது. 1833ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக இருந்தவர் காவெலி வெங்கட லட்சுமய்யா என்பவர். இவர் ராயல் ஆசியாட்டிக் ஸொசைட்டியிலும் உறுப்பினராக இருந்தவர். செட்டியும் பிள்ளையும் இந்துக்களுக்காகவும் மதமாற்றத்துக்கு எதிராகவும் பாடுபட்ட இந்த சொஸைட்டியின் முக்கிய ஆதரவாளர்கள். என்னதான் சமுதாயத்தில் மதிக்கப்பட்ட பிரமுகர்கள் இந்த சொஸைட்டியில் இருந்தாலும் அரசு இந்த சொஸைட்டியை எட்டிக்காய் போலவே நடத்தியது. என்னதான் அலங்கார வார்த்தைகள் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்தினரால் பேசப்பட்டாலும் ஹிந்துக்களின் சுய ஒருங்கிணைப்பு என்று வந்தால் அரசு அதை மிகவும் குரோதத்துடன் நடத்தியது.

பணபலத்திலும் அரசு ஆதரவிலும் மிஷினரிகளுடன் ஒப்பிடுகையில் இந்த சொஸைட்டி ஒரு புல்லுக்கு சமானம். ஆனாலும் இம்மக்கள் தம் சொந்த முயற்சியில் ஒரு கல்விச்சாலையை சென்னையில் ஆரம்பித்தனர். ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளும் சுதேச மொழிகளில் அறிவியல் உட்பட இதர பாடங்களும் நடத்தப்பட்டன. இவர்களுக்கு ஒரு கட்டத்தில் கடுமையான நிதி உதவி தேவைப்பட்டபோது அவர்கள் அரசை அணுகினார்கள். பெட்டிஷன் மேல் பெட்டிஷன்கள் அனுப்பப்பட்டன. அரசு பாராமுகமாகவே இருந்தது. இந்துக் கோவில் வருமானங்களை எடுத்துக்கொண்ட காலனிய அரசு, மிஷினரிகளுக்கு சலுகைகளும் நிலங்களும் வழங்கிய அரசு, இந்துக்களின் சுய முயற்சிகளுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை.

இந்த சொசைட்டியின் மனுவைப் படிக்கும்போது இவர்கள் எந்த அளவுக்குத் தொலைநோக்குப் பார்வையுடன் விஷயங்களை அணுகியிருக்கிறார்கள் என்பது அதிசயமாக இருக்கிறது. ‘விஞ்ஞான அறிவை எம் இளைஞர்களுக்கு ஆங்கிலத்திலும் கீழைத் தேச மொழிகளிலும் கற்பிக்க’ தாம் இந்தக் கல்விச்சாலையை ஆரம்பித்ததாக அந்தக் கோரிக்கை மனு சொல்கிறது. இதில் அதிசயம் என்னவென்றால் லண்டனிலுள்ள ராயல் ஏசியாடிக் சொஸைட்டியில் உள்ள பாரதச் சார்பு உறுப்பினர்களை இந்த சொசைட்டியினர் அணுகி அவர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களைப் பெற்று அதனை காலனிய அரசுக்கு அனுப்பியுள்ளனர். அரசாங்கம் பிற தொண்டு நிறுவனங்களுக்கு (கிறிஸ்தவ) செய்யும் அடிப்படை சலுகையைக்கூட இவர்களுக்கு அளிக்கவில்லை. வெறும் 235 ரூபாய் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில் அரசின் எவ்வித ஆதரவும் இன்றி அரசிடம் மீண்டும் மீண்டும் மன்றாடினர் இம்மக்கள். இறுதியில் இந்த சொஸைட்டி செயலிழந்து நின்றது.

லட்சுமிநரசு செட்டியின் பார்வை ஒரு முழுமையான சமுதாயப் பார்வை. மிஷினரி ஆக்கிரமிப்பு, கோவில் நிலங்கள் இழப்பு ஆகியவற்றையும் வரி வசூலில் செய்யப்படும் கொடுமைகளையும் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினையாக அவரால் பார்க்க முடிந்தது. எனவே மிஷினரி-காலனிய மதமாற்றத்துக்கு எதிராகப் போராடிய அதே வேகத்துடன் விவசாயிகளை வரிவசூலிப்புக்காக சித்திரவதை செய்வதையும் எதிர்த்துக் களமிறங்கியது மகாஜனசபை. 1852ல் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளை மகாஜனசபை ஆவணப்படுத்தியது:

‘தங்களுக்கு மனு சமர்ப்பிப்போரின் இந்தத் துயரமானது அதீத வரிவசூலினாலும் அதனுடன் இணைந்து செய்யப்படும் கொடுஞ்செயல்களாலும் ஏற்படுகிறது. கம்பெனியாரின் நீதிமன்றங்களில் முறையிடப்படும் குறைகள் காலதாமதத்தினாலும் திறமையின்மையினாலும் தீர்க்கப்படுவதில்லை; முக்கியத் தேவைகளாக மனுதாரர் கருதுபவை சாலைகள், பாலங்கள், நீர்ப் பாசனத் தேவைகள், மக்களுக்கான கல்விச் சேவை, அரசுச் செலவு கட்டுப்படுத்தப்படுதல், உள்ளூர் அரசு அமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு சந்தோஷத்தையும் தேசத்துக்கு வளத்தையும் அளிக்கும் ஒரு ஆட்சி.’

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி என்பது பிரிட்டிஷ் ஆட்சிதான். ஆனால் மக்கள் கோரிக்கைகள் எழும்போது பொறுப்பைத் தட்டி தவிர்க்க அது ஒரு முகமூடி. செட்டி இதை நன்றாகவே புரிந்துகொண்டார். எனவே ஆட்சிப் பொறுப்பு நேரடியாக பிரிட்டிஷ் அரசுக்கு மாற்றப்பட வேண்டுமென அவர் கூறினார். பாரத மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலிருந்து பிரிட்டன் அப்போதுதான் தப்ப முடியாது.

இந்த மனு சமர்ப்பிக்கப்பட்ட அதே ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹிந்து மக்களிடம் பரிவெண்ணம் கொண்டவருமான டான்பி ஸெய்மௌர் என்பவர் இந்தியா வந்தார். லட்சுமிநரசு அவரைத் தம் வீட்டில் தங்க வைத்தார். அவரை லட்சுமிநரசு தஞ்சை விவசாயப் பகுதிகள் முழுக்க அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் வரிவசூல் கொடுமைகளையும் ஏழை விவசாயிகள் படும் கொடுமைகளையும் காட்டினார். அத்துடன் நில்லாமல் ஜனவரி 24 1853ல் பிரிட்டிஷ் அரசுக்கு ‘இங்கு நடைபெறும் சித்திரவதைகள் குறித்து ஆராய ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டு’மென்று எழுதினார் லட்சுமிநரசு.

ஜூலை 1854ல் ஸெய்மௌர் இந்த விஷயத்தை பிரிட்டிஷ் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’-ல் பேசினார். தான் நேரடியாகக் கண்டவற்றை சாட்சியம் அளித்தார். கும்பெனியாரின் வரி வசூலிப்புக் கொடுமைகளால் எளிய விவசாயிகள், உழவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதன் விளைவாக சித்திரவதை குற்றச்சாட்டை ஆராய ஒரு கமிஷனை பிரிட்டிஷ் அரசு தென்னிந்தியாவுக்கு, குறிப்பாக தஞ்சை பகுதிக்கு அனுப்பியது. ‘சித்திரவதை கமிஷன்’ எனப் பிரபலமாக அறியப்பட்ட இந்த கமிஷன் இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் வேளாண் தொழிலாளர்களையும் சந்தித்து உண்மையைக் கண்டறியும் பணியுடன் தமிழகம் வந்தது. இது ஒருபுறம் நடக்கும்போதே லட்சுமிநரசு செட்டி விவசாயிகள் சார்பில் மற்றொரு மனுவை ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களுடன் பிரிட்டிஷ் மேல்சபைக்கு அனுப்பினார். 1856 ஏப்ரல் 14 அன்று அது ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’-ல் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதே சமயம் ‘சித்திரவதை கமிஷன்’ தன் அறிக்கையை சமர்ப்பித்தது. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசு காலனிய வரிவசூலில் நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.

நவீன ஜனநாயக முறைமைகளையும் அத்துடன் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்தின் செயல்பாட்டையும் மிக நன்றாக உள்வாங்கி, அதையே பாரத தேசநன்மைக்காகப் பயன்படுத்தி வெற்றியடைந்திருந்தார் திண்ணைப் பள்ளிகளில் கல்வி பயின்ற லட்சுமிநரசு செட்டி.

அவர் மீது எப்போதுமே காவல்துறையின் கண்காணிப்பு இருந்து வந்தது. காவல்துறை சூப்பிரெண்டின் அறிக்கை, லட்சுமிநரசு செட்டி அவர்களின் உரை வீச்சு மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக மாற்றியது என்பதைக் கூறுகிறது – குறிப்பாக ‘சமுதாயத்தின் கீழடுக்குகளில் இருக்கும் மக்களை, அந்த அறியாதவர்களை (அரசுக்கு எதிராக) உஷாராக்கியது’ என்கிறது. ஏதோ அரசுக்கு எதிராக அன்றைய கிளப்புகளில் அமர்ந்துகொண்டு பெட்டிஷன் போடுகிற ரகமாக செட்டி அவர்கள் செயல்படவில்லை. மாறாக அதிகார உயர் பீடங்களுடன் மோதுகிற அதே நேரத்தில் அவரது போராட்டத்தை அவர் சமுதாயத்தின் அனைத்துத் தள மக்களுக்கும் கொண்டு சென்றவர் செட்டி.

விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளை போராடிய அதே காலகட்டத்தில், சிறிதும் சளைக்காமல், விழிப்புணர்வுடன், மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகள் கல்வி அமைப்புகளில் நடப்பதையும் எதிர்த்து அவர் போராடினார். 1853ல் கவர்னர் பைபிளை மீண்டும் கல்விச்சாலைகளில் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் லட்சுமிநரசுவின் மெட்ராஸ் மகாஜன சங்கம் அதை முறியடித்தது. இந்த அமைப்பின் கடைசி மனு 1859ல் இந்திய அரசு செயலரான ஸ்டேன்லிக்குக் கொடுக்கப்பட்டது. இதில் கோவில் நிலங்களின் இழப்பு குறித்து கூறப்பட்டது. கல்விச் சாலைகளில் பைபிள் திணிக்கப்படுவதையும் பொதுவாக இந்துக்களுக்கு எதிரான ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுவதையும் கண்டித்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸி கல்லூரியில் சமஸ்கிருதமும் சுதேசி மொழிகளும் சொல்லிக் கொடுக்க பீட்டர் பெர்ஸிவல் என்பார் நியமிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. ஏனென்றால் அவர் இந்துக்கள் மீது வெறுப்பைக் கக்கும் மிஷினரி, அவருக்கு தமிழில் அறிவு தொடக்கநிலை அறிவுதான், சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க கிஞ்சித்தும் அருகதை அற்றவர், அவரது நூலில் ஔவையாரின் செய்யுள்களைத் திரித்து மோசடி செய்தவர் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிய அந்த மனுவில் கணிசமாக முஸ்லீம் மக்களின் கையெழுத்துக்களை செட்டி அவர்களால் பெற முடிந்தது என்பது முக்கியமான விஷயம்.

பெண்கல்வியில் மிகவும் அக்கறை காட்டிவர் செட்டி அவர்கள். தன் செல்வத்தில் கணிசமான பங்கை பெண்களுக்கான கல்வி சாலைகளை நிறுவ செலவளித்தவர் அவர். அந்த காலகட்டத்திலேயே விதவைகள் மறுமணத்துக்காக பிரசாரம் செய்தவர்.

லட்சுமிநரசு செட்டி ஒட்டுமொத்த தென்னகத்தின் நலனைத் தம் பார்வையில் கொண்டிருந்தார். மைசூர் போரின்போது பிரிட்டிஷ் அரசு ஹைதராபாத் நிஜாமுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்திருந்தது. திப்புவைத் தோற்கடிக்க நிஜாம் உதவினால், பின்னர் மைசூர் ராஜ்ஜியத்தை அதன் உண்மை ராஜாவிடம் கொடுக்கத் தேவையில்லாத நிலை வந்தால், பிரிட்டிஷாரும் நிஜாமும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது அது. போருக்குப் பல ஆண்டுகளுக்கு பின்னரும் மைசூர் அரச வம்சத்திடம் பொறுப்பை முழுமையாக அளிக்காமல் பிரிட்டிஷ் அரசு ஊசலாடிக் கொண்டிருந்தது. செட்டி இதனைக் கவனித்தார். மிகுந்த ராஜ தந்திரத்துடன் அவர் ஒரு விஷயம் செய்தார். மைசூர் கிருஷ்ண ராஜ உடையாரிடம் ஒரு நெருங்கிய உறவினர் பையனை இளவரசனாகத் தத்தெடுக்கச் சொன்னார். பின்னர் ஹைதராபாத் நிஜாமின் பிரதம அமைச்சர் சர் சாலர் ஜங் மூலமாக பிரிட்டிஷாரிடம் அவர்கள் வாக்குறுதியை நினைவூட்டி அழுத்தம் தரச் சொன்னார். ஏற்கெனவே வட இந்தியாவில் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்நிலையில் மைசூர் மகாராஜாவைப் பகைத்து இன்னொரு எதிரியை தென்னிந்தியாவில் உருவாக்க விரும்பவில்லை. விளைவாக கிழக்கிந்திய கம்பெனியார் மைசூரை அதன் மகாராஜாவிடமே அளிக்க வேண்டியதாயிற்று.

பிரிட்டிஷார் அவரைப் பெரும் ஆபத்தாகப் பார்த்தார்கள். அவரது பொது உரைகள் போலீஸ் உளவுத்துறையினரால் கவனிக்கப்பட்டன. 1857க்குப் பிறகு ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட இந்தியர்களிடம் சமரசம் செய்து கொள்வது நல்லது எனக் கருதப்பட்டது. எனவே 1861ல் அவரை அரசே கௌரவித்தது. 1863ல் மெட்ராஸ் சட்டசபை கவுன்ஸிலில் அவர் உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் இதற்கிடையில் செட்டி வறுமைக்குத் தள்ளப்பட்டிருந்தார். 1846ல் தபால் மூலமாக மட்டும் 10,809 பிரதிகள் விற்ற ‘மதியம்’, 1853ல் 4794 ஆகக் குறைந்து, இறுதியில் வெறும் 150க்கும் கீழே சென்றபோது அதை அவர் நிறுத்த வேண்டி வந்தது. ஆதரிக்க ஆளில்லை.

1868ல் செட்டி அவர்கள் பணத்தின் வறுமையிலும் தேசபக்த செழிப்புடனும் இறந்தார். தேசத்தையும் தேச தர்மத்தையும் காப்பதே அவரது வாழ்க்கையின் முழு போராட்டமாக அமைந்தது. தேசத்தின் விவசாயிகள், நிலங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் ஹிந்து தர்மப் பாதுகாப்புக்குமான தொடர்பினை முதன்முதலாக ஜனநாயக யுகத்தில் வலியுறுத்தி எழுந்த குரல் சென்னையிலிருந்து எழுந்தது. அவரது வாழ்க்கையை நினைவில் கொள்வது நம் கடமை. ஆம். வீர சாவர்க்கருக்கு முன்னோடியாக எழுந்த ஹிந்துத்துவ குரல் சென்னையிலிருந்து எழுந்தது.

  • நன்றி: வலம் (ஆகஸ்ட் 2018)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s