புரட்சியாளர் வீர சாவர்க்கர்

-திருநின்றவூர் ரவிகுமார்

விநாயக தாமோதர சாவர்க்கர்

விநாயக தாமோதர சாவர்க்கர் ஒரு புரட்சிகர தியாகி; இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது வாழ்க்கையே தொடர் போராட்டத்தின் அடையாளம். அந்தப் போராட்டங்களில் முதலாவதாக இருப்பது இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்திற்கும் புத்துயிரூட்ட அவர் நடத்திய போராட்டம். அடுத்ததாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற நடத்திய போராட்டம். மூன்றாவதாக, சுயநல அரசியலுக்காக தனது சக இந்தியர்கள் செய்த கேலியையும் எதிர்ப்பையும் தாங்கி நின்றது.

இந்தியா ஆக்கிரமிப்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டு அடிமைப்பட்டதற்கு அன்னியர்களின் வலிமை காரணமல்ல, நமது சொந்த மக்களிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு இல்லாததும் மனஉறுதி இல்லாததுமே காரணம். சாவர்க்கர் இந்த இரண்டு விஷயங்களையும் தன் வாழ்விலும் எதிர்கொண்டார். அவரது போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல; அரசியலில் ஆதிக்கம் செலுத்தவும் அல்ல. மாறாக இந்திய தேசத்தின் கௌரவத்தை மீட்கவும் ஹிந்து சமுதாயத்தை விழிப்புற செய்வதற்காகவும் நடத்தப்பட்டது. அவரது வாழ்க்கையும் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையும் இந்தியாவின் அடையாளத்தை நிறுவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

தம்பி நாராயண் சாவர்க்கர், அண்ணன் கணேஷ் சாவர்க்கர் ஆகியோருடன் விநாயக் சாவர்க்கர். நிற்பவர்கள்: சகோதரி நைனா காலே, நாராயண் சாவர்க்கரின் மனைவி சாந்தா, விநாயக் சாவர்க்கரின் மனைவி யமுனாபாய்.

பிறப்பு, வளர்ப்பு

அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனா மாவட்டத்தில் உள்ள பாகூர் கிராமத்தில் 1883 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை தாமோதர பந்த் சாவர்க்கர், தாயார் ராதா பாய். அவருக்கு இரண்டு சகோதரர்கள். அண்ணன் கணேஷ் தாமோதர சாவர்க்கர். தம்பி நாராயண தாமோதர சாவர்க்கர். இவரது சகோதரியின் பெயர் நைனா பாய்.

விநாயக்கிற்கு ஒன்பது வயதிருக்கும்போது அவரது தாய் பிளேக் கொள்ளை நோய்க்கு ஆளாகி காலமானார். அடுத்த ஏழாண்டில், 1899இல், அதே நோய்க்கு  ஆளாகி அவரது தந்தையும் மரணித்தார். கணேஷ் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று.

துன்பமும் துயரமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் உறுதியாக குடும்பத்தைக் காத்த அண்ணன் கணேஷ் சாவர்க்கரின் ஆளுமை விநாயக்கிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சொந்தக் காலில் நின்றதுடன் குடும்பத்தையும் அண்ணன் காப்பாற்றி வருவதைப் போல தானும் சொந்தக் காலில் நிற்பதுடன், சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உருவானது.

சில மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, சாதிப்பதற்காகவே பிறந்தவர்கள். அதற்குரிய ஆற்றலுடன் இயற்கை அவர்களை உலகத்திற்கு அனுப்பும். அவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பாடம் கற்பார்கள், சமுதாயத்துக்கும் கற்றுக் கொடுப்பார்கள். விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்த விஷயத்தில் அதிகத் திறன் படைத்தவர். அவர் ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் சிந்திக்கக் கூடியவர்.

மித்ர மண்டல்  

பிளேக் தொற்றுநோய் அவரது பெற்றோர்களை மட்டுமல்ல  லட்சக் கணக்கானவர்களையும் கொன்றது. அத்துடன் ஆங்கிலேயர் சிப்பாய்களின் சுரண்டலும் சேர்ந்துகொண்டு இந்தியர்களை பலி வாங்கியது. இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விநாயக் முடிவெடுத்தார்.

தன்னுடன் படித்த சக மாணவர்களைக் கொண்டு ஒரு குழுவை ஏற்படுத்தி விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டார். அதே வேளையில், 1901 இல் நாசிக்கில் உள்ள சிவாஜி உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார். அவருக்குப் படிப்பதில் இருந்த ஆர்வம் போலவே எழுதுவதிலும் இருந்தது. சமகால நிகழ்வுகள் குறித்து அவர் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். அவர் ஏற்படுத்திய மித்ர மண்டலில் (நண்பர்கள் வட்டம்) தேசத்தைப் பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்திய அன்னைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றியும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் நண்பர்கள் விவாதித்தார்கள். இதனால் இளைஞர்களிடையே தேசிய உணர்வு வலுப்பெற்றது.

விநாயக் தனது பதினேழாவது வயதில் யமுனா பாயைத் திருமணம் செய்து கொண்டார். மாமனார் ராமசந்திரர், அவரது உயர்கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1902இல் பூனாவில் உள்ள பெர்கூஷன் கல்லூரியில் பட்டப் படிப்பிற்காகச் சேர்ந்தார். விநாயக்கிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகனின் பெயர் விஷ்வாஷ் சாவர்க்கர், மகள் பிரபாத் சாவர்க்கர். பின்னாளில் அவர் சிப்லுங்கர் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள்.

அபிநவ பாரத் இயக்கம்

பூனாவில் 1904இல், அவர்  ‘அபிநவ பாரத்’  என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவொரு புரட்சி இயக்கம். பின்னாளில் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. 1905இல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு அந்த அமைப்பின் சார்பில் பூனாவிலும் அதைச் சுற்றி உள்ள இடங்களிலும் அந்நியத் துணி  எரிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

விநாயக் சாவர்க்கரும் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த அவரது நண்பர்களும் ஊர் ஊராகச் சென்று தேசபக்தி உரையாற்றி மக்களை விழிப்புறச் செய்தனர். பாலகங்காதர திலகர் அந்த அமைப்பினருக்கு முழு ஆதரவு அளித்தார். திலகருடைய முயற்சியால் சாவர்க்கரின் மேற்படிப்பிற்கு நிதி நல்கை கிடைத்தது. அவர் எழுதிய கட்டுரைகள்  ‘இந்திய சோஷியலிஸ்ட்’ என்ற பத்திரிகையிலும், கல்கத்தாவில் இருந்து வெளிவந்த புரட்சிகர பத்திரிகையான  ‘யுகாந்தரி’லும் வெளியாயின.

முதல் சுதந்திரப் போர்

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சாவர்க்கர் சட்டம் படிக்க லண்டனுக்குச் சென்றார். அங்குள்ள அருங்காட்சியகத்தில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டு, 1857இல் இந்தியாவில் நடந்த எழுச்சியைப் பற்றியும் அதை ஆங்கிலேயர்கள் எப்படி நசுக்கினார்கள் என்பது பற்றியும் விளக்கமாகப் படித்தறிந்தார். அதைப் படித்த பிறகு 1907 மே மாதம் 10 ஆம் நாள் லண்டனில் அவர் தங்கியிருந்த இந்தியா ஹவுஸில் முதல் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வில் தனது அனல் பறக்கும் பேச்சின் மூலம் 1857இல் நடந்த கிளர்ச்சி உண்மையில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்பதை நிறுவினார்.

அதையொட்டி இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதினார். 1908 ஜூன் மாதம் அந்த நூலை எழுதி முடித்தார். ஆனால் அதை அச்சிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. பலவிதமான முயற்சிகளுக்கு பிறகு அந்த நூல் ஹாலந்தில் அச்சிடப்பட்டு பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டது. அந்த நூலில் 1857இல் நடந்த சிப்பாய்க் கலகம்தான் ஆங்கில அரசுக்கு எதிராக நடந்த முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அவர் கூறியிருந்தார். அந்த நூலினை வெளியாவதற்கு முன்பே தடை செய்தது ஆங்கிலேய அரசு. உலகில் வெளியாகும் முன்னரே தடை செய்யப்பட்ட நூல்கள் அரிது; அதில் இதுவும் ஒன்று.

1909 மே மாதம் அவர் பார் அட் லா தேர்வில் வெற்றி பெற்றார். ஆனாலும் வழக்கறிஞராக தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை. காரணம்,  ‘மேன்மை தங்கிய (இங்கிலாந்து) மன்னருக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்று பிரமாணம் செய்ய அவர் மறுத்ததுதான்.

லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸின் தற்போதைய நிலை. (இது இந்திய அரசால் நினைவுச் சின்னமாக பராமரிக்கப்படுகிறது).

இந்தியா ஹவுஸில் செயல்பாடுகள்

லண்டனில் உள்ள கிரே இன் சட்டக் கல்லூரியில் சாவர்க்கர் சேர்ந்த பிறகு  அவர் இந்தியா ஹவுஸில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் மாளிகையான அது அந்தக் காலத்தில் இந்திய அரசியல் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. சாவர்க்கர் அங்கு தங்கியிருந்தபோது இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த அனைவரையும் தொடர்பு கொண்டார். இந்தியா ஹவுஸின் மேலாளராக இருந்த லாலா ஹர்தயாளைச் சந்தித்தார்.

இந்தியா ஹவுஸில் சாவர்க்கருடன் இருந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், தமிழகத்தின் வ.வே.சு.ஐயர், மண்டையம் பி.டி.ஆச்சாரியா ஆகியோர். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (பின்னாளில் மகாத்மா காந்தி) 1906இல் லண்டன் வந்தபோது, இந்தியா ஹவுஸுக்கு வந்து, அங்கு நடந்த விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

புரட்சியாளர் மதன்லால் திங்க்ரா லண்டனில் 1909 ஜூலை 1 ஆம் நாள் சர் வில்லியம் ஹட் கர்சான் வில்லியை சுட்டுக் கொன்றார். (இக்குற்றத்திற்காக லண்டனில் 1909 ஆகஸ்ட் 17இல் திங்ரா தூக்கிலிடப்பட்டார்). கர்சான் வில்லி கொலையில் இந்தியா ஹவுஸில் தங்கியிருந்தவர்கள் மிது குற்றம் சாட்டப்பட்டது. அதேசமயம், கர்சான் வில்லி கொலை பற்றி சாவர்க்கர்  ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார். அதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது பாரீசில் இருந்த சாவர்க்கர் லண்டன் வந்ததும், 1910 மே மாதம் 10 ஆம் நாள், கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு மோரியா என்ற கப்பலில் காவல் துறையினர் கொண்டு சென்றபோது, 1910 ஜூலை 8 ஆம் தேதி, கப்பலுக்குள் வெளிச்சம் வர வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து அதன் வழியே கடலில் குதித்தார். கடலில் நீந்தி பிரெஞ்சு மண்ணில் ஏறிய போது பிடிபட்டார்.

இரட்டை ஆயுள் தண்டனை

அவருக்கு 1910 டிசம்பர் 2 4 ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1911 ஜனவரி 31 நாள் மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது உலக வரலாற்றில் அரிய நிகழ்வு.

சாவர்க்கர் தாயகப் பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர் என்பதால், தண்டனையை ஏற்றுக் கொண்டார். பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். நாசிக் மாவட்ட கலெக்டராக இருந்த ஜாக்சன் கொலை வழக்கில் இவரை சம்பந்தப்படுத்தி அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைக்கு 1911 ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பியது ஆங்கிலேய அரசு. அந்தக் கொடுங்கோல் கலெக்டர் இவரது அண்ணனுடன் மோதியதால், மொத்தக் குடும்பமும் வழக்கில் சிக்க வைக்கப்பட்டது. அண்ணனும் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது சொல்லொனாக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.

அந்தமான் சிறையில்…

எண்ணெய்ச் செக்கில் மாடுகளுக்குப் பதிலாக சிறைக் கைதிகளைக் கொண்டு செக்கில் எண்ணெய் அரைக்கப்பட்டது. அத்துடன் அந்த தீவுப் பகுதியில் இருந்த காடுகளை அழித்து சமப்படுத்தவும் மலைப்பகுதியில் விளைநிலங்களை ஏற்படுத்தும் பணியிலும் இவர்களை ஈடுபடுத்தியது ஆங்கில அரசு. வேலை அசதியில் சற்று ஓய்வு எடுத்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். சவுக்கடியும் தடியடியும் அங்கு சாதாரணம். அது மட்டுமின்றி சாப்பிட சரியான உணவும் கொடுக்காது ஆங்கிலேய அரசு. இவை எல்லாவற்றையும் சாவர்க்கர் தாங்கிக் கொண்டார். 1911 ஜூலை 4 ஆம் தேதியிலிருந்து 1921 மே மாதம் 21 ஆம் தேதி வரை அவர் அந்தமான் சிறையில் இருந்தார்.

சாவர்க்கர் பத்தாண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் செல்லுலர் சிறையறை.

கருணை மனு

1919 இல் பாலகங்காதர திலகர், வல்லபபாய் பட்டேல் ஆகியோரின் அறிவுரையின் பேரில் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனுவை அனுப்பினார். கடைசியில்,  ‘புரட்சியை தூண்டக்கூடாது. ஆங்கிலேய சட்டங்களை மீறக் கூடாது’ என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் வாழ்க்கை முடிந்து போவதை விட தேசப்பணியில் உயிருடன் ஈடுபடுவது மேலானது என்பது அவருக்குத் தெரியும். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையின் இயல்பும் அவருக்குத் தெரியும். அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தேசப் பணியைச் செய்ய வேண்டும் என சாவர்க்கர் முடிவெடுத்தார்.

‘சிறைக்கு வெளியே இருந்தால் அவர் நினைத்த காரியத்தில் ஈடுபடலாம். மாறாக அந்தமான் சிறையில் அடைபட்டுக் கிடந்தால் அவ்வாறு செயல்பட முடியாது’ என்ற செய்தியை திலகர் அவருக்கு அனுப்பியிருந்தார்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு

விடுதலைக்கு பிறகு ஆங்கிலேயர அரசின் தீவிரக் கண்காணிப்பில் ரத்தினகிரியில் அவர் தங்கி இருந்தார். அப்போது அவர் 1921இல் ஹிந்துத்துவம் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார். 1925இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரைச் சந்தித்தார். 1931 பிப்ரவரியில் அவரது முயற்சியால் பம்பாயில்  ‘பதிதபாவன் மந்திர்’ கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அது எல்லா ஜாதி ஹிந்துக்களுக்குமான கோயில் ஆகும். 1931 பிப்ரவரி 25 ஆம் தேதி பம்பாயில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார்.

1935இல் ரத்தினகிரியில் மகாத்மா காந்தியை சாவர்க்கர் சந்தித்துப் பேசினார். அப்போது ஹிந்துத்துவம் தொடர்பாக இருவரும் தீவிரமாக விவாதித்தனர். காந்தியின் பல கருதுகளுடன் சாவர்க்கர் முரண்பட்டார். 1937 இல் அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய ஹிந்து மகாசபை மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஏழாண்டுகள் தலைவராக இருந்தார்.

1938 ஏப்ரலில் மராட்டிய சாஹித்திய சம்மேளனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941 ஜூன் மாதத்தில் அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்தார். 1942 அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென சர்சிலுக்கு தந்தி அனுப்பினார். தன் வாழ்நாள் முழுவதும் தேசப் பிரிவினைக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு ஆதரவாகவும் நின்றார். 1943க்குப் பிறகு சாவர்க்கர் பம்பாயில் வசிக்கலானார். 1945 மார்ச் மாதம் அவரது சகோதரர் பாபாராவ் கணேஷ் சாவர்க்கர் காலமானார்.

1945 ஏப்ரல் மாதத்தில் ஹிந்து சமஸ்தானங்களின் அகில இந்திய மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். அதே ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி அவரது மகள் பிரபாத்திற்கு திருமணம் நடந்தது. 1946 ஏப்ரல் மாதம் பம்பாய் மாகாண அரசு அவரது எழுத்துக்கள் மீதான தடையை நீக்கிக் கொண்டது.

1947இல் இந்தியப் பிரிவினையை எதிர்த்தார். தேசத்தைப் பிரிக்கக் கூடாது, அப்படியே பிரித்தால் அது முழுமையான பிரிவினையாக – அங்குள்ள ஹிந்துக்களையும் இங்குள்ள முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாகப் பரிவர்த்தனை செய்யும் முழுமையான பிரிவினையாக – இருக்க வேண்டுமென வாதிட்டார். இந்த வாதத்தின் நியாயத்தையும் வலிமையையும் புரிந்துகொண்ட சர்தார் படேல் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் ஆங்கிலேய அரசும் முஸ்லிம் லீகும் பதட்டமடைந்தன. சில காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு எதிராகத் திரும்பினர். மகாத்மா காந்தி  பிரிவினையை ஏற்றுக் கொண்டார். ஆனால் அது தன்னிச்சையாக நடக்க வேண்டும் என்றார். எல்லோரும் அவரவர்களின் இடத்திலேயே இருப்பார்கள் என்று காந்தி  நம்பினார். பிரிவினைக்கான நடவடிக்கைகள் தொடங்கியவுடன் பஞ்சாப், வங்காளத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. ஆரம்பத்தில் காந்தி மீது சாவர்க்கருக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் பிரிவினையும் அதை ஒட்டி வன்முறையும் எழுந்தபோது சாவர்க்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார்.

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சாவர்க்கர் மூவர்ணக் கொடியையும் காவிக் கொடியையும் சேர்த்து ஏற்றினார். அந்த நேரத்தில்,  ‘இந்தியா விடுதலை அடைந்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் தேசப் பிரிவினை என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது’ என்றார். அத்துடன்,  ‘தேசத்தின் எல்லைகள் நதிகள், மலைகள் அல்லது ஒப்பந்தங்களால் வரையறுக்கப் படுவதில்லை. அது இளைஞர்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் பொறுமையாலும் தீர்மானிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் 1948 ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அதையடுத்து, காந்தி கொலைச் சதியில் சாவர்க்கரை தொடர்புபடுத்தி அன்றைய நேரு அரசு அவரைக் கைது செய்தது. 1948 பிப்ரவரி 5 ஆம் தேதி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். ஆனால் காந்தி கொலை வழக்கில் அவரை தொடர்பு படுத்திய அரசால் அதை நிரூபிக்க முடியவில்லை. அவரை உடனடியாக விடுவிக்க நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 1950 ஏப்ரல் 4 ஆம் தேதி பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி இந்தியா வந்தார். அவர் தில்லி வந்தபோது சாவர்க்கரை பெல்காம் சிறையில் அடைத்திருந்தது அரசு. லியாகத் அலி சென்ற பிறகே சாவர்க்கரை சிறையில் இருந்து விடுவித்தது.

1857 முதல் சுதந்திரப் போரின் நூற்றாண்டு விழா 1957 நவம்பர் மாதம் புதுதில்லியில் நடந்தபோது அதில் முக்கிய பேச்சாளராக சாவர்க்கர் விளங்கினார். 1959 அக்டோபர் 8 ஆம் தேதி பூனா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1963 நவம்பர் எட்டாம் நாள் அவரது மனைவி யமுனா பாய் காலமானார். 1965 செப்டம்பர் மாதத்தில் சாவர்க்கர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். அதன் பிறகு அவர் உடல்நிலை சீர்கெடத் தொடங்கியது. 1966 பிப்ரவரி 1 ஆம் தேதி சாகும்வரை உண்ணாவிரதம் (மரணத்தை வரவேற்றல்) இருக்க அவர் முடிவெடுத்தார். 1966 பிப்ரவரி 26 ஆம் தேதி உலகை விட்டுப் பிரிந்தார்.

விநாயக் தாமோதர சாவர்க்கர் ‘வீர சாவர்க்கர்’ என்று போற்றப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக அவரும் சாவர்க்கர் குடும்பத்தினரும் செய்த தியாகங்கள் நமது கண்ணீரை வரவழைப்பவை. அவருக்கு இந்த நாடு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

$$$

Leave a comment