உருவகங்களின் ஊர்வலம் -8

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில்  சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #8

8. வடக்கன்

நீங்கள் வசைச்சொல்லாகப் பயன்படுத்தும்
இந்த ‘திசைச்சொல்’லில்
வட இந்திய முஸ்லிம்கள் இல்லை;
ஊடுருவிய இஸ்லாமியரும் இல்லை;
மதம் மாற்றப்பட்ட வட இந்திய கிறிஸ்தவர் இல்லை;
மதம் மாற்றிக்கொண்டிருக்கும்
வட இந்திய கிறிஸ்தவரும் இல்லை.
அப்பாவியான வட இந்திய இந்து மட்டுமே
இருக்கிறான் அல்லவா?

அப்பாவியாகவே இருப்பதால்
அவன் மட்டுமே ‘வடக்கன்’ என்று
அவமதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பான்.
அப்படித் தானே?

*

உள்நாட்டுக்குள் பிழைப்புத் தேடிவரும்
உ.பி., பிஹார் சகோதரர்களை
நம் பொழைப்பைக் கெடுக்க வந்தவனாகப் பழிக்க
நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

நம்மவர் இருவரின் கூலிக்கான வேலையை
அவர் ஒருவரே செய்து முடிக்கிறார்.
நம்மவர் கூலியை சாராய அரசு பிடுங்குகிறது.
வடக்கன் பொருள்வயின் பிரிந்த குடும்பத்துக்கு அனுப்புகிறான்.
நீங்கள் யாரைப் பழிக்க வேண்டும்,
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போர்களே?

மத்திய அரசின் கட்டுமானப் பணிகள் அனைத்துமே
அந்த வடக்கர்களுக்கே.
பாதி சம்பளம் கொடுத்து
முழு சம்பளத்துக்கான கையெழுத்து வாங்கும்
கான்ட்ராக்ட் முழுவதும்
திராவிட க்ரிப்டோ கும்பலுக்கே.
நீங்கள் யாரைப் பழிக்கவேண்டும்
கம்யூனிஸ்ட் தோழர்களே?

உழைப்பாளியைச் சுரண்டிக் கொழிக்கும்
உலகப் புகழ் திராவிட மாடலை எதிர்த்து
உண்டியல் குலுங்கும் சத்தமே கேட்பதில்லையே?
ஓ,
பணமாகவே திணிக்கப்படுகிறதா?

*

நாமும் இப்படி அரபு நாடுகளுக்கு
ஒட்டகம் கழுவப் போனவர்கள்தான்.
சொந்த மண்ணில் கடைநிலை வேலை செய்ய
கூச்சமாகவே இருக்கும்…
பில்டிங் காண்ட்ராக்டர் என்று
பாலிஷாகச் சொல்லிவிட்டு
சொந்த ஊரில் செண்ட் அடித்துத் திரிந்தவர்கள்தான்.

அந்நிய மத மண்ணில் பட்ட அவமானம்
அந்த மதம் மீதான பகையாக மாறாததில் தவறில்லை.
அந்நிய மாநிலத்து சகோதரன் மீதான
அன்பாக ஏன் மாறவில்லை?
அதுகூடப் பரவாயில்லை
பகையாக மாறுவது ஏன்?

பெரியோனே… பே(இ)மானிகளின் ரஹ்மானே,
‘காஃபிரை’ வெறுக்கும் பாலைப் புத்தியை
மருத நிலத்திலும் ஏன் பரப்புகிறாய்?

திராவிட ரெளடிகளின் கடைக்கண் பார்வை பட
சொந்த மதத்து சகோதரன் மீது
இத்தனை வன்மம் காட்ட வேண்டுமா,
கலை, ஊடகக் கயவன்களே?

*

இந்துவிடம்
கால் வைத்த தீவைச் சொந்தம் கொண்டாடும்
கயமை கிடையாது.
பூர்வகுடிகளை
சென்றேறிச் சிதைக்கும் வன்மம் கிடையாது.
காடு கழினியைத் திருத்தி
இந்து உருவாக்கியிராத
தேயிலைத் தோட்டமா, காஃபித் தோட்டமா?
நம் வேர்வையில்
நம் ரத்தத்தில் உயர்ந்த தேசங்களிலும்
கடைநிலையில் இருப்பதிலேயே திருப்தி கொள்ளும்
கண்ணியவான்கள் நாம்.
தாயகத்தில் மட்டும் ஏன் இந்தத்
தரம் கெட்ட போக்கு?

திராவிட மாடலின் உயர்ந்த மண்டபத்தின்
உண்மையான சில படிக்கட்டுகள் அவர்கள்.
நாம் சென்றடைந்திருக்கும் உயரம்
அவர்களை மிதித்து ஏறித் தான்.

ஏற்றுமதித் துணிகளின் வெற்றிகளில்
அந்த எளியோரின் குருதியும் கலந்திருக்கிறது.
விரைவாகச் செல்லும் மெட்ரோ ரயிலின்
சாந்துக் கலவை முழுவதுமே
அவர்களின் வியர்வையால் இளகி இறுகியவைதான்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
சற்று தள்ளிப் பிறந்த சகோதரரை
‘வடக்கன்’ என்று வெறுப்பது எத்தனை கேவலம்?
மலட்டு மாத்திரை எதுவும் கலக்கப்படுவதில்லையே,
மண்ணின் மைந்தன் முக்கி முக்கித் தரும்
பானி பூரி மிளகாய் கரைசலில்?

யாதும் ஊரே…. யாவரும் கேளிர்!
அந்நிய மதத்தினரால் விரட்டப்படும்
அந்நிய மத அகதிகளும் கேளிர்.
ஆனால்,
சொந்த தேசத்து இந்து மட்டும் பகைவரா?

*

விவசாய வேலையை உலகமே பழிக்கையில்,
கட்டட வேலையே கவர்ச்சிகரமாகத் தோன்றும்;
தொழில்மய உலகமே லட்சியமாகத் தோன்றும்.
பின்தங்கிய மாநிலமாக நாம் சொல்பவை
வயலும் தோப்பும், மண் சாலையும்
கிராம விளையாட்டுகளும்
விறகு எரியும் அடுப்புகளும்
விளக்கு எரியா வீடுகளும்
கிராம மருத்துவமும் ஆநிரை மேய்ப்புமாக
வாழ்வாங்கு வாழ்ந்துதான் வருகின்றன…

நம் போராளிகள் இங்கு
போலியாகக் கட்டி எழுப்புகிறார்களே,
அந்தக் கிராமியப் பொன்னுலகமாகவே
அவை இன்றும் இருக்கின்றன.
அங்கு நதிகளில்
சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை.
அங்கு காற்று,
ஆலைத்தூசிகளால் மாசடையவில்லை.
அங்கு நீர்வழிப் பாதைகளில்
நீதி மன்றங்கள் கட்டப்படவில்லை.
அங்கு குளங்கள்
பேருந்து நிலையங்களாகவில்லை.
அங்கு பசுக்கள்
பிளாஸ்டிக் பைகளைத் தின்பதில்லை.

நாம் நம் மாநிலத்தில் அனைத்தையும் அழிப்போம்.
நாமே அழித்த இயற்கையை
மத்திய அரசு அழித்ததாக
பாதிரி எழுதித் தரும் கோஷத்தையும் முழங்குவோம்.
பண்ணையார்களின் கடனை ரத்துசெய்யச் சொல்லி
பச்சைக் கோமணம் கட்டி காபரே நடனமும் ஆடுவோம்.
பிற மாநிலங்களில் கிராமிய வாழ்க்கை இருந்தால்,
அதை ஈவெரா இல்லாததால் விளைந்த கேடு என்று
இளக்காரமும் செய்வோம்.

குடியையும் கஞ்சாவையும் பெருக்கி
உழைப்பாளியை அழிப்பவனை எதிர்க்க வக்கில்லை.
(நல்ல வேளை தடுக்கப் பார்க்கும்
காவல், ராணுவத்தை எதிர்த்து
அவுத்துப் போட்டு ஆர்ப்பாட்டம்
இன்னும் ஆரம்பிக்கவில்லை).

அரை மணி நேரம் மழை பெய்தால்
அத்தனை சாலையும் பாழ்.
அரை நாள் மழை பெய்தால்
அத்தனை வாகனமும் பாழ்.
பீடா வாயன் என்றும் பானி பூரிக்காரனென்றும்
பாவப்பட்டவர்களை இழிவுபடுத்திப்
போர்ப்பரணி பாடிக் கொண்டிருக்கிறோம்.

விவசாய இந்து பூமியில் நடக்கும் ஜாதி மோதலைவிட
தொழில்மய காங்கிரஸ் மாநிலங்களில்
மத குண்டுவெடிப்புகள் சகஜம்.

நாகரிக கனவான்கள்
பழங்குடி உலகைப் பழித்ததைவிடக் கொடூரம்
நவீன தொழில்மய நகரத்தினர்
விவசாய பூமிகளை வெறுத்துப் பேசும் இந்தப் பேச்சுகள்.

நீங்கள் எளியவர்கள் பக்கம் நிற்பவரென்றால்,
இந்த வடக்கன்கள் பக்கம்தான் நிற்க வேண்டும்.
நீங்கள் ‘பிறப்பொக்கும்’ என்று முழங்குபவரென்றால்
இந்தப் பின்தங்கிய மாநிலத்தினரின்பால்
கருணையுடன்தான் நடக்க வேண்டும்.

இஸ்லாமியப் படையெடுப்பையும்
கிறிஸ்தவப் படையெடுப்பையும் பேச வக்கில்லாமல்
வடுகப் படையெடுப்பு பற்றியும்
வடவர் ஆதிக்கம் பற்றியும் வாய்கிழியப் பேசுபவன்
இன மானப் போராளி அல்ல…
வேறு யாருக்கோ அல்லக்கையே.

அமேசானையும் கோகோகோலாவையும்
ஏன், கேடி அன்கோவைக் கூட எதிர்க்காமல்
அம்பானி, அதானியை மட்டும் எதிர்ப்பவன்
கம்யூனிஸ்ட் அல்ல-
கடைந்தெடுத்த லூஸு மட்டுமே.

தெருவுக்குத் தெரு பீட்ஸா கடை இருக்கலாம்.
தள்ளுவண்டி பானிபூரி கடை இருக்கக் கூடாதா?
பீட்ஸாக்காரனைத் திட்டினால்
சினிமா வாய்ப்பு கிடைக்காது.
பானி பூரி விற்பவனை பட்டப் பகலில்
பஸ் ஸ்டாண்டில் கொலை செய்தாலும்
காப்பாற்றுவார்கள்.

புள்ளை பிடிப்பவன் என்று
கும்பல் கொலையும் செய்யலாம்
எதிரி தன் இலக்கில் தெளிவாகத் தான் இருக்கிறான்
பார்ப்பான்… சநாதனி… சங்கி
இந்திக்காரன்… இந்தியன்… வடக்கன்… வடுகன்…
பெயர்கள் வேறானாலும் இலக்கு ஒன்றே!

முதலில் இந்து வெறுப்பு…
இறுதியில் இந்து அழிப்பு.
நாஜியிஸத்தின் அதே முத்திரை குத்தல்
அதே இழிவுபடுத்தல்
அதே தனிமைப்படுத்தல்
அதே மிகை அவதூறு
நாஜியிஸம் போல் நிச்சயம் கொன்று குவிக்கவில்லை.
நம் கடந்தகால வரலாறு சொல்லும் ஓர் உண்மை
ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மைதான்.

கடந்த கால வரலாறு
சொல்லும் இன்னோர் உண்மையும் இருக்கிறது
காஷ்மீர் போலானால் கொன்றும் குவிப்பார்கள்.

$$$

Leave a comment