-கவியரசு கண்ணதாசன்
‘அன்னை’ திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வேடிக்கையாகப் பாடுவதாக அமைந்த காட்சிப் பாடல் இது... ஆனால், பாடலில் உள்ள வரிகள் எதுவுமே வேடிக்கை அல்ல. உயர்ந்த தத்துவமும், வாழ்வனுபவமும், சோகமும் இழையோடும், கவியரசரின் இனிய பாடல் இது...

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை! (2)
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை…
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை! (2)
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்…
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்!
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை!
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை…
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை! (2)
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை…
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை!
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை!
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு…
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு! (2)
அவன் கனவில் அவள் வருவாள், அவனைப் பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரைப் பார்த்து அழைப்பாள்?
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை!
.
திரைப்படம்: அன்னை (1962) இசை: ஆர்.சுதர்சனம் பாடியவர்: ஜே.பி.சந்திரபாபு
$$$