-பத்மன்

கொன்றைவேந்தன் – 71
மாரி அல்லது காரியம் இல்லை
விளக்கம்:
மழைநீர் இல்லாமல் போனால் எந்தச் செயலும் நடைபெறாது என்கிறார் ஔவையார்.
மாரி என்பதற்கு மழை, நீர், துர்க்கை, பூராட நட்சத்திரம் எனப் பல பொருள் உண்டு. மிகுதியான பயன்பாட்டில் உள்ள பொருள் மழையும் அதன்மூலம் கிடைக்கும் நீரும். காரியம் என்பதற்கு செயல், செய்கை எனப் பொருள்.
வானில் இருந்து பொழியும் மழையும், அதனால் அமையும் நீர்வளமும் இல்லாவிட்டால் உழவு முதற்கொண்டு எல்லாச் செயல்களும் சீர்குலைந்து, எதுவுமே இல்லாமல் போய்விடும் என்கிறார்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
-என்று கூறியுள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 18).
வானத்தில் இருந்து பெய்கின்ற மழைநீர் வறண்டு போனால் வானோர் எனப்படும் தெய்வங்களுக்கே சிறப்பான பூசைகளும் நடைபெறாது என்கிறார் வள்ளுவர். வானம் கைவிட்டால் வானோர் வழிபாட்டையும் மனிதர் கைவிடுவர் எனில் வேறு எந்தச் செயல்கள்தான் நடைபெறும்?
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு
-என்று மற்றொரு குறளில் (திருக்குறள்- 20) எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.
நீரில்லாமல் போனால் இந்த உலகம் நில்லாமல் போகும் என்பதைப் போல வானம் பொய்த்துவிட்டால் மானுட ஒழுக்கமும் தவறிப் போகும் என்று எச்சரிக்கிறார்.
நீர்நிலைகளான நதிக்கரைகளில்தான் நாகரிகம் வளர்ந்தது. அத்தகைய நீர் இல்லாமல் போனால் அநாகரிகம் தலைதூக்குவதோடு பண்பாடும், பாடுபடும் உழைப்பும்கூட பறிபோகும். குடிப்பதற்கும்கூட தண்ணீர் இல்லையேல் அந்த இடத்தில் என்ன செயல்தான் நடந்தேற முடியும்?
அதனால்தான் ‘மாரி அல்லது காரியம் இல்லை’ என்றுரைத்துள்ளார் ஔவையார்.
(பின்குறிப்பு: மாரி என்றால் சாவு என்றும் காரியம் என்றால் இறுதிக்கடன் என்றும் வேறு பொருள் உண்டு. இதனால் சாவு இல்லையேல் இறுதிக்கடன் இல்லை என்றுதான் ஔவையார் கூறியிருக்கிறார் என வருங்காலத்தில் யாரும் வாதிட வேண்டாம்.)
$$$
கொன்றைவேந்தன்- 72
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
விளக்கம்:
மின்னலுக்குப் பின்னால் மழை பொழிவது உறுதி என்று கூறியதன் மூலம், முயற்சிக்குப் பின்னால் வெற்றி நிச்சயம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஔவையார்.
இதுதான் வேற்றுப்பொருள் வைப்பு அணி. சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல், தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் கூறி, சொல்ல வேண்டியதை மறைமுகமாக உணர்த்துவதே, வேற்றுப்பொருள் வைப்பு. செய்யுளுக்கு இது ஓர் அணிகலன்.
வானத்தில் மின்னல் வெட்டும் போதெல்லாம் இதற்குப் பின்னர் மழை பொழியும் என்பதை அனுபவத்தால் அறிந்து கொளகிறோம். மின்னல் என்பது, வானில் மேகங்கள் மோதுவதால் ஏற்படும் ஒளிவீச்சு. இதனைத் தொடர்ந்து மேகங்கள் மோதியதன் பயனாகிய மழை பொழிகிறது. இதேபோல உழைப்பு என்பது கடின முயற்சியின் ஒளிவீச்சு. இதனைத் தொடர்ந்து இதன் பயனாகிய ஆக்கம், வளம் நம்மைக் கட்டாயம் வந்துசேரும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
-என்று திருவள்ளுவரும் (திருக்குறள்- 619) உரைத்திருக்கிறார். தெய்வமே கைவிட்டாலும்கூட நாம் முயற்சி எடுத்து மேற்கொண்ட கடின உழைப்பானது அதற்கான பயனைக் கட்டாயம் தந்து தீரும் என்பது இதன் பொருள். முயற்சியாலான கடின உழைப்பை மின்னலாகவும் பயனாகிய ஆக்கத்தை மழையாகவும் உருவகப்படுத்தியுள்ளார் ஔவையார்,
‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதைப் போல, முன்னே வரும் மின்னல், பின்னே வரும் மழைக்குக் கட்டியம் கூறுகிறது. இதனைப்போல பின்னே கிடைக்கவிருக்கும் ஆதாயத்தை, நல்விளைவை முன்னே பிரகாசிக்கும் கடின உழைப்பு உறுதி செய்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்-73
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
விளக்கம்:
செலுத்துவதற்கான தலைவன் இல்லாத கப்பல் கடலில் இயங்காது என்கிறார் ஔவையார்.
இதுவும் வேற்றுப்பொருள் வைப்பு அணியே.
மீகாமன் என்பது கப்பல் தலைவன் (கேப்டன்) அல்லது தலைமை மாலுமி என்பதைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல். அலைபாயும் கடலில், கொந்தளிப்பு, புயல் போன்றவற்றைச் சமாளித்து கப்பலையோ படகையோ சரியான திசையில் செலுத்தி கரையை அடைய அதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த மீகாமன் அவசியம். அப்போதுதான் கப்பலில் இருக்கும் நபர்களோ சரக்குகளோ பத்திரமாக கரைசேர முடியும்.
அதேபோல குடும்பம் என்ற கப்பலை இயக்குவதற்கு நல்வழியில் அதனைச் செலுத்தும் குடும்பத் தலைவன் அவசியம். மேலும், தேசமாகிய பெரிய கப்பலை அதன் இலக்கை நோக்கிச் செலுத்துவதற்கும் தகுதியும், திறமையும், நல்லெண்ணமும் கொண்ட தலைவர் அவசியம். அப்போதுதான் பல்வேறு கொந்தளிப்புகள், திசைதிருப்புதல், தடைகள் ஆகியவற்றைச் சமாளித்து தேசமாகிய கப்பல் வெற்றிநடை பயில முடியும்.
இதைத்தான் பூடகமாக ‘மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது’ என்றுரைத்து அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 74
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
விளக்கம்:
முதலில் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கான பலன்களே அதற்குரிய விளைவுகளாக நம்மைப் பின்னர் வந்தடைகின்றன என்கிறார் ஔவையார்.
நாம் செய்யும் செயல்களாகிய வினைகளே நமக்குக் கிடைக்கும் பலன்களுக்கான விதைகள். எதை விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்கிறோம்.
‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழி இதனைத் தெளிவாக உணர்த்தும்.
‘வித்தொன்று போட சுளையொன்று முளைக்குமோ?’ என்ற கேள்வியாய் அமைந்த பழமொழியும் இதே கருத்தையே தெரிவிக்கிறது.
ஆகையால் வினை நல்லதோ கெட்டதோ அதற்கேற்பவே பலன்களும் இருக்கும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த வரிகள் இடம்பெற்றுள்ள சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலின் அடுத்த வரிகள் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கின்றன. (புறநானூறு- 192) நமக்கு வரும் நன்மை, தீமைகள் பிறர் நமக்குக் கொடுப்பதல்ல, நமது வினைகளின் பலன்களே அவை என்பதே இதன் பொருள்.
ஔவையார் குறிப்பிட்டுள்ள முற்பகல் என்பது வினை புரியும் காலத்தையும், பிற்பகல் என்பது அதற்கான பலன்களை அனுபவிக்கும் காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது. காலக்கணக்கில் எந்த வினையும் தப்பாது. அதற்கான விளைவுகள் வந்தடைய வேண்டிய காலம் வேண்டுமானால் மாறுபடும். கடவுளே வந்து மண்ணுலகில் அவதாரம் எடுத்தாலும் அவரும் வினைப்பயனுக்குத் தப்ப முடியாது.
நாம் செய்யும் வினைகளே நமக்கான ஊழாக மாறுகின்றன. ஊழ் என்றால் வினைப்பயன், முதிர்வு, முடிவு என்று பொருள். நமக்கான விதி அது. யாரும் அதிலிருந்து தப்பிக்க இயலாது. இதைத்தான் சிலப்பதிகாரம் ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்று கூறியுள்ளது.
கர்ம வினை என்று கூறுவதும் இந்த ஊழ்வினைப் பயனையே. இந்தக் கர்ம வினையை ‘பிராரப்த கர்மா’ என்னும் அனுபவித்தாக வேண்டிய நுகர்வினை, ‘சஞ்சித கர்மா’ என்ற முன்வினை, ‘ஆகாம்ய கர்மா’ எனப்படும் வருவினை என மூவகையாக ஞானியர்கள் பகுத்து உரைப்பர்.
நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.
ஆகவேதான் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என அறிவுறுத்தியுள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 75
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்
விளக்கம்:
பெரியோர் சொல்லி வைத்துள்ள வார்த்தைகள் அமிர்தம்போல இனிமையும் நன்மையும் தருபவை என்கிறார் ஔவையார்.
மூத்தோர் என்றால் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் முதிர்ந்த பெரியவர்கள். மூத்தோர் என்ற சொல், நமது முன்னோரையும் குறிக்கிறது.
அமிர்தம் என்பதற்கு இறவாத்தன்மை என்று பொருள். தேவலோக அமிர்தமானது சாகாத்தன்மை தரக்கூடியது, மூப்படையாமல் தடுக்கக் கூடியது எனப் புராணங்கள் போற்றுகின்றன. இனிய சுவையும் மருந்தாகப் பயன்படுவதுமான தேன், நெல்லிக்கனி போன்றவையும் அமிர்தம் என்று மதிக்கப்படுகின்றன.
மூத்தோர் சொன்ன வார்த்தை என்பது பரந்த பொருள் கொண்டது. நமக்காக, வேதம், உபநிஷதம், இதிகாசம், இலக்கியங்கள், தத்துவங்கள், சித்த– ஆயுர்வேத மருத்துவ முறைகள், வான சாஸ்திரம், ஜோதிடம், சிற்ப சாஸ்திரம், சங்கீதம் போன்ற கலை, இலக்கிய ஆய்வு நூல்கள்; தேவாரம், திருவாசகம், திவ்யப்ரபந்தம் போன்ற ஆன்மிகப் பனுவல்கள்; திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விவேக சிந்தாமணி போன்ற அறநூல்கள்; பழமொழிகள், சுபாஷிதங்கள் எனப் பல்வேறு தகவல்கள் கொண்ட அறிவுப் பொக்கிஷத்தை நம் முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர். இவையெல்லாம் மூத்தோர் சொன்ன வார்த்தைகளே. இவை சாகா வரம் பெற்றவை. இவை, அமிர்தம் போல இனிமையானதாகவும் அருமையானதாகவும் அமைந்து, நமது வாழ்க்கையை நாம் சிறப்பாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்வதற்கு உதவுகின்றன.
ஆகையால்தான் ‘மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்’ என்று நமக்கு எடுத்துரைத்துள்ளார் ஔவையார்.
$$$
.
2 thoughts on “கொன்றைவேந்தன் (71-75)”