-பத்மன்

கொன்றைவேந்தன்- 76
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
விளக்கம்:
மெத்தென ஆக்கியதில் படுத்தல் நிம்மதியான உறக்கத்துக்குச் சிறந்தது என்கிறார் ஔவையார்.
அப்படியானால் பஞ்சணை மெத்தையில் படுத்தல் சிறந்தது எனப் பொருள் வருகிறது. இதிலே என்ன நீதிமொழி இருக்கிறது?
நிம்மதியான உறக்கமின்மை மனவியாதிக்கும் உடல்நலக் கோளாறுக்கும் வழிவகுக்கும். கணினிப் பயன்பாடு, இரவில் கண்விழித்தல், வேலைக்காக நெடுந்தூரப் பயணம், மன அழுத்தம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் இளம் தலைமுறையினர்கூட உறக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.
குழந்தை நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் தாய் அரவணைப்பாக இருக்கும் தூளியில் போட்டுத் தாலாட்டுப் பாடுகிறாள்.
வளர்ந்துவிட்டவர்களுக்கு? அவர்களுக்காகத்தான் மிருதுவான பஞ்சால் ஆன மெத்தை. அந்தப் பஞ்சணையில் படுப்பது நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுப்பதால் நித்திரைக்குச் சிறந்தது என ஔவையார் கூறியிருப்பதாக பொருள் கொள்ளலாம்.
இளையவளான ஸ்ரீதேவியைப் போலவே மூத்தவளான ஜேஷ்டா தேவியை வணங்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது. துடைப்பத்தை ஆயுதமாகவும், அண்டங்காக்கையை வாகனமாகவும் கொண்ட அம்மன் ஜேஷ்டாதேவி. தூக்கத்துக்கும் மறதிக்கும் இவளே தெய்வம். துக்கத்தை மறந்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும். இரண்டையும் அருள்பவள் இத்தெய்வம். அந்த அளவுக்கு நிம்மதியான உறக்கம், அமைதியான வாழ்வுக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் அவசியம். அதனால்தான் மெத்தையில் படுத்தலை ஔவையார் சிபாரிசு செய்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
அதேநேரத்தில் ‘மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு’ என்பதே சரியான பதம் என்று கூறுவோரும் உண்டு. மெத்தென என்றால் அரக்கப்பரக்க இன்றி நிதானமாக, மென்மையாக என்று பொருள். என்னதான் களைப்பு இருந்தாலும் தடாலெனப் படுத்தால் தூக்கம் வராது; வேறு பிரச்னைதான் வரும். தியானத்தின் மூலமும் அலுப்பைப் போக்கும் சிறு பயிற்சிகள் மூலமும் மனத்தையும் உடலையும் மெத்தென ஆக்கிவிட்டுப் பின்னர் படுத்தல் உறங்குவதற்கு ஏற்றது. ஆதலால் மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு என ஔவையார் உரைத்திருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
மேலும், மெத்தையில் என்றே ஔவை கூறியிருந்தாலும்கூட ‘மெத்தென ஆக்கியதில்’ என்பதே அதன் உட்பொருளாக இருக்கிறது. இதிலே மெத்தை புறக் காரணி. உடலையும் மனத்தையும் மெத்தென ஆக்குதல் அகக்காரணி. புறக்காரணியான பஞ்சணை மெத்தை சிலருக்குக் கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் அகக்காரணியான உடலையும் மனத்தையும் மெத்தென ஆக்குதல் எல்லோருக்கும் இயல்வது.
ஆகையால் மெத்தையில் என்ற சொல்லுக்குக்கூட மெத்தென ஆக்கியதில் என்று பொருள் கொள்வதே ஏற்றதாக உள்ளது. பஞ்சணை மெத்தையில் படுத்தாலும் பாயை விரித்து தரையில் படுத்தாலும் மெத்தென ஆக்குதல் நித்திரைக்கு ஏற்றது.
இதனைத்தான் ‘மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு’ என ஔவையார் அழகுபட உரைத்திருக்கிறார்.
$$$
கொன்றைவேந்தன்- 77
மேழிச் செல்வம் கோழை படாது
விளக்கம்:
கலப்பையைப் பிடித்து உழவால் உருவாக்கப்படும் செல்வம் ஒருபோதும் குறைபட்டுப் போய் விடாது என்கிறார் ஔவையார்.
மேழி என்றால் கலப்பை என்று பொருள். மேழிச் செல்வம் என்பது உழுது உருவாக்கப்படும் விவசாயச் செல்வத்தைக் குறிக்கிறது. செல்வம் என்பது வெறும் பணம் மாத்திரமல்ல, பொருள் வளத்தையே அது முக்கியமாகக் குறிக்கிறது.
பொருள் வளத்தில் வேளாண் விளைபொருள் மிக முக்கியமானதல்லவா? தொழில் வளத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை, இந்த வேளாண் செல்வந்தானே!
கோழை என்றால் கபம், பயந்து நடுங்குதல் என்ற வெளிப்படையான பொருள்கள் இருந்தாலும், நுணுகிப் பார்த்தால் நுட்பமான பொருள்கள் புலப்படும்.
அவ்வகையில் கோழை என்ற சொல்லுக்கு இளகுதல், குறைவுபடுதல், சிறுமையுறுதல் ஆகிய பொருள்கள் அறியப்படுகின்றன. அவ்வகையில், விவசாயத்தால் கிடைக்கும் செல்வம் ஒருபோதும் சிறுமை அடையாது எனப் பொருள் கொள்ளலாம்.
விவசாயப் பொருள்கள், பல தொழில்களுக்கு மூலப்பொருள்களாய் இருப்பதாலும் மானுடர் பசியைப் போக்குவதாலும் அதற்கு ஒருபோதும் மதிப்புக் குறைவதில்லை. மற்ற தொழில்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் விவசாயத்தை நம்பியிருக்க, விவசாயமோ தன்னைச் சார்ந்தே இயங்குகிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாகாத காலத்திலும் விவசாயம் இருந்தது. எதிர்காலத்தில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் வந்தாலும்கூட விவசாயத்துக்கான தேவை அகன்று போய் விடாது. ஆகையாலும் மேழிச் செல்வத்துக்கு குறைவு ஏற்பட்டு விடாது.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றுரைத்துள்ளார் திருவள்ளுவர். உலகம் வெவ்வேறு மாற்றங்களில் சுற்றிச் சுழன்றாலும் எக்காலத்திலும் ஏர் பிடிக்கும் உழவுத் தொழிலைப் பின்பற்றிதான் மற்ற தொழில்கள் நடக்க முடியும் என்பது இதற்குப் பொருள். ஆகையால் உழவுக்கு ஒருபோதும் குறைவில்லை.
அதனால்தான் ‘மேழிச் செல்வம் கோழை படாது’ என ஆணித்தரமாக மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 78
மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு
விளக்கம்:
பொய்மையால் மயக்கும் விழிகளைக் கொண்ட விலைமாதர் வீட்டுப் பக்கம் செல்லாமல் அகன்று, நல்லொழுக்கத்துடன் வாழ் என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
மை என்பதற்கு கண்ணில் தீட்டப்படும் அஞ்சனம், கருமை நிறம், இருள், அழுக்கு, மாயம், மயக்குதல், குற்றம் எனப் பல பொருள் உண்டு.
மை விழியார் என்பது கண்களில் மை தீட்டிக்கொண்ட விழியார் என்ற பொருளை மட்டும் குறிக்கவில்லை. சாதாரணமாகப் பல பெண்கள் கண்ணுக்கு அழகூட்ட மை தீட்டுவர். ஆனால் பொய் அழகு புனைந்து பிறரை மயக்கிப் பணம் பறிக்க வேண்டும் என்பதற்காக கண்களுக்கு மை தீட்டுபவர்கள் பரத்தையர் எனப்படும் விலைமாதர். மேலும் அவர்களது கண்களிலே, சிக்கியவரை மயக்குகின்ற, ஏமாற்றுகின்ற, பொய்யன்பு காட்டுகின்ற குற்றச் செயல், கபட உணர்வு மறைந்திருக்கும். ஆகையால் விலைமாதரை மைவிழியார் என்றார் ஔவையார்.
அத்தகைய விலைமாதர் வீட்டுப்பக்கம் செல்லாதே என ஔவையார் வலியுறுத்துகிறார். இதேபோல தமது ஆத்திச்சூடியிலும் ‘மைவிழியார் மனையகல்’ என அவர் கூறியிருக்கிறார்.
ஆயினும் அது போதாதென்று கருதினார் போலும்! ஆகையால் இக் கொன்றை வேந்தனில் ‘மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு’ என உரைத்திருக்கிறார்.
அதாவது பரத்தையர் வீடு இருக்கும் திசைப் பக்கமே செல்லாத நல்லொழுக்கத்தைக் கடைபிடி எனக் கூடுதலாக மொழிந்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 79
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
விளக்கம்:
சான்றோர் கூறும் அறிவுரைகளை ஒருவர் கேளாமல் மறுத்தால் அவர் ஆற்றுகின்ற செயல் அழிய நேரிடும் என எச்சரிக்கிறார் ஔவையார்.
மொழிவது என்றால் கூறுவது, உரைப்பது என்று பொருள். இது மேலோர், பெரியோர் எனப்படும் சான்றோர்களின் அறிவுரைகள், வேதம் உள்ளிட்ட நீதி நூல்கள் கூறும் அறக் கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. கருமம் என்பது ஒருவரது செயல், ஆற்றும் வினை, தொழில், கடமை ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலோர் உரைகளை நிராகரித்துவிட்டுச் செயல்படும்போது ஒருவர் தனது கடமையில் இருந்து பிறழ்கிறார். அவர் செய்கின்ற செயல், நெறிமுறை தவறுவதால் அழிவை நோக்கிச் சென்றுவிடும் என்கிறார் ஔவையார்.
மேலும் ஒருவர் தான் கூறியதை மறுத்துவிட்டு மாற்றிப் பேசும்போது அல்லது தான் கூறியதற்கு மாறாகச் செயல்படும்போது அவரது செயல்திறன் அழியும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆக ஒருவர், பெரியோர் சொல்லைத் தட்டிவிட்டுச் செயல்படும்போதும், வாய்மை மீறிச் செயலாற்றும்போதும் அவர் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தம். இதனைத்தான் ‘மொழிவது மறுக்கின் அழிவது கருமம்’ என எச்சரித்துள்ளார் ஔவையார்.
$$$
கொன்றைவேந்தன்- 80
மோனம் என்பது ஞான வரம்பு
விளக்கம்:
மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார்.
மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.
மோனம் என்பது ஒருமித்தலையும் குறிக்கிறது. பரம்பொருளுடன் ஒன்றுதல் மோனநிலை. முனிவர்கள் அமைதியாகத் தவமிருப்பதன், மௌன விரதம் பூணுவதன் நோக்கம், சித்த சலனத்தை வென்றெடுத்து அந்த மோன நிலையை – இரண்டற்ற ஒன்று என்ற நிலையை எட்டுவதற்காகத்தான்.
மௌனம் என்ற சொல், தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் ஒரேபோன்ற பொருளையே குறிக்கிறது. சம்ஸ்கிருதத்தில் அமைதி, சலனமற்று இருத்தல் எனப் பொருள்.
முன்னுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள். தீவிரமாக முற்படுதல், அடைதல் என்ற பொருள்களும் இதற்கு உண்டு. இந்த முன்னுதல் என்ற சொல்லில் இருந்து எழுந்ததே மோனம், மௌனம். அதனைச் சாதிப்பவர் முனிவர். மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கும் நிலையே மௌனம். அதற்காகத் தீவிரமாக முற்படுவதே தவம். அதன் மூலம் ஒருமை நிலையை எட்டுவதே மோனம்.
மோனநிலை என்பது என்ன என்பதை இறைவனே நமக்கு எடுத்துக்காட்டத் தான் ஆலமரத்தின் கீழ் உறையும் ஆசானாக, தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் காப்புச் செய்யுளில் ‘மௌனவாக்யா ப்ரகடித பரப்ரும்ம தத்வம்’ என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
மௌனத்தின் மூலமாக பரப்ரும்ம தத்துவத்தை அறிவிக்கிறார் தக்ஷிணாமூர்த்தி என்பது இதன் பொருள். அந்த பரமாத்மா தன்னைப்போல மௌனமாக இருந்தால் தன்னை அடையலாம் என்பதைச் செயல்வடிவில் உணர்த்துகிறார்.
இதே பொருளில்தான், மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடி அறநூலுக்கான காப்புச் செய்யுளில் ‘மோனத் திருக்கும் முழுவெண் மேனியன்’ என்று இறைவனைச் சுட்டுகிறார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இந்த மோனநிலையை ‘சும்மாயிரு சொல்லற’ என்று சுட்டுகிறார். ‘சும்மா இருப்பதே சுகம்’ என்கிறார் திருமந்திரம் சாற்றிய திருமூலர். இருவரும், சும்மா இருத்தல் என்று குறிப்பிடுவது சிந்தை கடந்த மௌன நிலையையே.
ஔவையாரே தனது விநாயகர் அகவலில், ‘வாக்கும்மனமும்இல்லா மனோலயம்’ என மோனநிலையை விளக்குகிறார். ஒருமித்த பிறகு அங்கே நான்- நீ என்ற பேத பாவம் ஏது? அங்கே மனமும் அற்றுப் போகிறது. அந்த மௌன நிலையை எட்டுவதுதான் மெய்ப்பொருளைத் தேடி அடைகின்ற ஞானத்தின் உச்ச நிலை.
இதனைத்தான் கொன்றைவேந்தனில் ஔவையார் ‘மௌனம் என்பது ஞான வரம்பு’ என மொழிந்துள்ளார்.
$$$
.
2 thoughts on “கொன்றைவேந்தன் (76-80)”